ராஜாராமனுக்கு 'அந்த' நினைவு திரும்பவும் வந்த போது சன் நியூஸ் சிறப்பு பார்வை ஓடிக்கொண்டிருந்தது. 'அந்த' நினைவு அடிக்கடி வருகிறது. இந்த ரகசியத்தை தவிர எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார் - ஸ்கூல் பஸ்ஸில் ஒண்ணுக்கை அடக்க முடியாமல் ஜட்டியிலேயே போனது, சிகரெட் குடித்தது, கல்யாணி பீர் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. இப்போது அவர் மகன் காலேஜில் படிக்கிறான், இன்னும் அவர் மனைவியிடம் சொல்லவில்லை.
சன் நியூஸ் சிறப்பு பார்வையின் போது 'அந்த' நினைவுடன் ராஜாராமனுக்கு ஓர் அவஸ்தையும் ஏற்பட்டது. ராஜாராமனுக்கு முன் டாக்டர் தோன்றி "என்னப்பா ஆச்சு?" என்று கேட்டால், அவருக்கு அதை விவரிக்க முடியாது. "கொஞ்சம் uneasy" என்று தான் சொல்லமுடியும். அஜீரணமா, நெஞ்செரிச்சலா, வாய்வு தொல்லையா என்று சொல்ல தெரியாத ஒர் அவஸ்தை. தண்ணீர் குடித்தார். அமிர்தாஞ்சனத்தை தடவிக்கொண்டார். மூச்சை நன்றாக இழுத்து விட்டார். கொஞ்சம் ஜெலுசில் குடித்தார். மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு என்று நினைவு படுத்தி பார்த்துக்கொண்டார். கோலங்கள், செல்வி தொடர்களுடன் அவஸ்தையும் தொடர்ந்து. முதுகுப்பக்கம் கொஞ்சம் வேர்த்த போது அது ஹார்ட் அட்டாக் என்று அவருக்கு தெரியவில்லை.
"என்னடா உடம்புக்கு ?"
"வயத்த வலி"
"அதனால தான் நேத்திக்கு ஸ்கூலுக்கு வரலையா ?" என்றான் ஜெயராமன்
ஜெயராமன், ராஜாராமன் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள். பக்கத்து பக்கத்து வீடு. ஒரே ஸ்கூல். ஒரே வகுப்பு. ஒன்பதாவது படிக்கிறார்கள். இரண்டு பேருக்கும் ராமன் என்று முடிகிற பேர். ஒன்றாக தான் விளையாடுவார்கள். கிரிக்கேட், கமல், நன்னாரி சர்பத் பிடிக்கும்; கணக்கு டீச்சரை பிடிக்காது. மீசை வளரலாமா என்று யோசிக்கும் அதிகம் சிக்கலில்லாத பருவம். ஆனால் சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள்.
சிக்கல் இல்லாத சந்தில் அந்த ஆஸ்பத்திரி அமைந்திருந்தது. வரவேற்பு பகுதியில் ஃபைபர் நாற்காலிகள் வரிசைகள். கவலையா, தூக்கமா என்று கண்டுபிடிக்க முடியாத பார்வையாளர்கள். கிரானைட் தரையில் பிள்ளையார் பிசியாக எல்லோருடைய கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். பணிப்பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்திருந்தார்கள். ஆயாக்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரி ஒரு மினி தொழிற்ச்சாலை போல இயங்கிக்கொண்டிருந்தது.
ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரியில் ராஜாராமன் முதல் மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு செல்லப்பட்டார். எல்லோருக்கும் ஆக்ஸிஜன்,. மானிட்டரில் இதயத்தின் துடிப்புகள் என்று அமைதியான இடம். ஆனால் எல்லோரிடமும் பயம் இருந்தது.
"டாக்டர் பயப்பட ஒண்ணுமில்லையே?"
".."
"நீங்க தான் டாக்டர் எப்படியாவது.. "
ராஜாராமனுக்கு நாக்குக்கு கீழே அடக்கிக்கொள்ள மாத்திரை தரப்பட்டது. சில நிமிடங்களில் ராஜாராமனுக்கு un-easy, easy ஆனது.
அங்கிருந்த ஒரு டியூட்டி டாக்டர் ரத்த அழுத்தம். பல்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே செல்போனில் தன் தலைமை டாக்டரிடம் பேசினார்.
