Thursday, January 28, 2010

பக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 1

தமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி தொடர் ஒன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன்.  இந்த தொடர் எப்படி போகும் என்று தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். 

Tuesday, January 26, 2010

லக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே


சில வருடங்களுக்கு முன் என் சின்ன மாமியார் பொண்ணு 'லாலு'  ஒரு வித்தியாசமான கதையை எழுதியிருந்தாள் . அவளுக்கு எழுதும் ஆர்வம் இருக்கு என்று சில வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்தேன். கார்ட்டூன் படமும் போடுவாள்.


சென்னைக்கு செல்லும் போது, அவளுடன் வயது வித்தியாசம் இல்லாமல் நகைச்சுவையாக பல விஷயங்கள் பேசுவது ஒரு இனிய அனுபவம்.


நேற்று லாலுவுடன் பேசிக்கொண்டிருந்த போது "சின்ன தேங்க்ஸ் கூட சொல்லாமல், என் கதையை சின்ன குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்" என்று அதிர்ச்சியாக சொன்னாள். லாலுவிற்கு பாராட்டுக்கள் !


போன வருஷம் இந்த கதையை நான் தமிழில் 'ரீமேக்'  செய்ய உன் பர்மிஷன் வேண்டும் என்றவுடன், உங்களுக்கு இல்லாத பர்மிஷனா அத்திம்பேர் என்றாள். நானும் அதை தமிழில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன் வார பத்திரிக்கைகளுக்கும், சில இணைய தளங்களுக்கும் அனுப்பினேன், அனுப்பியவுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.  பல மாதமாக சும்மா இருந்த கதையை லாலுவிற்கு நன்றியுடன்  இங்கே பதிவிடுகிறேன்.


படிப்பவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், இது நகைச்சுவை கதை.


 
 


லக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே


ஐயங்கார் ஆத்துப் பையனோ பெண்ணோ வார இறுதியில், வேளை கெட்ட வேளையில், அமெரிக்காவிலிருந்து போனில்,
“அப்பா சௌக்கியமா?" என்று கேட்டதும்,  “அங்கே இப்ப என்ன டைம்?” என்று அப்பாவும் வழக்கமான கேள்வி கேட்டுவிட்டு, குடும்ப விஷயங்களைப் பேசிக் கொள்ளும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குச் சென்று, “என் பையன் சின்சின்னாட்டில இருக்கான்” என்று சொல்லிப் பாருங்கள். “என் பையன் சான் ஹோசே” என்று பதில் வரும்.


இப்ப அந்த குடும்பம் உங்க கண்முன்னே ஒரு பிம்பம் மாதிரி தெரிந்திருக்கணுமே ? 
'அட, நம்ம மைலாப்பூர் ‘பாச்சா’ குடும்பம் மாதிரியே இருக்கே,' என்று நினைப்பவர்கள் வலது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள். 'இல்ல, இல்ல. இது நம்ம திருவல்லிக்கேணி 'நச்சு'  குடும்பம் தான்' என்று நினைப்பவர்கள் இடது  பக்கம் படிக்க ஆரம்பியுங்கள்.


போன வாரம் 'தேங்க்ஸ் கிவிங்,கிற்கு முதல் நாள் கிட்டத்தட்ட ஒரே நேரத்துக்கு நரசிம்மன், பாச்சா குடும்பங்களுக்கு மேலே சொன்ன “இப்ப என்ன டைம்?” போன்கால் வந்தது.


 


 


'நச்சு' நரசிம்மன் குடும்பம், திருவல்லிக்கேணி ' பாச்சா' பார்த்தசாரதி குடும்பம், மைலாப்பூர்

 “ஹலோ”
“நான் தாம்பா”
“எப்படி இருக்கே, இப்ப அங்கே என்ன டைம்?”
“இட் இஸ் லைக் அல்மோஸ்ட் மிட்நைட், ஹாவ் இஸ் அம்மா?”
“இதோ பக்கத்தில தான் இருக்கா. கார்த்திகை வருதுல்ல, பொரி உருண்டை பிடுச்சிண்டு இருக்கா” என்று சொல்லிவிட்டு, “ஏண்டி..இந்தா..” என்று கூப்பிட்டு போனை மனைவியிடம் கொடுத்தார் நரசிம்மன்.
“எப்படிடா கண்ணா இருக்கே?"
“ஐயாம் ஃபைன்ம்மா. ஐ மிஸ் யுவர் பொரி உருண்டைம்மா."
"ம்ம் நானும் உன்னைத்தான் நினைச்சுண்டே பிடிச்சுண்டிருக்கேன்"
"ஐ ஹாவ் டிசைடட் டு கெட் மேரிட்”
“என்ன? அப்படியா பாலை வார்த்த.... ஏன்னா, கேட்டீங்களா கல்யாணத்துக்கு ஓ.கேவாம்” என்று குதூகலத்துடன் போனை நரசிம்மனிடம் கொடுக்க,
“அப்பாடா கவலையா இருந்தது. ஐ யாம் ஸோ கிளாட் நௌ. நரசிம்மப்ரியால மார்கழி மாசத்துல மேட்ரிமோனியல கொடுத்துடறேன், தை மாசம் வந்து எல்லாம் நம்மாத்து வாசல்ல கியூவில நிற்பா. நம்பளவா எல்லாம் இப்ப அங்கேதான் இருக்கா”
“அப்பா இட் இஸ் ஆல் நாட் ரிக்வயர்ட் !. நானே இங்க பார்த்தாச்சு”
“என்ன சொல்றே? ...இரு உன் அம்மாட்டடேயே சொல்லு.” போனை நரசிம்மன் மனைவியிடம் கொடுக்க
“.......யாரு அது ? நமாத்துக்கு ஒத்துவருமா?”
“அம்மா தே யார் ஆல் தே சேம் ஐயங்கார்ஸ்”
“சமத்து” என்று சொல்லிவிட்டு “ஏணா அவாளும் ஐயங்கார்தானாம்”
“யாருடா அவா? போன் நம்பர் கொடு நானே பேசறேன்”
“தே ஆர் ஃப்ரம் டிரிப்ளிக்கேன். என்னோட கலீக்”
“அப்ப பிரச்சனையே இல்ல, இன்னிக்கே கால் பண்ணி பேசிடுறேன், நீ ரெண்டு வாரம் லீவு போட்டுட்டு தைமாசம் வந்தா கல்யாணத்தை சிம்பிளா முடிச்சுடலாம். கல்யாணச் சத்திரத்துக்கு ஏத்த மாதிரி முகூர்த்தத்தை வெச்சிக்கலாம்”
”நம்பர் எழுதிக்கோ” என்று நம்பர் கொடுத்துவிட்டு. ”ஓ.கே பை, டேக் கேர்” என்று சொன்னதும் போன் துண்டிக்கப்பட்டது.


