Tuesday, August 25, 2015

காக்கா

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார்

சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன்.

பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன்.

பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன்.

காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது.

ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம்.

செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராயத் துவங்கினேன்.

முழுவதும் ஆராய்ந்த பின் பீரோ அடியில் ஏதோ கருப்பாக இருந்தது. இங்கிருந்து தான் நாற்றம் வருகிறது என்று டார்ச் அடித்து பார்த்தால் அது எலி இல்லை. ஒரு காக்கா! தலையில்லாமல்.

கொசு கூட வர முடியாத இடத்தில் எப்படி காக்கா என்று திரும்ப வீட்டை சோதித்தேன். சமையல் அறையின் ஒரு பக்கம் இருக்கும் ஜன்னல் வழியாக வெல்கரோவை தள்ளிக்கொண்டு ( ஏதோ துரத்த ) வந்திருக்கிறது. திரும்ப போக வழி தெரியாமல் வீடு முழுக்க அலைந்து செத்து போயிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

காக்காவை கவரில் பார்சல் செய்து வெளியே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, செண்ட், பினாயில், டெட்டால் என்று கைக்கு எது கிடைத்ததோ அதை எல்லாம் கலந்து வீட்டை சுத்தம் செய்த பின் கொஞ்சம் ’ஃபிரஷ் ஏர்’க்கு வெளியே சென்று விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பிய போது வீட்டை சுற்றி ஏகபப்ட்ட காகங்கள். என் தலையை சுற்றி என்று கூட சொல்லலாம். அதில் ஒரு காகம் நான் தான் ஏதோ தப்பு செய்துவிட்டேன் என்று நினைத்து என் தலையை கொத்த ஹிட்ச்காக்கின் "பேர்ட்ஸ்' படம் நினைவுக்கு வர நாற்றமே பரவாயில்லை என்று வீட்டுக்குள் ஓடி வந்துவிட்டேன்.

சரி ஒரு ரிலாக்சேஷனுக்கு பன்பலையை ஒலிக்கவிட்டால் அதில் ஏதோ ”கவிஞர் காக்கா கரையன்” என்று அசட்டுத்தனமான கவிதையை வைரமுத்துவின் மாடுலேஷனில்....பினாயில் நாற்றத்துடன்.

காக்காவை விரட்ட குடை தான் சரியான ஆயுதம் என்று வீட்டை விட்டு அலுவலகம் போகும் போது குடையுடன் சென்று காரில் ஏரிக்கொண்டேன். பக்கத்துவீட்டில் எதுக்கு குடை என்று பார்த்தார்கள்.

மாலை வீடு திரும்பிய போது மீண்டும் காகங்கள் என்னை வட்டமிட்டன.

எப்படி வெல்கரோவை தாண்டி உள்ளே வந்தது என்று யோசித்தேன். வெல்'crow' என்பதாலா ?

Monday, August 17, 2015

ராமானுஜலு உருவான கதை

ராமானுஜலு பற்றியும் எழுதுங்களேன்”...
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்ய கூடாது - பகவத அபச்சாரம்( நாராயணனே நமக்கே பறை தருவான்!), பாகவத அபச்சாரம்.

இதில் பாகவத அபச்சாரம் செய்யவே கூடாது. அந்த அபச்சாரத்தை பெருமாள் கூட மன்னிக்க மாட்டார்.

கூரத்தாழ்வாருக்கு கண்ணிழந்த போது, உடையவர் அவரை பார்த்து
உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்கு கூரத்தாழ்வார் ”யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ?

ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீசூர்ணம் கூட இட்டுக்கொண்டு வெளியே போக வெட்கப்படும் இந்த காலத்தில் நாயுடு சமுகத்தினர் நெற்றி நிறைய திருமண் தரித்துக்கொண்டு கோயிலில் “அங்கே போய் நில்லு” என்று அந்த பாகவதர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் துளிக்கூட Ego இல்லாமல் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் காண்பிக்காமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று யோசித்ததுண்டு.

இதை வைத்துக்கொண்டு எழுதியது தான் ராமானுஜலு கதை. ஸ்ரீராமானுஜர் பாஞ்சஜன்யம் ( சங்கு ) அம்சம் ஆவார். கதையில் நம் ராமானுஜலுவின் அப்பாவின் பெயர் சங்கு கோவிந்தசாமி என்று சின்ன சின்ன விஷயங்களை வைத்தேன்.

