Sunday, January 29, 2017

ஸாளக்கிராமத்தை கடித்த குழந்தை

பக்தி என்பது தமிழ் வார்த்தை கிடையாது; சமஸ்கிருத வார்த்தை. ஆழ்வார் பாடல்களிலும் சங்கப் பாடல்களில் பக்தி என்ற வார்த்தையே கிடையாது. திருமங்கையாழ்வார் ‘பத்திமை’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். (பெரிய திருமொழி). பத்திமை என்றால் அன்பு, காதல்! உண்மையான பக்தி.

1925-ல் பிரசுரமான ஒரு தமிழ் அகராதியில் பக்தி=பத்தி என்ற குறிப்பு உள்ளது. பக்தி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘மிஸ்டிஸிசம்’ (Mysticism) என்று சொல்லுவார்கள். (பக்தர்கள் - Mystics).

மிஸ்டிஸிசம் என்பதற்கு ஆங்கில அகராதியில் விளக்கம் இப்படி இருக்கிறது “One who seeks by contemplation or self-surrender to obtain union with or absorption into the Deity, or who believes in spiritual apprehension of truths beyond the understanding”

தமிழில் “இறைப் பொருளினிடம் தம்மையே அடைக்கலமாகத் தந்து பக்தி அல்லது தியானம் மூலம் இறையனுபவத்தைப் பெறுபவர் என்றும் சாதாரண அறிவிற்கு அப்பாற்பட்டதாகிய ஆன்மீக உண்மைகளை உணரமுற்படுபவர்” என்று விளக்கம் சொல்லலாம். ( நன்றி: அ.ச.ஞானசம்பந்தன் )

நிச்சயம் மேலே சொன்ன ஆங்கிலம், தமிழ் இரண்டு விளக்கமும், இரண்டு மூன்று முறை படித்தால்தான் புரியும். ஆனால் பக்தி அவ்வளவு கஷ்டம் இல்லை. மேலே சொன்ன இந்த அகராதி விளக்கம் ஏன் கஷ்டமாக இருக்கிறது? நாம் அதைப் படிக்கிறோம். படித்தவுடன் அதை நம் அறிவு புரிந்துகொள்ள முயல்கிறது. ஆனால் பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.

முதலில் அறிவு வேறு; உணர்வு வேறு என்பதை நன்றாகப் புரிந்துககொள்ள வேண்டும். அறிவில் மலர்வது தத்துவம். தத்துவம் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். பலர் நிறைய படித்துவிட்டு வறட்டு தத்துவங்களைச் சொல்லுவார்கள். பக்தி கலக்காத தத்துவங்கள் வெறும் வேதாந்தங்கள். ஒன்றுக்கும் பயன்படாது. நிறைய படித்துவிட்டால் “கடவுள் இருக்கிறாரா?” என்று கூட கேட்கத் தோன்றும். பக்தியைப் புரிந்துகொள்ள அறிவு தேவை, ஆனால் பக்திக்கு அறிவு தேவை இல்லை.

ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பிரபந்தங்கள் என்று பலவற்றையும் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று தான். பிரம்மத்தை, பரம்பொருளை அடைய கர்மயோகம், ஞானயோகம் காட்டிலும் பக்தியோகமே எளிமையான வழி. முற்றிய பக்தியே ஞானம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை.

பக்தி என்பது என்ன ? கேள்வி கேட்காத நம்பிக்கை உருவாக, என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி தான் இருக்கிறது. நாம் அவனிடம் பக்திகொள்ள வேண்டும். அதற்கு அவன் அருள் வேண்டும். அவன் அருளின்றி அவனுக்கு பக்தி செலுத்தக் கூட நம்மால் முடியாது.

“உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி – நலம் அருளினன் எவன்? அவன்”

இதில் இரண்டாவது வரியைப் பாருங்கள் “மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்” என்கிறார். அதாவது அவன் அருளினால் தான் பக்தி கிடைக்கும் என்கிறார். திட நம்பிக்கை என்பது பக்தியில் மிக முக்கியமானது. இந்த திட நம்பிக்கையை சிலர் குருட்டு நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று சொல்லுவார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே.