பாட்டி “யாருடா ஃபோன்ல?” என்று கேட்க
“நம்ம லட்சுமிதான்”  என்றார். நரசிம்மன்.
பிரகலாதன் தூணை காண்பிக்கும்முன் இரணியனுக்கு ஏற்பட்ட அதே பரபரபரப்பு, பதட்டம் இப்பொழுது நரசிம்மனுக்கு வந்தது.
”வரன் எப்படியாம்? மூக்கும் முழியுமா இருப்பாளாமா? எந்தக் கலையாம்?” என்று ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கினார் மிஸஸ் நரசிம்மன்.
“ஏண்டி அவன் பேசறதே பாதி புரியலை, இவ்வளவு நாள் கல்யாணமே வேண்டாம்னுட்டு, இப்பத்தான் ஓ.கே சொல்லியிருக்கான்"
“ஆமாம், உங்க பெரியம்மா பையன் மாதிரி மார்வாடியோ சேட்டையோ ஏதோ ஒண்ணை இழுத்துக்கொண்டு வந்து வந்து நிக்காம இருந்தானே”
“அவளாவது சேப்பா இருந்தா.. உங்க நாத்தனார் பேத்தி ஏதோ நீக்ரோ பையனை இழுத்துண்டு வந்தாளே, அதுக்கு இது எவ்வளவோ தேவலாம்”
”சரி சரி, இலையப் போடு, சாப்டவுட்டு அவாளுக்கு ஃபோன் பண்ணனும்” ”ஹலோ”
“இட்ஸ் மீ. ராதா. ஹௌ ஈஸ் அம்மா?”
“இப்பதான் உன்னை பத்தி நினைச்சிண்டு இருந்தோம். நூறு ஆயுஸு. குளிர் ஆரம்பிச்சுடுத்தா ?”
“இட்ஸ் கெட்டிங் கோல்ட். இப்ப ஒரு வாரம் வெக்கேஷன், தேங்க்ஸ் கிவிங். யூ நீட் சம் திங் ஃப்ரம் ஹியர் ?”
“இங்கேயே எல்லாம் கிடைக்கிறது பிளேடுலேர்ந்து பிளேன் வரைக்கும்.. நம்ம வீட்டுல பத்து பாத்திரம் தேய்ப்பாளே குப்பம்மா அவ கூட டௌ சோப்புல தான் குளிக்கறாளாம்”
”இப்ப ஐ.எஸ்.டியில குப்பம்மா பேச்சு ரொம்ப முக்கியமா?” என்று மிஸஸ் பாச்சா போனை ஏறக்குறைய புடுங்கி
“எப்படி மா இருக்கே”
“ஐ ஆம் ஃபைன் மா. யூ நோ சம்திங் ? ஓ.கே லெட் மீ புட் இட் ஸ்டிரெயிட், யம் ப்ளானிங் டு கெட் மேரிட்”
“ஏன்ணா, கல்யாணத்துக்கு ஓ.கேவாம்” என்று பதட்டத்துடன் பாச்சாவிடம் போனை கொடுக்க..
“ரொம்ப சந்தோஷம். ஜோசியர் குருபலன் வந்திடுத்துன்னு சொன்னது பொய்க்கலை. இந்தத் தைமாசமே முடிச்சுடலாம். வரன் கிடைக்கறது கஷ்டமில்ல. ஆனா சத்திரம் தான்.... நம்ப குடவாசல் மோகன், ரங்கநாத பாதுகாவுல இருக்கான். அடுத்த இஷ்யூல மேட்ரிமோனியல் காலத்துல போடச் சொல்லிடலாம். நரசிம்மப்ரியாவில தென்கலைனா கொஞ்சம் எளக்காரமா பார்க்கறா. பரவாயில்லைன்னு அங்கேயும் கொடுத்துடறேன்“
“டோண்ட் வொர்ரி பா. நானே பார்த்தாச்சு”
“என்ன சொல்றே?” என்று பதட்டமான சந்தேகத்துடன் கேட்க
“இட்ஸ் லக்ஷ்மி, மை கலீக்”
”ஸ்மார்த்தாளா?”
“ஸ்மார்த்தா மீன்ஸ் ?”
“ஐயர். கல்யாணத்துல கரமீது எல்லாம் ஸ்பூன்ல போடுவாளே...”
“ஓ நோ; தே ஆர் அல்சோ ப்யூர் ஐயங்கார்ஸ்”
பாச்சாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
“அதானே பார்த்தேன், எந்த ஊர்? எந்த கோத்திரம்?”
“ஐ டோண்ட் நோ ஆல் தட் டீட்டேய்ல்ஸ், போன் நம்பர் தரேன் யூ டாக் டு தெம். தே ஆர் ஆல்சோ சம்வேர் இன் சென்னை. சம் வேர் நியர் கெபாலி டெம்பிள்” என்று சொல்லி நம்பர் கொடுத்ததும்,” ஓ.கே.. நாழியாச்சு. படுத்துக்கோ. குட் நைட்”. என்று சொல்லி போனை வைத்தார்..


”“ஏன்ணா,, என்னவாம்"
”கேட்டுண்டு தானே இருந்தே அந்த போன்ல? கூட வேலை செய்யற.. கலீகாம்...”
“இந்த மட்டும் ஏதோ பஞ்சாபியோ பெங்காலியையோ இழுத்துண்டு வராம.. பகவான் தான் காப்பாத்தினார்., தினமும் 'சிவி'க்கு 'சிவி'க்குன்னு யார் சப்பாத்தி சாப்பிடறது”
”சரி சீக்கிரம் சாப்பாடு போடு, ராகுகாலத்துக்கு முன்னாடி அவா கிட்ட பேசிடறேன்”

 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


  


 திருவல்லிக்கேணியில் நரசிம்மனும், மைலாப்பூரில் பாச்சாவும் சாப்பிட்டபின் அந்த பிரசித்தி பெற்ற போன் உரையாடல் இப்படி நடந்தது:


