Skip to main content

ஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள்



சங்க இலக்கியம் காலம் பொ.மு. 500 முதல் பொ.யு. 200 முடிய இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நாம் அந்த ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம். தமிழ் மற்றும் சங்க இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிந்துகொண்டால் போதுமானது.
திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் “செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி” என்கிறார். செம்மை மொழியாக விளங்கும் தமிழின் ஓசையாகவும், வட மொழிச் சொற்களாகவும் எம்பெருமான் விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார். வட மொழியையும் தமிழையும் பல காலமாக ஒன்றாகவே சனாதன தர்மத்தில் கருதியிருக்கிறார்கள். இன்று உ.வே என்று ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர்கள் பெயர்களுக்கு முன் போட்டுக்கொள்வது உபய வேதங்கள் தமிழ் மற்றும் வடமொழியைக் குறிக்கும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் - தமிழ் எங்கிருந்து எங்கே பேசப்பட்டது என்று தொல்காப்பியம் உரை சொல்லுகிறது.
இனிமையும், நீர்மையும் தமிழ் என்று கூறலாம். தமிழைத் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாசுரங்கள் வாய்மொழியாகப் பரவின. மரபு வழி உரைகளும் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகப் பரவின. பக்தி இலக்கியம் என்பது சங்க நூல்களில் ஒரு வகை என்றே கொள்ளவேண்டும்.
இந்த முன்னுரையின் ஆரம்பத்தில் ‘க’ என்ற எழுத்தைப் பார்த்திருப்பீர்கள். இது தமிழ் எண் 1ஐக் குறிக்கும். இன்று இதை யாரும் உபயோகிப்பதில்லை. அதுபோல தமிழில் செய்யப்பட்ட பல அருமையான விஷயங்கள் காலப்போக்கில் மறைந்து போயின.
( கீழ் வரும் கட்டுரையில் பெரிய எழுத்தில் இருப்பது நாதமுனிகள் கதை; சாதாரண எழுத்தில் இருப்பது உ.வே.சாவின் கதை )
பொ.யு. 823ல், மின்சாரம், இயந்திரங்கள் இல்லாத காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்த கடலூர் பக்கம், வீர நாராயண ஏரிக்கு அருகில் காட்டுமன்னார் கோயில் என்ற கிராமத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். சுருக்கமாக நாதமுனிகள் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் யோகம், இசை என்று எல்லாவற்றிலும் தேர்ச்சிபெற்றவராக இருந்தார்.
தன் தகப்பனார் ஈச்வர பட்டாழ்வாருடன் குடும்பமாக வடநாட்டு யாத்திரைக்குப் புறப்பட்டார். மதுரா, சாளக்கிராமம், துவாரகை, அயோத்தி முதலான இடங்களுக்குச் சென்று சேவித்துவிட்டு யமுனைக் கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் யமுனைத் துறைவன் என்ற பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். சில வருடங்கள் கழித்து...
பொயு 1855ல் உ.வே சாமிநாதையர் பிறந்தபோது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இரயில் வண்டிகள் ஓடத் தொடங்காத காலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் உத்தானபுரத்துக்கு அருகிலுள்ள சூரியமூலை எனும் ஊரில் இசையறிஞர் வேங்கடசுப்பையர், சரசுவதி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். செல்லமாக ‘சாமா’ என்று அழைப்பார்கள். தமிழ் மற்றும் வடமொழியில் நூல்களைப் படித்தார். அன்றைய காலலட்டத்தில் கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கமாக இருந்தன. இவற்றை உவே.சா இளமையிலேயே கற்றுக் கொண்டார். பாடம் கற்றுக்கொண்ட விதத்தை உவேசா இப்படிச் சொல்லுகிறார்
“கிருஷ்ண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள். அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருஷ்ண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.
அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும் என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.”
ஏழாம் வயதில் தமிழ் மீது அவருக்கு மோகம் வந்தது...
ஒருநாள் காட்டுமன்னார் பெருமாள் ‘வீரநாராயணபுரத்துக்கு வாரும்’ என்று கனவில் சொல்ல, நாதமுனிகளும் யமுனைத் துறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு பல திவ்ய தேசங்களைச் சேவித்துவிட்டு மீண்டும் வீரநாராயணபுரத்துக்குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
