Skip to main content

சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும்

"என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்துதான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்" - கற்றதும் பெற்றதும் 

சுஜாதாவிற்கு சிறுகதை மேல் அளவுகடந்த  காதல் என்று சொல்லலாம். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும் அவர்கள் எழுதிய ஒரு நல்ல சிறுகதையை உடனே நினைவுகூர்வார். ஒரு முறை சுஜாதாவைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்தாளரைப் பற்றி பேச்சு வந்தபோதும் அந்த எழுத்தாளர் எழுதிய ஒரு நல்ல கதையின் தலைப்பைச் சட்டென்று சொன்னார். வியந்துபோனேன். 'எல்லோரிடமும் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது' என்று பலமுறை சொல்லியிருக்கார்.



ஒரு சிறுகதை அனுபவம்:
"சார், போன வாரம் திருச்சி போன போது என் ஸ்கூல் கிளாஸ்மேட் ஒருவன் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு இருந்தான்.. அதைப் பற்றி ஒரு சிறுகதை எழுதலாம் என்று இருக்கிறேன்"
"எழுதுங்க"
"எழுதிவிட்டு உங்களிடம் காண்பிக்கிறேன். நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்"
"அதுக்கு என்ன கொண்டு வாங்க..."
அடுத்த வாரம் நானும் அந்தச் சிறுகதையை எழுதி அவரிடம் காண்பித்தேன். கதையை முழுவதும் படித்துவிட்டு "முதல் பாரா... கடைசி பாரா நல்லா இருக்கு" என்றார்.
"மற்றவை?" கேட்ட என் குரல் காற்றிறங்கிக்கொண்டிருக்கும் பலூனாய் இருந்தது.

"ரீரைட்"
எப்படி என்று சொல்லவில்லை. எனக்கும் கேட்கத் தோன்றவில்லை.
 திரும்பவும் அடுத்த வாரம் அவரிடம் மாற்றியெழுதிய சிறுகதையைக் காண்பித்தேன். படித்துவிட்டு, "பரவாயில்லை... இன்னொரு முறை திரும்ப எழுதிவிடுங்கள்" என்றார்.
ஒரு வாரம் கழித்து நம்பிக்கையுடன் திரும்பக் காண்பித்த போது, படிக்கக் கையிலேயே  வாங்காமல், "எவ்வளவு பக்கம் பிரிண்டவுட்"
"8 பக்கம்"
"அடுத்த வாரம் 6 பக்கமாக்கிவிட்டுக் கொண்டு வாங்க"
சிறுகதையை எழுதுவதை விட்டுவிடலாமா என்று கூட நினைத்தேன்.
விடாக்கண்டனாய் அடுத்தவாரம் ஆறுபக்கக் கதையை அவரிடம் காண்பித்த போது "நடுவில் உள்ள ஒரு கதாபாத்திரம் மீது குரோதம் வருகிற மாதிரி ஒரு சம்பவம் வேண்டும்.. அது இந்தக் கதையில் இல்லை"
"இல்லை சார்... அந்தக் கதாப்பாத்திரம் ரொம்ப ஸாஃப்ட்"
"வில்லனா மாத்திவிடு"
இப்படியாக அந்தக் கதையை முழுவதும் மாற்றி எழுத வேண்டியதாகிவிட்டது.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவனாய் அடுத்த வாரம் காண்பித்த போது, "இன்னொரு முறை ரீரைட் செய்துவிடுங்கள்... சிறுகதை ரெடி"
யாருக்கும் இந்த மாதிரி ஓசியில் சிறுகதை வகுப்பு எடுத்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து. அவருக்கு என்மீது அபிமானம் என்று சொல்லுவதை விட, சிறுகதையின் மேல் அவருக்கு இருந்த காதல்தான் இதற்குக் காரணம்.
இன்னொரு நேரில் கண்ட அனுபவம் - வாசகர் ஒருவர் மின்னஞ்சலில் சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தார்.  பிரிண்டவுட் எடுக்கச் சொன்னார். எடுத்தேன். முதல் பாராவை படிக்கச் சொன்னார். நடுவிலிருந்து ஒரு பாரா படிக்கச் சொன்னார். பிறகு "படிச்சுப் பாருங்க கதை இதுதான்" என்று என்னிடம் சொல்லிவிட்டார். படித்துப் பார்த்த போது ஆச்சரியப்படுமளவில் அவர் சொன்ன மாதிரியே கதை இருந்தது. எவ்வளவு சிறுகதைகள் ஆழ்ந்து ஆர்வத்துடன் படித்திருந்தால் இந்த மாதிரி சொல்ல முடியும்?

