Skip to main content

கையெழுத்து

தினமும் பல ஆச்சரியங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அவற்றை கவனிப்பதில்லை.சலூனில் இத்துணூண்டு க்ரீமைக் கொண்டு ஷேவிங் பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க அட்ஷயப் பாத்திரத்திலிருந்து வருவது போல நுரை வருவது; நூலில் சுற்றப்பட்ட சமோசா கோபுரத்தை கீழே விழாமல் எலக்டரிக் ரயிலில் கூட்டத்தின் மத்தியில் விற்கும் அந்தச் சின்னப் பையன்; எப்போது போனாலும் சரவணபவன் சாம்பார் ஒரே மாதிரி இருப்பது; பர்வீன் சுல்தானா எல்லா ஆக்டேவிலும் ஸ்ருதி பிசகாமல் பாடுவது... புத்தகக் கண்காட்சிக்குப் போன போது இதே மாதிரி இன்னொரு ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.



வருடா வருடம் புத்தகக் காட்சிக்குச் செல்வது பழக்கமாகிவிட்டது. போன முறை வாங்கிவந்த ’சோழர்கள் வாழ்வியல் முறை’ என்ற புத்தகம் படிக்கப்படாமல்-- வாங்கிய ரசீது கூட முதல் பக்கத்தில் அப்படியே இருக்கிறது. இருந்தும் போவது ஒரு வித போதை மாதிரி ஆகிவிட்டது. இந்த வருடமும் கட்டுக்கட்டாக பொன்னியின் செல்வன், வாஸ்து, சமையல் குறிப்பு என்று எதுவும் மாறவில்லை. அப்பறம் சொல்ல மறந்துவிட்டேன், இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு என் புத்தகம் ஒன்றும் வெளிவருகிறது. உடனே புத்தகக் கண்காட்சிக்கு முதல் வாரம் பட்டாசுக் கட்டாக புத்தகங்கள் வெளியிடும் ஒரு பெரிய எழுத்தாளன் என்று என்னை நினைத்துவிட வேண்டாம். இதுவரை என் கதை ஒரேயொரு பத்திரிகையில் வந்திருக்கிறது. அதுவும் நடுவில் கொஞ்சம் அதிகமாய் மாற்றிவிட்டார்கள். பல கவிதைகள் எழுதினேன். போன ஞாயிறு ஒரு தினசரியின் வாரமலரின் பின்னட்டையில் நீங்கள் படித்திருக்கலாம். படிக்கவில்லை என்றாலும் பெரிய இழப்பு இல்லை. தற்போது டிவிட்டர், வலைப்பதிவு, ஃபேஸ்புக்கில் எழுதுகிறேன். இது என்னுடைய எழுத்து புராணம். புத்தகத்தை யார் பதிப்பித்தார்கள் என்று நீங்கள் என்னிடம் கேட்பது புரிகிறது. நானே என் சொந்தக் காசைப் போட்டுப் பதிப்பித்தேன். ஆச்சரியம் இதுவல்ல.

கண்காட்சிக்கு சென்ற போது நான் மிகவும் நேசிக்கும் அந்த எழுத்தாளர் இரண்டாம் வரிசையில் ஒரு ஸ்டாலில் உட்கார்ந்துகொண்டு வாசகர்களுக்கு கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தார். அவரை பற்றி நான் சொல்லுவது உலகம் உருண்டை என்று சொல்லுவது போல. போன வாரம் அவருடைய பத்து புத்தகங்கள் புக் பாயிண்டில் வெளியிட்ட போது இரண்டு பெரிய சினிமா இயக்குனர்கள் கூட வந்திருந்தார்கள். துரதிஷ்டவசமாக அன்று அலுவலகத்தில் கஸ்டமர் மீட்டிங் அதனால் என்னால் போக முடியவில்லை. அத்தனை பெரிய எழுத்தாளர் அவர். ஓரமாக நின்று அவரைக் கவனித்துக்கொண்டு இருந்த போது எனக்கு அந்த விபரீத எண்ணம் உதித்தது!

ஏன் நாம் எழுதிய புத்தகத்தின் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. பயம், கூச்சம், தயக்கம் எல்லாம் கலந்து உள்ளங்காலை சொறிந்தால் கூசுமே அதை போல செய்தது. தைரியத்தை வரவைத்துக்கொண்டு அவர் இருக்கும் ஸ்டால் அருகே சென்றபோது, கூட்டம் ஈக்கள் மாதிரி மொய்த்துக்கொண்டு இருந்தது. இளைஞர்கள், முதியவர்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு கையெழுத்தை வாங்கிக்கொண்டும், செல்போனில் அவருடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.