சின்ன குழந்தைக்கு பெருமாள் பிரசாதம் சாப்பிட்ட கதையை சொல்லும் போது கவனித்துப்பாருங்கள். அதை கேள்வி கேட்காமல் அப்படியே நம்பும். அதுவே அதுக்கு கொஞ்சம் வயசான பிறகு கம்ப்யூட்டர் மௌஸ் உபயோகப்படுத்தும் போது சொல்லிப்பாருங்கள். குழந்தை பிரசாதம் கொடுத்ததை பெருமாள் சாப்பிட்டாரா? என்ற சின்ன சந்தேகம் வந்து, கேள்வி கேட்ட ஆரம்பிக்கும். இதனால் தான் இந்த மாதிரி கதைகள் எல்லாம் குழந்தைகளுக்கான பக்திக் கதைகள் என்று முத்திரைக்குத்தி ஃபேண்டஸி வகையில் ஹாரிபாட்டருடன் சேர்த்துவிடுகிறோம்.

சரி எதெல்லாம் பக்தி ?

ஒன்பது விதமான பக்தி இருக்கிறது என்கிறார்கள். அர்ச்சனை செய்வது, பூ சமர்பிப்பது, பாசுரம் சேவிப்பது, ஆலவட்டம்(விசிரி) வீசுவது, கோலம் இடுதல், மொழுகுதல், திருவிளக்கு ஏற்றுதல், பிரதக்‌ஷனம், ததியாராதனம், நமஸ்கரித்தல், பெருமாளை நண்பனாக பாவித்தல் என்று இவை எல்லாமே பக்தி தான்.


”காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே”
(திருவாய்மொழி 9-10-1 )
என்கிறார் நம்மாழ்வார்.  காலையும், மாலையும் தாமரைப் பூவை சமர்பித்து, நீங்கள் உங்கள் பாவம் தொலையும்படி வணங்குங்கள் என்கிறார். bottom line - பக்தி சுலபம்.

ஸ்ரீஉடையவர் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் குழந்தைகள் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பெரிய பெருமாளின் சயனத் திருக்கோலத்தைக் கோடுகளால் வரைந்து, மண் குவியல்கள் கொண்டு மண்டபங்கள், ’நீள் மதில் சூழ்’ திருவரங்கமாக மானசீகமாக உருவாக்கி, “நீ தான் அர்ச்சகர், நீ தான் அரையர்” என்று விளையாடிக்கொண்டு, ஈரமணலை கொட்டாங்காச்சியில் எடுத்து பெருமாளுக்கு அமுது செய்விப்பது போல காட்டி அர்ச்சகர்கள் அழைப்பது போன்றே “அருளப்பாடு, திருப்பாவை ஜீயர்” என்றனர் சிறுவர்கள்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ரீரமானுஜர் அங்கே பெருமாள் எழுந்தருளியிருப்பதாகவே நினைத்தார். சிறுவர்களின் பாகவத கோஷ்டியில் தாமும் சேர்ந்துக்கொண்டு, தன் திரிதண்டத்துடன் கீழே சாஷ்டாங்கமாக சேவித்தார்.  சிறுவர்கள் கொடுத்த மணல் பிரசாதத்தை ஏற்றுக்கொண்டார்.

ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், திருவாய்மொழி, திருப்பாவை என்று கரைத்துக் குடித்தவரின் கேள்வி கேட்காத பக்தி.

பூஜை செய்யும் குழந்தை
இந்த படத்தில் இருக்கும் குழந்தையைப் பாருங்கள் ஒரு தட்டு ஸ்டாண்ட், தட்டை சொறுகும் இடத்தில் பெருமாள் படம் அதன் மீது சின்ன துளசி, இடது கையில் மணி, வலது கையில் கற்பூர ஆர்த்தி. நாளடைவில் அந்த படம் (நரசிம்மர் படம்) தொலைந்துபோனது.

