திருச்சியில் என் அறைக்கு எதிரில் குடை மாதிரி மரம் ஒன்று என்னை வருடம் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கும். முழுவதும் பச்சையாக இலைகளுடன், முருங்கைக்காய் போன்ற காய்களுடன். சில மாதங்களில் மரம் முழுவதும் மொட்டுவிட்டு ஒரு நாள் இலைகளே இல்லாமல் முழுவதும் திராட்சை கொத்து போன்ற மஞ்சள் பூக்களுடன்... ஒரு வாரத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் பூக்கள் உதிர்வது போல உதிர்ந்து கீழே இருக்கும் பெரிய கற்களுக்கு ஸ்டென்ஸில் போட்டுவிடும். பிறகு முழு மரமும் மொட்டையாகி திரும்ப இலைகள் வரும். படிக்கும் காலத்தில் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. ஒரு முறை ஒரு கோயில் அர்ச்சகர் சைக்கிள் கேரியர் மீது ஏறி சில பூக்களை பறித்துக்கொண்டு இருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மரம் இருந்த இடம் அண்ணன் தம்பிக்கு பங்கு போடப்பட்டு சில நாட்களில், இரண்டு பேர் சில மணி நேரத்தில் மரத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு போனார்கள்.