=0=

"சில எழுத்தாளர்கள், தான் எழுதியதுதான் வேதவாக்கு, அதில் ஒரு கால்புள்ளி, அரைப்புள்ளி குறைத்தாலும் சகியேன் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். ஒரு ஞானபீட எழுத்தாளர் தன் கதையை குறைத்துப் பிரசுரித்தார்கள் என்ற காரணத்துக்காக அந்தப் பத்திரிகையில் எழுதுவதையே நிறுத்திவிட்டாராம். நான் அப்படியில்லை. நான் அத்தனை சென்சிட்டிவ் இல்லை" -- ஓரிரு எண்ணங்கள்.

சுஜாதா பத்திரிகைக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை அவர் விகடனுக்கு எழுதிய கட்டுரையை எனக்கும் அனுப்பியிருந்தார். விகடனில் பிரசுரம் ஆனதைப் படித்தபோது அந்தக் கட்டுரையின் முதல் வரியையே எடிட் செய்திருந்தது தெரிந்தது. அவரிடம் அதைப் பற்றிப் பேசியபோது, "They have done a good job" என்றார். எடிட் செய்த அந்த வரியை அப்படியே பிரசுரம் செய்திருந்தால் சர்ச்சை வந்திருக்க வாய்ப்பிருக்கிறது; அவருக்கு இல்லை, அதில் குறிப்பிட்ட அந்த நடிகருக்கு!.

பல பத்திரிகைகள் அவரைத் தொடர்கள் எழுதச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியிருக்கின்றன. 1987-இல் சுஜாதாவை திருச்சியில் ஒரு லயன்ஸ் கிளப் விழாவில் சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரேயடியாக நான்கு ஐந்து பத்திரிகைகளில் தொடர் எழுதிக்கொண்டிருந்த சமயம் அது. தன் அருகில் இருந்தவரிடம் ஒரு பத்திரிகையைக் குறிப்பிட்டு ஒரு காப்பி வேண்டும் என்றார். அவரும் உடனே பக்கத்தில் இருந்த கடையிலிருந்து வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார். "எதுல முடித்திருக்கிறேன்?" என்று கடைசி வரியை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டார். திரும்ப ஊருக்கு போகும் போது அடுத்த பகுதியை எழுதிக்கொண்டு போவார் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு முறை தொடர்கதை ஒன்றைக் குறிப்பிட்டு "இந்த தொடரில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். இதை நீங்கள் ஒரு பெரிய நாவலாக எழுதியிருக்க வேண்டும். ஏன் உடனே முடித்துவிட்டீர்கள்?" என்று கேட்டேன்.

"யூ ஆர் கரெக்ட்...நாவலாகத் தான் ஆரம்பித்தேன்... அது தான் ஆசை. ஆனால் அந்தப் பத்திரிகையில் திடீர் என்று ஏதோ புதுசா காரணம் சொல்லி 12 வாரத்தில் முடிக்கச்  சொல்லிவிட்டார்கள். நான் 9 வாரத்தில் முடித்துவிட்டேன்" என்றார். எப்படி ஒரு முப்பது வாரக் கதையை ஒன்பது வாரத்தில் ஒரு வித்யாசமும் வெளித்தெரியாதவாறு முடித்தார் என்று வியந்திருக்கிறேன்.

