ஆட்டோவில் போன அசோகமித்திரன் சுஜாதாவின் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் கல்லூரி நண்பன் மார்டின், “‘ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்ற அசோகமித்திரன் கட்டுரையை படிச்சு பாருங்க தேசிகன், நகைச்சுவையா இருக்கும்,” என்றார். ‘எந்தப் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது என்ற கேள்விக்கு மார்டினால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கலைஞன் பதிப்பகத்தில் எதோ ஒரு கட்டுரை தொகுப்பு” என்று மட்டும் க்ளூ கொடுத்தார். அந்தக் கட்டுரையை எப்படியாவது தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த சமயம் அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். (அந்தக் காலத்தில் கூகிள் கிடையாது ). கலைஞன் பதிப்பகத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைந்து, கடைசியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் வாசலில் கண்ணதாசன் குடும்பத்தார் செய்யும் செட்டியார் ஸ்பெஷல் உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ முழுத் தொகுதியை கொண்டுவந்த போது அந்தக் கட்டுரைக்காகவே புத்தகத்தை வாங்கி முதலில் அந்தக் கட்டுரையைத் தேட...