இந்த கதையை பிரசுரித்தவுடன் சுஜாதா எனக்கு மெயில் அனுப்பி நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அவர் தயாரித்த டைம்ஸ் இலக்கிய மலருக்கு இதை அவரே தேர்வு செய்து பிரசுரித்தது அவரின் பெருந்தன்மை!

Saturday, August 15, 2015

பெருங்காயம் உருவான கதை

அப்பாவின் ரேடியோ” சிறுகதை பற்றி ஆமருவி தேவநாதன் தன் வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி.
கடைசியில் “இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.” என்று விண்ணப்பம் செய்துள்ளார்.

எழுதலாம். ஆனால் ரொம்ப போஸ்ட்மார்டம் செய்தால் சிறுகதை சுவைக்காது. சுஜாதாவுடன் பழகிய நாட்களில் அவர் எழுதும் சிறுகதைகளை பற்றி என்னிடம் விவரிப்பார். குறிப்பாக விகடனில் எழுதிய ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பற்றியும் அதை ஒட்டி நடந்த உண்மையான சம்பவங்களை பற்றியும் என்னிடம் சொல்லியிருக்கிறார். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியமாக இதை நான் கருதுகிறேன்.

அவர் என்னிடம் அடிக்கடி சொல்லிகொடுத்த விஷயம் “details... details". அது இருந்தால் தான் ஒரு வித கதைகளுக்கு  நம்பகத்தன்மை வரும்.

முதல் விஷயமாக ”பெருங்காயம்” சிறுகதைப் பற்றி.
ஒரு முஸ்லீம் நண்பர் ஸ்ரீவைஷ்ணவர்களை காட்டிலும் பிரபந்தங்களை அழகாக ஒப்பித்தார் என்ற ஒற்றை வரியில் கதை இருப்பதாக தோன்றியது. ஆனால் முஸ்லீம், பிராமணர் பற்றி எழுதுவது கத்தியில் நடப்பது போல. எங்கள் தாத்தா கும்பகோணம் - பாபநாசம் பக்கம் மாளாபுரம் என்ற ஊரில் இருக்கும் அக்கிரகாரத்தில் வீடு. சில வருடங்களுக்கு முன் அதை விற்றுவிட்டாரகள். இந்த இரண்டு விஷங்களை வைத்து கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

அதற்கு நான் தேர்ந்தெடுத்த ஊர் தேரெழுந்தூர். திருமங்கை ஆழ்வார் மங்களாசனம். அந்த ஊருக்கு நான் போனதில்லை. முதல் முறை அங்கே சென்று பெருமாளை செவித்திவிட்டு வந்தேன். அதற்கு பிறகு இரண்டு முறை அந்த ஊருக்கு ரயில், பஸ் என்று சென்று கதைக்காக சுற்றிப்பார்த்து குறிப்பு எடுத்தேன். இதற்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!. பிறகு கதை எழுத ஆரம்பித்து,  முடிவு மட்டும் எழுதாமல் வைத்திருந்தேன். ஒரு நாள் கதையை முடித்துவிடலாம் என்று எழுத ஆரம்பித்த போது மனைவி ”அந்த கதை எழுதுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு பெருங்காயம் வாங்கிக்கொண்டு வாங்க” என்றாள். சட்டென்று எனக்கு அந்த முடிவு கிடைத்தது.

கதை குங்குமத்தில் பிரசுரம் ஆனது.

குங்குமம் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு “சார் உங்க கதை நன்றாக இருக்கிறது ஆனால் சில பகுதிகளை எடிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் சில மத அமைப்புகளிலிருந்து பிரச்சனை வரலாம்” என்றார்கள். “நீங்களே எடிட் செய்துக்கொள்ளுங்கள்” என்றேன். குங்குமத்தில் மிக அழகாக அதை எடிட் செய்திருந்தார்கள். எப்படி எடிட் செய்திருக்கிறார்கள் என்பதும் எழுத்தாளருக்கு ஒரு படிப்பினை தான்.