"இதோ பாருங்க முதல்ல ஒரு இ.சி.ஜி அப்புறம் அன்ஜியோகிராம் எடுக்கணும். அன்ஜியோப்ளாஸ்டியா அல்லது பைபாஸா என்று சீஃப் டாக்டர் தான் முடிவு செய்யணும்"
ராஜாராமன் கலவரமாக "டாக்டர் எனக்கு ஒண்ணும் இல்லை, எனக்கு எந்த ஆபரேஷனும் வேண்டாம்"
"என்ன இப்படி குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறீங்க. இது ஒரு எக்ஸ்ரே மாதிரி பயப்பட வேண்டாம். திரும்ப திரும்ப தப்பு பண்ணாதீங்க"
"டேய் வேண்டாண்டா, அதெல்லாம் தப்பு"
"ஒண்ணும் ஆகாது"
"யாராவது பார்த்தா..அசிங்கம்"
"லைட் தான் அணச்சிருக்கே"
"வேண்டாம்டா.."
ஹார்மோன்கள் ஓவர் டைமில் வேலை செய்ய, தோல் இல்லாத இரட்டை வாழைப்பழம் போல் இருந்தார்கள். இதற்கு மேல் என்ன நடந்தது என்று விவரிப்பது நாகரிகமாக இருக்காது.
"வேண்டாம்டா .. இதெல்லாம்.. தப்பு..பயமா இருக்கு"
"பயப்படாதடா ஒண்ணும் ஆகாது"
ராஜாராமனுக்கு ஆஸ்பத்திரியில் பயம் வந்தது. மரண பயம்.
"டாக்டர் அவருக்கு சரியா போய்டுமா"
"இப்போ ஓண்ணும் சொல்ல முடியாதம்மா அன்ஜியோகிராம் எடுத்தப்புறம் தான் சொல்லமுடியும். எந்த ரத்தகுழாயில் எவ்வளவு அடைப்பு என்று"
"ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா அவருக்கு"
"இல்லை டாக்டர், பொய் கூட சரியா சொல்ல வராது"
"பொய் சொல்லாதே. ஏண்டா என்ன பார்த்தா பயந்து ஓடர"
ராஜாராமன் தரையை பார்த்துக்கொண்டு "அதெல்லாம் ஓண்ணுமில்லையே"
"இன்னிக்கு ராத்திரி எங்க வீட்டுக்கு வா யாருமில்ல. என்ன ?"
ராஜாராமன் பதில் சொல்லவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமா, குற்ற உணர்ச்சியா?. யாரிடம் கேட்பது, என்ன செய்வது. உளவியல் ரீதியாக ஒரு பெரும் மனச்சிக்கல் ஏற்பட்டது. அருவருப்பா, பயமா, வெட்கமா?. இந்த நினைப்பு வரும்போது எல்லாம் வேர்த்து கொட்டியது.
"ஏம்மா வேர்த்து விட்ட போதே உடனே கொண்டு வந்திருக்க வேண்டாமா ?"
இசிஜி எடுத்தபோது இதயத்தில் மிக சமீபத்தில் ஒரு தாக்கம் தாக்கியிருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. தலைமை டாக்டரிடம் திரும்பவும் போனில் பேசிவிட்டு தான் செய்ய வேண்டியதை குறித்துக்கொண்டார்.
"நாளைக்கு மார்னிங் உடனே அன்ஜியோகிராம் எடுக்கணும். அதுவரைக்கு ICUல் அப்சர்வேஷனில் இருக்கணும். ஸுகர், பி.பி எதாவது இருக்கா? " என்றார்
"இதுவரைக்கும் இல்லை"
அடுத்த நாள் காலை டாக்டர், பளிச்சென்று வந்தார். இசிஜி, ரிப்போர்ட் எல்லாவற்றையும் வேகமாக பார்த்தார்.
"உடனே அவருக்கு ஒரு அன்ஜியோகிராம் எடுக்கவேண்டும் தேவைப்பட்டால் உடனே பைபாஸ் செய்யவேண்டும்" என்று சொல்லிவிட்டு அடுத்த பேஷண்டிடம் "என்ன பசி எடுக்கிறதா?" என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.
அந்த தனியார் ஆஸ்பத்திரியில் ராஜாராமனுக்கு அன்ஜியோகிராம் செய்யபட்டு, அவர் மனைவியிடம் ஒரு சிடியில் எவ்வளவு அடைப்பு என்பதை போட்டு காண்பித்து விளக்கினார்.
"ரொம்ப சிக்கலாகிவிட்டது, நீங்க முன்பே இவரை ஆஸ்பெட்டலுக்கு கொண்டு வந்திருக்கணும். இப்ப பாருங்க ரொம்ப காம்பிளிக்கேட்டடாக இருக்கு அவருடைய ஹார்ட் ஐம்பது சதவிகிதம் தான் வேலை செய்கிறது. சீஃப் டாக்டர் கே.ஜெ அமெரிக்கா போயிருக்கார் வரும் புதன் கிழமை வந்துடுவார். வந்த அடுத்த நாள், இவருக்கு உடனே பைபாஸ் செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. திறமையுள்ள சர்ஜன் தான் கைய வைக்கணும். ஆர்ட்டரியெல்லாம் எழுவது, எண்பது சதவிகிதம் அடைச்சுக்கிடக்கு. அதில் ஒண்ணு 'விடேஸ் ஆர்ட்டரி'. இவர் பொழைச்சதே பெரிய ஆச்சரியம்"
" ஆப்பரேஷன் பண்ணித்தான் ஆகணுமா ?"