அந்த குழந்தைக்கு விபரீத ஆசை ஒன்று வந்தது. பாட்டி தினமும் சேவிக்கும் அந்த பன்னீர் திராட்சை போல இருக்கும் ஸாளக்கிராம மூர்த்தியை கடித்து பார்க்க வேண்டும் என்று.  தினமும் பாட்டியிடம் கேட்டுக்கொண்டிருக்கும்

“பாட்டி இது என்ன ?”
“ஸாளக்கிராம்டா அது”
“நான் தொட்டு பார்க்கலாமா ?”
“நீ குளித்துவிட்டு தொடு”
குளித்துவிட்டு தொட்டு பார்த்து கையில் எடுத்தது.
”பாட்டி திராட்சை மாதிரி இருக்கு கடிச்சு பார்க்கட்டா ?”
“வாயில் எல்லாம் வைக்கக் கூடாது ..அது பெருமாள்”
“ஒரு வாட்டி பாட்டி அப்பறம் அலம்பி வைச்சுடலாம்”
தினமும் கேட்கிறதே என்று பாட்டி ஒரு நாள்
“சரி ஒரு தடவை தான் இன்னிக்கு மட்டும் தான்” என்று சொன்னவுடன் ஸாளக்கிராமத்தை வாயில் கடித்தது அந்த குழந்தை. ”ரொம்ப ஹார்டா இருக்கு” என்று அலம்பி பெட்டியில் வைத்தது.

சிறுவனுக்கு கிடைத்த நரசிம்மர் படம்
பல வருடங்களுக்கு பிறகு அவனுக்கு சின்ன வயதில் ஆராதித்த நரசிம்மர் படம் மீண்டும் கிடைக்க,  சந்தோஷப்பட்டான். சிறுவயதில் ஸாளக்கிராம மூர்த்தியை கடித்தது நினைவுக்கு வந்து, கடித்துவிட்டேனே என்று வருந்தினான்.


சற்று வளர்ந்த பின் அவனுக்கு தென்கலை, வடகலை பேதம் பற்றி தெரியவந்தது. கோஷ்டியில் பேதம், யானைக்கு திருமண் சண்டை, வடகலைக் காரர்கள் மணவாள மாமுனிகள் சன்னதிக்கும், தென்கலை வேதாந்த தேசிகர் சன்னதிக்கும் செல்வதில்லை. பலர் வீட்டில் நேற்று வந்த ஏதேதோ சாமியார் படங்கள் எல்லாம் மாட்டி பூஜிக்கிறார்கள் ஆனால் மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர் போன்ற பூர்வாச்சாரியர்களின் படங்களை வைக்க யோசிக்கிறார்கள்.

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகன், ஸ்ரீமணவாள மாமுனிகள் கோஷ்டி

ஆழ்வார்கள் கோஷ்டி மாதிரி, ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் மூவரையும் ஒரே கோஷ்டியில் பார்க்கவே முடியாதா என்று நினைத்துக்கொண்டான். சில நாளுக்கு முன் ஸ்ரீரங்கத்துக்கு சென்ற போது அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. உடனே நிறைவேற்றினான்.

ஸ்ரீரங்கத்தில் மணவாள மாமுனிகளை சேவித்துவிட்டு, தன் அகத்துக்கு சின்ன மணவாள மாமுனிகள் மூர்த்தியை தன் அகத்துக்கு எழுந்தருளப்பண்ணி,  உபதேச ரத்தின மாலை சேவித்தான்.

”ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூரும்” என்கிறார் மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் ஆசை இருந்தால் போதும்.


நாற்பது வருடம் முன் கீதாசார்யன் பத்திரிக்கையில் சாண்டில்யன் எழுதிய ’அவன் உகக்கும் ரஸம்’ என்ற சின்ன கதை அவனுக்கு படிக்க கிடைத்தது. அதை படித்த பின் ஒரு தெளிவு கிடைத்தது.

