Skip to main content

விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா பதில்கள் !

 


 

வாசகர்கள் கேட்ட விஞ்ஞான சிறுகதை கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.


கேள்வி கேட்ட அனைவருக்கும், பதில் அளித்த திரு.சுஜாதாவிற்கும் என் மனமார்ந்த நன்றி.


கேள்வி-பதில்களை தொகுக்க உதவிய என் நண்பர் பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.


கேள்வி :
1. விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன ? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா ?
நீங்கள் எழுதிய 'முடிவு' என்ற சிறுகதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்தியது எந்த அடிப்படையில் என்பதை கொஞ்சம் சிம்பிளாக விளக்குங்களேன் ?
"epistolary literary technique"' (different style of writing) ' சார்ந்திருப்பதால் முடிவு ஒரு sci-fi கதை என்கிறீர்களா?


பதில்:
விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக எனது தொகுதியின் முன்னுரையில் எழுதியுள்ளேன். அதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள். இல்லை net-ல் தேடிப்பாருங்கள். நிறைய விளக்கம் கிடைக்கும். ' முடிவு' என்கிற கதை முழுவதும் நானே எழுதியது. அதன் வடிவமைப்பில் முன்று பேர் எழுதிய கடிதங்கள் என்பதை நம்ப வைக்க செய்த தந்திரங்கள் ஒரு விஞ்ஞானக் கதைக்குரியது. இந்தக் கதையை பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் நீங்கள் பார்ககவேண்டும். சம்பிரதாயக் கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்ட எந்தக் கதையும் விஞ்ஞானக் கதையின் நவீன அறுதியில் சேரும். கதைமாந்தரே இல்லாத ஒரு விஞ்ஞானக்கதை கூட இருக்கிறது. நடுக்கடலில் ஒரு காலியான படகில் நடைபெறுவது!
(பி.கு: சமயம் கிடைக்கும் போது, குங்குமத்தில் வந்த 'முடிவு' வி. கதையை ஸ்கேன் செய்து போடுகிறேன் - தேசிகன்)



கேள்வி:
2. விஞ்ஞானச் சிறுகதையை எப்படி சொல்ல வேண்டும் ?
விஞ்ஞானச் சிறுகதையில் விஞ்ஞானம் எவ்வளவு சதவீதம், சிறுகதை எவ்வளவு சதவீதம்?
பொதுவாக ஐசாக் அசிமோவின் கதைகளில் ஒரு அறிவியல் கருத்தை முன்வைத்து அதனால் நிகழும் பாதிப்புகளை அலசுவார். சுஜாதாவும் இம்முறையை பின்பற்றி இருப்பதை அறிவோம். ஆனால் ஸை-ஷபிக்கள் பெரும்பாலும் ஒரு நூறு வருடம் கழித்து நடக்குமோ என ஆச்சரியப்படுவதை / அச்சப்படுவதை பதிவு செய்கின்றன - அல்லவா? என் கருத்துப்படி, விஞ்ஞான சிறுகதையில் கதை இல்லாவிட்டாலும் விஞ்ஞானமாவது இருக்க வேண்டும். உங்கள் கருத்து ?


பதில்:
எப்படிச்சொல்லவேண்டும் என்கிற வரையறையெல்லாம் கிடையாது. Fantasy, Gothic stories, Hard Sci Fi என்று பலமுறைகள் உண்டு எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஞ்ஞானத்தைப் பற்றி சொல்வது வி. கதையில் ஒரு வகை.


கேள்வி:
3. ஆங்கிலத்தில் மற்றும் தாங்கள் எழுதிய பல sci-fi கதைகளை படித்த வரையில், எனக்கு அவ்வகைக் கதைகள் Future Technology அல்லது எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சாத்தியம் (அபாயம்!) உள்ள விஷயத்தைச் சார்ந்து அமைய வேண்டும் என்று தோன்றுகிறது.
sci-fi என வகைப்படுத்துவதற்கு மூன்று ஆதார விதிகள் கூறுமாறு வேண்டுகிறேன்? ஓரு காலத்தில் sci-fi என்றுணரப்பட்டவை (like 'Around the World in 80 days', 'From the Earth to the Moon' and '20,000 Leagues Under the Sea'), விஞ்ஞான வளர்ச்சி காரணமாக 'sci-fi' தன்மையை பின்னாளில் இழந்து விடுமா?