=0=

"சுஜாதாவின் பொழுதுபோக்கு வேலிகளை உடைப்பது. கதைக்கு எடுத்துக் கொள்கிற விஷயத்திலும், கதையை எழுதுகிற நடையிலும், கதைக்குக் கொடுக்கிற அமைப்பிலும், பழைய வேலிகளை உற்சாகமாக உடைத்துக் கொண்டு தனிக்காட்டு ராஜாவாய்த் துள்ளுகிறார் அவர். என்ன புதுமைகளைப் புகுத்தினாலும் தமிழினால் தாங்க முடியும் என்பதை உணர்ந்திருப்பதால் பேனாவை வைத்துக் கொண்டு சுதந்திரமாய்ச் சிலம்பு விளையாடுகிறார். ஓரோர் சமயம் அவருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்க்க நேர்கையில், “டெலிபோனை வைத்து விட்டு, ‘வஸந்த், பதினைஞ்சு நிமிஷத்திலே தயாராகணும்’!” என்று வாக்கியம் மொட்டையாக நின்று விடுவதைக் கண்டு நான் திடுக்கிட்டதுண்டு.  அந்த இலக்கண விநோதத்தை அனுமதிக்கக் கூடாதென்று முடிவு செய்து, உடனே பேனாவை எடுத்து, ‘என்றான்‘ என்று முடிப்பேன். முடித்துவிட்டு வாசித்துப் பார்த்தால், அவர் மொட்டையாக விட்டிருந்தபோது இருந்த அழுத்தம் இந்தப் பூர்த்தியான வாக்கியத்தில் இல்லை போலிருக்கும். முணுமுணுத்தபடியே அந்த ‘என்றானை‘ அடித்துவிடுவேன்" - ரா.கி.ரங்கராஜன் 

Continuous  improvement என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதை அவரிடம் நேரில் பார்த்திருக்கிறேன். கதையை வேகமாகத் தட்டச்சு செய்துவிட்டு பிறகு ஒவ்வொரு வரியையும் நிதானமாக மாற்றி அமைத்து தேவை இல்லாத வார்த்தைகளை எடுத்துவிட்டு ஒழுங்குபடுத்துவதைப் பார்ப்பது இனிய அனுபவம். அவருடைய எழுத்துகளைப் பல முறை படித்திருக்கிறேன். ஆரம்ப கால எழுத்துகளில் "என்றான்" என்பதை நிறைய உபயோகப்படுத்தியிருப்பார். ஆனால் பிறகு அதன் உபயோகத்தைக்  குறைத்திருப்பார். எழுத்தைத் தவமாக, அதை மேலும் மேலும் எப்படி ஒழுங்கு செய்யலாம் என்று அவருக்கு உள்ளே இருந்த உந்துதல்தான் அவரை ஒரு வெற்றி எழுத்தாளர் ஆக்கியது என்று நினைக்கிறேன்.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன? கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன். - கேள்வி பதில்

அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படிக்கும் போது அதில் உள்ள தகவல்கள் நம்மை வியக்க வைக்கும். ஒரு முறை நான் அவருடன் என்னுடைய கொரியா அனுபவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். தொடர்கதையில் அடுத்த வாரப் பகுதியில் என்னுடைய அனுபவத்தை அழகாக உள்ளே புகுத்தியிருந்தார். எழுத்தாளனுக்கு தகவல் முக்கியம். துல்லியமான தகவல்; தெரியவில்லை என்றால் அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம்; பிறகு நினைவாற்றல்.
2006-இல் எழுத்தாளர் சுஜாதாவுடன் நான் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்... ( ஒலிப்பதிவிலிருந்து )
"நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவைத் தட்டி ஒரு கதையைக் கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார்.

அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை.
"எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான்.
"சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?"
"என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்"
"சரி அந்த மரத்துக்குப் பேர் என்ன?"
"அதெல்லாம் தெரியணுமுங்களா?"

"ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?"
"ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார்.
என்னால் பதிலே சொல்ல முடியலை.
தி.ஜானகிராமன் சொல்வார்.. ஒரு தடவை டெல்லியில் Barakhamba சாலையில் போய்கொண்டு இருந்த போது இரண்டு பக்கமும் சோலை போல மரங்கள். தி.ஜா என்னிடம் கேட்டார், "நீ எப்பவாவது நிமிர்ந்து மேலே பார்த்திருக்கியா? அந்த மரம் பேர் தெரியுமா?"
He was very precise and was remembering every tree. அதனாலதான் அவருடைய கதைகளில் அவ்வளவு டீட்டெய்ல் இருக்கும். எனக்குக் கூட மரங்களை அடையாளம் காணமுடியும். சங்ககாலப் பாடல்களை பார்த்தால் எல்லா மரமும் இருக்கும். What is important is that  look at nature and know something.
அப்படித்தான் பெங்களூரில் இருக்கும் போது... நீங்க கூடப் பார்த்திருப்பீங்க, ஒரே நாள்ல பூக்கும்.. அதன் கலர் கூட..."
"மோகலர்..."
"ஆமாம் மோகலர்.. Have you seen it? பேர் தெரியுமா?"
"பார்த்திருக்கேன், பேர் தெரியாது... ஆனா நீங்க 'இருள் வரும் நேரம்' கதையில முதல் பாராவில அதைப் பத்தி எழுதியிருப்பீங்க"
"Exactly"
"அதனுடைய பேர் Jakaranda. அந்தப் பூவோட பேர் எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னா-- ஒரு வெளிநாட்டுக்காரர் வந்திருந்தார். அவருடைய பேர் Thomas Dish. He was a science fiction writer. அவர் இந்தப் பூவை பார்த்திட்டு, இது என்ன 'பூ'ன்னு கேட்டார். எனக்குத் தெரியலை; அப்பறம் எங்கல்லாமோ தேடி கடைசியில Botany Professor கிட்ட கேட்டு அதன் பெயர் Jakaranda அப்படீன்னு கண்டுபிடிச்சோம். He then wrote a small Haiku like கவிதை. அந்தக் கவிதை எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கு.

இந்த ஜாகரண்ட மாதிரி பூக்கள், மரங்கள் பேர்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும். நீங்க கூட என்னுடைய எழுத்துல பார்க்கலாம், ஒரு விஷயம் தெரியலைன்னா அதன் டீட்டெய்ல் தெரியும் வரை வெயிட் பண்ணுவேன். This is one of the secrets of writing. யாரிடமாவது கேட்பேன், இல்ல தேடுவேன்... இப்ப ரொம்ப சுலபம்
"கூகிள் இருக்கிறது"
"ஆமாம்( சிரிக்கிறார் )