அவன் உகக்கும் ரஸம்

ரங்கநாதன் சந்நிதிக்குச் செல்லும் படிகளொன்றில் உட்கார்ந்த வண்ணம் வயதான அரையர் ஒருவர் திருவாய் மொழிப் பாசுரங்களை மெல்லிய குரலில் இசைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிரண்டும் பார்வை இழந்து இடந்தன. எத்தனையோ நல்லவர் இருப்பினும் சதா வெற்றிலை போடும் ஒரு பழக்கம் மட்டும் அவருக்கு இருந்ததால் மடியில் ஒரு வெற்றிலைச் செல்லமும் கிடந்தது. அந்த வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலைப் பாக்குடன் ஒரு ஸாளக்கிராமத்தையும் வைத்திருந்தார் அரையர், பாக்கைத் தேடி பெட்டியைத் தடவினார் ஒருமுறை. ஸாளக்கிராமம் கிடைத்தது. அதைப் பாக்கென்று நினைத்து வாயில் போட்டுக் கடித்துப் பார்த்தார். ஸாளக்கிராமம் என்று தெரிந்ததும் அதை வாயிலிருந்து எடுத்து மேல் வேஷ்டியில் துடைத்து மீண்டும் பெட்டியில் போட்டுவிட்டார். பிறகு பாக்கொன்றை எடுத்து வாயில் போட்டு வெற்றிலையையும் சுண்ணம் தடவி கிழித்து மென்று சுவைக்கலானார்.
இது நடப்பது முதல் தடவையல்ல. தினமும் பலமுறை நடந்த விபரீதந்தான். இதை ஒரு மிக வைதீக வைஷ்ணவர் நீண்ட நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார், அரையர் ஸாலக்கிராமத்துக்கு இழைக்கும் அநாசாரத்தையும் அபசாரத்தையும் அவரால் பொறுக்க முடியவில்லை. ஆகவே ஒரு நாள் ஸ்வாமி தினம் பெருமாளை வாயில் போட்டு எச்சில் பண்ணுகிறீரே. இது நியாயமா?" என்று கேட்டார்.
”கண் தெரியவில்லை” என்றார் அரையர்,
அப்படியாயானால் பெருமாளே என்னிடம் கொடுமே. நான் ஆசாரமாக வைத்து ஆராதனம் செய்கிறேன்" என்றார்.
"தாராளமாக எடுத்துப் போம்" என்று ஸாளக்கிரா
மத்தை எடுத்து அந்த வைதிகரிடம் கொடுத்து விட்டார் அரையர்,

அன்று அந்த வைஷ்ணவப் பிராம்மணர் வீட்டில் ஒரே தடபுடல் சாளக்கிராமத்தை அவர் தனது கோவிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணினார். திருமஞ்சனம் கண்டருளப் பண்ணி, புளியோதரை, தத்தியோதனம் முதலிய பிரசாதங்களேயெல்லாம் அமுது செய்வித்தார். சேவை, சாற்று முறைக்கு வேறு இரண்டு மூன்று ஸ்வாமிகளையும் எழுந்தருளப் பண்ணி அதையும் விமர்சையாகச் செய்து முடித்தார். அன்று நிம்மதியாகப் படுத்தார் அந்த வைதிகர்.
அவர் நல்ல துயில் கொண்டதும் பெருமாள் அவர் சொப்பனத்தில் வந்து 'நீ எதற்காக என்னை அரையர் வெற்றிலப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தாய்' என்று கேட்டார் கோபத்துடன்
'ஸ்வாமி அங்கு உமக்கு அபசாரம் நடக்கிறது. அதனால் எடுத்து வந்தேன்' என்றார் அந்த ஸ்வாமி,
"என்ன அபசாரம்?' என்று பெருமாள் கறுவினர்.
"தேவரீரை தினம் பத்து தடவையாவது எச்சில் செய்கிறார் அரையர்' என்று சொன்னுர் அந்த ஸ்வாமி.
”அட பைத்தியக்காரா அது திருவாய்மொழி சொல்லும் வாயடா. தினம் அந்த ரஸத்தை சிறிது நேரமாவது நான் அனுபவிக்கிறேன். அதிலிருந்து என்னை பிரிந்து இந்த மரப் பெட்டியில் ஏன் அடைத்து வைத்திருக்கிறாய்? உடனே கொண்டுபோய் அரையர் பெட்டியில் என்னை சேர்த்து விடு" என்றார் பெருமாள்.

சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்து உட்கார்ந்தார் வைதிகர். பகவான் திருவுள்ளத்தை நினைத்து நினைத்து உருகினார். ”திருவாய்மொழி அனுசந்திக்கும் நாவே நாவு, அதில் ஊறும் நீரே அமுதம் அதுவே அவன் உகக்கும் ரஸம்" என்று சொல்லிக் கொண்டார்.
மறுநாளே பெருமாள் பழையபடி வெற்றிப்பெட்டிக்குள் பாக்குடன் கலந்து கிடந்தார். அரையர் கையும் ஒருமுறை பாக்கைத் தேடி பாக்குக்குப் பதில் ஸாளக்கிராமத்தை வாயில் போட்டு மீண்டும் எடுத்து துணியில் துடைத்து பெட்டியில் சேர்த்தது. வாய் திருவாய்மொழியை மெல்ல இசைத்தது.

சாண்டில்யன், கீதாச்சாரியன், நவம்பர் - 1978


பிகு: நீங்கள் படிக்கும் போது நடுவில் நினைத்தது சரி தான். அந்த குழந்தை அடியேன் தான்.


29.1.2017
ஸ்ரீமணவாள மாமுனிகள் எங்கள் அகத்துக்கு எழுந்தருளிய நாள்

Wednesday, January 18, 2017

நம் கூரத்து ’ஆழ்வான்’

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது கூரத்தாழ்வான் சன்னதியில் ‘கூரத்தாழ்வார்’ என்று இருந்ததை ‘கூரத்தாழ்வான்’  என்று மாற்றியிருந்தார்கள். ஸ்ரீராமானுஜருடைய பிரதான சீடர் கூரத்தாழ்வானை, கூரத்தாழ்வார் என்று மரியாதையாகக் கூப்பிடாமல் ஒருமையில் ’கூரத்தாழ்வான்’ என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பார்கள்.

இதற்குக் காரணம் என்ன ? என்று கேட்டால், கூரத்தாழ்வார் என்பவர் அவர் திருதகப்பனார் அதனால் வேறுபடுத்திக்காட்ட இவரைக் கூரத்தாழ்வான் என்று அழைக்கிறார்கள் என்று பலர் கூறுவர். சில காலம் முன்புவரை, நானும் அதே போல தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஒரு முறை கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்றிருந்தேன். அங்கே சன்னதியில் கூரத்தாழ்வான் வாழ்க்கை சரித்திரம் படமாக இருந்தது அதில் ஏன் ஆழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிந்துகொண்டேன்.

ஆளவந்தார் தொடக்கமாக ஸ்ரீராமானுஜர் காலம்வரை, திவ்வியப் பிரபந்தத்திற்கு வாய்
மொழியாகவே உரைகள் இருந்தது. வியாக்கியானங்கள் எல்லாம் ஸ்ரீராமானுஜருக்கு பிறகு தான் எழுதப்பட்டது. ஸ்ரீராமானுஜர் போலவே அவர் சீடர்களும் திவ்யபிரபந்தத்தை முழுமையாக சுவாசித்தார்கள். தாங்கள் சுவைத்த திவ்யபிரபந்தத்தின் உள் அர்த்தங்களைப் பலருக்கு நன்கு விளங்கு படி காலட்சேபம் செய்வதில் வல்லவர்கள்.

