'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா ? செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்றால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன். கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிற...