Skip to main content

கல் சொல்லும் கதை – பாகம் 2

கல் சொல்லும் கதை என்று ஒருவருடம் முன்  நம்பெருமாளை முகமதியர்களிடமிருந்து காத்த ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் பற்றியும், நம்பெருமாள் ஜோதிஷ்குடியில் தங்கிய இடம் அங்கே சென்ற அனுபவத்தை கட்டுரையாக அடியேன் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.
(இந்த கட்டுரையை படிக்கும் முன்பு எழுதிய கட்டுரையை ஒரு முறை படித்துவிடுங்கள் )

அந்த கட்டுரையை படித்த சிலர் ”ஏன் அதில் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பங்கை நீங்கள் குறிப்பிடவில்லை?”  என்று கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்வி, குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், சரியான தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை சற்றே தள்ளிப்போட்டேன்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரே பிரச்சனை  கோயில் யானை மட்டும் இல்லை, புத்தகங்களிலும் தென்கலை, வடகலை சார்ந்தே இருப்பது தான்.  வடகலை  நித்யநு சந்தானத்தில் உபதேச சத்தின மாலை இருக்காது, தென்கலை புத்தகத்தில் பிள்ளையந்தாதி இருக்காது.

ஸ்ரீபிள்ளைலோகாசாரியரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும் சமகாலத்தவர்கள். ஆனால் சம்பிரதாயத்தை ஒட்டி, சரித்திர சம்பந்தமான விஷயங்களிலும் இந்த மகா புருஷர்களில் யாராவது ஒருவரை தவிர்த்துவிட்டு சரித்திரத்தை எழுதியுள்ளார்கள். இந்த மாதிரி விடுபட்டு எழுதுவதும் ஒருவிதத்தில் பாகவத அபசாரமே.



ஆசாரியபுருஷர்கள் தாங்கள் இதை செய்தோம் இப்படி வாழ்ந்தோம் என்று எந்த சுயசரிதையை எழுதிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அது முக்கியமில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் திவ்யபிரபந்தமும், ஸ்ரீபாஷ்யமும் அதனை ஒட்டிய உரைகளுமே.

நம்பிள்ளை ஈட்டில் அடிக்குறிப்புக்களை கொண்டு பல வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அதை வைத்து தான் அவர்கள் வாழ்ந்த காலத்தை ஒருவாறு அனுமானிக்கலாம்.

நம் நாட்டில் வரலாறு குழந்தைகளுக்கு சரியாக சொல்லிக்கொடுப்பதில்லை. நாம் படிக்கும் வரலாறு என்பது அசோகர் மரம் நட்டார், அக்பர் கையில் ரோஜாப்பூ, பாடங்கள் தான். கோபணார்யனைப் பற்றியும் அவரைப் பற்றிய கல்வெட்டு ஒன்று இன்றும் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது என்று எவ்வளவு பேருக்கு தெரியும்  ? ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்களுக்கு அங்கே 644 கல்வெட்டுக்கள் இருக்கிறது, அதில் தமிழ், மராத்தி, ஒரியா, கன்னடம், வடமொழி, மணிபிரவாளம் என்று பல மொழிகளில் இருக்கிறது என்று ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களுக்குக்  கூட தெரியாது என்று நினைக்கிறேன்.

மாலிக் கபூர், துக்ளக், மதுரை சுல்தான்கள் செய்த கொடூரங்களை வரலாற்று பாட நூல்களில் ‘they plundred’ என்று சுலபமாக எழுதி பத்து மார்க் வாங்கிவிட்டு வரலாற்றை படித்துவிட்டோம் என்று நினைக்கிறோம்.

(பார்க்க பிகு1: துக்ளக் பற்றிய நம் பாட நூல் என்ன சொல்லுகிறது ?)

வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை: அடுத்த சில பகுதிகளில் அதிக ரத்தம் சம்பந்தமான விஷயங்கள் இருக்கிறது.

