Skip to main content

கல்கி – அசோகமித்திரன்

இந்த வாரம் நான் படித்த இரண்டு பகுதிகளை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முதலில் கல்கி எழுதியது ( - ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம் )


ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், ‘‘என்னப்பா கதை சொல்லுகிறாயே?’’ என்கிறோம்.


‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்?’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம்.
இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான
நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது.


அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத
மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக
இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள்.


‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’


‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’


‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’


‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன்று’’ என்றெல்லாம் எடுத்துக்காட்டி, ‘‘ஆகையால் கதை சுத்த அபத்தம்! தள்ளு குப்பையில்!’’ என்று ஒரே போடாய்ப் போட்டு விடுகிறார்கள்.


விமர்சகர்கள் இப்படிச் சொல்கிறார்களே என்பதற்காகக் கதை ஆசிரியர் வாழ்க்கையில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகளையே அப்பட்டமாக எழுதிக் கொண்டு போனால், படிக்கும் ரஸிகர்கள் ‘‘நடை நன்றாய்த்தானிருக்கிறது. போக்கும் சரியாகத்தானிருக்கிறது. ஆனால் கதை ஒன்றுமேயில்லையே?’’ என்று ஏமாற்ற மடைகிறார்கள். முன்னால் அவ்விதம் சொன்ன விமர்சகர்களும் ரஸிகர்களுடன் சேர்ந்துகொண்டு, ‘‘உப்பு சப்பு இல்லை. விறுவிறுப்பு இல்லை. இதற்குக் கதை என்று பெயர் என்ன கேடு? தள்ளு குப்பையில்!’’ என்று சொல்லி விடுகிறார்கள்.


என் சொந்த அனுபவத்தில் நான் கண்டும் கேட்டும்
தெரிந்து கொண்டிருப்பது என்ன வென்றால்,
வாழ்க்கையில் உண்மையாக
நிகழும் பல சம்பவங்கள் கதை ஆசிரியர்கள் புனையும் அபூர்வக் கற்பனைகளைக் காட்டிலும் மிக
அதிசயமானவை என்பதுதான். ஒரு சாதாரண உதாரணத்தைச் சொல்லுகிறேன்:-
‘‘இராமச்சந்திரன் தன் தோழன் முத்து சாமியைத் தேடிக் கொண்டு மயிலாப்பூருக்குப் புறப்பட்டான். முத்துசாமி
மயிலாப்பூரில் ஏதோ ஒரு சந்தில் வாடகை வீட்டில் இருக்கிறான் என்று மட்டும் அவனுக்குத் தெரியுமே தவிர, சரியான விலாசம் தெரியாது. அன்றைக்கு மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம் என்பதும் இராமச்சந்திரனுக்குத் தெரியாது. மயிலாப்பூரில் நாலு மாடவீதிகளிலும் ஒரு லட்சம் ஜனங்கள் அன்று கூடி இருந்தார்கள்.


‘இராமச்சந்திரன், ‘இன்றைக்குப் பார்த்து வந்தோமே? என்ன அறிவீனம்! முத்துசாமியையாவது இந்தக் கூட் டத்தில் இன்று கண்டுபிடிக்கவாவது?’ என்று எண்ணிக்கொண்டு வந்த வழியே திரும்பிப் போகத்
தீர்மானித்தான். கூட் டத்தில் புகுந்து முண்டியடித்து அவன் போய்க் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவன் பேரில் தடால் என்று முட்டிக் கொண்டான். ‘அட, ராமச்சந்திரா!’ என்று குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கே சாக்ஷ¡த் முத்து சாமி நின்று கொண்டு பல்லை
இளித்தான்!’’