- * -

ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண்.
"சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?"
"ஆமாம்"
"உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?"
"இல்லை.. திருச்சி"
"ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது"
"கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?"
"ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்லை"
"ஓ.. அப்ப எப்படி படிச்சீங்க... நெட்டிலா?"
"அது எல்லாம் தெரியாதுங்க... எங்க அக்கா படிச்சுட்டு எனக்கு அனுப்பினாங்க"
"உங்க அக்கா எங்கே இருக்காங்க"
"அவங்க பெங்களூரில் டாக்டர்.. அவங்க ஃபிரண்டு படித்துவிட்டு அவங்களை படிக்க சொல்லியிருக்காங்க... அப்பறம் அதை எனக்கு கூரியரில் அனுப்பினாங்க"
"என் போன் நம்பர் எப்படி கிடைத்தது"
"மூன்று நாளா பத்திரிக்கை ஆபீஸுக்கு ஃபோன் செய்து இப்ப தான் கிடைத்தது... "உங்களிடம் போன் செய்து கதை நல்லா இருக்கு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது"
"நன்றி" என்று சொல்வதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.


Wednesday, August 5, 2015

ஸ்ரீஆளவந்தார், திருமங்கை ஆழ்வாருடன் ஒரு நாள்.


31-7-15 ஸ்ரீ ஆளவந்தாருடைய திருநட்சத்திரம்.

ஸ்ரீஆளவந்தார்
நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தொகுத்தளித்த ஸ்ரீமந் நாதமுனிகள் பிறந்த ஊர். அவரது பேரனும் ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன ஆளவந்தார் அவதரித்த ஸ்தலம் காட்டுமன்னார் கோவில். ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று ஆளவந்தாருடைய அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று திடீர் முடிவெடுத்தேன்.

(கடந்த வருடம் ஆளவந்தார் குறித்து எழுதிய சிறு குறிப்பு இறுதியில் இணைத்துள்ளேன்.)

ரயில், பேருந்து, ஆட்டோ என்று எல்லா இடங்களும் ”விண்டோ சீட்” கிடைத்து எங்கே திரும்பினாலும் ‘அப்துல் கலாம்’ கண்ணீர் அஞ்சலியும், வீரவணக்கம் போஸ்டர்களும் கண்ணில் பட்டது.

காட்டுமன்னார் கோயில் குளம்
தனியாகச் சென்ற இந்தப் பயணம் எனக்கு பல உலக விஷங்களைக் கற்றுத்தந்தது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்கு பேருந்தில் சென்ற போது என் பின்இருக்கைகளில் சிலர் வந்து ஏறிக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்த போது ‘உடமைகளை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று உள் மனது எச்சரித்தது. தூங்காமல் கண்விழித்து காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டேன். அவர்களும் கோயிலுக்கு செல்லும் வழியைச் சொன்னார்கள். பக்கத்தில் இருந்த ஏடிமில் செலவுக்கு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்த போது என் பின்இருக்கை நண்பர்களும் என்னைத் தொடர்ந்தார்கள். அவர்கள் என்னை அணுகி “கோயிலுக்கா போகிறீர்கள் ?... நாங்களும் கூட வருகிறோம்” என்றார்கள். வேகமாக நடையைக் கட்டினேன். அவர்களும் என்னைத் தொடர்ந்தார்கள்.

கோயிலுக்கு பக்கம் இருந்த ஒரு மடத்தில் உடமைகளை வைத்துவிட்டு திரும்பி பார்த்தால் திரும்பவும் அதே நண்பர்கள்!

என்னை அணுகி “தேவரீர் திவ்யதேசம் எதுவோ?” என்று ஒரு சின்ன கேள்வி கேட்டு என்னை கீழே சாய்த்தார்கள்.

அவர்களுடன் கோயில் குளத்தில் தீர்த்தாமாடிவிட்டு பஞ்சக்கச்சம், திருமண் தரித்துக்கொண்டு கோயிலுக்கு சென்ற போது ஆளவந்தார் எனக்காகக் காத்துக்கொண்டு இருந்தார். நான் போனவுடன் பெருமாள், நம்மாழ்வார், நாதமுனிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் என்று வரிசையாக அருளப்பாடு கண்டருளிய போது என்னை பார்த்த கோவில் அர்ச்சகர் சிரித்துக்கொண்டு “இது தெங்கலை கோயில். பிரபந்தம் வாய் திறந்து சொல்லக்கூடாது. வாய்க்குள்ளேயே சொல்லிக்கொள்ளுங்கள்” என்றார்.
"மனத்தினால் பாடி மனத்தினால் சிந்திக்க"த் தொடங்கினேன். சிறுது நேரத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ என்னை ஸ்ரீபாதம் தாங்குவார் குழுவில் சேர்த்தார். பிறகு “அடியேனுடைய திருமாளிகைக்கு வந்து கட்டாயம் அமுது செய்ய வேண்டும்” என்றார்.

