செல்போன் மாதிரி என் பெயர் ரொம்பப் பொதுவானது. டைரக்டரியை எடுத்துப் பாருங்கள்; பத்து பக்கத்துக்கு என் பெயர் விதவிதமான இனிஷியல்களில் அடுக்கியிருக்கும். ஆனாலும் நான் வித்தியாசமானவன். நினைவு இருக்கும்போதே கேட்டுவிடுகிறேன், உங்களிடம் செல்போன் இருக்கிறதா? மெசேஜ் அடிக்கத் தெரியுமா? நல்லது. உங்கள் செல்போனில் Prediction ஆன் செய்துவிட்டு 5477 என்று டைப் அடித்துப் பாருங்கள். என்ன வருகிறது? Lips என்று வருதா? இதற்கு மாற்று வார்த்தை இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்கள் சொல்போனில் கீழே இருக்கும் * பட்டனை அழுத்துங்கள். Kiss என்று வருகிறதா? இந்த இரண்டு வார்த்தைகளும் வரும்வரை கதையை மேற்கொண்டு படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் கடைசியில் கதை புரியாது. இப்பொழுது எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிவிடுகிறேன் - என்னால் ஆவிகளுடன் பேச முடியும். உடனே, ஆவிகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் சுத்த புருடா என்று எல்லோரும் சொல்லுவதைப் போல நீங்களும் சொல்லாதீர்கள். எனக்கும் நம்பிக்கை கிடையாது, மாலாபுரம் செல்லும் வரை.