நாளை எனக்கு முப்பத்தாறு வயது முடிந்து முப்பத்தியேழு வயது ஆரம்பிக்கிறது. ஸ்கூல் படிக்கும் போது பிறந்த நாளிற்கு அம்மா பாயசம் அல்லது சக்கரை பொங்கல் செய்வாள். அதை நான் சாப்பிட மாட்டேன். யாராவது ஃபைவ்ஸ்டார் தருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். பாட்டியை சேவித்து ஆசிர்வாதம் வாங்கியபின் "தேசிகா இந்தா ஏதாவது மிட்டாய் வாங்கிக்கோ" என்று பணம் தருவார். அதில் ஒரு ஃபைஸ்டார் வாங்கிக்கொள்வேன். கல்யாணம் முடிந்த பின் முதல் வருடம் மட்டும் மாமியார் வீட்டில் பாயசம் செய்தார்கள். இந்த பிறந்த தினதில் யாராவது எனக்கு மிட்டாய் கொடுத்தாலும் சாப்பிடமுடியாது. ஏன் என்று தெரிந்துக்கொள்ள மேலே படிக்கவும். போன மாசம் என் மனைவியின் கண் பரிசோதனைக்கு உடன் சென்றிருந்தேன். கண்ணை பரிசோதனை செய்துகொண்ட என் மனைவி "நீங்களும் உங்க கண்களை செக் செஞ்சிக்கோங்கோ.." "எனக்கு எல்லாம் நல்லா தான் தெரிகிறது" "அதை டாக்டர் சொல்லட்டுமே" டாக்டர் கண்களில் டார்ச் லைட் அடித்து கண்களை கூச வைத்து, நான் இரண்டு சொட்டு கண்ணீர் விட்ட பின், சில எழுத்துக்களை காண்பித்தார். "முதல் வரிசையை படியுங்கள்...