"சார் நான் திருவல்லிக்கேணியிலிருந்து நரசிம்மன் பேசறேன். லட்சுமியோட தோப்பனார்"
"அடடே... நானே ராகுகாலம் முடிஞ்சாவுட்டு பேசலாமுனு இருந்தேன். இப்ப தான் ராதா சொல்லித் தெரியும். இந்த காலத்து பசங்க எல்லாம் அவாளே முடிவு பண்ணிடறா."
"ஆமா. நமக்கு வேலையே வைக்கிறது இல்லை"
"உங்க பூர்வீகம் எல்லாம்?"
"டிவிஎஸ்ல இருந்தேன். போன வருஷம் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிண்டுட்டேன். வானமாமலை மடம், நைத்ருபகாஷயப கோத்திரம் , நாலூரார் மாடபூசியார் வம்சம்.,, ஈடு உபகரிச்சவானா வம்சம்னா எல்லாருக்கும் தெரியும்"
"ஓ. தெரியாது."
"உங்க பூர்வீகம் மெட்ராஸா?"
"இல்ல இல்ல கும்பகோணத்துக்குப் பக்கத்துல குடவாசல். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் பரம்பரை கேள்விப்பட்டிருப்பீங்களே. ஷடமர்ஷண கோத்திரம். பாட்டனார் எல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம். அஹோபில மடம்.. போன மாசம் அழகிய சிங்கர் திருநட்சத்திரத்துக்கூட போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கரியம்... எதுக்கும் ஜாதகத்தை அனுப்பினா பார்த்துடலாம். எனக்கு அதில எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்ல, ஜெயா டிவியில கார்த்தாலே வருவாரே காழியூர்.. அவர் எங்காத்துலேர்ந்து நாலு வீடு தள்ளித்தான் இருக்கார். வாக்கிங் போகும் போது தினமும் பார்ப்பேன். சும்மா அவரிடம் காமிக்கலாமேனு"
"பேஷா..நீங்களும் அப்படியே ஜாதகத்தை அனுப்பிடுங்கோ, எனக்கு அதில எல்லாம் ரொம்ப நம்பிக்கை உண்டு. என்னதான் சையன்ஸ் வளர்ந்தாலும், தேர் ஆர் சோ மெனி அன் ஆன்ஸர்டு கொஸ்டின்ஸ், இல்லையா ?"
"ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம ரெண்டு ஃபேமலியும் ஒரு கெட் டூ கெதர் மாதிரி ஏதாவது ஹோட்டல மீட் பண்ணி பழம் பாக்கு வெத்தலை மாத்திடலாம். நிச்சியதார்த்தம் மாதிரி. சம்பிரதாயத்தை விட்டு கொடுக்க முடியாது பாருங்கோ.."
"பேஷா"
"இப்பவே ரிக் கோவிந்தன் வாத்தியாருக்கு சொல்லி டேட்ஸை கொஞ்சம் ஃபிரியா வெச்சிக்கச் சொல்றேன்"
"எங்க வாத்தியார் கூட இருக்கார். பாம்பே, அமெரிக்கான்னு பறந்துண்டு... அஞ்சு அஸிஸ்டண்ட் வெச்சிண்டு கார்ப்பரேட் மாதிரி நடத்திண்டு இருக்கர். ரொம்ப டிமாண்ட் அவருக்கு"
"கூட பிறந்தவா யாரும் இல்ல. எங்க அம்மா வைரத்தோடு, வெள்ளி பாத்திரம் இரட்டைவடம் சங்கலி எல்லாம் இருக்கு. கவலையே பட வேண்டாம்"
"இங்கேயும் அதே தான். எங்காத்துலேயும் கூட பிறந்தவா யாரும் இல்ல,, எங்க பாட்டியோட ஒட்டியாணத்தை வைக்க லாக்கர்ல எடம் போறல.  எல்லாம் அவாளுக்கு தான்"
"இரண்டு வைரத்தோடு போட்டா காது தாங்குமானு தான் தெரியல. கூரைப்புடைவை, கொடி, திருமாங்கல்யம் எங்களைச் சேர்ந்தது. ஜமாய்ச்சுடுவோம்."
"இல்லை இல்லை. அது நாங்க வாங்கறதுதான் எங்காத்து சம்பிரதாயம். குழந்தைகள் வந்ததும் அவாளை வெச்சுண்டே பர்ச்சேஸ் எல்லாம் வெச்சுக்கலாம்"
"சமையலுக்கு பட்டப்பாவை புக் பண்ணிடலாம், இரண்டு ஸ்வீட் எல்லாம் போட்டு அசத்திடலாம்"
"ஆங்... கேட்க மறந்துட்டேனே.. ராதா போட்டோவையும் அப்படியே அனுப்பிடுங்கோ. என் ஈமெயில் ஐடி ஈஉநரசிம்மாசாரி அட் யாஹூ டாட் இன்"
"நீங்களும் அப்படியே லக்ஷ்மி போட்டோவை அனுப்பிடுங்கோ, பாட்டி பெரியம்மா எல்லாம் பார்க்க்ணும்னா. ஈமெயில் ஐடி பாச்சா அண்டர்ஸ்கோர் அக்னி ஆட் ஜீமெயில் டாட் காம். சித்த புடைவை உடுத்திண்டு இருக்கும் போட்டோவா இருந்தா நல்லது. எங்காத்து பெரிவா எல்லாம் கொஞ்சம் ஆர்தோடாக்ஸ்""
"என்ன புடவை கட்டிண்டு போட்டோவா? லட்சுமி, ஸ்கூல்ல ஃபேன்ஸி டிரஸ்ல கூட நேரு வேஷம்தான் போட்டுண்டான். நீங்கத்தானே பொண்ணு போட்டோவை எங்களுக்கு அனுப்பணும்"
"என்ன ஸ்வாமி ? என்ன சொல்றேள்? நீங்க ராதாவோட அப்பா தானே?. ராதா உங்க பொண்ணுதானே?"
"ஆமாம் ராதாவோட அப்பா தான். ஆனா ராதா பொண்ணு இல்ல சார்; என் பையன். பேர் ராதாகிருஷ்ணன். அதிருக்கட்டும், நீங்க தானே லக்ஷ்மியோட ஃபாதர் ?
"ஆமாம். நான்தான் லக்ஷ்மியோட ஃபாதர். அவன்  முழுப் பேர் லக்ஷ்மி நாராயணன். சார்...."
"..."
"...."
"சாரி. ஏதோ ராங் நம்பர்னு நினைக்கிறேன்"
"ஆமாம்"


அதற்குப் பிறகு பாச்சவுக்கும், நரசிம்மனுக்கும் கிட்டத்தட்ட நடுராத்திரியில் கால் வந்தது. அமெரிக்க ‘ரீங்’ நீட்டி முழக்கி வந்த போது, பாட்டி எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் பாத்ரூம் பக்கம் போனாள்.


