தூதுவளை கொடி போன வாரம் தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்) சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன். “மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்” “சைதாப்பேட்டையிலே டிரை பண்ணுங்களேன்?” “பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்” கடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க “முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க” அடுத்த நாள் ஒரு பாக்கெட் நிறைய தூதுவளை கீரையை தருவித்துத் தந்தார். “யாருக்காவது சளி, இருமலா ?” “இல்லை இது ஆளவந்தாருக்கு” என்றேன். ஆளவந்தாருக்கும் தூதுவளைக்கு என்ன சம்பந்தம் ? ஆளவந்தார் வாழி திருமாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியை சுருக்கமாக பார்க்கலாம்: ஆளவந்தார், காட்டுமன்னார் கோயில் ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகள...