’திருச்சி பாப்பு’ என்று செல்லமாக அழைக்கப்படும் என் அம்மா ஆசார்யன் திருவடி அடைந்து இரண்டு வாரம் ஆகிறது. டிசம்பர் மாதம், பெனடிரிலுக்கு இருமல் அடங்காமல் மருத்துவரிடம் சென்ற போது “எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துவிடலாம்” என்றார். எக்ஸ்ரேயைப் பார்த்த போது டாக்டருக்கும் எங்களுக்கும் அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அதில் ஒரு நுரையீரல் தெரியவில்லை. ”அம்மாவிற்கு வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய் லாஸ்ட் ஸ்டேஜ்” என்று டாக்டர் சொன்ன போது, தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ”கேன்சர் ஒரு சாபம் அல்ல குணப்படுத்த முடியும்” என்று எழுதியிருக்கும் அந்த பிங்க் நிற பலகை ஞாபகத்துக்கு வந்தது.