Skip to main content

சுஜாதா, புத்தக/கேசட் கண்காட்சி

குடியரசு தினத்திற்கு சில நாள்கள் முன் ஒரு காலையில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் திருமதி. சுஜாதா


"தேசிகன், சாருக்கு உடம்பு சரியில்லை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஐ.சியூவில் இருக்கார்." 



"மாமி என்ன ஆச்சு?"


"புத்தகக் கண்காட்சி, சிவாஜி திரைப்பட விழாவுக்கெல்லாம் போனதா என்னன்னு தெரியலை, நிமோனியா வந்து, அதுக்கு சாப்பிட்ட மாத்திரைனால கிட்னி affect ஆகி, இப்ப மூச்சுச் திணறல் வந்து ஆக்ஸிஜன் வெச்சிருக்காங்க"


"யார் பாத்துக்கரா?"


"யாருக்கும் தெரியாதுப்பா. ஏதோ உன்கிட்ட சொல்லணும்னு தோணித்து, சொன்னேன், அவர் தம்பிக்குக் கூட தெரியாது" 


அந்த வாரம் சென்னை சென்று அவரை அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யுவில் பார்த்தேன். உடம்பு மெலிந்து, குழந்தை போல இருந்தார். குழந்தை மாதிரியே பேசினார்.


"என்ன தேசிகன் எப்படி இருக்க. இப்ப என்ன கிறுஸ்துமஸ் லீவா ?"


"சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்"


"ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம் வைக்கிறாங்க. ஆனா இந்த ஹெட் ஃபோன் தான் உறுத்துது. அந்த கேபிள் லென்த் பொறலை. காட்லெஸ் ஹெட் போன் எங்க கிடைக்கும் ?"


"இங்க சென்னைலயே கிடைக்கும், கிடைச்சா வாங்கி அனுப்பறேன்"


"காலையில பேப்பர் படிக்கிறேன், ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு வந்த போது என்ன ஹெட்லைன்ஸ் இருந்ததோ அதே தான் இப்ப இருக்கு, ஒண்ணும் மாறலை" என்றார். நான் புன்னகை செய்தேன்.


"சீக்கரம் வெளியே வாங்க இன்னொரு டிரிப் ஸ்ரீரங்கம் போகலாம்" என்றேன். முகம் மலர்ந்தது. "கட்டாயம் போகலாம்," என்றார் தன்னம்பிக்கையுடன்.


<>


டிசம்பர்-ஜனவரி மாதம் என்றாலே இரண்டு இடங்களுக்குப் போவது பிடிக்கும். ஒன்று புத்தகக் கண்காட்சி, மற்றொன்று சங்கரா ஹாலில் நடக்கும் கேசட் கண்காட்சி. நிறைய கர்நாடக சங்கீதம் சம்பந்தமான கேசட்கள் இங்கே கிடைக்கும். சில சமயம் தெரிந்த பாடல்களை(துன்பம் நேர்கையில், கிருஷ்ணா நீ பேகனே, தீராத விளையாட்டு பிள்ளை... )  யாராவது பாடியிருந்தால் போனதற்காக ஒன்றிரண்டு வாங்குவேன். இந்த முறை சென்ற போது, நல்ல கூட்டம். அட இவ்வளவு பேர் சங்கீதம் கேட்க்கிறார்களா என்று உள்ளே போனால், மோசர் பேர், மற்றும் சில கம்பெனிகள் ரூபாய்க்கு இரண்டு படம் என்று விற்றுக்கொண்டிருந்தது தான் காரணம் என்று புரிந்தது. கேசட் கண்காட்சி கல்கட்டா சாட் கடை போல் ஆகியிருந்தது.


மோசர் பேர் டிவிடி 34 ரூபாய் என்றால், ராஜ் டிவி 27க்கு தருகிறார்கள்; மாடர்ன் சினிமா கம்பெனி 25 ரூபாய்க்கு என்று போட்டோ போட்டி. இன்னொரு கம்பெனி, இரண்டு சினிமா உள்ள டிவிடியை 45 ரூபாய்க்குத் தருகிறார்கள். ( இதில் 10% தள்ளுபடி வேறு). ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று தமிழ் மக்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. ஒரு வயதான மாமி, மாமா தன் அமெரிக்காவிலிருந்து மகன்/மகள் அனுப்பிய ஈ-மெயிலை அங்கவஸ்திரம் மாதிரி வைத்துக்கொண்டு, சார் சாமி படம் எங்கு கிடைக்கும், கவுண்டமணி செந்தில் காமெடி எங்கே கிடைக்கும் என்று அலைந்துகொண்டிருந்தார். மற்றொருவர் திருமால் பெருமை, திருவிளையாடல் போன்றவற்றைத் தேடிக்கொண்டிருந்தார். நான் விசாகா ஹரியின் சீதா கல்யாணம் வாங்கினேன். இன்னும் பார்க்கவில்லை.


ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நதிக்குப் போகும் வழியில் 'ஐந்து குழி மூணு வாசல்' இருக்கும். அதே போல் இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆறு கவுண்டர் ஆறு வாசல். போன வருடம் மாதிரி தான் இந்த வருடமும், நிறைய புத்தகங்கள் இருந்தன. இந்த மாதிரி புத்தகக் கண்காட்சியில் தான் நண்பர்களை சந்திக்க முடிகிறது. இந்த முறை பத்ரி, பா.ராகவன்(கிழக்கு), ஹரன் பிரசன்னா(எனி இந்தியன்), சரவணன்(வானதி) உமா மகேஸ்வரன் ஆகியோரை சந்திக்க முடிந்தது. இவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த முறை ஒரே மாதிரியான புத்தகம் நிறைய வந்திருந்ததை கவனிக்க முடிந்தது. (உதாரணம்: சச்சின் பற்றிய புத்தகம் நிறைய வந்திருந்தது. தலைப்பு, "ஒரு சுனாமியின் வரலாறு" ). கம்பராமாயணத்தில் வரும் பெயர்களைத் தொகுத்து வர்தமானன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் ஒன்றை வாங்கினேன். மனைவிக்கு லிப்கோவில் ஸகல காரிய ஸித்தியும் ராமாயணம் புத்தகம் வாங்கினேன்.


இந்த பதிவை எழுதும் சமயம் சுஜாதா மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார்.  அவருடன் சற்று நேரம் தொலைப் பேசினேன். சோர்வாக இருக்கிறார், ஆனால் நலமாக இருக்கிறார்.


 

Comments