மதுராவிஜயம் என்ற காவிய நூல் ஒரு வரலாற்று ஆவணம் அதிலிருந்து முகம்மதியர்களால் கோயில்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் சிலவற்றை சுருக்கமாக இங்கே தருகிறேன்.
( பாக்க பிகு 2: மதுராவிஜயம் என்றால் என்ன ? )

'திருவரங்கத்தில் அரவணைமேல் துயில் கொள்ளும் அரங்கனது உறக்கம் கலையாதிருப்பதற்காக மேலேயிருந்து விழுந்த கற்களை ஆதிசேஷன் தன் தலைமேல் தாங்கி நின்றான்.  அந்த கோயிலில் மற்ற கடவுள் சிலைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. திருக்கோயிலின் கதவுகளைப் பூச்சிகள் செல்லரித்துக் கொண்டிருந்தன. மஹா மண்டபங்களிலும் தோரண வாயில்களிலும் செடி கொடிகள் வளர்ந்து தொங்கிக்கொண்டு இருந்தன.

ஒரு காலத்தில் மிருதங்கத்தின் ஒலி பரவியிருந்த இடத்தில் குள்ள நரிகள் ஊளையிடும்  ஓசை பரவியிருந்தது. திருவரங்கனுடைய திருப்பாதங்களை வருடிச் சென்ற காவிரியாறு தன்னுடைய  போக்கை மாற்றிக் கொண்டு முகம்மதியர் மேற்கொண்ட அழிவைப் பிரதிபலிப்பதுபோல பல கிளைகளாக பிரிந்துப் பாயுமிடங்களிலெல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்து விளைநிலங்களைப் பாழ்படுத்திச்சென்றது. அழிவை ஏற்படுத்திய முகம்மதியர்களுக்கு எந்த வகையிலும் தான் சளைத்தவள் அல்ல என்று சொல்லுவது போல இருந்தது காவிரி நதியின் இந்தச் செயல்.

திருவாய்மொழியில் ”வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய் திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்” என்ற பெருமையை உடைய திருவரங்கத்தின் திருவீதிகளில் மாமிசத்தை வாட்டுவதால் ஏற்படும் புகையும் படையெடுத்து வந்த முகம்மதியப் படைவீரர்கள் குடித்துக் கும்மாளமிடும் ஒலியுமே நிறைந்திருந்தன.

மதுரையைச் சூழ்ந்திருந்த பசுமை நிறைந்த காடுகள் அழிக்கப்பட்டன. நெடிதுயர்ந்த தென்னை மரங்கள் வெட்டப்பட்டு அவை இருந்த இடங்களில் நீண்ட இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட அவற்றில் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட மனிதர்களின் தலைகள் பொருத்தப்பட்டிருந்தன….காதும் மூக்கும் அறுக்கப்பட்டு அந்தணர்கள் அவலக்குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. ….அழகான மங்கையர் தாமரபரணி ஆற்றில் குளித்திடும் போது பெருகி ஓடிய நீரில் அவர்கள் மேனியிலிருந்து கரைந்து வந்த சந்தனம் எங்கும் நறுமணம் பரப்பிக் கொண்டு சென்ற நிலைமாறி, முகமதியர்களால் வெட்டப்பட்ட பசு மாட்டின் சிவந்த குருதி நீரில் கலந்து அந்த நீரில் வெண்மை நிறைத்தை சிவப்பு நிறமாக்கிக் கொண்டிருந்தது… “

2005ல் சுஜாதா ”யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும், அழகியமணவாள தாசர் என்பவரும் தற்கொலை செய்து கொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்” என்று ஆனந்த விகடனில் எழுதிய போது பல எதிர்ப்பு வந்தது.

இது எல்லாம் கட்டுக்கதை என்று ஒதுக்குபவர்கள்  Ibn Batuta, the Moorish traveler வெளிநாட்டு யாத்திரை குறிப்பின் ஒரு பகுதியில் முகமதியர்களின் கொடுமைகளை விவரிக்கிறது. இந்த குறிப்புகள் நேரில் அவர் தன்னுடைய கண்களால் கண்ட காட்சிகள். கண்களில் நீர் வர வைக்கிறது.

பட்டுடா பல ஊர்களுக்குச் சென்றபோது இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்களை தாம் கண்டபடியே விவரித்து உள்ளார்

"அடர்ந்த காடுகளின் ஊடே செல்லும்போது ஆங்கிருந்த கடவுள் நம்பிக்கை உடையோர் கைதிகளாக அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு அழைத்து வரப்பட்ட கைதிகள் அவரவர் மனைவி மற்றும் குழந்தைகளோடு இழுத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் நான்கு திசை களிலும் முள் வேலிகளால் மூடப்பட்ட மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மூன்றடி உயரத்திற்கு எழுப்பப் பட்ட உயரமான இடத்திலிருந்து அவர்கள்மீது தீப்பந்தங்கள் எறியப்பட்டன.

இவர்கள்மீது முகம்மதியர்கள் தங்கள் கையில் கிடைத்த தீப்பந்தங்களோடு முரட்டுப் போர் நடத்திடுவர். இவர்களுக்கு உதவியாக சுல்தானின் முகம்மதியப் படை வீரர்களும் கலந்து கொண்டு தாக்குதல்களைத் நடத்திடுவர். மறுநாள் காலை அவர்கள் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து நான்கு வாசல்கள் வழியாக அவர்கள் வெளியேற்றப் படுவர். அப்போது அவர்கள் கையில் இருந்த நாணல் செடிகொண்டு கம்பங்களில் பிணைத்திடுவர். அவ்வாறு பிணைக்கப்பட்டவர்களுக்கு முன்பு வெட்டிச்சாய்க்கப்படுவர். சிறு குழந்தைகளை இரக்க மின்றிக் கொன்று அவர்களுடைய அன்னையின் மார் பகங்களில் தூக்கியெறிவார்கள். இவ்வாறான படுகொலை நடந்த பிறகு மீதமுள்ள இந்துக்கள் அந்த இடத்தில் கொண்டு வரப்பட்டு மீண்டும் கொல்லப்படுவர்.

அடுத்த குறிப்பு இன்னும் மோசம் :
சுல்தானோடு உரையாடிக் கொண்டிருந்த போது,  சுல்தானுக்கு வலதுபுறம் Gaziயும், இடதுபுறம் நானும் நின்று கொண்டிருந்தேன். அப்போது கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்துவும், அவனுடைய மனைவியும், ஏழு வயது நிரம்பியிருந்த அவர்களுடைய மகனும் சுல்தான் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். அப்போது அந்த இந்துவினுடைய தலையைச் சீவிக் கீழே விழச் செய்திடுமாறு ஆணையிட்டு சைகை புரிந்தான் சுல்தான். அதன்பின் அவனுடைய மனைவியும், மகனும் இவ்வாறே கொல்லப் பட்டனர். இந்தக் காட்சியை என் கண் கொண்டு காண இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்" என்கிறார். இந்த குறிப்புக்களை படித்தால்,  உல்லுகானின் படை ஸ்ரீரங்கம் வந்த போது என்ன செய்திருக்கும் என்று ஒருவாறு வாசகர்கள் யூகிக்கலாம்.

உல்லு கானின் படை, காஞ்சிபுரத்தை கபளீகரம் செய்துவிட்டு திருவரங்கம் நோக்கி வந்தது. அன்றும் ஸ்ரீரங்கத்தில் விழாக்கோலம்.  ஸ்ரீரங்கத்தில் வருட முழுவதும் விழாக்கள் தானே. படைகள் சமயபுரம் வந்திவிட்டது என்று செய்தி வந்த போது அங்கே இருந்த பெரியவர்கள் பதட்டதுடன் என்ன செய்வது என்று பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அந்த குழுவில் ஸ்ரீபிள்ளை லோகாச்சாரியார் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரும் இருந்தனர். ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன் மாலிக் கபூர் என்பவன் ஊரையும் கோயிலையும் துவம்சம் செய்துவிட்டு போனது நினைவுக்கு வந்து அவர்களுக்கு நடுக்கத்தை கொடுத்தது. அவர்களுக்கு முதலில் தோன்றிய எண்ணம் தங்களை காத்துக்கொள்ளுவது இல்லை கோயிலையும், பெரிய பெருமாள், நம்பெருமாள், தாயாரை எப்படி காப்பது என்பது தான். உடனே செயல்பட்டார்கள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளை காக்க ஒரு குழு பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்ரீரங்கத்திலிருந்து தங்கி செல்பட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர் சுதர்சன பட்டர் கோயிலை நோக்கி ஓடினார். பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, தாயரை விலவ் மரத்துக்கு அடியில் புதைத்து.. அவருக்கு வயதாவிட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாத சுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் ( நடாதூர் அம்மாள் காலட்ஷேப குறிப்புகள் ) பட்டரின் இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பன்றியாழ்வான் சன்னதிக்கு சென்ற போது அங்கே 12000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்களமாக அவரும் அங்கேயே கொல்லப்பட்டு பரமபதித்தார்.

