போன வாரம் புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கும் இடத்தில் என்னையும் சேர்த்து ஒரு நான்கு பேர் தான் இருந்தார்கள்.
விசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயில் வந்துள்ளது என்றார்கள். நானும் கிளம்பினேன். வரும் வழியில் நடு ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஸிராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு வேகமாகப் போய்கொண்டிருந்தன. சுமார் இரண்டு கீமீ தூரத்துக்கு வாகன நெரிசல்... பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து டிவியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த நாள் காலையிலிருந்தே எங்கும் வன்முறை, பதட்டம் என்று டிவியில் சோக இசையில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கன்னட சேனல்கள், இரண்டு செய்தி சேனல்கள் தவிர மற்றவைகளில் எல்லாம் பூச்சிகள் தான் தெரிந்தது.
டிவியில் பார்த்த வன்முறை செய்பவர்கள் 15-25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் வேலை இல்லாதவர்கள். டிவி கேமிராவைப் பார்த்துச் சிரித்து, தங்கள் சோகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். ராஜ்குமார் ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழியெல்லாம் இந்தக் கூட்டம் கல்லெறிவதும், போலீஸை அடிப்பதும், வண்டிகளை எரிப்பதும் என்று பார்க்கும் போது ஏதோ செய்தது. ராஜ்குமார் இறுதி ஊர்வலம் 12 கீமீ தூரத்தைக் கடக்க நான்கு மணிநேரம் ஆனது. இறுதிச் சடங்குகள் நடக்க விடாமல் கூட்டம் எல்லோரையும் தள்ளியது. ராஜ்குமார் எழுந்து "என்னை சீக்கிரம் குழியில் போட்டு அடக்கம் பண்ணுங்கப்பா!" என்று கேட்டுக்கொண்டவுடன் குழி மூடப்பட்டது. தொடர்ந்து டிவியில் ராஜ்குமார் ஜெயபிரதாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தார்.
இந்த மாதிரிக் கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. Anonymity கிடைத்த இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.
ஜூலியஸ் சீசர் இறந்தவுடன், ஆந்தோனி பேச்சினால் உசுப்பப்பட்ட ஊர் மக்களால் ஒரு கலவரம் வெடிக்கும். கூட்டம் வன்முறையில் இறங்கும். அப்போது சின்னா ( Cinna ) என்ற கவிஞர் இந்த கூட்டத்தினரிடம் மாட்டிக் கொள்வார்.
"உன் பேர் என்ன?" என்று கூட்டத்தினர் கேட்பார்கள்.
அந்த அப்பாவி கவிஞர் "சின்னா" என்பார்.
"சதிகாரன் சின்னா, இவன் தான் கொல்லுங்கள்!" என்பான் கூட்டத்திலிருந்த ஒருவன்.
"ஐயோ நான் சின்னா என்ற கவிஞர்.." என்பார் சின்னா.
"கொல்லுங்கள் இவனுடைய மோசமான கவிதைகளுக்கு!!" என்று அவனை சாகடிப்பார்கள்.
அதனால் இவர்களுக்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டும். இந்த முறை அது ராஜ்குமார் இறந்த செய்தி. இதில் தமிழ், கன்னடா என்று இதைப் பிரிக்கமுடியாது. எல்லோரிடமும் இந்த வன்முறை இருக்கிறது. நாகரிகம், மதம் எல்லாம் நம்மை கட்டிப்போட்டுள்ளது, அவ்வளவுதான்.
அமைதியான குளத்தில் கல்லெறிவது, பூக்களைப் பறிப்பது, டிஸ்கவரியில் சிங்கம் மானைக் கொல்வதைப் பார்ப்பது எல்லாம் வன்முறை தான்.
நல்லவேளை, வீரப்பன் கடத்தியபோது அவர் சாகவில்லை. இல்லை என்றால் இதைவிட நிறைய கண்ணாடி உடைந்திருக்கும்.
போன மாதம் முழுக்க பெங்களூரில் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஒரே பூக்கள். ஊதா, லைட் பின்க், மஞ்சள் என்று. இந்த மாதம் அவை எல்லாம் உதிர்ந்து இப்போது எல்லா இடத்திலும் சிகப்பு குல்மஹார் பூக்கள் !
Comments
Post a Comment