ஸ்ரீமந் நாதமுனிகள்,  ஸ்ரீ ஆளவந்தார் 
கைக்குழந்தையை தூக்கிக்கொண்டால் அதனுடைய முகத்தை எவ்வளவு கிட்டே பார்க்க முடியுமோ அதே போல் ஸ்ரீபாதம் தாங்கிக்கொண்டு வரும் போது ஆளவந்தாரை பார்த்தது நான் செய்த பாக்கியம்.

என்னுடன் வந்தவர்கள் அங்கே இருக்கும் மடத்தில் எச்சில் இலை எடுத்துக்கொண்டும், பெருமாளுக்கு முன் தீபந்தம் பிடித்துக்கொண்டும், பெருமாளுக்கு மேல் வெயில் படாமல் குடை பிடித்துக்கொண்டும் இருந்தார்கள். நிஜமான பாகவதர்கள்!.

ஆளவந்தார் வீதி உலா வந்த போது சில சுவாரசியமான விஷயங்களை கவனிக்க நேர்ந்தது.

வீதி உலா 
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் சைக்கிளை விட்டு இறங்கி பெருமாளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் சென்றார்கள். வழி நெடுகிலும் பச்சைப் பசேல் கீரை, ஸ்டிக்கர் ஒட்டாத பழங்களும், மேடு பள்ளம் ரோடுகளை கடந்து வரும் போது ஊரில் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தென்படுகிறது.

பெருமாள் வரும் போது பெண்கள் அவசர அவசரமாக தண்ணீர் தெளித்து கோலம் போட்டு பெருமாளையும் ஆளவந்தாரையும் வரவேற்று வெற்றிலை பாக்கு, பழம் கொடுத்து ஸ்ரீசடாரி வாங்கிக்கொள்கிறார்கள். ஆச்சரியம் என்ன என்றால் சில பெட்டிக்கடைகளிலும் பெருமாள் நின்று அவர்கள் கொடுக்கும் மரியாதையை வாங்கிக்கொள்கிறார்.

கீரை
இப்படி வந்துக்கொண்டு இருந்த போது ஒரு வீட்டில் இதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்கள். அந்த வீட்டில் இருந்தவர் தோளில் கருப்பு-சிகப்பு சால்வை அணிந்திருந்தார். அந்த வீட்டில் உள்ள பெண்கள் அன்று தலைக்குக் குளித்துவிட்டு முகத்தில் மஞ்சளுடன் மங்களகரமாக இருந்தார்கள். பெருமாள் அந்த வீட்டைக் கடந்து சென்ற போது, வீட்டில் இருந்த பெண் (அவர்கள் வீட்டு மருமகளாக இருக்க வேண்டும்) வெளியே வந்து ஒரு சுவரின்பின் மறைந்து பெருமாளை சேவித்தார். வீட்டில் இருந்த ஒரு வயதான பெண்மணி அவளுடைய மாமியாராக இருக்கலாம் பெருமாளை பார்க்க வெளியே வந்த போது கருப்பு-சிகப்பு அவளை உள்ளே விரட்டியது. இவர்கள் பெருமாளைப் பார்க்கவில்லை என்றால் என்ன? பெருமாள் இவர்களைப் பார்த்து தன் கடாட்சத்தை அருளிவிட்டுத் தான் சென்றார்.

பெருமாள், ஆளவந்தார், நாதமுனிகள் சகிதம் திருமஞ்சனத்தை பார்த்துவிட்டு சிதம்பரத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து திருமங்கை ஆழ்வாரை சந்திக்கச் சென்றேன்.

1997ல் ஸ்ரீராம பாரதியின் தேவகானத்தைக் கேட்க நேர்ந்தது. அதில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமங்கையாழ்வார் அழகைப் பார்த்துப் பாடிய வடிவழகு சூர்ணிகையை முதன்முதலில் கேட்டேன். இப்பேர்பட்ட ஆழ்வாரை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தது பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் தான் நிறைவேறியது.

திருநகரி கோயில்
சிதம்பரத்திலிரிந்து திருவாலி திருநகரி சீர்காழி மார்க்கம் பூம்புகார் செல்லும் சாலையில் குறுக்கே திருநகரி என்று சிறியதாக ஒரு பலகை தெரிகிறது. வழியில் இரட்டை வால் குருவிகள் ஆடுகளின் மீது உட்கார்ந்திருந்தன. பல இடங்களில் பருத்தி பயிர் செய்திருக்கிறார்கள். திரும்பும் இடம் எல்லாம் பசுமை, பறவை ஒலி, மெலிதான காற்று சூழலில் திடீர் என்று கிராமத்தின் நடுவில் கோபுரம் தெரிகிறது. கோயிலில் யாரும் இல்லை. அர்ச்சகர் எனக்கு எல்லா சன்னதிகளையும் திறந்து காண்பித்து "எவ்வளவு நேரம்னாலும் பார்த்து நிதானமா சேவிச்சுட்டுப் போங்கோ” என்றார். திருமங்கை ஆழ்வார் வடிவழகு பற்றி எழுத முடியாது. பார்த்துதான் அனுபவிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை திரும்ப வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, திருமங்கை ஆழ்வாருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.திருமங்கை ஆழ்வார்  சிறு குறிப்பு:

ஆழ்வார்கள் பன்னிருவருள் கடைக்குட்டி ஆழ்வார் திருமங்கை மன்னன்.

”பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்ய னருள்மாறன் சேரலர்கோன்- துய்யபட்ட
நாதனன்பர் தாள்தூளி நற்பாணன் நன்கலியன்
ஈதிவர்தோற் றத்தடைவா மிங்கு”

என்கிறது உபதேச ரத்தின மாலை(4).

இவருக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது - ஆலிநாடான், அருள்மாரி, அரட்ட முக்கி, அடையார்சீயம், கொங்கு மலர்க் குழலியர்வேல், மங்கை வேந்தன், பரகாலன், கலியன், கலிகன்றி, குறையலூர் வாழ் வேந்தன், இருந்தமிழ் நூற்புலவன்.

இவரை பற்றிய குருபரம்பரை கதை சற்று சுருக்கமாக:

திருவாலித் திருநகரியில் திருக்குறையலூரில் ஒரு கார்த்திகைத் திங்களில் கார்த்திகைத் திருநாளில் தோன்றியவர். இவரது இயற் பெயர் 'நீலன்'. சோழநாட்டில் குறுநில மன்னராய் விளங்கினார். இவரிடம் 'ஆடல்மா' என்னும் குதிரையும், 'அமரிற் கடமா களியானை' என்னும் யானையும் இருந்தன. குமுதவல்லி என்ற பெண்ணைப் பார்த்து மணம்முடிக்க ஆசைப்பட்டார்.. (மனைவியுடன் இருக்கும் ஒரே ஆழ்வார் இவரே). குமுதவல்லி "பஞ்ச ஸம்ஸ்காரமும், ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டினாலின்றி நான் உங்களைக் கணவராக ஏற்க மாட்டேன்" என்று கூறினார். ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டி, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும் தீர்ந்த நிலையில் வழிப்பறித்து பொருளீட்டத் தொடங்கினார். அவ்வாறு வழிப்பறிக்க திருமணங்கொல்லையில் திருவரசின் மேலே பதுங்கி இருந்தபோது வயலாளி மணவாளன் பிராட்டியோடு மணவாளக் கோலத்தில் திரளோடு வர, அவனை வளைத்துத் துணிமணிகளைக் கவர்ந்து அறுகாழியையும் (அறுகாழி - கால்விரல் மோதிரம், கணையாழி - கைவிரல்மோதிரம்) தம் பற்களாலே கடித்து வாங்கினார். பின்பு தாம் கொள்ளை கொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, "நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம்?" என்று கேட்டார். பெருமாள் இவர்தம் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தைச் சொல்லித் தந்து இவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.

"வாடிவேன் வாடி வருந்தினேன் மனத்தால்,
பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
கூடினேன் கூடி, இளையவர் தம்மோடு,
அவர் தரும் கலவியே கருது..."


