'அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்' ரொ ம்ப சிம்பிளான பிச்சைக்காரன் கல்லுளிமங்கன். இந்தப் பெயரை யார், ஏன் வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், வீட்டு வாசலுக்கு வந்தால், ''அம்மா, கல்லுளிமங்கன் வந்திருக்கான்'' என்போம். உப்புச் சத்தியாகிரகப் பாத யாத்திரை போன காந்தியடிகள் மாதிரி மினி பஞ்சகச்சம் கட்டி, கையில் ஒரு கம்புடன் இருப்பான். மேல்சட்டை, துண்டு எதுவும் இருக்காது. கையில் நசுங்கிய அலுமினியத் தட்டு. உடம்பு கறுப்பாக, ஆனால் பளபளப்பாக இருக்கும். கையிலும் கால்களிலும் வெயிலின் சூட்டினால் செதில் செதிலாக இருக்கும். தலை உச்சியில் இட்லி சைஸூக்கு வழுக்கை. ஆறு வெள்ளை முடி இருந்தால் நிச்சயம் நாலு கறுப்பு முடி விகிதம் வேலி போட்ட மாதிரி இருக்கும். எப்போது பார்த்தாலும் இரண்டு மாதம் முன்புதான் மொட்டை அடித்த மாதிரி தோற்றம். பழைய சாதம், மோர், நேற்றைய ரசம் என்று எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிற ரகமில்லை. நாலணா கொடுக்க வேண்டும். எப்போதாவது தண்ணீர் கேட்டுச் சாப்பிடுவான். '...