வேதாந்த தேசிகன் ஊரைவிட்டு கிளம்பும் முன் உலூக்கான் படை ஸ்ரீரங்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கோரதாண்டவம் ஆடியது. எந்த இடத்தில் தங்கினாலும் தனக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தானும் இரண்டு குழந்தைகளும் பிணக்குவியல்களுக்கு (சரியாக சொல்ல வேண்டும் என்றால் dead and the dying) நடுவே பிணமாக கிடந்தார். உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர்  சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும். ( இதனால் தான் ஸ்ரீபாஷ்யத்தை சேவிக்கும் முன் இன்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரின் தனியங்கள் சேவிக்கப்படுகிறது )

அண்ணன், தம்பி குடும்ப சண்டை ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருந்தாலும் குடும்பத்தில் ஒரு அசாதாரண  சூழ்நிலை, அல்லது ஓரு  துக்கரமான சம்பவம் நிகழ்ந்தால் உடனே பகைமை பாராமல் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். ஸ்ரீரங்கத்தில் நடந்ததோ நம்பெருமாளுக்கும், ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுக்கும் பெரிய சோதனை. அப்படியே ஸ்ரீபிள்ளைலோகாச்சாரியர், ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு கருத்து பேதம் இருந்திருந்தாலும் நிச்சயம் இருவரும் கலந்தாலோசித்து தான் தங்கள் கடமைகளை பிரித்துக்கொண்டு செயல்பட்டிருப்பார்கள்.
ஸ்ரீரங்கம் -  ஸ்ரீவேதாந்த தேசிகன் சன்னதி

சில புத்தகங்களில் ஸ்ரீவேதாந்த தேசிகன் தான் மூலவர் முன்பு சுவர் எழுப்பினார் என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். கிணறு வெட்ட தெரிந்த வேதாந்த தேசிகருக்கு சுவர் எழுப்பத் தெரியாதா ? அதுவும் பெரிய பெருமாளை காக்க ?

பெருமாளுக்கு கண்டருளப்படும் பால் இதமான சூடாக இருக்கிறதா என்று பார்த்து கொடுத்த நடாதூர் அம்மள் வழிவந்த வந்த ஸ்ரீவேதாந்த தேசிகனுக்கு நம்பெருமாளின் மீது இப்பேர்ப்பட்ட தாக்குதல் என்றால் அவர் மனம் எப்படி புண்பட்டிருக்க வேண்டும் ? திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் தங்கியிருந்த வேதாந்த தேசிகர், ஸ்ரீரங்கத்தையும், பெரிய பெருமாளையும் பிரிந்து, புண்பட்டு,  பரிவின் காரணமாக ‘அபீதிஸ் தவம்’ என்னும் உயர்ந்த ஸ்தோத்திரத்தை அருளினார்.  அதில் ஸ்லோகம் 22 ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதலாம்.

