தேசிகன்’ என்ற என் பெயர் கடைசியில் ‘Gun’ இருப்பதாலோ என்னவோ எனக்கும் துப்பாக்கிக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது நான் கண்டெடுத்த துப்பாக்கி பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் புதருக்கு இன்னொரு பெயர் ‘காடு’. நிறைய மரம், செடி கொடிகள் என்று வருடம் முழுக்க பச்சையாகத்தான் இருக்கும். சில சமயம் நரிக்குறவர்கள் வந்து வலை விரித்துக் கிளி பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பொழுதுபோகாத சமயம் காட்டை சும்மா சுற்றுவது எங்களுக்குப் பொழுதுபோக்கு. காட்டுக்கு நடுவில் ஒரு பழைய காலத்து நீச்சல்குளம் போல் ஒரு பெரிய தொட்டி இருக்கும்; நிறைய படிகளுடன். உள்ளே ஒரு பாம்புப் புத்து இருப்பதால், இறங்க மாட்டோம். அதற்கு மேல் ஒரேயோர் உதய மரம் மட்டும் செப்டம்பர் மாதம் இலைகளை எல்லாம் இழந்து நிர்வாணமாக நிற்கும். தொட்டி முழுக்க அதன் இலைகள்தான்.