சில மாதங்களுக்கு முன் ’கொம்பன்’ படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு வசனம் “மீசைய முறுக்கிட்டு திரியற இவிங்கள போல நீயும் உருப்படாம போவ” எனக்கு மீசை இல்லை, அதனால் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தேன். படத்தில் நடிப்பவர்கள் எல்லோர் முகத்திலும் புசுபுசுவென்று முடியும், சண்டைக்குச் சட்டையை கழட்டினால் நெஞ்சிலே அதே புசுபுசு. ”நீ என்ன பெரிய கொம்பனா? அல்லது உன் தலையில் என்ன பெரிய கொம்பா மொளச்சிருக்கு” என்று பேசுகிறோம். மீசைக்கும் கொம்புக்கும் என்ன சம்பந்தம். இருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். சினிமாவில் ஒருவனுக்குத் தலை நிறைய முடி இருந்தா அவன் நகரத்துப் பொறுக்கி; மூஞ்சி முழுக்க இருந்தா கிராமத்து ரவுடி; கிராப் வெட்டியிருந்தால் போலீஸ்; பங்க் என்றால் தாதா என்ற அடையாளங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெய் சங்கர் படங்களில் எக்ஸ்டராவாக கண்ணத்தில் ஒரு மச்சம் இருக்கும். சிலருக்கு மச்சத்தின் நடுவில் ஒரு முடி வளரும். ஏன் என்று தெரியாது. தேவர் மகனில் சிவாஜி சாருக்கு அடுத்ததாகக் கமல் சார் வாரிசாக மாறும் போது தலையில் ’பங்க்’கை எடுத்துவிட்டு அப்பா மாதிரி மீசை வைத்துக்கொண்டு முடி திருத்தி...