"குழந்தை நீ கொடுத்த நம்பர்ல இருக்கிறவர் பிள்ளையோட பேர் ராதாகிருஷ்ணன்னு சொல்றார்... நம்பர் தப்புனு நினைக்கிறேன்"
"இல்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்"
"என்ன... என்னடா சொல்றே?"
"எனக்கு ஒரு பார்ட்னர் வேணும். யாரை பண்ணிண்டா என்ன ? அவனுக்கும் எனக்கு ஒரே வேவ் லெங்க்த்..."
"என்னடா உளறலா இருக்கு இது? இது எல்லாம் நார்த்துல்ல தான் இருக்குனு நினைச்சேன். இப்ப நீ இந்த குண்டத் தூக்கி போடறே"
"என்னப்பா,  இன் 21ஸ்ட் சென்சரி, இது எல்லாம் இங்க சகஜம்"
"சகஜமுமாச்சு.. மண்ணாங்கட்டியும் ஆச்சு....நம்ம கல்ச்சர்... என்ன எழவு இது... டேய், இது எல்லாம் நம்மாத்துக்கு ஒத்துவராதுடா. வி ஆர் இன் இந்தியா"
"ஃப்யூ மன்த்ஸ் பேக் இண்டியன் கவர்மெண்டே இத ஓ.கேனு சொல்லியிருக்கு"
"அது எல்லாம் பாலிடிக்ஸ்"
"டிரை டூ அண்டர்ஸ்டாண்ட். இட்ஸ் ஹ்யூமன் ரைட்ஸ் பா"
"ஹ்யூமன் வேல்யூஸ் எல்லாம் பாழாப் போயிடும். உன் மூளை ஏண்டா இப்படி கெட்டுபோச்சு?. கண்ட கண்ட புக்ஸ் படிச்சா.."
"தட்ஸ் வை வி ஆர் கெட்டிங் நோபல் பிரைஸ் ஒன்ஸ் இன் அ சென்ஞ்சுரி"
"ஐ திங்க் யூ ஹேவ் டு கன்சல்ட் ஏ சைகியாட்ரிஸ்ட். உனக்கு பைத்தியம் புடுச்சிருக்கு.."


"ஏன்ணா, செத்த இங்கே கொஞ்சம் வாங்கோளோன்.."
"நீ வேற... இருடி... செத்தா எப்படி அங்கே வருது?"
"அப்பா ஐ திங் யூ ஆர் நாட் இன் குட் மூட், நாளைக்கு திரும்ப பண்றேன். கீப் கூல் இதுல ஒண்ணும் தப்பு இல்ல"
"..."
"...."
பாத்ரூம் போன பாட்டி வெளியே வந்து, "கோலங்கள் சீரியல் அடுத்த வாரம் முடியற்தாமே, அப்படியா ?" என்றாள்
"ஏம்மா நம்மாத்து கதையே சீரியல் மாதிரி அலங்கோலமா. இருக்கு. போய் படுத்துக்கோ"
"என்னதான் சொல்றான் லக்ஷ்மி?"
"என்ன சொல்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து, ஆம்பளையை ஆம்பள கல்யாணம் பண்ணிக்கிறதாம். கேக்கவே கண்றாவியா இருக்கு"
"ஏதோ இதுவரைக்கும் ஐயங்கார் பையனா பார்த்து லவ் பண்ணானே. அது மட்டும் சந்தோஷம்...." என்று சொல்லிவிட்டு சின்னதாக இருமிவிட்டுப் படுத்துக்கொண்டாள் சூடி என்கிற சூடாமணிப் பாட்டி.


 

Friday, January 22, 2010

சுஜாதா தேசிகன் - பேருக்கு ஒரு முன்னுரை

தமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் “வாமா மின்னலு” என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும்.

இந்து மதத்தில் உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா? இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது.

கோயில்களில் பார்க்கும் பெருமாள் சிலைகள் எல்லாம் அர்ச்சாவதாரம் என்று சொல்லுவார்கள். நிச்சயம் பெருமாள் இப்படித்தான் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. முருகன் என்றால் எப்போதும் சின்ன பையனாகதான் காட்சி தருவார். கூடவே மயில் இருக்கணும். இல்லை என்றால் அவரை நாம் முருகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெருமாள் எப்படி இருப்பார் என்று தெரியாத காரணத்தால்தான் இன்று பழனி முருகனும், பிள்ளையாரும் அக்கரலிக் பெயிண்டால் காலண்டரில் ஜொலிக்கிறார்கள்.

திருவள்ளுவரையும் கம்பரையும் ஹுவான் சுவாங்கையும் (எலி வாலாய் பின்னல் போட்டிருப்பார்) சத்ரபதி சிவாஜியையும் ஷாஜகானையும் (இவர் ஒரு ரோஸ் வைத்திருப்பார்) அக்பரையும்கூட புத்தகங்களில் ஒரு உருவத்தைக் கொடுத்து, இவர் இப்படித்தான் இருப்பார் எனச் சொல்லி மனதில் பதிய வைத்திருக்கின்றனர். வழக்கமாக உட்கார்ந்திருக்கும் திருவள்ளுவர் கன்னியாகுமரியில் நிற்பதால், நம் மனது அவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லையே!.

அடுத்து, “பேர்ல என்ன இருக்கு ?” என்ற கேள்வி நாம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் பிரயோகம். ”வாட்ஸ் இன் அ நேம்”? என்று ஷேக்ஸ்பியர் கேட்டதை அவரே மறந்து இருக்கக்கூடும். ஆனால் நாம் அதை மறக்கவில்லை. நரசிம்மன், கோவிந்தராஜன், ஜெகந்நாதன், ராஜகோபாலாச்சாரி போன்ற பெயர்கள் கேட்டவுடன் உங்களுக்கு உடனே ஒரு வயதான பிம்பத்தைத் தரும். ஏன் என்றால் உங்களுக்குத் தெரிந்த இந்தப் பெயர்களில் இருப்பவர்கள், மாமாக்களோ, தாத்தாக்களோ. இதே பெயர்கள் தற்போது நரேஷ், கோவிந்த், ஜெகன், ராஜ் என்று சுருக்கப்பட்டதால் வயதும் கம்மியாகிவிட்டது போல் தோன்றுகிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு நீளமாக பெயர்கள் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வயது அதிகமாகும். சில ‘விதி’விலக்குகள் இருக்கின்றன. என் பெயர் சிறியதுதான்; “தேசிகன்”. அதற்கே, “ஓ நீங்கதான் தேசிகனா? நான் கொஞ்சம் வயசானவரா எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னவர்களின் லிஸ்ட் நீளம்.

சமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். முன்பு ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது “ஓ, அந்த தேசிகன் நீங்க தானா?” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை. வைத்திருந்தால், “சார் உங்களுக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கி வைத்திருந்தேன்” என்று அழைத்து, என்னைப் பார்த்து விட்டு “வெச்சிக்கோங்கோ.. வயசானா உபயோகமா இருக்கும்” என்று தந்திருப்பார்கள். இவர்கள் இப்படி நினைத்துக்கொள்வதில் எனக்குத் துளிக்கூட வருத்தம் கிடையாது. ஆனால் பெண்கள்? பிரச்சினை அங்குதான். அதற்குமுன் பெண்களின் பெயர்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.

பெண்களின் பெயர்களை எடுத்துக்கொள்ளுங்கள்; “சுஜாதா” என்ற பெயர் எப்போதோ ஆண் பெயராகிவிட்டது என்று எழுத்தாளர் சுஜாதாவே என்னிடம் அடிக்கடி சொல்லியுள்ளார். சிம்ரன், ஸ்ரேயா, ஸ்நேகா எல்லாம் சீசனுக்குத் தகுந்தாற் போல அழகானவர்களின் பெயர்களைக் குறிக்கும். சில சமயங்களில் யாராவது இந்தப் பெயர்களை, தங்கள் பெயரென்று சொல்லிவிட்டால், படக்கூடாத இடத்தில் அமிர்தாஞ்சன் பட்ட மாதிரி இருக்கும். காரணம் நமக்கு இந்த பெயர்களினால் ஏற்படும் பிம்பம் தான்! விகடன், குமுதம் போன்ற பத்திரிகையில் பார்த்திருக்கலாம் தற்போது உள்ள “கதாநாயகன், கதாநாயகிகளுக்கு வயதானால்…” என்று போட்டு ஓவியர்கள் கற்பனை செய்து வரைந்திருப்பார்கள். அந்தப் படத்திலும் இளமை எட்டிப்பார்க்கும்.

மீரா, மாலதி, ரஞ்சனி, காயத்ரி, அனன்யா, ரூபா எல்லாம் நேரில் பார்க்காதவரை வயதைக் கண்டுபிடிக்க முடியாத பெயர்கள். இன்றைக்கும் என் பெண்ணின் பெயர் ஆண்டாள் என்றால் “ஏன் சார், சின்னப் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிங்க?” என்று வாரத்துக்கு ஒருவராவது கேட்டுவிடுகிறார். இத்தனைக்கும் திருப்பாவை எழுதிய ஆண்டாள் சின்ன பெண்தான். நதியா என்று ஒரு பெயரைக் கேட்டால், நிச்சயம் 35 வயசுக்கு மேல் இருக்கும் பிம்பம் உங்கள் மனசில் வரும். அதே நதியா நரசிம்மன் என்ற பெயரை கேட்டால்? ஒரு மரியாதை வரும். பெயருக்கு பின்னால் இருக்கும் நரசிம்மனுக்குக் கொடுக்கும் பயம் கலந்த மரியாதை. பெயருக்கு கூட பின்னால் பெயர் போடாமல் இருக்கும் பெண்கள்? நம்பாதீர்கள்.

பாட்டி என்றால், கோமளவல்லி, சூடாமணி, ரங்கநாயகி என்று இருப்பதுதானே மரபு?
ஒரு வீட்டுக்கு போகிறீர்கள் அங்கே ஒரு பாட்டி இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள் “இவங்க தான் ஸ்ரேயா பாட்டி” என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “ஸ்ரேயா என்கிற பேத்திக்குப் பாட்டி என்றுதானே?” அந்தப் பாட்டிக்கே பெயர் “ஸ்ரேயா” என்றால்…எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? அதே அதிர்ச்சி எனக்கு சில வருடங்கள் முன் கிடைத்தது.

அப்போது நான் சென்னையில் இருந்தேன். வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலம். யாராவது “நீங்க எழுதியது சூப்பர்” என்று மின்னஞ்சல் அனுப்பினால் நோபல் பரிசே விழுந்து விட்ட சந்தோஷம் ஏற்படும். ஒருநாள் என் வலைப்பதிவைப் பாராட்டி ஒரு பெண் வாசகர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கேட்கவா வேண்டும்? ஒருநாள் சாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, “நான் மேல்கோட்டை செல்ல பெங்களூர் வருகிறேன்” என்றேன். உடனே அவர் கட்டாயம் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் ரசிகை, வீட்டுக்குக் கூப்பிட்டால் யாராவது மறுப்பர்களா? கொஞ்சம் யோசிக்கற மாதிரி பாவ்லா செய்துவிட்டு “சரி” என்றேன்.

பெங்களூருக்கு வந்துவிட்டு சில மணிநேரத்தில் மேல்கோட்டை செல்ல வேண்டும். பெங்களூர் வந்து இறங்கியவுடன் அந்த பெண் வாசகிக்கு போன் செய்து பேசினேன். “ஓ! நீங்க ஜே.பி. நகரில் இருக்கீங்களா? நாங்க கோரமங்களா… நீங்க அப்படியே பி.டி.எம் பக்கமா வந்தீங்கனா ஈஸி. உங்களுக்காக சக்கரை பொங்கல் செஞ்சு ரெடியா வெச்சிருக்கேன்” என்று சொன்னார். (அன்று ’கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’). நான் அட்ரஸ் குறித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து, விசாரித்துக்கொண்டே அவர்கள் வீட்டைச் சென்றடைந்தேன்.

அவர்கள் வீட்டுக்குப் போகும்முன் என்ன நடந்தது என்று சொல்லியாக வேண்டும். நான் போனில் பேசுவதை என் மனைவி கேட்டுவிட்டு “யாரு” என்றாள் சின்னதாக. கல்யாணம் ஆன புதுசு; அதனால் சின்னதாக. முதல் அனுபவம் என்பதால் எனக்குத் தெரிந்த வாசகி என்று நான் உண்மையைச் சொல்லிவிட்டேன்.

“என்ன டிரஸ் இது? ரிசப்ஷனுக்கா போறீங்க? நல்ல யங்கா டி. ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகிட்டு காஷுவலா போங்க” என்ற அவள் விருப்பப்படியே டிரஸ் மாற்றிக்கொண்டேன். “எங்க ஆத்து மனுஷா வீட்டுக்கு வரும்போது மட்டும் இப்படியெல்லாம் வந்துராதீங்க” என்று சொல்லி வழி அனுப்பினாள்.

