வெயில் இல்லாத இன்று காலை ’ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்களை பார்த்துக்கொண்டு இருந்தபோது வெளியே கானம் ஒன்று கேட்டது. ராம கானம். அனுமாரை தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும் என்று வெளியே பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார். காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, ஜிகினா பேப்பர் கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை பெயிண்ட் என்று அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் அவர். அவர் அடுத்த வீட்டுக்கு சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. அவர் குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.