Skip to main content

திண்ணனூர், திருஎவ்வுள்

நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
காதல் என்பது மூன்று எழுத்து
உன் பின்னால் சுற்றுவது என் தலை எழுத்து!
இப்படிக்கு
பிரபு
S/0 ராஜமாணிக்கம் 


[%image(20061102-thirnidavur_gopuram.jpg|200|150|thirunidavur)%]

ஒவ்வொரு முறையும் பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் போதும், திருவள்ளூர், திருநின்றவூர் ஸ்டேஷன்களை கடந்து செல்லும். இந்த இரண்டு திவ்வியதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். திரும்பவும் பெங்களூர் போகும் போது, தான் திரும்ப நினைவுக்கு வரும். இந்த தீபாவளி விடுமுறையில் இந்த இரண்டு திவ்விய தேசங்களுக்கும் போக முடிந்தது.


காலை 6:30 மணிக்கு சென்னை அரக்கோணம் ரயிலில் ஒரு நியூஸ் பேப்பருடன் ஏறினேன். பேப்பர் படித்து முடித்த போது திருநின்றவூர் வந்தது.


"திருநின்றவூர் கோயில் எந்த பக்கம்?" என்று அங்கு இருந்தவரிடம் கேட்டேன்.


"திண்ணனூர் போகனுங்களா ? இப்படியே ஒரு ஆட்டோ பிடித்து போங்க" என்றார். போனேன். திருநின்றவூர் என்பது காலப்போக்கில் திண்ணனூர் என்று திரிந்திருக்கிறது. கோயிலுக்கு முன் ஒரு பெரிய மரம், மண்டபம், கோயிலை சுற்றி சில திண்ணை வீடுகள் என்று மிக அழகிய இடம். திருமங்கையாழ்வார் இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். அதை பற்றிய ஒரு சுவாரசியமான கதையும் இருக்கிறது.



 திருமங்கையாழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் சென்றும் இதை பாடாது சென்றார். இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு கூறினார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடல் மல்லை கோயிலுக்கு சென்றுவிட்டார் விட்டார்.


அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றை பாடக் கேட்டார்.


பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்ந்லை மெய்ந்லென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை
என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2.5.2, 1089 )


[ வீண் செயல்களை மேற்கொண்டு, தாழ்ந்தோர்க்கு அடிமை செய்யாதீர். பொய்யான நூல்களைக் கற்று, மெய் என நம்பி வீணாகாமல், உய்வடய வாருங்கள். ஞானிகளால் துதிக்கப்படும் தந்தையான மேகவண்ணன், திருநின்றவூரில் முத்துத் திரளாய் நிற்கிறான். பூஞ்சோலைக் காண்டவ வனத்தைத் தீயின் வாயில் இட்டு அழித்த எம்மானை, நான் கடல்மல்லைத் தலசயனத்தில் கண்டேன். ]


என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசித்தார்.


பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார், "எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?" என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார். அந்த பாடல்


ஏற்றி னையிம யத்துளெம் மீசனை
இம்மை யைமறு மைக்கு மருந்தினை,
ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும்
ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை
நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே (7.10.5, 1642 )


[ காளை போன்றவன்; இமயத்திருப்பதியில் எழுந்தருளிய என் இறைவன்; இம்மை மறுமைக்கு மருந்தானவன்; மிடுக்குடன் உலகங்களையும் பரமபததையும் ஆள்பவன். கையில் சக்கரம் ஏந்திய என் ஐயன் பகைவருக்கு எமன் ஆவான். நீலமணி போல் உள்ள அவன் திருநின்றவூரில் எழுந்தருளினான். முத்துக் குவியல் போன்றவன். காற்றாகவும் நீராகவும் உள்ள இப்பெருமானை நான் சென்று நாடித் திருக்கண்ணமங்கையில் கண்டு கொண்டேன். ]


இந்த தலத்திற்கு பெயர்காரணம் பற்றியும் ஒரு கதை இருக்கிறது  - பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு 'திரு' வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் திருநின்றவூர் ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). அவள் வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம் தாங்கள் வந்து தாயாரை அழைத்து வர வேண்டும் என்று முறையிட,
 அதற்கு பெருமாள், நீ முன்னே செல்,  நான் பின்னால் வருகிறேன் என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே என்னைப்பெற்ற தாயார் எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். அதனால் இந்த தாயர் பெயர் "என்னை பெற்ற தாயார்" என்று அழைக்கப்படுகிறது.


இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சிகொடுத்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் திருமணக்கோலத்தில் ஸமுத்திரராஜன் ஆசைக்கு காட்சி கொடுத்ததால் இவருக்கு பக்தவத்ஸலன் ( பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம்(பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப் பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால் )


நான் போன சமயம் கோயிலில் யாரும் இல்லை. அங்கு இருந்தவரிடம் பேச்சு கொடுத்த போது "தீபாவளியன்று கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை என்றார்" ஏன் என்றும் அவரே சொன்னார்.


தீபாவளி அன்று வந்த தினமலரில் இத்தலம் பற்றி வந்த குறிப்பில் திருநின்றவூர் குபேரன் வழிப்பட்ட ஸ்தலம், தீபாவளி அன்று குபேர பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் பெருகும் என்றதால் கூட்டம் அலைமோதியது.


திருநின்றவூர் பெருமாளை சேவித்துவிட்டு இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் எவ்வுள்ளில் இருக்கிறாரென்று திருமங்கையாழ்வாரால் பாடபெற்ற திருஎவ்வுள் என்ற திருவள்ளூர் சென்றேன். திருநின்றவூரிலிருந்து ரயிலில் 15 நிமிடங்கள் ஆகிறது. திருநின்றவூர் போல் அல்லாமல் திருவள்ளூரில் தானியியங்கி சிக்னல், ஒரு வழிப்பாதை என்று திருவள்ளூர் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.


[%image(20061102-thiruvalur_gopuram.jpg|200|150|thiruvalur)%]

இங்கு உள்ள பெருமாள், ஸ்ரீ வீரராகவன். திருஎவ்வுள்கிடந்தான் என்றும் திருநாமம் உண்டு. இந்த பெருமாள் தீராத வியாதிகளையும் தீர்த்துவைப்பதால் இவருக்கு 'வைத்திய வீரராகவன்' என்னும் பெயர் மிக பிரஸித்தம். ராமலிங்க அடிகளார் தன் வயிற்று வலியால் அவதிப்பட்ட போது, இப்பெருமாளை ஸேவித்து திருபஞ்சகம் என்கிற 5 பதிகங்களை பாடின மாத்திரத்தில் வயிற்றுவலி நீங்கியதாக சரித்திர வரலாறு.


இங்குள்ள கோயில் குளத்தில் தீர்த்தம் வற்றிப்போய் 45 வருடங்களுக்கும் மேலாகிறது. குளத்தின் ஒரு பகுதியை குழந்தைகள் பூங்காவாக மாற்றியுள்ளார்கள். இன்னும் கொஞ்சம் நாளில் மிச்சம் உள்ள இடத்தில்  ஃபிளாட் கட்டி விடுவார்கள் என்று தோன்றுகிறது.


திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும், திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் பாடப்பெற்ற ஸ்தலம். 'என்னுடைய  இன்னமுதை எவ்வுள் பெருமலையை' என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில் மயங்கி நிற்கிறார்.


பெரிய திருமொழியில் ஒரு பாட்டை பார்க்கலாம்:


சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்fபி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.6 (1063 )


[ அடியார்கள் நெருங்கி, 'உன்னை வணங்குகிறோம்' என்று துதிக்கும்படியானவன். நண்பனாகவும் உள்ளான். சிவந்த கண்ணழகுடைய இவன், தேவர்களுக்கெல்லாம் மூத்தவன். மூன்று கண்களுடைய சிவனும் வணங்கும் பெருமையுடைய இந்நம்பி, திருஎவ்வுளூரில் பள்ளி கொண்டான் ].


கோயிலுக்கு வெளியில் உள்ள பிரசாத கடையில் மிளகு வடை, புளியோதரை, சூடான தயிர்சாதத்தை, கோயிலுக்கு வெளியில் லெமன் சோடாவையும் நினைத்தால் திரும்ப ஒரு முறை வரவேண்டும் என்று தோன்றும்.


முதலில் குறிப்பிட்டுள்ள கவிதை(?) நான் போன ரயிலில் எழுதியிருந்தது.


 [ கோயில் ஆல்பம் பார்க்க இங்கே செல்லவும் ]

Comments