அங்கே இருக்கும் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கும்போது ஒரு நாள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை) சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மன்னார் கோயிலுக்கு வந்து பெருமாள் முன்பு நம்மாழ்வார் பாசுரமான ‘ஆராவமுதே...’ என்கிற திருவாய்மொழியின் பாசுரங்களைச் சேவிக்க (பாட) செந்தமிழில் தேன் போன்ற அர்த்தங்களை நாதமுனிகள் சுவைக்கத் தொடங்குகிறார். ஆனால் வந்தவர்கள் பத்து பாசுரங்கள் பாடிய பிறகு ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று முடிக்க, நாதமுனிகள் ஆழ்வாரின் தித்திக்கும் தமிழ்ப் பாசுரத்துக்கு அடிமையாகி “ஆயிரத்துள் இப்பத்தும் என்கிறீர்களே அப்படியானால் இப்பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க...
உ.வே.சாமிநாதையர் ஏழாம் வகுப்பில் சடகோபையங்காரிடம் தமிழ் கற்றார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்...
“எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே.”
சிறுது சிறிதாக ஊட்டிய தமிழ் அமுதை, சுவையை அவர் வாழ்நாள் முழுவதும் தேட வைத்தது. உ.வே.சா கூட ஒரு காலத்தில் எட்டுத்தொகையை ஏட்டுத்தொகை என்றுதான் படித்துள்ளார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஐம்பெரும்காப்பியங்கள் என்று தெரியுமே தவிர அக்காப்பியங்கள் என்னென்ன என்று தெரியாது. அக்காலத்தில் கோயில்களிலும், மடங்களிலும், சிலரின் வீடுகளிலும் ஓலைச்சுவடிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் அவை முடங்கிக் கிடந்தன.
“எங்களுக்கு இந்த பத்து பாசுரங்கள் மட்டும் தான் தெரியும்.. வழி வழியாக இதை நாங்கள் சொல்லுகிறோம்.”
வருத்தத்துடன் நாதமுனிகள் “அந்தப் பத்து பாசுரங்களையும் மீண்டும் ஒரு முறை சேவியுங்கள்” என்று விண்ணப்பிக்க அவர்கள்,
ஆரா-அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே* நீராய் அலைந்து, கரைய உருக்குகின்ற நெடுமாலே!* சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை* ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
என்று ஆரம்பித்து
...
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!* ஆரா அமுதாய்! அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!* தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்!* உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்* கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்* குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
என்று முடிக்க முதல் பாசுரத்தில் ‘திருகுடந்தை’ என்ற சொல்லும் ‘குருகூர் சடகோபன்’ என்ற சொல்லும் அவர் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்தன. திருகுடந்தைக்கு என்ற கும்பகோணத்துக்குப் புறப்பட்டார்.
1887ல் சீவகசிந்தாமணியை ஆராய்ந்தபோது அதில் பல மேற்கோள்கள் கிடைத்தன. எல்லாம் பல தமிழ் நூல்கள். பத்துப்பாட்டு என்ற ஒரு நூல் உண்டு என்று அப்போதுதான் உ.வே.சா அவர்களுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆவல் உண்டாகியது. கும்பகோணத்திலிருந்து பரம்பரை வித்துவான்களுடைய வீடுகளைத் தேடி திருநெல்வேலி பயணத்துக்குத் தயாரானார். தந்தையிடம் சொன்னதற்கு “சிரவணத்துக்கு இங்கே இருக்க வேண்டும்... இப்பொழுது போக வேண்டாம்” என்று தடை போட்டார். சிரவணத்தைக் காட்டிலும் பத்துப்பாட்டு அவருக்குப் பெரிதாக இருந்தமையால் தந்தையிடம் தக்க சமாதானம் சொல்லி திருநெல்வேலிக்குப் புறப்பட்டார்.
இந்தக் காலத்தில் இருப்பது போல, உணவு, தங்கும் இடம், வண்டிகள் என்ற எந்த வசதிகளும் இல்லாத, ஏன் சாலைகள் கூட இல்லாத, காடும் மேடுகளும் கடந்து கும்பகோணம் வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அங்கே திருகுடந்தை கோயிலுக்குச் சென்று ஆராவமுதனைச் சேவித்து அங்குள்ளவர்களிடம் இந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடிக்காட்டி, மீதம் உள்ள 990 பாசுரம் இங்கே யாருக்காவது தெரியுமா என்று கேட்க, அவர்கள் “எங்களுக்கும் இந்தப் பத்து பாசுரம்தான் தெரியும்” என்றபோது நாதமுனிகள் ‘குருகூர் சடகோபன்’ என்ற வார்த்தையில் உள்ள திருக்குருகூர் நோக்கி நடக்கத் தொடங்கினார்... பல நாட்கள் நடந்த பின் அவர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார்.
இரவு எட்டு மணிக்கு ஒரு தகர பெட்டியுடன் உ.வே.சா ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஒற்றை மாட்டுவண்டியில் வண்டிக்காரனுடன் பேசிக்கொண்டே சென்றார். போகும் வழியில் வண்டி எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்து அவர் மீது பெட்டி விழ.. தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்துவிட்டு ஸ்டேஷன் நோக்கி நடக்கத் தொடங்கினார். நல்லவேளையாக அங்கே புகைவண்டி கிளம்பாமல் நின்றுகொண்டிருக்க அதில் ஏறினார்.
நடுராத்திரி தஞ்சாவூர் வரும்போது ஒரு காட்டில் வண்டி நிற்க, ரெயில்வே அதிகாரிகள் உ.வே.சா அவர்களைத் தூக்கக் கலக்கத்தில் எழுப்பி, முன்பிருந்த வண்டியில் தீப்பிடித்துவிட்டது, அதனால் வண்டிகளைக் கழற்றிவிட வேண்டும்.. வேறு வண்டியில் ஏறிக்கொள்ளச் சொல்ல... மறுநாள் காலை திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார்.
ஆழ்வார் திருநகரி வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் கோயிலுக்குச் சென்று பொலிந்த நின்றபிறானையும் அங்கே இருக்கும் பெரியோர்களைச் சேவித்து திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்கள் பற்றி விசாரிக்க,
“கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் எங்களுக்குத் தெரியாது...” என்றார்கள்.
“அடடா... அடியேன் இதைத் தேடிக்கொண்டுதான் இங்கே வந்தேன்..”
“இங்கே நம்மாழ்வார் (சடகோபன்) சிஷ்யர் மதுரகவியாரின் வம்சத்தவர் ஒருவர் இருக்கிறார்.. நீங்கள் எதற்கும் அவரைக் கேட்டுப்பாருங்கள்.”
“யார் அவர்... எங்கே இருக்கிறார்..?”
“அவர் திருநாமம் பராங்குசதாஸர்... “ என்று அவர் இருக்கும் இடத்தைக் காண்பிக்க, நாதமுனிகள் பராங்குசதாஸரைத் தேடிச் சென்றார்.
திருநெல்வேலியில் கனகசபை முதலியார் ஸ்ப்ஜட்ஜாக இருந்தார். அவர் உ.வே.சா அவர்களுக்குப் பழக்கமானவர். ஏடு தேடி வரும் விஷயத்தை அவருக்குக் கடிதம் மூலம் முன்பே அனுப்பியிருந்தார் உவேசா. அவர் வீட்டை அடைந்தபோது “உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதி தபாலுக்கு அனுப்ப இருந்தேன்... உங்களிடம் சொல்ல வேண்டியவற்றை இந்தக் கடித்ததில் எழுதியிருக்கிறேன்” என்று கடித்ததைக் கொடுக்க, அதில்
“நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச் சுவடிகள் விஷயத்தில் உதவி செய்ய இயலாதவனாக இருக்கின்றேன். இளமை முதற்கொண்டு என்னுடைய நண்பராயுள்ள ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிகள் வேண்டுமென்று எழுதியிருந்தார்கள். நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன். தங்களுக்கு வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகத்தையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பக்கங்களில் வந்து தேடிச் சிரமப்படவேண்டாம்.”
இதைப் படித்த உ.வே.சா முதலியாரை நோக்கி “மெத்த ஸந்தோஷம். நீங்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந்தேன்... இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பிரபுக்களும், வித்துவான்களும் இருக்கின்றார்கள். அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள். ஆதலால் நான் போய் வருகிறேன்” என்று கைலாசபுரத்தில் இருந்த வக்கீல் அன்பர் ஸ்ரீ.ஏ.கிருஷ்ணசாமி ஐயர் வீட்டுக்குச் சென்றார். அவர் “நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய முதலியாரென்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கின்றார். அவருக்கு ஒரு கடிதம் எழுதித் தருகின்றேன்” என்று அவர் உவேசா அவர்களை ஆழ்வார் திருநகரிக்குச் அழைத்துச் சென்றார். அங்கே...
நாதமுனிகள் பராங்குசதாஸரை தேடிச் சென்று அவரிடம் திருவாய்மொழி பற்றி விசாரிக்க, “திருவாய்மொழியும், மற்ற பிரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்துவிட்டன. எங்களுடைய பரமாசாரியாரான ஸ்ரீமதுரகவிகள் நம்மாழ்வார் குறித்து ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதினோரு பாசுரங்களை அருளியுள்ளார். அதுதான் எங்களுக்குத் தெரியும்.”
இன்னொரு விஷயம் என்று பராங்குசதாஸர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது...
உ.வே.சா லஷ்மண கவிராயரென்று ஒருவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும் இலக்கணங்களும் பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்து பிரித்துப் பார்த்தபோது தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை.
லஷ்மண கவிராயர் “எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவியார் தம் புருஷர் இறந்தவுடன் சொந்த ஊருக்குப் போகும்போது இங்கிருந்து சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்” என்றார். “பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு போயிருக்க வேண்டும்” என்றார். அவர் மேலும் “ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார். அவருக்கு எனக்கும் இப்பொழுது சண்டை. என்னுடைய வீட்டிலிருந்து வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்துவிட்டான்.அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்திவிட்டேன்” என்றார்.
உ.வே.சா “எனக்காக உங்கள் மாமனாரிடம் விரோதம் பாராட்டாமல், தமிழுக்காகக் கேட்டு வாங்கி வாருங்கள்” என்றபோது, கவிராயரும் “சரி” என்று ஒப்புக்கொண்டார். இரவு அவர் வீட்டில் திண்ணையில் சோகமாக உ.வே.சா உட்கார்ந்து, சில ஸ்ரீவைஷ்ணவர்கள் சொன்ன பழைய உரைகளைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது அவர் மனம் அதில் ஈடுபட முடியவில்லை. அவர் மனம் முழுக்க பத்துப்பாட்டு அகப்படவில்லையே என்ற கவலையில் இருந்தது. அந்த சமயம்...
கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற பாசுரத்தை நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரத்துக்கு அடியில் அவரை தியானித்து, பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார், அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றார். உடனே யோகத்தில் வல்லவரான நாதமுனிகள் சடகோபனை தியானித்து பாசுரங்களை பன்னிரண்டாயிரம் முறை சேவித்து (சொல்லி) முடித்தார். அப்போது...
திருவீதியில் பெருமாளும் நம்மாழ்வாரும் உற்சவத்துக்கு எழுந்தருளியபோது உ.வேசா அவர்கள், பெருமாள், நம்மாழ்வாரை தரிசனம் செய்து இவ்வாறு எழுதியிருக்கிறார்.
“அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து “ஸ்வாமி! வேதம் தமிழ் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூல் ஒன்றைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு நான் பட்ட சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், ‘இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்கனம் பிராத்தனை செய்தேன்.
பெருமாளும் ஆழ்வாரும் கடந்து செல்ல நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். கோயில் பிரசாதம் என்று நினைத்தேன். ஆனால்...
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் காட்சி தந்து “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, அதற்கு நாதமுனிகள் “திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் வேண்டும்” என்று கேட்க, ஆழ்வாரும் அவருக்கு “தந்தோம்” என்று திருவாய்மொழி மட்டும் அல்லாமல் மற்ற ஆழ்வார்களின் அருளிசெயல்களையும் அதன் அர்த்தங்களையும் அவருக்குத் தந்தருளினார். அதை நாதமுனிகள் தொகுத்து, இசை அமைத்து இன்றும் ஸ்ரீவைஷ்ணவக் கோயில்களிலும், இல்லங்களிலும் பிரபந்தம் சேவிக்கப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் ஸ்ரீமந் நாதமுனிகள்.
கவிராயர் “இந்த புஸ்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்லி வாங்கிவந்தேன்” என்று கூறி, மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.
உ.வேசா அதனைப் பிடுங்கிப் பார்த்தபோது, நிலாவின் ஒளியில் சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் கண்ணில் பட, அவருக்கு உண்டான சந்தோஷத்தை விவரிக்க வேண்டுமா? அன்றிரவு தூக்கம் இல்லாமல் மறுநாள் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து நன்றியைக் கூறி, மேலும் தான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார். இன்று பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று நாம் படிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இந்த தமிழ்த் தாத்தாதான்.
உதவிய நூல்கள்: நிலவில் மலர்ந்த முல்லை, என் சரித்திரம், சுவடிப்பதிப்பின் முன்னோடிகள், ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரம் நூல்கள்.
- சுஜாதா தேசிகன் 27.02.2019 சுஜாதா நினைவு தினம் நன்றி: வலம் பிப்ரவரி 2019 பிரசுரம்