நான் எழுதியதைக் கொடுத்தால் எனக்கு படிக்க டைம் இல்லை என்று திரும்ப கொடுத்துவிட்டால்? இல்லை முதல் பக்கத்தில் அந்த மூன்று வரி காதல் கவிதையை படித்துவிட்டு இது கவிதையா என்று அந்தக் கூட்டத்தின் மத்தியில் கேட்டுவிட்டால்... என்னுடைய எழுத்தாளர் பிம்பம் என்ன ஆவது? அதனால் கூட்டம் குறைய காத்துக்கொண்டு இருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் சாரை சாரையாக வந்துகொண்டே இருந்தது. அந்த இடமே கிட்டதட்ட ரயில் பிளாட்பாரம் மாதிரி இருந்தது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.

தமிழ் செய்தி சேனல் ஒன்று புத்தகக் கண்காட்சி குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்டுக்கொண்டு எதிர்த்த ஸ்டாலுக்கு விஜயம் செய்தார்கள். மைக்கையும் லைட்டையும் பார்த்த கூட்டம் கொஞ்சம் அங்கே பறந்து சென்றது. ஒரு பெண்மணியைக் கூப்பிட்டு குழந்தைகள் புத்தகம் ஒன்றை கையில் கொடுத்து குழந்தைகளுக்கு நிறைய புத்தகம் இருக்கிறது என்று பேசச் சொன்னார்கள். இது தான் சமயம் என்று நான் மெள்ள அந்த எழுத்தாளரை அணுகினேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“ரொம்ப நேரமா நிக்கிறீங்க போல” என்றார்.

”ஆமாம் சார்... உங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு..." அவரின் கவனிக்கும் ஆற்றலை வியந்தேன்.

“சொல்லுங்க... “

“ஆரம்ப எழுத்தாளன்” என்று என் பெயரை சொன்னேன்.

“அடடே... சந்தோஷம்.. என்ன எழுதுவீங்க...”

“சிறுகதை... கவிதை”

“அப்படியா... எதுல வந்திருக்கு ?”

“கதை ஒன்னு போன வருஷம் வந்தது. கவிதை சிலது வந்திருக்கு... உங்க எழுத்தை தொடர்ந்து படிக்கிறவன்”

“சந்தோஷம்... தொடர்ந்து எழுதுங்க... தி.ஜ, சுஜாதா, பாலகுமாரன், அசோகமித்திரன் எல்லாம் நிறைய படிங்க.. நிறைய எழுதுங்க”

“சார் என்னுடைய புத்தகம் ஒன்னு இந்த புக்ஃபேர்ல வந்திருக்கு... உங்களுக்குக் குடுக்க ஆசை...” சொல்லும் போது எனக்கு வியர்த்துவிட்டது.

“தாராளமா தாங்க...” என்று அவர் சொன்ன போது என்னுடைய மனசுக்குள் ஆயிரம் மின்னல்கள் அடித்த மாதிரி... அடித்தேவிட்டது. எதிர்த்த ஸ்டாலில் இருந்த டிவி குழுவினர் இங்கே எங்கள் மீது லைட் அடிக்கத் தொடங்கினார்கள்.

நான் அவரிடம் என் புத்தகம் ஒன்றை கொடுக்க அதைப் படம் பிடித்தார்கள்.

“உங்க கையெழுத்தைப் போட்டுத் தாங்க”

இரண்டாம் பக்கம் “நான் நேசிக்கும் எழுத்தாளருக்கு அன்புடன்... “ என்று வாழ்க்கையில் முதன்முதல் ஆட்டோகிராஃப் கையெழுத்தை கைநடுக்கத்துடன் போடும்போது, "சார் கொஞ்சம் கேமரா பக்கம் பாருங்க” என்றார் டிவி கேமராமேன்.

அந்த டிவி குழுவில் இருந்த பெண்மணி எழுத்தாளரைப் பார்த்து ”புத்தகக் கண்காட்சி பற்றி உங்கள் கருத்து?” என்று சம்பிரதாய கேள்வி கேட்க ”புத்தகக் கண்கட்சிக்கு வருடாவருடம் அதிகப் புத்தகங்கள் வருகின்றன. இந்த இணைய யுகத்திலும் பல இளைஞர்கள் தமிழில் எழுத ஆர்வமாக இருக்கிறார்கள். நான் பொய் சொல்லவில்லை... இவரைப் பாருங்கள்” என்று என்னைக் கைகாட்டி இவர் என்னுடைய வாசகர் ஆனால் இவரும் ஒரு வளரும் எழுத்தாளர். இவர் எழுதிய புத்தகம் இது” என்று நான் கொடுத்த புத்தகத்தைக் காண்பிக்க டிவி கேமரா க்ளோஸப்பில் அதைப் படம் பிடித்தது. இது எல்லாம் பத்து நிமிடத்தில் முடிந்துவிட்டாலும், தலை கிறுகிறுத்து சோடா குடிக்க வேண்டும் போல இருந்தது.

எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. என் புத்தகத்தை அவர் கையில் வைத்துக்கொண்டு அது டிவியில் வரும் போது... நினைக்கும் போதே வியப்பாக இருந்தது. உடனே எல்லோருக்கும் லிச்சி ஜூஸ் வாங்கி இலவசமாக தரவேண்டும் போல் இருந்தது. அந்த எழுத்தாளர் என் புத்தகத்தைக் குறித்து எழுதி நான் மேன்மேலும் புகழ் பெற்று, இனி நான் அனுப்பும் கதைகள் பத்திரிகையிலிருந்து திரும்ப வராது... தீபாவளி மலர், பொங்கல் மலர்களுக்காக என் கதை, கவிதைகளைக் கேட்டு பத்திரைகைகள் காத்திருக்கப் போகின்றன... என்றெல்லாம் கனவு மாதிரி புகைமூட்ட நினைவில் கொஞ்ச நேரம் மூழ்கியிருந்தேன்.

டிவி குழு போன பிறகு அவரைச் சுற்றி திரும்ப கூட்டம்கூட நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு டிவி குழுவிற்குப் பின்சென்றேன். மைக் வைத்துக்கொண்டிருந்த பெண்மணியிடம், ”எப்ப டிவியில் வரும்?” என்றேன்.

“தெரியாது சார்.... நாளைக்கு எட்டு மணி நியூஸில பாருங்க” என்று அலுத்துக்கொண்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் சில ஸ்டால்களில் உள்ளே சென்று புத்தகங்களைப் புரட்டிப்போட்டேன். ”நிறைய படிங்க” என்று எழுத்தாளர் சொன்ன அறிவுரையை ஏற்று அளவுக்கதிகமாகச் செலவழித்து சிலபல தேவையற்ற புத்தகங்களையும் வாங்கினேன். உடனே எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். கொஞ்ச நேரம் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, வீட்டுக்கு போகும் போது ஹார்ன் அடித்த பஸ்ஸைப் பார்த்து எரிச்சல் கூட வரவில்லை.

இரவு ஒன்பது மணிக்கு என் நண்பன் சண்முகம் போன் செய்திருந்தான். நடந்ததைச் சொன்னேன்.

“கலக்கிட்டடா.... நானும் புக்ஃபேர்ல தான் இருந்தேன்.. எனக்கு ஒரு ஃபோன் செஞ்சிருக்கக் கூடாது? நானும் அவரைப் பாத்தேன்” என்றான்.

”சூப்பர்! என்ன சொன்னார்?”

“ஒரே கூட்டம்.... ரொம்பப் பேச முடியலை....”

“ஒன்னுமே பேசலையா?”

“இல்லை... கையெழுத்து கேட்டேன்... புத்தகத்தில் போட்டுக்கொடுத்தார்.. ஆச்சரியம்”

“ஆமாம் அவர் நிறைய பேருக்கு போட்டுத் தந்தார்”

”அதில்லைடா.. அவர் கையெழுத்து போட்டுகொடுத்த புக்கோட இரண்டாவது பக்கத்துல உன் கையெழுத்தும் இருக்கு”.

Comments

  1. Is this a stoty? or real?
    I like your simple style of writing...I would say, "write more" .
    thanks, Kala

    ReplyDelete
  2. படிக்கப் படிக்க அந்த எழுத்தாளரை யார் எனும் அறியும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போனது... கடைசி வரியைப் படித்ததும் யார் என்று தெரியாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றியது... நீங்கள் இன்னம் கொஞ்ச நாளில் ஆகச் சிறந்த எழுத்தாளரானபின் அவரைப் போல் இல்லாமல் இருந்தால் நலம்...

    ReplyDelete
  3. ஹா ஹா....

    சூப்பரப்பு. கடைசி வரை சம்பவமாத் தொடர்ந்தது இறுதியில் சிறுகதைக்கான நிறைவுடன் முடிந்தது.

    ReplyDelete
  4. அந்த கடைசி வரி தலைவர் டச் சூப்பர்!!!

    ReplyDelete
  5. If it is a story, it is fantastic. If it is a incident, v know how it will hurt you. Time will come for you too. All the best.

    ReplyDelete
  6. பாராட்டியவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பாலே அழகாகும் வீடு!!

    ReplyDelete
  8. அத்தனை விறுவிறுப்பு - அந்த எழுத்தாளர் யாரென்று தெரிந்து கொள்ள.....

    கடைசி வரி - செம!

    ReplyDelete
  9. யாரென்று தெரியலைங்... இருந்தாலும் படிக்க சுவாரஸ்யம்..

    ReplyDelete

Post a Comment