கலி ப்ரணிதி லக்ஷணை: கலித சாக்ய லோகாயதை:
துருஷ்க யவந ஆதிபி: ஜகதி ஜ்ரும்பமாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி: ப்ரஸபம் ஆயுதை: பஞ்சபி:
சஷிதி த்ரிதச ரக்ஷகை: சஷயப ரங்கநாத சஷணாத்

ஸ்ரீரங்கநாதா! கலி புருஷனுக்கு ஏவலாட்கள் போன்று பௌத்தர்கள் சார்வாகர்கள், துருக்கர்கள், யவநர்கள் முதலானோர் மூலமாக இந்த உலகத்தில் மிகுதியான பயம் வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட பயத்தை உன்னிடம் இருக்கும் மிகுந்த சக்தியுடையதும் அந்தணர்களைக் காப்பதற்கும் பயன்படும் உன் ஐந்து திருஆயுதங்களால் நொடிப்பொழுதில் பலமாக அழிப்பாயாக.
24ஆம் பாடலில் இங்கு உள்ள எதிரிகளோ அசுரர்களைக் காட்டிலும் மிக்க கொடுமை விளைவிப்பவர்களாயுள்ளார்கள். அவர்களால்  பலர் பூஜித்த ஸ்ரீரங்க ரங்க விமானத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு விளையுமோ என்ற அச்சம் உண்டாகின்றது என்று வருத்தப்படுகிறார். இதையும் கங்கா தேவியின் மதுரா விஜயத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பையும் படித்தால் ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு இருந்த மனவருத்தம் agonyயை அறிந்து கொள்ளலாம். கங்கா தேவி போல தன் கண்ணால் கண்ட காட்சிகள் தான் தேசிகரை இப்படி எழுத வைத்திருக்க வேண்டும்.

திடபக்தியும் நம்பிக்கையுடன் எழுதிய இந்த ஸ்லோகங்களால் எதிரிகள் அழிந்து கோப்பணார்யன் மூலமாக நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளிய போது உற்சவங்கள் பல நின்று போய் இருந்தது அத்யயனோத்ஸவம் எனப்படும் இராப்பத்துத் திருவிழாவை நடத்தவிடாமல் இடையூறு ஏற்பட்டது. மீண்டும் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனை திருவரங்கத்துக்கு அழைத்து அவருடைய உதவியோடு உத்ஸவங்களை மீண்டும் தொடங்கினார்கள் என்கிறது வடகலை குருபரம்பரை.

திருநாராயண புரம் ஸ்ரீதேசிகருக்கு மட்டும் அல்ல நம் ராமானுஜருக்கும் அடைக்கலம் கொடுத்த இடம். இன்றும் அங்கே சென்றால் உங்களை ஊர் மக்கள் அரவணைப்பார்கள். கடும் சொற்கள் கொண்டு பேச மாட்டார்கள். ”ஆமாவா ? “சாப்பாடாச்சா ?” என்று கன்னடம் கலந்த தமிழில் விசாரிப்பார்கள். பல இடங்களில் இலவச ததியாராதனம். கோஷ்டியில் தென்கலை, வடகலை பேதம் இல்லாமல் திய்வபிரபந்தம் சேவிக்கலாம்.

நம்மையே இன்று இப்படி கவனிக்கும் இவர்கள் ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ தேசிகனையும், ரட்சித்து கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை. அதனால் தான் என்னவோ ஸ்ரீராமானுஜர் தன்னுடைய பத்து கட்டளைகளில் “திருநாராயண புரத்தில் ஒரு குடிலாவது கட்டிக்கொண்டு அமைதியுடன், மனத்திருப்தியுடன் வாழ வேண்டும்” என்கிறார்.

ஊர் மக்கள் ஸ்ரீராமானுஜரை பரிவுடன் பார்த்துக்கொண்டதால் தானோ என்னவோ இன்றைக்கும் அங்கே இருக்கும் ”தமர் உகந்த திருமேனி”யின் கன்னங்களை தரிசித்தால் பிறந்த வீட்டுக்கு சென்று வந்த  பெண் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் இருப்பது மாதிரி இருக்கும்.
மேல்கோட்டையில் தேசிகர் சன்னதி. இங்கே தான் நம்பெருமாள் தங்கியிருந்தார். 

அடியேன் சென்ற சனிக்கிழமை திருநாராயணபுரத்துக்கு சென்று ஸ்வாமி தேசிகன் எங்கே தங்கினார், நம்பெருமாள் இங்கே இருந்த போது எங்கே இருந்தார் என்று விசாரித்த போது நம்பெருமாள், ஸ்வாமி தேசிகன் இருவரும் இருந்த இடமும் ஒன்றே என்று தெரிந்தது. அந்த இடத்தை சேவித்துவிட்டு பிரியாவிடை கொடுத்துவிட்டு திரும்பினேன்.