Comments

  1. I am still crying after reading this. Such hard earned tamil has been lost somewhere. So many sacrifices by many people like U.Ve.Sa thatha has not been properly utilized by our tamil community. Thanks to Udayavar, atleast we have Nalayira Arulicheyal with us and still being recited in temples. Coming to the way this has been written, it was like a Maniratnam movie which would show present and past sequentially. Good one and well thought.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    திரு உவேசா அவர்கள் தமிழுக்காக பட்ட சிரமங்களை தங்கள் கட்டுரை மூலம் கண்டபோது கண்கலங்கி விட்டேன்.தமிழ் வாழும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.நல்ல தகவல்.
    நாதமுனி சுவாமிகள் பற்றியும் நல்ல பல தகவல்கள் அறியப்பெற்றேன்.
    பொ.மு, பொ யு என்பவற்றின் விரிவாக்கம் என்னவென்று எனக்கு தெரியாததால் தயை செய்து தெரியப்படுத்தினால் மிக்க உதவியாயிருக்கும்.நன்றி. ஜனார்த்தனம்.

    ReplyDelete
    Replies
    1. விரிவாக இங்கே இருக்கிறது http://noolveli.com/detail.php?id=793
      “.....தவிர கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றாத பல நாடுகள் ‘நாங்கள் ஏன் கிறிஸ்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளைக் கணக்கிடவேண்டும்?’ என்று யோசித்தன. இதன் விளைவாக பி.சி.இ. – சி.இ.க்கு புதிய விளக்கங்கள் பிறந்தன. இவற்றில் உள்ள சி (c) – என்ற ஆங்கில எழுத்துக்கு கிறிஸ்ட் (christ) என்பதற்கு மாற்றாக காமன் (common - பொது) என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பி.சி.இ. (Before common era – பொது யுகத்துக்கு முன்னால், பொ.யு.மு.) – பி.சி. (common era – பொது யுகம், பொ.யு.) – என்பதாக இந்தப் புதிய விளக்கங்கள் கட்டமைக்கப்பட்டன. இந்த காமன் (common) என்ற ஆங்கில வார்த்தையின் பொருளாக ‘அனைவரும் ஏற்றுக் கொண்ட, பொதுமைப்படுத்தப்பட்ட’ - என்பது இங்கு கொள்ளப்படுகிறது.”

      Delete
  3. Very good and informative article. Pleasant presentation. Lessons for stude should be like this.

    ReplyDelete
  4. I needed to thank you for this very good read!! I certainly loved
    every bit of it. I have got you bookmarked to look at new stuff you post…

    ReplyDelete
  5. ஓம்நமோந்ருஸிம்ஹ ‼️ அசஞ்சலமான வைராக்யத்துடன் ஆழ்வார் ஆண்டவனை ப்ரார்த்தித்தால் நல்லவரகள் மூலமாக நன்மைமிக்க காரியங்கள் நடந்து நம்வாழ்க்கைக்கு உதவும்‼️மாரி மழை பெய்து உலகை வாழவைக்கட்டும்☁️☁️❗❗🌴🌿

    ReplyDelete
  6. வணக்கம்.நாதமுனிகள் எழுதிய யோக நூல் தற்பொழுது கிடைக்கவில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.திரு kirushnamaacchaariyaar தன்னுடைய யோக மந்திரம் naathamunikaludaiya யோக நூலை பின்பற்றியது எனக்கூறியுள்ளார்.இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete

Post a Comment