Skip to main content

மேல்kind சர்வே!


மேல்kind என்று ஒரு வலைப்பதிவை மீனாக்ஸ், க்ருபா, ஷங்கர் ஆகியோர் நடத்திவருகிறார்கள். அதில் ஒரு புதிய பகுதி மேல்Kind சர்வே! சில சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்து அதன் பதில்களை வெளியிடுகிறார்கள்.


என்னிடமும் "அந்த" கேள்வியை போன வாரம் கேட்டார்கள். கேள்வி இது தான்:
1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?


நான் ஐந்து வருடம் முன் எழுதிய ஒரு பகுதியை கொஞ்சம் தூசுதட்டி அனுப்பினேன் அவர்களும் பெரிய மனம் கொண்டு , மதித்து பிரசுரித்தார்கள். அதை இங்கு தந்துள்ளேன்.


பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி...


நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம்
சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் பார்க்க சென்று இருந்தேன்.


"எதுவாக இருந்தாலும் அங்கேயே பெண்ணை பார்த்து கேட்டு விடு"


சென்ற இடத்தில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் பெண் பார்க்க் வரும் செய்தி எப்படியோ தினத்தந்தியில் வந்துவிட்டது போல் அந்த காலனி கதவு, ஜன்னல் இடுக்கிலிருந்து எல்லேரும் என்னை எட்டி பார்த்து சிரிக்க, அந்த காலனி நாய் குட்டி என்னை பார்த்து செல்லமாக வாலையாட்டியது!


பெண் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது. இப்படியும், அப்படியும் எல்லேரும் ஒடிக் கொண்டு இருக்க, சிலர் வலுக்கட்டாயமாக என்னை கேசரி சாப்பிடவேண்டும் என்று என்னுடன் போராடிக் கொண்டு இருக்க, அந்த கூட்டத்தில் எது பெண் என்று நான் தேடிக்கொண்டு இருந்தேன்.


அங்கு இருந்த பாட்டி என்னிடம் "பெண்ணை பிடித்திருக்கா?"
"எது பாட்டி பொண்ணு?"
"அங்கே தலையை குனிந்து கொண்டு, பச்சை புடவை"


அதற்க்குள் என் அம்மா என்னை பெண்ணுடன் எதாவது பேசு என்று அடம்பிடிக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, பஸ் ஸ்டண்ட் பிள்ளையருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு கிட்டே சென்று என்ன பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன். (அடுத்த முறை மணிமேகலை பிரசுரத்திடம் "பெண் பார்க்கும் போது கேட்கும் கேள்விகள்" புத்தகம் இருக்கா என்று கேட்க வேண்டும்)


சட்டென்று ஒரு கேள்வி உதயமாக,
"எங்கு பி.காம் படிச்ச?"


கொஞ்சநேரம் யோசித்து விட்டு அந்த பெண் "காலேஜில்" என்று மெதுவாக பதில் சொல்ல...


எனக்கு அந்த பெண்ணை... நீங்களே முடிவு செய்யுங்களேன்!


மற்றவர்கள் ( பா.ராகவன், ஆசிஃப் மீரான்,'மூக்கு' சுந்தர், பாஸ்டன் பாலாஜி,அருண் வைத்யநாதன்,என். சொக்கன்) என்ன சொன்னார்கள் என்று பார்க்க: http://malekind.blogspot.com

Comments