இவ்வாறு ஒரு கதையில் எழுதினால் விமர்சகர்கள் பிய்த்து
வாங்கிவிடுவார்கள். ‘‘ஒரு லட்சம் ஜனங்கள் இருந்த கூட்டத்தில் இராமச்சந்திரன் முத்துசாமியின் மேலேதானா முட்டிக்கொள்ள வேண்டும்? அது எப்படிச் சாத்தியம்? நம்பக் கூடியதாயில்லை’’ என்று ஒரேயடியாய்ச் சாதிப்பார்கள். ஆனால் மேற் கூறியது என் சொந்த அனுபவத்திலேயே நடந்திருக்கிறது. அதைக் காட்டிலும் பன்மடங்கு
வியப்பளிக்கக்கூடிய அபூர்வ சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நீங்கள் ஞாபகப்படுத்திக்கொண்டு பார்த்தால் உங்கள் ஒவ்வொருவருடைய அனுபவத்திலும் இம்மாதிரி எத்தனையோ
நிகழ்ந்திருக்கும்.


ஆனாலும் அவற்றையெல்லாம் கதைகளில் அப்படியே எழுதினால், ‘‘ஒரு நாளும் நடந்திருக்க முடியாத சம்பவங்கள்’’ என்று விமர்சகர்கள் சொல்லுவார்கள். நீங்களும் நானும் அவர்களை ஆமோதித்து ‘‘கதை இயற்கையாக இல்லை!’’ என்று சொல்லி விடுவோம்.


ஆகவே கதை எழுதும் ஆசிரியர் கத்தியின் விளிம்பின் மேலே நடப்பதைக் காட்டிலும் கடினமான வித்தையைக் கையாள வேண்டியவராகிறார். கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும். அதே சமயத்தில் ‘‘இப்படி நடந்திருக்க முடியுமா?’’ என்று சந்தேகத்தை எழுப்பக்கூடிய நிகழ்ச்சிகளையும் விலக்க வேண்டும்.


பிரத்தியட்சமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாயிருக்கலாம். ஆனால் படிக்கும்போது, ‘‘இது நம்பக்கூடியதா?’’ என்று தோன்றுமானால், கதை பயனற்றதாகி விடுகிறது.


சுருங்கச் சொன்னால், கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் தோன்றக் கூடாது!


 



அடுத்தது புதிய பார்வை ( பிப்ரவரி இதழ், சிறுகதை சிறப்பிதழ்) அசோகமித்திரன் பற்றி அகிலன் எழுதியதிலிருந்து...


.... இதே மாதிரிப் பின்னாளில் பரிக்ஷாவின் நாடகங்களில் அசோகமித்திரன் நடித்தாலும் துவக்கத்தில் நாடகத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிப்பு என்கிற கட்டுரையில் விவரிக்கிறபோது தன்னை குறித்தே கேலியுணர்வுடன் எழுதுகிறார்.


"நான் நடித்த பாத்திரம் இரண்டு அடாவடிக் குழுக்கள் நடுவில் மாட்டிக் கொள்ளும் அரைப்பைத்தியப் பாத்திரம். நாடகத்தன்று காலையிலிருந்து என்னுடைய மூக்குக் கண்ணாடி சரியாக இல்லை. நாடக இறுதியில் இரு குழுக்களும் சேர்ந்து தர்ம மற்றும் அதர்ம அடிகள் கொடுக்க, நான் கீழே விழுந்தபோது என் மூக்குக் கண்ணாடி என்னிடமிருந்து விடுபட்டு மேடையின் முன் விளிம்பில் போய் விழுந்தது. பலத்த கரகோஷம். என் மூக்குக் கண்ணாடியைக் கூட இவ்வளவு பொருத்தமாக கீழே விழ வைத்ததற்கு எனக்குப் பாராட்டுக்கு மேல் பாராட்டு. என்னை பாராட்டி மாலை அணிவித்த போது கண்ணாடி மீண்டும் ஒரு முறை கீழே விழுந்தது" 


என்ன ஒரு அருமையான நகைச்சுவை உரைநடை. இவர்கள் எழுதுவதை படித்தால் எழுத வேண்டுமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.


பிகு: வலது டாப் 5 புத்தகங்கள் அப்டேட் செய்திருக்கிறேன்.

Comments