இதற்குச் சான்றாக ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த உரையாசிரியர்கள் தங்கள் வியாக்கியானங்களில் ஆங்காகே பூர்வாசாரியார்களான கூரத்தாழ்வான் இப்படிக் கூறுவார், பட்டர் இப்படிச் சொல்லி விளக்குவார் என்ற ஈடு போன்ற நூல்களில் குறிப்புக்களாக பார்க்கலாம். ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வான் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்குக் குறிப்பாக நம்மாழ்வார்  திருவாய்மொழிக்கு ஆழ்வான் எளிமையான விளக்கங்களைச் சொல்லி புரியவைப்பாராம்.

“சிறுமா மனிசராய் என்னை ஆண்டார்” என்ற பாசுரத்தில் “சிறு - மா” அதாவது “சிறுமை - பெருமை” என்று ஒன்றுக்கொன்று முரண் பட்ட குணமாக இருக்கும் இரண்டும் எப்படி ஒருவருக்கு அதுவும் பெருமாளுக்கு இருக்க முடியும் ? என்று ஆழ்வானுடைய திருகுமாரரான(மகன்) பட்டர் கேட்ட போது அதற்குக் கூரத்தாழ்வான் ”ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் போன்றவர்கள் வடிவில்(மேனி) சிறுத்தவர்களாக இருந்தாலும், ஞானத்தால் உயர்ந்தவர்கள் அன்றோ?” என்று விடை சொன்னார்.

பிறகு ஒரு சமயம் ராஜேந்திர சோழன் சதஸ்ஸில் ஆழ்வான் திருவாய்மொழி காலஷேபம் ஸாதித்துக்கொண்டு இருந்த போது ”வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம்” ( 5ம் பத்து 3ஆம் திருவாய்மொழி 7ஆம் பாசுரத்தில்) என்ற பகுதி வந்த போது  ’ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்ற நூறு வயது நிரம்பிய முதியவர் ஒருவர் எழுந்து பாசுரத்தில் “தலையில் வணங்கவுமாங்கொலோ தையாலார் முன்பே” என்று முடிகிறது. நாயகனை நாயகியானவள் தலையால் வணங்குவாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?” என்று கேட்க உடனே கூரத்தாழ்வான் “ஏன் இல்லை, என்று ஸ்ரீராமாயனத்தில் சுந்திரகாண்டத்தில் சீதைப்பிராட்டி அனுமானிடம் செய்தி சொல்லி அனுப்பிய போது ”எனக்காக ராமபிரானைத் தலையால் வணங்கு என்று சொல்லியிருக்கிறாளே” என்று எடுத்துக்காட்டினார்.

இப்பேர்பட்ட கூரத்தாழ்வானிடம் திருவாய்மொழி காலஷேபம் கேட்க வேண்டும் என்று நம் உடையவருக்கு மிகுந்த ஆசை. ஆனால் ஆசாரியரான ஸ்ரீராமானுஜருக்கு காலஷேபம் சொல்ல கூரத்தாழ்வான் இசையவில்லை. எனவே முதலியாண்டான் போன்றவர்கள் ஆழ்வான் காலஷேபத்தைக் கேட்டு அதை ஸ்ரீராமானுஜரிடம் விண்ணப்பிப்பது என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

கூரேசர் திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமான "உயர்வற உயர்நலம் உடையவன்” என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பேசுகிறாரே என்று ஆழ்ந்து அந்த அனுபவத்தில் அப்படியே மயங்கி மோதித்துவிட்டார். இப்படி இவர் மயங்கியதை மற்றவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் தெரிவிக்க அவரும் ஓடி வந்து இது போல தான் “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாசம் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று சொல்லி, நம் கூரத்தாழ்வானும் நம்மாழ்வார் போல் பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு “ஆழ்வான்! ஆழ்வான்! ஆழ்வான்! எழுந்திரும்!” என்றாராம்.

அதனால் தான் அவர் ’ஆழ்வான்’ என்ற பெயருடன், அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.

மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் ’நம் கூரத்தாழ்வான்’ திருநட்சத்திரமான இன்று உங்களுடன் இந்தப் பதிவை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

தை அஸ்தம்
18.1.2017
கூரத்தாவான் திருநட்சத்திரம்.