"ஏம்மா இவ்வளவு சீரியஸாக இருக்கு இப்படி கேக்கிறீங்க?"
"சரி டாக்டர், அஷ்டமிலெ வேண்டாம்"
"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா, வியாழக்கிழமை இவருக்கு பைபாஸ் செய்யணும். இவர் பிளட் குரூப்புக்கு பிளட் ஏற்பாடு செய்யுங்க. . ரொம்ப எக்சைட் ஆகாம பார்த்துக்கோங்க. ஆஸ்பத்திரி டையட் தான் சாப்பிடணும்"
ராஜாராமனுக்கு பசித்தது ஆனால் சாப்பிட முடியவில்லை. தூக்கம் வரவில்லை. வந்தாலும் கனவு வந்து எழுப்பிவிட்டது. யாரை பார்த்தாலும் பிடிக்கவில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போது ஏனோ கோபம் வந்தது.
அம்மா தான் கவனித்து "ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே உடம்புக்கு என்ன?"
"ஓண்ணுமில்லமா நான் நல்லா தான் இருக்கேன்"
"அடிக்கடி தூக்கத்தில உளர..எதையாவது பார்த்து பயந்துட்டையா ?"
தரையை பார்த்துக்கொண்டு "இல்லமா"
அரையாண்டு தேர்வில் மிக கம்மியான மார்க் தான் வாங்கியிருந்தான். "குழந்தைக்கு ஏதோ திருஷ்ட்டி" என்று அவன் அம்மா அவனுக்கு சுடு மோர் கொடுத்தாள். சமயபுரத்துக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள். சில மாதங்களில் ராஜாராமன் அப்பாவிற்கு டிரான்ஸ்பராகி சென்னைக்கு சென்றார்கள்.
ஜெயராமனை பார்க்காதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நாளடைவில் அந்த நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து பிறகு எப்போதாவது வரும்.
ராஜாராமனுக்கு மயக்க மருந்து கொடுக்கபட்டு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தார். பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர் கே.ஜெ வரவைக்கபட்டு இந்த ஆப்பரேஷன் செய்து முடிக்கப்பட்டது. ராஜாராமனின் அடைபட்டிருக்கும் முக்கியமான இரத்தகுழாய்களுக்கு மாற்று வழி செய்து முடிக்க ஐந்து மணி நேரம் ஆனது. முடித்தவுடன் டாக்டர் செரியன் அழைத்ததால் ஒரு சின்ன பெண் குழந்தைக்கு பைபாஸ் செய்ய அவசரமாக செல்லும் போது...
"ரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் நார்மல். சீக்கிரமே கண்விழிப்பார். இன்னும் ஒரு மாசத்தில ஆபிசுக்கு போகலாம்"
"நீங்க தான் டாக்டர் தெய்வம்"
"அதெல்லாம் பெரிய வார்த்தை. நான் சாயங்காலம் நினைவு வந்தவுடன் வந்து பார்க்கிறேன்"
நினைவு வந்தவுடன் ராஜாராமனுக்கு கொஞ்சம் பசித்தது. சீக்கிரம் வீட்டுக்கு போனால் தேவலை என்று தோன்றியது.
டாக்டர் கே.ஜெ அடுத்த நாள் காலை ராஜாராமனை பார்க்க பத்து மணிக்கு வந்த போது ராஜாராமனுக்கு நேற்று கொடுத்த மருந்தினால் பாதி தூக்கத்தில் இருந்தார்.
"ராஜாராமன் இப்ப இப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் டாக்டர். கொஞ்சம் அசதியா இருக்கு"
"ரொம்ப வொரி பண்ணீக்காதீங்க. டேக் ரெஸ்ட்.உங்க சொந்த ஊர் திருச்சியா ?"
"ஆமாம்"
"டேய் என்ன தெரியலை நான் தான் ஜெயராமன்"
ராஜாராமன் கண்சிமிட்டாமல் ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
Sir..,Kalakiiteenga.. sensitive topic but well handled..
ReplyDelete
ReplyDeleteஅழகான முடிவு ! எந்தப் பத்திரிக்கையில் பிரசுரிக்கப் பட்டது என்று அறிய ஆவல்.
பிரசுரிக்கப் பட்டிதிருந்தால் .....
அழகான முடிவு ! எந்தப் பத்திரிக்கையில் பிரசுரிக்கப் பட்டது என்று அறிய ஆவல்.
ReplyDeleteபிரசுரிக்கப் பட்டிதிருந்தால் .....