நண்பர் அருண் வடபழனியில் துவக்கியிருக்கும் ப்யூர் சினிமா (Pure Cinema) புத்தகக் கடை சார்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேலுடன் கலந்துரையாடலுக்கு சனிக்கிழமை சென்றிருந்தேன். சில வருஷங்கள் முன் ஒரு காலை நடைபயிற்சியின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் என்னை அழைத்து என் சிறுகதை புத்தகத்தை பாராட்டி பேசினார். அதற்கு பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை பேசியிருப்பேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அறிமுக செய்துக்கொண்ட போது என்னை நினைவில் வைத்திருந்தது வியப்பாக இருந்தது. அன்றைய கூட்டத்தில் பலரும் இளைஞர்கள். எல்லோருக்கும் சினிமாவில் ஏதாவது ஒன்றை சாதித்துவிட வேண்டும் என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. எது நல்ல இலக்கியம் என்று தமிழ் எழுத்தாளர்கள் குழப்புவது போல எது நல்ல சினிமா என்று குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கூடவே உலக சினிமா, இராணிய சினிமா, எதார்த்த சினிமா என்று அவர்கள் குழப்பம் விரிவடைகிறது. துணை இயக்குனராக சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும், தலித் இலக்கியம் மாதிரி தலித் சினிமா என்று எல்லா கேள்விகளுக்கும் பாலாஜி சக்திவேல் பூசி மொழுகாமல் நேரடியாக பதில் அளித்தார். காதல் கோட்டை போன்ற பார்க்...