பதில்:
எதிர்காலத்தில் நல்லதே நிகழும் என்று எழுதினால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. விதிகளை மாற்றிப் போட்டு அவைகளுக்கிடையே உள்ள புதிய முரண்பாடுகளைச் சொன்னால் தான் படிக்கச் சுவையாக இருக்கும். சொர்க்கத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொன்னால் அது கதையல்ல. போர் அடித்துவிடும். அந்த சொர்க்கத்திலும் முதுகுவலி டயாபடீஸ் பொறாமை போன்றவை இருந்தால் தான் படிக்கத் தோன்றும். நம் புராணக் கதைகளையே பாருங்கள். அவைகளிலும் போட்டி, ஆட்சிக் கவிழ்ப்பு, சாபங்கள், சபலங்கள் எல்லாம் இருக்கின்றன. நிகழ்காலச் சாயலை நாம் மீறவே முடியாது.

கேள்வி:
4 விஞ்ஞான சிறுகதைக்கு எதாவது பொது அம்சங்கள் இருக்கிறதா ?
விஞ்ஞானக் கதைகளின் மையக்கரு விஞ்ஞானம் சம்பந்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று எஙகயோ படித்த ஞாபகம் (I think I read it in "How to write science fiction & fantasy?"). John W Campbellன் "Who goes there?" ஆரம்பித்து இப்போதைய Neuromancer வரை இதை பின்பற்றின மாதிரிதான் தெரிகிறது?


பதில்:
உண்மையான விஞ்ஞானமாக இல்லாமல் இன்றைய விஞ்ஞானத்தின் விபரீதமான நீட்டல் தான் பொது அம்சமாக இருக்கும். மையக் கரு விஞ்ஞானம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும என்பது ஒரு வகை விஞ்ஞானக் கதைக்குத் தான் தேவை. எமதர்மராஜன் மாருதி காரில் வரும் தருமு மாமாவாக, ஒரு கதை எழுதியுள்ளேன். இதுவும் விஞ்ஞானக்கதையில் சேரும். புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' விஞ்ஞானக் கதை தான். இதன் அளவிலாத சாத்தியங்கள் தான் என்னை இதன்பால் ஈர்த்தது.

கேள்வி:
5. Are there certain predefined types of plots/themes that sci-fi is based on (For e.g. Time travel)? Are these any different from a short story or novel?


பதில்:
NO that is the attraction of Sci Fi. 'Cognitive estrangement' is a good guide. Describe an estranged society but have something identifiable for present day world in that.


கேள்வி:
6. How much science is needed in a sci-fi work? Should it give the central premise or should it just be used to describe the locale and social environs?


பதில்:
90 percent to 1 percent. 100 percent is not Sci Fi but, having 0 percent Sci fact is a conventional story.


கேள்வி:
7. Science Fiction பற்றி Google-ல் தேடிப்பார்த்ததில் நான் குழம்பிவிட்டேன். விஞ்ஞானக் கதையை வகைப்படுத்த இயலுமா? ஒரு கதையை எப்படி விஞ்ஞானச் சிறுகதை என்று கண்டுபிடிப்பது ?


பதில்:
சில தேர்ந்த வி.கதை எழுத்தாளர்களைப் படிப்பதன் முலம். நான் Ray Bradbury படித்தபின் தான் இதில் முனைப்பாக இறங்கினேன்.


கேள்வி:
8. ராமாயணமும், மகாபாரதமும் விஞ்ஞானக் கதைகளா ?