( பெரிய திருமொழி, 1-1-1 )

என்றபடி இறைநுகர்ச்சியால் விளைந்த இன்பம் உள்ளத்தில் அடங்கிநிற்காமல் சொற்களாகப் பெருக்கெடுத்து, பொங்கிவழிந்து பெரிய திருமொழி(1084), திருக்குறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம்(30), திருஎழுகூற்றிருக்கை(1), சிறிய திருமடல்(40), பெரிய திருமடல்(7) என்று நமக்கு அருளினார்.

வேதத்துக்கு நிகரான நம்மாழ்வாரின் நான்கு நூல்களையும் உணர்ந்துக்கொள்ளத் ஆறங்கமாக (அரணான அங்கமாக) இதை கூறுவார்.

"மாறன் பணிந்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்,
ஆறங்கம் கூற"


உபதேச ரத்தின மாலையில்(பாடல் 9)

நம்மாழ்வாரின் பாசுரங்களில் அவர் பெருமாளிடம் கொண்டுள்ள மிகுதியான அன்பும், அச்சாவதாரத்தில் அவர் கொண்டுள்ள பேரார்வமும் நமக்குத் தெரிகிறது. அதுபோன்றே திருமங்கை மன்னனின் பிரபந்தங்களே, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களைக் காட்டிலும், நம்மாழ்வாரின் பிரபந்தங்களைப் பெரிதும் ஒத்திருப்பதால் அவை ஆறங்கமாக விளங்குகின்றன என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் அனுபவிக்கின்றார்.

இதையே வேதாந்த தேசிகன்

அறிவு தரும் பெரிய திருமொழி தப்பாமல்
ஆயிரத்தோடு எண்பத்து நாலுபாட்டும்
குறியதொரு தாண்டகம் நாலைந்து, ஆறைந்தும்
குலாநெடுந்தாண்டகம், ஏழு கூற்றிருக்கை ஒன்றும்
சிறிய மடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும்
சீர் பெரிய மடல் தனில் பாட்டு எழுபத்து எட்டும்


"அறிவு தரும் பெரிய திருமொழி.." என்று தேசிக பிரபந்தத்தில் ( பாடல் 379 ) ஆனந்தப்படுகிறார்

"மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்
மங்கையர்கோன்"


என்று பெருமாளிடம் திருமந்திர உபதேசம் பெற்றதை ஸ்ரீ ராமானுஜர் (பெரிய திருமொழி தனியன் - 2) அனுபவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் பலவகை யாப்புகளைக் கையாண்டுள்ளார். பெரிய திருமொழியில் 108 பாடல்களில் 68 பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில் அமைந்தவை, கலி விருத்தத்தில் அமைந்தவை 15; கொச்சகக் கலிப்பாவால் அமைந்தது 18, கலிநிலைத் துறையால் அமைந்தவை 9, ஆசிரியத் துறையால் அமைந்தவை 3, வெண் துறை, வஞ்சி விருத்தம், கலித்தாழிசையில் ஒன்று. திருக்குறுந்தாண்டகம் 20 பாடல்களில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தினால் அமைந்தவை. திருநெடுந்தாண்டகம் 30 பாடல்களும் எண்சீர் ஆசிரிய விருத்தத்தினால் ஆனவை. திருவெழு கூற்றிருக்கை நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆகியது. சிறிய/பெரிய திருமடல்கள் கலிவெண்பாவினால் ஆனது).

திருமங்கையாழ்வார் திவ்ய பிரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.
அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் சென்ற வரிசையிலேயே அதை எல்லாம் பாடியுள்ளார் என்பது மேலும் சிறப்பு.

இவ்வாறு விரைவாகப் பாடும் அகக்கவியாகவும், இனிமை ததும்பப் பாடும் மதுரகவியாகவும், விரிவான அளவில் பாடும் வித்தாரக் கவியாகவும், இரதபந்தம் பாடும் சித்திரக் கவியாகவும் இருப்பதால் "நாலுகவிப் பெருமாள்" என்று அழைக்கப் பெற்றார் என்கிறது திவ்விய சூரிசரிதம் பாடல் 9.