கோபணார்யர் உதவியுடன் கிபி 1371ல் ஸ்ரீரங்கம் வந்த நம்பெருமாளுக்கு அனைத்து தரப்பு மக்களும் உதவினார்கள். ஹரிஹரரும், விரப்பண்ண உடையாரும் திருப்பணிக்கு நிதி உதவி செய்தார்கள். விரப்பண்ண உடையார் துலாபாரக் காணிக்கையாக 17,000 பொற்காசுகள் அளித்தார். யானை பசிக்கு சோளப்பொறி  போன்றது இந்த காணிக்கை. துருக்கர்கள் செய்த நாசங்கள் அவ்வளவு. அதனால் அனைத்து மக்களும் தங்களால் இயன்ற அளவு திருபணிக்கு காணிக்கை தரவேண்டும் என்று மன்னர் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து சித்திரை திருநாளின் போது அனைத்து மக்களும் சேர்ந்து நடைபாவாடை சாத்தினார்கள் (காணிக்கை உற்சவம்) 700 ஆண்டுகளுக்கு பின்பும் இந்த காணிக்கை உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது தானியங்களும், மாடுகளும் கோயிலுக்கு தானமாக தரப்படுகிறது.
நம்பெருமாள் 48 வருடங்களில் செய்த பயணம்

நம்பெருமாள் திருப்பிரதிஷ்டையின் நினைவாக சிலாசாஸனம் ( சிலாசாஸனம் பற்றிய குறிப்பு பிகு 3 ) ஒன்று இராஜமகேந்திரன் திருச்சுற்றில் இருக்கிறது. உத்தமநம்பியால் கோபணார்யனுக்கு அது தனியனாக ஸ்மர்பிக்கபட்டது என்றும், இல்லை இது வேதாந்த தேசிகன் செய்தது தான் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள் உத்தம நம்பியோ, ஸ்ரீவேதாந்த தேசிகரோ, இரண்டு பேரையும் அந்த கல்வெட்டை பார்க்கும் போது நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.  எழுதியது என்று ஒரு புறம் இருக்க, அந்த கல்வெட்டு இருப்பதே பலருக்கு இன்று தெரியாது. அதை ஒருவரும் படிக்க முடியாதபடி அலட்சியப்படுத்தியுள்ளார்கள். ( இந்த முக்கியமான கல்வெட்டு தற்போது ஒரு மின்சார பெட்டியை வைத்து மறைத்துள்ளார்கள். மறைந்துவிடாமல் பாதுகாக்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்)

நம்முடைய பணத்தில் கோயிலுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு இன்றைய அரசியல்வாதிகள் கிரனைட்  கல்லில் தங்கள் பெயருடன் கல்வெட்டு வடித்து கோயில் சுவற்றில் பதித்துக்கொள்கிறார்கள். வெளிநாடுகளில் சென்றால் யாருடைய பழைய முடி, பல் என்று கண்ணாடி பெட்டியில் போட்டு உள்ளே செல்லும் முன் ஐசியூ மாதிரி சாக்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு தான் அனுமதிக்கிறார்கள். அந்த இடத்துக்கு எல்லாம் சென்றுவிட்டு ‘எப்படி பாதுகாக்கிறார்கள்’ என்று வியக்கிறோம், ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிலாசாஸனத்தை நிலை ?

ஸ்ரீரங்கம் செல்லும் போது நாம் அடுத்த முறை ஒன்றே ஒன்றை செய்ய வேண்டும். இவர்களை எல்லாம் நினைத்து ( படத்தில் இருப்பது போல ) சாஷ்டாங்கமாக சேவிக்க வேண்டும்.