வாசகியின் வீட்டுக்கு முன் ஏதோ மரம், பக்கத்தில் மளிகை கடை, எதிர்த்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் என்ற முக்கியமான லாண்ட்மார்க்குகள் இருந்ததால் அவர்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. வீட்டுக் கதவைத் தட்டியவுடன் வயதானர் ஒருவர் கதவைத் திறந்தார்.

“என்ன வேண்டும்?”

“நான் தேசிகன்” என்று சொன்னவுடன், “ஓ, நீங்க தானா அது?” என்று அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு அம்மணி வந்து “நீங்க…” என்று ஆரம்பித்தபோது மீண்டும் “தேசிகன்” என்றேன். இவங்கதான் வாசகியா என்று அதிர்ந்த மனதை, “சே, அப்படி இருக்காது, அவங்க பொண்ணாயிருக்கும், வருவாங்க” என்று அவசர சமாதானம் செய்தேன்.

“என்ன தேசிகனா? உங்க பேரைக் கேட்டதும் நீங்க ஏதோ வயசானவரா இருப்பீங்கன்னு நினைச்சேன். அதுவும் நீங்க சுஜாதாவோட நெருங்கிய நண்பர், ஆழ்வார், பத்தி எல்லாம் எழுதறீங்க” என்று அந்த அம்மணி அடுக்கிக்கொண்டே போக… ஊர்ஜிதமாகிவிட்டது, இவர்தான். இவரேதான். இவ்வளவு சின்னவனாக நான் இருப்பது ஏதோ தெய்வகுற்றம் போல் பார்த்தார். நல்ல வேளையாக உதட்டுக்கு மேலே மீசை இருந்தது. இல்லை என்றால் சர்க்கரைப் பொங்கலுக்குப் பதில் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துவிட்டு எதிர்த்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியிருப்பார்.

அதே அதிர்ச்சி எனக்கும் இருந்தது. “உங்க பேரும் ரொம்ப யங்கா இருந்ததால நான் டி-ஷர்ட் எல்லாம் போட்டுண்டு வந்தேன் பார்க்க இப்படி இருக்கீங்களே, நான் என்ன பாவம் செய்தேன்?” நினைத்தேன், ஆனால் சொல்ல முடியவில்லை!

அப்புறமாவது நான் சும்மா இருந்திருக்கலாம். என்ன பேசுவது என்று தெரியாமல் மேஜை மீது வைத்திருந்த ஒரு ஃபேமலி போட்டோவைக் காண்பித்து “இதுதான் உங்க பொண்ணா?” என்றேன்.

“என்னது இது? இவ என் பேத்தி. பக்கத்தில் இருப்பதுதான் அவ குழந்தை” என்றார்.

இப்போது அவரும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்பதுதானே சம்பிரதாயம்? கேட்டார்.

“திருச்சியில் எங்கே இருந்தீங்க?”

நான் சொன்ன பதிலைக் கேட்டு உடனே, “உங்க அப்பா நானி தானே?” என்றார் மகிழ்ச்சியாக.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருந்தபோது “நானி பையன் தேசிகனாடா நீ…அட, ஏண்ணா.. இவனைத் தெரியலை உங்களுக்கு? இவன் நானியோட பையன். என்னை உனக்குத் தெரியலையா? எப்படித் தெரியும்? நான் உங்காத்துக்கு வந்தபோது நீ சின்னப் பையன், டிரவுசர் போட்டுண்டு (நல்ல வேளை!) ஓடிண்டிருப்பே, உனக்கு என்னை நெனைவு இருக்காது…”

ஐயங்கார் எல்லாம் குளோஸ்டு கம்யூனிட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு குளோஸா இருக்கும் என்று நினைக்கவில்லை. புரியாமல் “நீங்க யாருன்னு தெரியலையே?” என்று திரும்பவும் அப்பாவியாகக் கேட்டேன்.

“என்ன அப்படிக் கேட்டுட்ட.. ம்ம்… எப்படிச் சொல்றது? எங்க அம்மாவுக்கு உங்க பாட்டி அத்தை… அப்ப அம்மங்கா… நான் அம்மங்காவுட பொண்ணு.. ஒன்றுவிட்ட முறை பையன்” என்றார். என் அகராதியில் மாவடுக்கு அடுத்து அம்மங்கா சேர்ந்து கொண்டது.

அதற்குப் பிறகு தேசிகன் என்ற பெயரைச் சுருக்கி “தேசி” என்று மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தார். வயது கம்மியாகிவிட்டது இல்லையா?

இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் அம்மங்காவிடம் அனுப்பினேன். அனுப்பியப் பத்தாவது நிமிடம் அவர் போன் செய்தார். “ஏய் தேசி, என் பேரை அப்படியே யூஸ் செஞ்சிருக்கே? நேராக உன் வீட்டுக்கு வந்து உன்னை அடிப்பேன்,” என்றார். அவர் அப்படி செய்யக்கூடியவர் என்பதால் அவர் வயதுக்கும் உறவுக்கும் பயந்துக்கொண்டு இந்தக் கட்டுரையில் அவர் பெயரைப் போடவில்லை. எதற்கும் நெட் அன்பர்கள் ஜாக்கிரதை.


போன வாரம் ஒருவர் “சார் எங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்காக புளியோதரை பண்ணியிருக்கேன்” என்றார். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று போகவில்லை. இத்தனைக்கும் அவர் ஆம்பளை!

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் பெயரில் என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கலாம், ஆனால் சில சமயம் உங்களை நீங்கள் அடையாளப்படுத்த இது தேவையாக இருக்கிறது.

சில வாரங்களுக்குமுன் ஒரு பெரிய எழுத்தாளர் ( கடுகு என்ற திரு பி.எஸ்.ரங்கநாதன்)  என் கதையைப் படித்துவிட்டு இவ்வாறு மெயில் அனுப்பியிருந்தார்:

“உங்கள் கதையைப் படித்தேன். இனிமேல், தேசிகன் என்ற பெயரைவிட, அத்துடன் கூட ஏதாவது சேர்த்துக்கொண்டு எழுதுவது பெட்டர். இல்லை என்றால் கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி போல இதுவும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று மாதிரி ஆகிவிடும்” என்று சொல்லிவிட்டு கூடவே சில பெயர்களும் கொடுத்துவிட்டு ”எனக்கு நீங்கள் “சுஜாதா தேசிகன் என்ற பெயரை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று பின்குறிப்பாகவும் ஆசீர்வாதமாகவும் எழுதியிருந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய திருப்பாவை விளக்கங்கள், கிழக்கு (வரம்) வெளியீடாக, சின்ன புத்தகமாக, ‘சுஜாதா தேசிகன்’ பெயருடன் வருகிறது, விலை 20/=. கொடுக்கும் விலைக்கு 10 திருப்பாவை உரை இலவசம்.