=0=

தேடலுக்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். 1996-இல் என்று நினைக்கிறேன், சுஜாதாவை அவரது பழைய வீட்டில் சந்தித்த போது 'நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்' என்ற பெரியாழ்வார் பாசுரத்தின் கடைசியில் "பண்டன்று பட்டிணம் காப்பே" என்று பாசுரத்தில் கடைசியில் வந்த வாக்கியத்துக்கு சரியான அர்த்தம் என்ன என்று தேடிக்கொண்டு இருக்கேன் என்றார். சில ஸ்ரீவைஷ்ணவ உரைகளிலிருந்து தேடி எடுத்ததும், பக்தி சம்பந்தமான யாஹூ குழுவில் இதைப் பற்றித் தேடியதும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை. அதற்குப் பிறகு அதைப் பற்றி மறந்துவிட்டேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி 2003-இல் ஆற்றிய உரையின் கடைசியில் இவ்வாறு பேசினார்..
".....என் தந்தையார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது, எனக்குப் பிரபந்தமே போதுமடா! என் பட்டினம் இப்போது காப்பில் உள்ளது"  விடை அவருக்கு மட்டும் இல்லை நமக்கும் கிடைத்துவிட்டது. 
அவருடைய சிறுகதைத் தொகுதிகளைத் தொகுக்கும் போது, "ஏதாவது சிறுகதை சுமார் என்று தோன்றினால் எடுத்துவிடுங்கள்" என்றார். விமர்சனத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இது.
எழுத்தாளனுக்கு முக்கியமான விஷயம் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது. தன் கதைக்கு யாராவது எதிர்வினை செய்தால், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை போடுவதைக் காட்டிலும் வேறு ஏதாவது படிக்கவோ எழுதவோ செய்யலாம் என்பது அவருடைய எண்ணம். பல முறை நான் இதைப் பார்த்திருக்கிறேன், அவர் எழுதிய 'அம்மா மண்டபம்' போன்ற கதைகளை எழுதிய போது அதற்குக் கிளம்பிய எதிர்ப்பும் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொஞ்சநாள் பேசிவிட்டு,  டிவியில் சானல் மாற்றுவது மாதிரி அடுத்த சானலுக்குப் போய்விட்டார்கள்.
சினிமாவிலும் தன் கதையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அதை பற்றிக் கண்டுகொள்ள மாட்டார்.
அவருடைய வீட்டில் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்த போது ஒரு நடிகர் அங்கே வந்தார்.  நான் கிளம்புகிறேன் என்று எழுந்தேன்.
"நீங்க இருங்க" என்று என்னை உட்காரச் சொல்லிவிட்டு நடிகரிடம் என்ன என்று விசாரித்தார்.
"சார் இயக்குனர் கதை சொன்னார்... உங்களிடம்.. " என்று ஏதோ சொல்ல வந்தார்.
"இயக்குனர் சொல்லுவதைச் செய்துவிடுங்கள்"  என்று ஒரே வரியில் முடித்துவிட்டார்.

=0=

"நாற்பது வருஷமாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு சுஜாதா சொன்ன பதில் 
நீண்ட யோசனைக்குப் சுஜாதா சொன்ன பதில்  "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" 
அவர் கற்று எழுதியதை நாம் வாசிப்பு அனுபவமாக பெற்றோம்

- சுஜாதா தேசிகன்

நன்றி: விகடன் சுஜாதா மலர் (2012)


Comments

  1. Good analysis and recollection

    ReplyDelete
  2. Great article. It seems one can keep on reading about Sujatha also. Like his writings, writings about him are also riveting.

    ReplyDelete
  3. Sujatha truly a legend inspired a generation to read and write Tamil. Proud to say, I am one among them. Keep the good work Desikan!

    -Baskar
    http://aarurbass.blogspot.com/

    ReplyDelete
  4. Miss him big time.

    ReplyDelete
  5. Hi..I am a follower of ur blog...where can I find Sujatha's first story 'Nylon Kayiru'..

    ReplyDelete
  6. Thalaivaa.....

    Bala

    ReplyDelete
  7. Dear desi, a good and.thought provoking memoir on Sujatha sir. I have sent a mail today to your id desikann@gmail.com from u.sundar10@gmail.com.pl respond,if time permits.
    Sundaram

    ReplyDelete
  8. A great memoir once again on Sujatha sir.
    I have sent a mail to your id desikann@gmail.com today.
    Pl respond if time permits.
    Sundaram

    ReplyDelete
  9. No wonder you have such a focus and strong flair for details. The outcome becomes many such engaging and long-lasting experince for thr readers.. Hope & wish you continue this trait..

    ReplyDelete
  10. Enjoyed sujarfhasn
    devotion to detajnlss
    Abd worsds!!!



    votion e

    ReplyDelete

Post a Comment