கார்த்திகை மண்டபத்துக்கு நுழையும் போது தரையில் இந்த சேவிக்கும் சிற்பம் பிரமிக்க வைக்கிறது – படம் உதவி நண்பர் கோபால்
18.2.2017
(மாசி, விசாகம். ஸ்ரீமத் நாதமுனிகள்  தாமிரபரணி நீரைக் காய்ச்சி, அதன் மூலம் கிடைத்த நம்மாழ்வார் உற்ஸவ விக்கிரகம் பிறந்த நாள் )


பிகு:
நமது CBSE பாடபுத்தகத்தில் முகமது பின் துக்ளக் பற்றிய பாடத்தில் ஒரு பகுதி:
Muhammad bin Tughlaq (1325-1351)
He was a very attractive character in the history of medieval. India owing to his ambitious schemes and novel experiments. His enterprises and novel experiments ended in miserable failuresbecause they were all far ahead of their time. He was very tolerant in religious matters. He maintained diplomatic relations with far off countries like Egypt, China and Iran. He also introduced many liberal and beneficial reforms. But all his reforms failed.

2. மதுரா விஜயம் சிறுகுறிப்பு:
மதுரை சுல்தான்களை வெற்றி கொண்ட வரலாறே மதுரா விஜயம் என்று கொள்ளலாம்.
சிருங்கேரி சங்கராசார்யாராகிய ஸ்ரீவித்யாரண்யரின் அருளாசியால் கிபி 1336ல் ஹரிஹரரு, அவனது தம்பி புக்கரும் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். துங்க பத்திரை நதிக்கரையில் விஜயநகரம் தலைநகரமாக ஸ்தாபிக்கப் பட்டது. அவ்வூரிலுள்ள விருபாஷ் தேவர் ( பரமெஸ்வரர் ) விஜயநகர மன்னர்களின் குலதெய்வமாவர். புக்கனுடைய அரசியின் பெயர் தேவாயி. இவர்களுக்கு பெரிய கம்பண்ணன், சிறிய கம்பண்ணன், சங்கமன் என்று மூன்று குழந்தைகள். கம்பண்ணின் மனைவி பெயர் தான் கங்காதேவி.
கிபி 1378ல் மதுரையை நோக்கிக் கிளம்பினான் கம்பணா. அவனுடன் 30,000 வீரர்களுடன் சென்றபோது, கம்பணாவின் மனைவி கங்காதேவியும் உடன் சென்றாள். அவள் நேரில் பார்த்த காட்சிகளை, சம்பவங்களை விவரித்து வடமொழியில் தேர்ச்சி பெற்ற கங்காதேவி அதை காவியமாக எழுதினாள். அதன் பெயரே மதுரா விஜயம். இதன் ஓலைச்சுவடிகள் திருவந்தபுரத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் 1916ஆம் ஆண்டு முழுவதும் கிடைக்கவில்லை. 109 முதல் 169வரை தான் கிடைத்தது. அதிலும் சில ஓலைச்சுவடிகள் காணவில்லை, கிடைத்த சிலவற்றிலும் கரையான் அரித்து  ஓலைச்சுவடிகளை ‘Fill in the blanks’ ஆக்கின. கரையான் அரித்த ஓட்டைகளை ஆய்வு செய்து, சரியான எழுத்தை பூர்த்தி செய்து, 1916ல் ஹரிஹர சாஸ்திரி, ஸ்ரீநிவாச சாஸ்திரி இதை நூலாக பதிப்பித்தார்கள். கிடைத்த வரையில் இது வரலாற்று ஆவணம். பொக்கிஷம்.


3. கல்வெட்டு சிலாசாஸனத்தில் எழுதியிருப்பது :
புகழ்நிறைந்த கோபாணார்யர் கறுத்த கோடுமுடிகளின் ஒளியாளே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து ரங்கநாதனை எழுந்தருளப் பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிது காலம் ஆராதித்து, ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி, பூதேவிகளாகிய உபய நாய்ச்சிமார்களோடு கூடத் தம்முடைய திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.
புலிக்கரசனான கோபணன் உலகுகரசனான ரங்கராஜனை திருமலைத் தடத்திலிருந்து தன் தலைநகருக்கு எழுந்தருளச் செய்து தன் சேனையாலே துலுக்கர் சேனையை அடித்து விரட்டியவனாய் ஸ்ரீரங்க நகரை க்ருதயுகத்தில் பிரமனால் ஆராதிக்கபட்ட போது இருந்தது போல ப்ரதிஷ்டை செய்து நல்ல திருவாராதனங்களைச் செய்வித்தான்


உதவிய சில புத்தகங்கள் 
1. கங்காதேவியின் மதுராவிஜயம் – தமிழாக்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரி.
2. Madhura Vijaya (or Virakamparaya Charita): An Historical Kavya - 1924 
3.மதுரை சுல்தான்கள் – SP சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம். 
4.அரங்கமா நகருளானே – வேதா.T.ஸ்ரீதரன். 
5.Dr. Chitra Madhavan – கட்டுரைகள், ஒலி/ஒளிப்பதிவுகள். 
6.கோயிலொழுகு – ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரி.
7.History of Srirangam Temple – VN Hari Rao 
8.Sri Vedanta Desika: Makers of Indian Literature by M. Narasimhachary,Sahitya Academy, 2004.
9.குருபரம்பரா நூல்கள் ( தென்கலை, வடகலை ) 
10 Epigraphia Indica Vol.24 

கல் சொல்லும் கதை - முதல் பாகம் - இங்கே : http://sujathadesikan.blogspot.in/2015/10/blog-post.html

Comments

  1. இவ்வளவு கொடுமைகளையும் முகமதியர் செய்யும் போதும்,பெருமாள் கல்லாக தானே இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. வார்த்தை woundingஆக இருக்கு. அவன்தான் பிரகலாதன் எந்தத் தூணைக் காட்டிவிடுவானோ அங்கே உடனே பிரத்யட்சமாகணுமே என்று பதைபதைத்தவன். அவன் காலத்தைப் போன்றவன். எப்போது தேவை என்று அவன் நினைக்கிறானோ அப்போதே அவன் தேவையானதைச் செய்வான். அதே சமயத்தில்தானே நிறைய வைணவர்கள் உயிர் பிழைத்ததும் நடந்தது. அவனுக்காகக் கோவில் கட்டிய பத்ராசலம் ராமதாசரே 12 ஆண்டுகள் வெம்சிறையில் வாடினார். உயிர் பிழைப்பதற்கும், உயிர் இழப்பதற்கும் காரணம் யாரே அறிவார்?

      Delete
    2. Lord Ranganatha has spoken with many of his Devotees (including Pujaris) in the past. We do not know the equations of Lord Ranganatha. I asked about this to one Sadhu and this is the answer i got. "Sanathana dharma is like a double ended sword. People who misuse or abuse it will face the consequences."

      Delete
  2. there is an inscription in Gopurapatti Perumal temple which speaks on the murder of 12000 Sri vaishnavas in Srirangam at Pandri Aazhvan temple and performing their last rites at Gopurapatti. -----Sankaranarayanan.

    ReplyDelete
  3. மிக்க துயரமாக இருக்கிறது

    ReplyDelete
  4. மிகவும் நெகிழ்ந்து போனேன்.

    ReplyDelete
  5. Thirukannapuram also has a similar history of being saved from Muhamaddians. Still we see these kind of atrocities in some part of this world illegally ruled by them. It makes me think that our Acharyas have attained the lotus feet of Namperumal and the Muhamaddians are having re-births for all their atrocities. The question is can we get our Acharyas re-born to save us?

    ReplyDelete
  6. உ.வே.இரா.அரங்கராஜன் அவர்களின் ஐயா. நம்பிள்ளை உரைத்திறன் மன்னுபுகழ் மணவாள மாமுனிவன் புத்தகம் எங்குக் கிடைக்கும் என்று சொன்னானா நலமாக இருக்குகு.ம்

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் பிரிண்டில் இல்லை. நூலகத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

      Delete
  7. why this tragedy should occur to Vaishnavites at Panri Malai ? Is there any reason or viakkayanam about it ? Is it a fact that at that time of Mughal attack the temple was in huge possession of Gold,Diamonds and other Riches mainly contributed by Pandian Kings ? and so to say that Kali pugantha iddathil arangan iruuka virumbuvathillai ? But why the God was silent when so much of his ardent devotees were massacred and whether He is not such a kind person to rush and help the elephant from the mouth of the crocodile ?

    ReplyDelete

Post a Comment