Saturday, January 9, 2010

நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்

நான் திருவல்லிக்கேணியில் இருந்த போது, “எல்லா பஸ்ஸும் பூந்தமல்லிக்கு போறது; அங்கதான் திருக்கச்சி நம்பிகள் பிறந்த இடம், ஒரு தரம் சேவிச்சுட்டு வந்துடு” என்று அப்பா சொல்லி பல வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் புத்தாண்டுக்கு அடுத்த நாள்தான் போகமுடிந்தது.

யார் இந்தத் திருக்கச்சி நம்பி? ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் நாதமுனிகளுக்கு(1) தனி இடமுண்டு. அவருடைய பேரன் ஆளவந்தார். ஆளவந்தாரின் ஒரு சீடர்தான் நம் திருக்கச்சி நம்பிகள். கிபி 1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 55 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது 2009ஆம் ஆண்டு 1000 வருடம் ஆகிவிட்டது.

இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (MULTI FACETED PERSONALITY) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாளு குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் என்பதற்கு பல சான்றுகளை நாம் பார்க்கலாம். அவருடைய கருணை குணத்திற்கு திருக்கச்சி நம்பிகள் தான் அவருக்கு முன்மாதிரி(role model) என்றும் சொல்லலாம். பல சமயங்களில் இராமானுஜருக்கு குருவாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராக (Mentor) ஆக விளங்கியிருக்கிறார். இராமானுஜருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் நடந்த சம்பவங்களைப் படிக்கும் போது பின்னால் இராமானுஜரைச் ச‌ரியான வடிவாக வார்த்தவரும் இவரே என்பது புலப்படும். இராமானுஜருக்கு பல ஆசாரியர்கள் இருந்தாலும், திருக்கச்சி நம்பிகள்தான் இராமானுஜருடைய அபிமான ஆசாரியர். ராமானுஜருக்கு 8 வயது மூத்தவர். குருபரம்பரை வைபவம் திருக்கச்சி நம்பியைப் பற்றி பல கதைகளும் பல சம்பவங்களையும் சொல்லுகிறது. சிலவற்றைப் பார்க்கலாம். (2)

சென்னையிலிருந்து திருமழிசைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது பூவிருந்தவல்லி. பூந்தமல்லி அல்லது பூனமல்லி என்று சொன்னால் தற்பொழுது எல்லோருக்கும் புரியும். முன்பு இந்த ஊருக்கு தர்மபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. பூந்தண்மலி (தண் - குளிர்ந்த, பூ - மலர்கள், மலி - நிறைந்த இடம்) என்ற பெயர்தான் பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கிறது என்கிறார்கள். இங்கே வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் மலர்களைக் கொண்டுபோய் தொண்டு செய்ததால் ‘புஷ்பமங்கலம்’ என்றும் பெயர் இருந்தாகத் தெரிகிறது. இங்கே இருக்கும் தாயார் பெயர் புஷ்பவல்லித் தாயார். தற்பொழுது, இரண்டு பக்கமும் ரோட்டை அடைத்துக்கொண்டு கடைகளும், பாதி தோண்டி விட்டுவிட்ட சாக்கடைகளும், பல பேருந்துகள் முண்டி அடைத்துக்கொண்டு நிற்கும் இடமாகவும் மாறியிருக்கிறது.

முதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி 1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது. தற்பொழுது கோயிலுக்குள் இருக்கும் டியூப் லைட்டில் “உபயம்: … ” என்று ஏதோ பெயர் இருக்கிறது.

[திருக்கச்சி புகைப்படத்தொகுப்பு: புகைப்படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க அவற்றின் மீது க்ளிக் செய்யவும்.

திருக்கச்சி உற்சவர்.

திருக்கச்சி நம்பிகள் 1000 ஆண்டுகளுக்கு முன் சௌம்ய வருஷம் மாசித் திங்கள் (ஆங்கில மாதம் பிப்ரவரி) மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் (செட்டியார்) பிறந்தார். தந்தை பெயர் வீரராகவச் செட்டியார், தாயார் கமலையார். இவர்களுக்கு திருக்கச்சி நம்பிகள் நான்காவது குழந்தை.(3) ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

திருக்கச்சி நம்பிகள் பெயர் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கஜேந்த்ரதாஸர் என்று காஞ்சிப் பெருமாள் இவருக்கு கொடுத்த பெயர் என்று கதைகள் சொல்லுகிறது. பார்கவ ப்ரியர் என்று சிலர் சொல்லுகிறார்கள்.(வேறு சில பெயர்களும் இருக்கிறது) காஞ்சி பெருமாளின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கச்சி என்று அவருக்குப் பெயர் சூட்டினார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

திருக்கச்சி கோயில் உட்புறத் தோற்றம்.

வீரராகவச் செட்டியார் தன் நான்கு பிள்ளைகளில் கடைசியான திருக்கச்சி நம்பிகள், செல்வம் ஈட்டுவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவராக இருந்தார் என்றும், பக்தியும், பெருமாள் தொண்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டவராகவும் இருந்தார் என்பதற்கு கதைகள் இருக்கின்றன.

தன் அப்பா இவருக்குக் கொடுத்த பணத்தில், பூவிருந்தவல்லியில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதில் நந்தவனம் அமைத்து தினமும் மாலைகள் தொடுத்து காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கு நடந்துசென்று சாத்துவதும், (அர்ப்பணம்) ஆலவட்ட கைங்கரியத்திலும் (பெருமாளுக்கு விசிறி வீசும் பணியில்) ஈடுபட்டார்.(4) இன்று பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஏசி காரில் செல்வதற்கே நமக்கு கால் இழுத்துக்கொள்கிறது.

தன் தூய பக்தியினால், அச்சாவதாரப் (சிலை உருவம்) பெருமாளிடம் தினமும் சகஜமாகப் பேசும் பாக்கியம் பெற்றிருந்தார் திருக்கச்சி நம்பி. பக்தர்களின் கதைகளில் தெய்வத்தின் குரலைக் கேட்டதாகப் பேசும் பகுதிகள் வருவதுண்டு. சாக்ரடீஸ் என்ற கிரேக்க நாட்டுப் பேரறிஞர் தாம் தெய்வத்தின் குரலைக் கேட்டதாக கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தா, ஏன் மகாத்மா காந்தியும் கூறியிருக்கிறார்.
திருக்கச்சி கோயிலின் இன்னொரு தோற்றம்

திருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிகள் பட்ட மண்ணை ஒரு திருக்குலத்தை சேர்ந்தவர் (கீழ் சாதி) தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்கள் உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்கும்” என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறியிருக்கிறார்.

தினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா?” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி?” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசார்ய கைங்கரியம் (தொண்டு) செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி(5)இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை. இன்றும் திருக்கச்சி நம்பிகள் மூலவர் கீழே சில மாடுகள் இருப்பதைக் காணலாம்.

திருக்கச்சி நம்பிகள் நற்குணங்களைப் பார்த்துவிட்டு இராமானுஜர் அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்று கேட்க அதற்கு திருக்கச்சி நம்பிகள் வர்ணாசரம தர்மத்துக்கு அது ஒத்து வராது என்று மறுத்துள்ளார். எப்படியாவது திருக்கச்சி நம்பிகளின் ஆசி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த இராமானுஜருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தனது ஆசார்யராக நினைத்த திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தை, தான் சாப்பிடுகிற வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என்று நினைத்தார்;(6) எப்படி பெருமாளுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பிரசாதம் என்று சொல்லுகிறோமோ அதே போல. அதற்காக திருக்கச்சி நம்பிகளைத் தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க, அவரும் சம்மதித்தார். இராமானுஜர் தன் மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு காத்துக்கொண்டு இருந்தார். நேரம் ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளைத் தேடிக்கொண்டு போக, வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் வீட்டை அடைந்தார். இராமானுஜர் வீட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை, தனக்கு கோயில் வேலை இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றுசொல்லி அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.


ஓவியம் : காரேய் கருணை இராமனுசன் புத்தகம்
ஓவியம் : காரேய் கருணை இராமனுசன் புத்தகம்

அவர் சென்றபின் இராமானுஜரின் மனைவி அவர் சாப்பிட்ட இலையை ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அவர் சாப்பிட்ட இடத்தை சாணத்தால் மெழுகிவிட்டு, தானும் குளித்துவிடுகிறாள். திரும்பி வந்த இராமானுஜர், தனது மனைவி செய்த செயலைக் கண்டு வருந்துகிறார் “அவர் சாப்பிட்டு விட்டு மீதியாக வீட்டு சென்ற ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு அவர் மனைவி “கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் சாப்பிட்ட மிச்சத்தை இங்கே யார் சாப்பிடுவது, பிச்சைக்காரர்களுக்குப் போட்டுவிட்டேன்,” என்று பதில் சொல்லுகிறார்.

ஒரு நல்ல பாகவதரான திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மீதியைச் சாப்பிடுகிற பாக்கியம் தனக்குப் போய்விட்டதே என்று மனம் வருந்துகிறார் இராமானுஜர். அதனால் இன்றும் ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க உற்சவத்தின் போது நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் பெருமாள்) அமுது செய்தருளியபின் (படைத்த பின்) ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்போது திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. (7)

அதே போல நம்பிகள் ராமானுஜருக்கு அவர் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டு தீர்த்துவைத்த கதையும் பிரசித்தம். அப்போது பெருமாள் திருக்கச்சி வாயிலாகச் சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. (கட்டுரையின் அளவு காரணமாக அதை இங்கே தரவில்லை. )

பல கதைகள், சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை கொண்ட திருக்கச்சி நம்பிகள், தம் 55ஆம் வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

திருக்கச்சி நம்பிகள் திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தத்துக்கு தனியன்கள் இயற்றியுள்ளார். இதைத் தவிர காஞ்சிப் பெருமாள் மீது தேவராஜாஷ்டகம் என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

இன்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே திருக்கச்சி நம்பிகள் கோயில் இருக்கிறது. வெளியே திருக்கச்சி நம்பிகள் கோயில் என்று எழுதியிருக்கிறார்கள். வெளியே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டியிருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை தராமல் இருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறார்கள்.
கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.

நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.

“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.

“நம்பி வீடு”

“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.

“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.

அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.


திருக்கச்சி நம்பி திருமாளிகை
திருக்கச்சி நம்பி திருமாளிகை

நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.

“உரமா ?”

“ஆமங்க வியசாயத்துக்கு”

அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.

அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.

“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”

“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”

திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.

———————————————————————————————————————–(1) நாதமுனி திருநாராயணபுரத்தில், காட்டுமன்னார் கோயில், தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தவர். “ஆரா அமுதே” [3310] என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தேடிக் கண்டு பிடித்து தொகுத்து வழங்கியவர்.(2) திருக்கச்சி நம்பிகள் குறித்த நிகழ்வுகள், பெருமைகள், கதைகள் அநேகம் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் அடக்கமுடியாது என்பதால் மிகச் சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.(3) இவருக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் - திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார் என்று மூன்று அண்ணன்கள். இவர்களின் பெயர்கள் பல புத்தகங்களில் இருக்காது. அப்பா எனக்கு விட்டு சென்ற ஏதோ பழைய குருபரம்பரை புத்தகத்தில் இந்த பெயர்கள் இருக்கிறது.(4) இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவ மூர்த்தியின் கையில் ஆலவட்டம் இருப்பதை பார்க்கலாம் (பார்க்க படம்)(5) திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜரின் இன்னொரு ஆச்சாரியர். அவரது திருமாளிகைக்கும் ( வீடு ) இந்த முறை போக முடிந்தது. அதை பற்றி பிறகு எழுதலாம் என்று இருக்கிறேன்.(6) வானுளார் அறியலாகா வானவா என்பராகில்

தேனுலாம் துளப மாலைச் சென்னியா என்பர் ஆகில்

ஊனம் ஆயினகள் செய்யும் ஊன காரகர்களேனும்

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே.(41)

– தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமாலை.

[தாழ்ந்த செயல்களைச் செய்பவர் ஆயினும் செய்விப்பவர்களாயினும் "நாராயணா" என்ற பகவானுடைய நாமத்தைத் துதிக்கும் அடியார்களாக இருந்தால் அவர்கள் அமுது செய்தபின் மீதமானது புனிதமே ஆகும்.](7) ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள் சன்னதி ஆலிநாடன் திருச்சுற்றில் கருட மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது.

பாகம் - 2 ( 25.2.2017 பதிவு இங்கே )