"என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்துதான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்" - கற்றதும் பெற்றதும் சுஜாதாவிற்கு சிறுகதை மேல் அளவுகடந்த காதல் என்று சொல்லலாம். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும் அவர்கள் எழுதிய ஒரு நல்ல சிறுகதையை உடனே நினைவுகூர்வார். ஒரு முறை சுஜாதாவைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்தாளரைப் பற்றி பேச்சு வந்தபோதும் அந்த எழுத்தாளர் எழுதிய ஒரு நல்ல கதையின் தலைப்பைச் சட்டென்று சொன்னார். வியந்துபோனேன். 'எல்லோரிடமும் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது' என்று பலமுறை சொல்லியிருக்கார்.