Skip to main content

அமுதன்

ஏழாம் வகுப்பு படிக்கும் போது, "Water the elixir of life" என்று ஆங்கில கட்டுரை பாடம் ஒன்று இருந்தது. அதில் தான் Elixir என்ற வார்த்தை எனக்கு முதல் முதலில் அறிமுகம். தமிழ் சொல் 'அமுது'. 'Ambrosia' என்ற சொல் இன்னும் சரியாகப் பொருந்தும்.அமுதை தேவர்களின் உணவு என்பர். திருமால் திருப்பாற்கடலைக் கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்பது புராணம். அமுதம் என்பது எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், நன்கு பசிக்கும்போது, மனைவி சமைத்த உணவையே "தேவாமிருதம்" என்று சொல்கிறோம். 


ஸ்ரீவைஷ்ணவர்கள் பாயசத்தை திருக்கண்ணலமுது என்றும் ரசத்தை சாற்றமது என்றும் குழம்பை நெகிழ்கறியமுது என்றும் சொல்வார்கள்.


அமுதன் என்றால் கடவுள் என்ற பொருள். ஆங்கிலத்தில் immortal - அழிவில்லாத என்று சொல்லலாம்.


ஆழ்வார்கள் அமுதை உவமையாக்கி நமக்கு அமுதாக நிறைய அருளிச் செய்துள்ளார்கள். அவற்றுள் சில


கும்பகோணம் ஆராவமுதாழ்வார் பற்றி நம்மாழ்வார் பாடிய பாடல் பிரசித்தம். (என் அப்பாவிற்கு ரொம்பப் பிடித்த பாடல் கூட).
"ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே" என்ற பாடலில் நம்மாழ்வார் பெருமாளை தெவிட்டாத அமுது என்று புகழ்கிறார். இந்த பாடல் பற்றிய குறிப்பு முன்பு எழுதியிருக்கிறேன்.


பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் திருப்பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தைக் கலசத்திலே நிறைத்தது போல எல்லையற்ற உன் அருள் என்னும் அமுதத்தை அடியேன் உடல் உருகி, வாயால் பாடி, இரண்டு கைகளிலும் ஏந்தி மனத்திலே தேக்கி கொண்டேன் என்பதை இவ்வாறு பாடுகிறார்.


கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்


[பெரியாழ்வார் ( 466, 5-4-4 ) ]


பெரியாழ்வார் ஆராவமுதனைத் தன்னுள்ளே தேக்கி வைத்துக் கொண்டார் என்றால், ஆண்டாள் ஆராவமுதனின் வாயில் ஊறிய நீரை கொண்டுவந்து உலராமல் தன்மேல் தெளித்துத் தன் களைப்பை நீக்க வேண்டும் என்பதை


"ஆராவமுதம் அனையான் தன் அமுதவாயிலே ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே”[( நாச்சியார் திருமொழி 13-4, 630 ) ]


திருமங்கையாழ்வார், அடியார்கள் மனத்தில் தேனாய் அமுதமாய் விளங்குபவன் என்பதை "தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை" என்று (பெரியதிருமொழி ( 1400, 5-6-3) ) பாடுகிறார். 


எனக்கு எக்காலமும் தேனாய், பாலாய், அமுதம் ஆகியவை போல் எனக்கு இனிமையான திருமாலின் திருநாமம் 'நமோ நாராயணமே' என்பதை  "தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம்" ( 1543, 6-10-6, பொரியதிருமொழி ) என்கிறார்.


பூதத்தாழ்வார் பாடலை பாருங்கள்


அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தா னென்றும் - அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொல்ப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று


என்று இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் "சக்கரம் ஏந்திய பெருமான் அமுதத்தையும் தேனையும் போல் இனியவன். அன்று தேவர்க்கு அமுதம் அளித்தவன்". இத்திருமாலை அடியேன் அமுதம் போன்ற சொல்மாலையால் பலபடித் துதித்து வணங்கிகிறேன். ( இரண்டாம் திருவந்தாதி 2266, 85 )


பெரியாழ்வார், குழந்தையின் பெயர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்தப் பாசுரம்


"ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு
கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ
நாத் தகு நார்ணன் தம் அன்னை நரகம் புகாள்


சேற்றுக்குழியில் அமுதம் பாய்த்தாற்போல உங்களுடைய பிள்ளைக்கு என் முகில்வண்ணனின் பெயரிட்டால் அப்பெயரைக் கூறும் பொழுது, இறை அனுபவத்துடன் கூடிக் கலந்து களித்துத் திரியலாம். உங்கள் நாவுக்கும் அது தகுந்ததே. நாரயணன் பெயருடைய தாய் நரகம் புகமாட்டாள்.  என்கிறார் (பெரியாழ்வார் ( 389, 4-6-9))


ஐம்பது நாட்களுக்கு முன் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் அமுதன்.


பிறந்த ஒரு மணி நேரத்தில் "என்ன சார் பேர் வைக்க போறீங்க ? " என்பது தான் எல்லோருடைய கேள்வியும், கவலையும்.


"போன முறை தான் நாங்க சொல்லறதை கேக்காம ஆண்டாள்ன்னு எங்க கொள்ளு பாட்டி பேரை வைச்சீங்க இந்த முறை அந்த தப்பை செய்யாதீங்க, அபிஷேக் மாதிரி மார்டனா வையுங்க ஃபுயூசருக்கு நல்லது".


"வேதாந்த்" என்று வையுங்க, உங்க பேரையும் சேர்த்தா நாளைக்கு அவனை எல்லோரும் 'வேதாந்த தேசிகன்' என்று கூப்பிடுவார்கள் என்று என் மனைவி அசரவைத்தாள்.


அமெரிக்காவில் இருக்கும் ஒரு சொந்தம், இண்டர்நெட்டில் ஒரு லிங்கை அனுப்பி பாருங்க என்றார். அதில் சுமார் ஒரு லட்சம் பேர் இருந்தது. A'ல ஆரம்பிக்கும் பெயரே சுமார் ஒரு லட்சம் இருக்கும் எல்லாவற்றையும் படித்து பார்ப்பதற்குள் அடுத்த குழந்தையே கூட பிறந்துவிடும் என்பதால் அதை நிராகரித்தேன்.


"இதற்குள்ளாக, "பொன்னார் மேனியனே!" பாட்டு மிகச் சமீபத்தில் கேட்கத் தொடங்கியிருந்தது. அந்த அறையில் சென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது அங்கே ஒரு சிறுபிள்ளை இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த பிள்ளைதான் அவன்; சேந்தன் அமுதன்." என்று பொன்னியின் செல்வனில் வந்த ஒரு பகுதியை மனப்பாடமாகச் சொன்னார் மாமா.


வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் வில்லன் கேரக்டர் பேர் கூட 'அமுதன்'தான் என்று டக்கென்று ஒன்று விட்ட உறவுகார்கள் சொன்னார்கள்


எதிர்த்த வீட்டு மாமா "ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே" என்று சிவபுராணத்திலோ, திருவாசகத்திலோ வருவதாக சொல்லி, சைவ பேரா இருக்கே என்றார்.


"நண்பர் ஹரன் பிரசன்னா தமிழ் மேல் இவ்வளவு ஈடுபாடா. ஏன் இப்படி ?" என்று வியந்து பாராட்டினார்.


ஆனால் எனக்கு தெரிந்த அமுதன் திருப்பாணாழ்வார் சொன்ன


கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே


அமுதன், ஸ்ரீரங்கத்து அமுதன்.


தொடர்புடைய பதிவு - என் பேர் ஆண்டாள்

Comments