திருமங்கையாழ்வார் அழகை அனுபவித்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் "வடிவழகு" என்ற சூர்ணிகையைப் பாடுகிறார். அதை இந்த பதிவில் ஸ்ரீராம பாரதியின் உறையுடன் (ஒலி ஒளி வடிவில்) உங்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

( கீழே உள்ள பாடலை கேட்டுக்கொண்டே படித்தால் சுவை கூடும் )

திருமங்கையாழ்வார் வடிவழகு

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ!
ஏது பெருமை இன்றைக்கென்னென்னில் - ஓதுகிறேன்.
வாய்த்தபுகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்

மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த-வீறுடைய
கார்த்திகையில் காத்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.

அணைத்தவேலும் தொழுதகையும்
அழுந்திய திருநாமமும்
ஓமென்றவாயும் உயர்ந்தமூக்கும்
குளிர்ந்தமுகமும் பரந்த விழியும்
பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
கருண்டகுழலும் வடிந்தகாதும்
அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்
சரிந்த கழுத்தும் அகன்றமார்பும்
திரண்ட தோளும் நெளித்த முதுகும்
குவித்தயிடையும் அல்லிக்கயிறும்
அழுந்திய சீராவும் தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனிமாலையும்
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும்
சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும்
குந்தியிட்ட கணைக்கால்களும் குளிரவைத்த திருவடியும் மலரும்
வாய்த்த திருமணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும்
வாடினேன் வாடி வாழ்வித்தருளிய
நீலக்கலிகன்றி மருவலர்தமுடல்துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே

உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்
உருகவைத்த மனமொழித்திவ் வுலகளந்த நம்பிமேல்
குறையைவைத்த மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்கவன்முனே
மடியொதுக்கி மனமடக்கி வாய்புதைத்து வொன்னலார்
குறைகுளித்த வேலணைத்து நின்றவிந்த நிலைமையென்
கண்ணை விட்டகன்றிடாது கலியனாணை யாணையே

காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும் - நீதிபுனை
தென்னாலி நாடன் திருவழகைப் போல
என்னாணை யொப்பா ரில்லையே

வேலணைத்தமார்பும் விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாளினிணைத்
தண்டையும் வீரக்கழலும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கு மென் கண்

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர் - இதுவோதான்
வெட்டுங்கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்

வடிவழகு பாடலை அனுபவிக்க இங்கே :


திருமங்கை ஆழ்வாருடைய இந்த பாடல் மிக மிக்கியமானது.

'குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்''
நாராயணன் என்ற சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

திருமங்கை ஆழ்வார் மார்பில் நம்மாழ்வாரும் பாதத்தில் ஸ்ரீராமானுஜரும் இந்த ஆழ்வார் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.ஆளவந்தார் பற்றிய சிறுகுறிப்பு:

ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ( நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வர முனியின் பிள்ளை ).

நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.

( உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்) நாதமுனிகளின் சீடராக இருந்தவர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார் ( நம்பி லால்குடி பக்கம் இருக்கும் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர்) )

சிறுவயதில் சந்தை சொல்ல (பலருடன் பிரபந்தம் செவிக்க(சொல்ல) பயிற்றுவிப்பது தான் சந்தை) யமுனைத்துறைவனை அனுப்பிய போது, முதல் நாள் சென்று சேவித்துவிட்டு மறுநாள் போன போது முதல் நாள் சொன்னதையே மீண்டும் சந்தையில் சொல்லுகிறார்கள் என்று வீடு திரும்பியவர் அவர்!

தந்தை ஆசார்யரின் திருவடி அடைந்த பின், மஹாபாஷ்யபட்டர் என்பவரிடம் இவர் சாஸ்திரப் பாடம் கற்றுக்கொண்டு வந்த காலத்தில், சோழ மன்னனின் ஆஸ்தான வித்வானாக இருந்த ஆக்கியாழ்வான் என்னும் பண்டிதன் அந்நாட்டில் உள்ள வித்வான்களை வென்று அவர்களிடம் கப்பம் வாங்கி வந்தான்.

ஒரு நாள் யமுனைத் துறைவருடைய ஆசிரியரான மஹாபாஷ்யபட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்ப, பட்டர் திகைத்து நின்றார். அந்த சமயத்தில் யமுனைத்துறைவர் அந்த ஓலையைக் கிழித்து எறிந்தார்.

இதை கேள்விப்பட்ட அரசன் யமுனைத்துறைவரை அரண்மனைக்கு வருமாறு ஓலை அனுப்ப அந்த ஓலையும் கிழித்துவிட, அரசன் ’இவர் சாமான்யரல்லர்’ என்று அறிந்து இவர் வருவதற்கு பல்லக்கை அனுப்பி உரிய மரியாதைகளுடன் அரசபைக்கு வரவழைத்தான்.


அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் வாதப் போர் தொடங்கியது. வாதத்தின் ஆரம்பத்தில் ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவரை “இவர் சிறுபிள்ளைதானே” என்று நினைத்து சாஸ்திர விவாதம் இல்லாமல் உலகியல் விஷயங்களிலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி ”நீர் உண்டு என்பதை நான் இல்லை என்று மறுத்து பேசுவேன்”. போட்டியில் வென்றவர் தோற்றவர் தலையில் அடிக்க வேண்டும்” என்றார்.

இதை கவனித்துக்கொண்டு இருந்த அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ "யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படித் தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்” என்றாள்.

போட்டி ஆரம்பித்தது, யமுனைத்துறைவர் மூன்று வாக்கியங்களை கூறினார்
1. உன் தாய் மலடியல்ல
2. மன்னன் சார்வபௌமன் ( சக்கரவர்த்தி )
3. அரசி கற்புக்கரசி

ஆக்கியாழ்வான் இதை மறுத்துப் பேச முடியாமல் மௌனமாக இருக்க தோல்வியை ஒப்புக்கொண்டார். யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வான் மூத்தவராக இருப்பதால் தலையில் அடிக்க மறுத்துவிட்டார்.

“நீர் சொன்ன மூன்று வாக்கியங்களையும் உம்மால் மறுத்து பேச முடியுமா?” என்று ஆக்கியாழ்வான் கேட்க

யமுனைத் துறைவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

1. ’தாய் மலடியல்ல’ என்பதற்கு “ஒற்றை மரம் தோப்பு ஆகாது” என்பது போல, ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றவளை பல பிள்ளைகளைப் பெற்றவளுடன் ஒப்பு நோக்க முடியாது. ஆகையால் ஒரே ஒரு பிள்ளை பெற்ற தாயும் மலடியே.

2. ’மன்னன் ஸார்வபௌமன்’ என்பதற்கு “ஸார்வபௌமன் என்றால் பூமிப் பரப்பை எல்லாம் ஆள்பவன் என்று பொருள். ஒரு சிறிதளவு பூமியை (ராஜ்ஜியத்தை) ஆள்பவன் எப்படி ஸார்வபௌமன் ஆவான் ?

3. ’அரசி கற்புக்கரசி’ என்பதற்கு “பெண் தன் கணவனை அடையும் முன்னரே சாஸ்திரப்படி திருமணம் ஆகும் முன் தேவர்களுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அதனால் அதையும் மறுக்க முடியும்

என்று கூற யமுனைத்துறைவர் பதிலை கேட்ட அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான். ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்து அணைத்துக் கொண்டார். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற திருநாமம் உண்டாயிற்று.

ஆளவந்தார் தனக்கு தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிந்த மணக்கால் நம்பி மகிழ்ச்சி அடைந்து தன் ஆசார்யரின் கட்டளையை நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி ஆளவந்தாரைக் காண வந்தார், ஆனால் அவரால் அரண்மனைக் காவலை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஆறு மாதம் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார்.

மறுநாள் நம்பி கீரையை கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார்.

ஆளவந்தார் நம்பியை பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும்? என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது?” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.

”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தார்.

( இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரத்திரம் அன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. )

ஒரு மானசீக ஆச்சார்யனாக, ஸ்ரீராமானுஜரை வைணவத்துக்கு இட்டு வந்து, பெரும் தொண்டாற்ற வைத்த பெருமை ஆளவந்தாரையே சாரும்.

ஆளவந்தார் பல கிரந்தங்களை அருளியுள்ளார். அவரின் ’ஸ்தோத்திர ரத்னம்’ மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் வைணவரக்ள் அனுசந்திக்கும் தனியனான

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

என்பது ஸ்தோத்திர ரத்னத்தின் ஒரு பகுதி.

அடுத்த மாதம் செப்டம்பர்-5 பெரியவாச்சான் பிள்ளை திருட்சத்திரம் வருகிறது அவர் பிறந்த ஊருக்கு சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன். வருகிறீர்களா!?