பதில்:
ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இன்றைய சூழ்நிலைக்குக் கொண்டு வரமுடிந்தால் விஞ்ஞானக்கதை என்று சொல்லாம். என்னுடைய 'நச்சுப் பொய்கை' படித்துப் பாருங்கள். ஒரு மகாபாரதக் கதையை அப்படியே ராஜாஜி சொன்னதுபோல் எழுதிவிட்டு ஒரே ஒரு வரி மட்டும் மாற்றினேன்!



கேள்வி:
9. உங்கள் விளக்கங்களின் அடிப்படையில் Akira Kurosawa-vin ROSHOMON ஒரு விஞ்ஞானச் சிறுகதையா ?


பதில்:
இல்லை. அது ஒரு Mutiple Point of View கதை அவ்வளவே. சுந்தர ராமசாமியின் 'திரைகள்ஆயிரம்' படித்துப்பாருங்கள்.


கேள்வி:
10. எல்லா அமானுஷ்ய கதைகளும் sci-fi வகையை சார்ந்தவை என்று கொள்ளலாமா?


பதில்:
அவையெல்லாம் Fantasy வகையில் சேரும். அந்த அமானுஷ்ய உலகின் விதிகள் நம் உலகின் விதிகளுக்கு மாற்று விதிகளாக அமைந்தால் அவைகளை Sci Fi யில் ஒரு பிரிவாகச் சொல்லலாம்.


கேள்வி:
11. Can "குடைக்குள் மழை" be called sci-fi? Split Personality வரும் கதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்த முடியுமா ?


பதில்:
NO. It is just a confused psychological thriller.



கேள்வி:
12. நீங்கள் படித்த விஞ்ஞானச் சிறுகதைகளில் உங்களை கவர்ந்த கதைகள் சிலவற்றைக் கூற முடியுமா ? தமிழில் நல்ல விஞ்ஞானச் சிறுகதைகள் இருக்கின்றனவா ? இல்லையெனில், தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகள் ஏன் அவ்வளவாக எழுதப்படவில்லை ?


பதில்:
என் பட்டியல் மிகப்பெரியது. நீங்களே கொஞ்சம் முனைந்து படித்துப்பாருங்கள். Douglas Adams is a good starting point. தமிழில் அத்தனை வி.சிறுகதைகள் இல்லாததற்கு காரணம் இதை தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். இத்தனை கேள்விகள் எழுவதிலேயே காரணம் உள்ளது!



கேள்வி:
13. விஞ்ஞானச் சிறுகதை புரியவேண்டும். ஆனால் அதில் விஞ்ஞானம் அதிகம் கலப்பதனால் புரியாமல் போகும் அபாயம் இருக்கிறதே. அதற்கு உங்கள் உபாயம் ?


பதில்:
வி.கதையில் உள்ள விஞ்ஞானம் புரியவில்லையென்றால் அந்தக் கதை செத்துவிட்டது என்று அர்த்தம் !?


கேள்வி:
14. இரண்டு வரியில் ஒரு விஞ்ஞானக் கதையை எழுத முடியுமா ?


பதில்:
முடியும். என்னுயை சி சி கதைகள் புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.


கேள்வி:
15. விஞ்ஞானக் கதை சரி, விஞ்ஞானக் கவிதை/ஹைக்கூ இருக்கிறதா ?


பதில்:
இருக்கிறது! Sci-Ku என்று பெயர்!



 Old Comments from my previous blog.


யாராவது ஒரு SCI-KU கூறுங்களேன், பார்க்கலாம்!


ஓரு காலத்தில் sci-fi என்றுணரப்பட்டவை (like 'Around the World in 80 days', 'From the Earth to the Moon' and '20,000 Leagues Under the Sea'), விஞ்ஞான வளர்ச்சி காரணமாக 'sci-fi' தன்மையை பின்னாளில் இழந்து விடுமா?


இதற்கான நேரடியான பதில் திரு.சுஜாதாவிடமிருந்து கிடைக்காதலால், உங்களில் யாராவது இதை தெளிவு செய்யுமாறு வேண்டுகிறேன். Just out of curiosity!


என்றென்றும் அன்புடன்
பாலா


By Anonymous, at Fri Oct 29, 05:36:31 PM IST  

Comments