“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்! காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம். நன்றி : flickr இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளா...