Tuesday, September 17, 2013

கதிர்மதியம் போல் முகத்தான்

And how can man die better
than facing fearful odds,
for the ashes of his fathers,
and the temples of his Gods?
- Thomas B. Macaulay


மதுரை தேனி மார்க்கம் உசிலம்பட்டிக்கு முன் தெற்கே அறுபது கிமீ தூரத்தில் ஸ்ரீரங்கபுரம் இருக்கிறது. ஸ்ரீரங்கபுரம் ஊர் இல்லை, மலை அடிவாரக் கோயில். கோயிலுக்கு பின்னணியில் சூல வடிவத்தில் மலை இருப்பதால் சூலகிரி என்ற பெயரும், “கோயிலுக்கு பின்னாடி நாமம் தெரிகிறது பாருங்க!” என்ற இன்னொரு கண்டுபிடிப்புடன் ஸ்ரீரங்கபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான். ஸ்ரீதேவி, பூதேவி என்று மலையடிவாரத்தில் பெட்ரோல் புகை வாசனை எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்த ஸ்ரீரங்கராயன் இரண்டு வருடத்துக்கு முன் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருடு போனார்.

Monday, September 2, 2013

டிவி இல்லாத வீடு

ல்லோரும் எதிர்பாத்த ஆகஸ்ட் 15 இந்த வருடமும் வந்து போனது. வெள்ளிக்கிழமை கூடுதலாக விடுமுறை எடுத்தால் 'லாங் வீக்கெண்ட்'. ஊருக்குப் போகும் உத்தேசம் இல்லை என்றாலும் சும்மா புக் செய்து வைக்கலாம் என்று பலர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார்கள்.

நான் படித்த பள்ளியில் கொடி ஏற்றுவார்கள். சட்டைப் பையில் குத்திக்கொள்ள சின்னதாக கதர் துணியில் ஓரம் அடித்த கொடியும், மிட்டாயும் தருவார்கள். தற்போது பள்ளிகூடத்தில் ஒரு நாள் முன்னமே கொடி ஏற்றி, பாட்டுப் பாடி, சாக்லேட் தந்துவிடுகிறார்கள். கொடிகள் எல்லாம் பள பள பேப்பர் (அ) பிளாஸ்டிக் ஆகிவிட்டது. சீசனுக்குத் தகுந்தாற் போல டிராஃபிக் சிக்னலில் சீனா பொம்மைகள் விற்கும் ஏழைகள் அதே அழுக்குடன் இந்த பள பள கொடிகளை விற்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆகஸ்ட் பதினைந்தும் ஒரு சீசன் ஆகிவிட்டது.

எங்கள் அப்பார்ட்மெண்ட் மெயிலிங் குருப்பில் இந்தச் சுதந்திர தினத்திற்கு ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதி கீழே...

Dress in WHITE to spread PEACE and show your independence and get a chance to win food voucher from MIDNIGHT HUNGER SOLUTIONS.

Note: It’s Happening on AUGUST 14th, 2013 Wednesday SPHYRE (The Gateway hotel)

:) People ♥ come early!!!!! HAPPY HOURS FROM 7PM To 9:30PM & THE PARTY GOES ON.
BUY 1 GET 1 free on all IMFL & beer (till 9:30 pm) and free UNLIMITED shooters for all the LADIES (till 10:00 pm)

ஆகஸ்ட் 15 அன்று முதலில் எழுந்துகொள்ளும் தாத்தா பாட்டிகள் தேசபக்திப் பாடல்களை கேட்டு முடிக்க, பின்னர் எழுந்துகொள்ளும் நாம் நடிகர் அர்ஜுன் தன் கையில் ஏன் தேசியக் கொடியைப் பச்சைகுத்திக்கொண்டார் என்ற பேட்டியைப் பார்த்துவைக்க, குடும்பம் மொத்தமும் அசட்டு நிகழ்ச்சிகளின் நடுவில்;. தங்கள் அம்மாவிற்கு 'இந்துலேகா பிரிங்கா' உபயோகப்படுத்தினால் நீளமான தலைமுடி வளரும் என்பதான விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு வளரும் நம் குழந்தைகளை நினைத்தால் பயமாக இருக்கிறது.

* - *

நான் ஸ்கூல் படித்த போது பல வீடுகளில் டிவி ஆண்டனா போட ஆரம்பித்துவிட்டார்கள். டைனோரா, சாலிடெர், கீதாஞ்சலி ஐயர், ஒலியும் ஒளியும், கிரிக்கெட் மேட்ச் பற்றி எல்லாம் எங்கள் காதில் விழும். ஏதாவது நல்ல புரோகிராம் வந்தால் யார் வீட்டில் போய் பார்ப்பது என்பதுதான் எங்களுக்குப் பெரிய சவாலான விஷயம்.

திருச்சியில் நாங்கள் இருந்த போது, அப்பா ஒரு முக்கியமான முடிவை எடுத்தார் அது டிவி வாங்க கூடாது என்பதுதான். பல முறை நானும் என் தம்பிகளும், அம்மாவும் சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்ச்சி பார்க்கலாம் ஆனால் அப்போது எல்லா நிகழ்ச்சிகளும் முக்கியமாக இருந்தது!

வீட்டுக்கு வருபவர்கள் "என்ன! வீட்டில் டிவி கிடையாதா?... சும்மா ஜோக் அடிக்காதீங்க சார்" என்று எங்கள் வீட்டை ஏதோ மியூசியம் போல் பார்த்தார்கள்.

"என்ன பையனை ஐஐடி அனுப்பவதாக உத்தேசமா ?"

"ஏன் சார் டிவி வாங்கவில்லை"

போன்ற கேள்விகளுக்கு அப்பாவின் பதில் சின்னதாக ஒரு சிரிப்போ அல்லது "காபி சாப்பிடுகிறீர்களா?" என்பதாகத்தான் இருக்கும்.

விருந்தாளி காபி குடித்துவிட்டு, "என்ன தான் சார் காரணம்?" என்று திரும்பக் கேட்டால், "நீங்களே காரணம் சொல்லுங்களேன்" என்று அவர்கள் எந்தக் காரணம் சொன்னாலும் அதுதான் என்பார்.

கொஞ்ச நாள் கழித்து நாங்கள் டிவி பற்றிய பேச்சை விட்டுவிட்டோம் . டிவி இல்லாமல் பழக்கமாகி, "இன்னிக்கு சாயங்காலம் உத்தம புத்திரன்", "விடிகார்த்தால மூன்று மணிக்கு கிரிக்கெட் மேட்ச்", "புதுசா சன் டிவி ஆரம்பித்திருக்கிறார்கள்"... என்று எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.

நான் காலேஜ் படிக்கும் போது அப்பா என்னுடன் நைட் ஷோ படம் பார்க்க வந்தார். ஆனால் கடைசி வரை டிவி மட்டும் வாங்கவில்லை.

சென்னையில் வேலைக்குச் சேர்ந்து ஒரு முறை விடுப்பில் திருச்சிக்கு சென்றிருந்த போது, அப்பாவுடனான பேச்சில் டிவி பற்றியும் வந்தது.

"நான் ஏன் டிவி வாங்கலை தெரியுமா?"

"எங்க படிப்புக்காக..."

"இல்லை... டிவி இருந்தாலும் நீங்க படிச்சிருப்பீங்க. டிவி வாங்கியிருந்தா வேற என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப் பார்.. உங்களோட எல்லாம் இவ்வளவு பேசியிருக்க முடியுமா? வீட்டில் ஏதோ ஒன்னை இழந்திருப்போம்" என்றார்.

இந்த விஷயத்தைப் பற்றி சுஜாதாவிடம் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் தன்னுடைய 'அப்பாவின் ஆஸ்டின்' என்ற கதையை நினைவுகூர்ந்தார். 'அப்பாவின் ஆஸ்டின்' என்ற சுஜாதாவின் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அதில் சுஜாதாவின் அப்பா அழுக்கு கலரில் ஒரு ஆஸ்டின் கார் வாங்குவார். குடும்பத்தில் எல்லோரும் அதன் கலரை மாற்றச் சொல்லியும் மாற்றாமல் இருப்பார். பிறகு ரிடையர் ஆன பிறகு விற்றுவிடுவார். அவர் ஏன் நாங்கள் எல்லோரும் சொல்லியும் கலர் மற்றவில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பிறகு "He had a message for us" என்றார்.

* - * - *

டிவி இல்லாத அந்த நாள்களில் என்ன செய்தேன் என்று யோசிக்கும் போது, சிவகாமியின் செல்வன், பொன்னியின் செல்வன் மற்றும் பல புத்தகங்கள், பத்திரிகைகள் படித்தேன். ஓவியம் வரைந்தேன். புத்தகங்களை நானே பைண்ட் செய்தேன். சைக்கிளை பள பள என்று துடைத்தேன் அப்பாவுடன் கேரம் போர்டு, ரம்மி விளையாடினேன். கோயிலுக்குச் சென்றோம்.. முக்கியமாக நிறைய நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

கல்கியில் 1990-இல் சிவகாமியின் சபதம் நடுப்பக்கத்தில் ம.செ ஓவியத்துடன் வந்துகொண்டு இருந்தது. அதைப் படித்த பிறகு ஒழுங்காக கிழித்து நானே பைண்ட் செய்த பிரதி இன்னும் என்னிடம் இருக்கிறது. மீண்டும் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்துகொண்டு இருந்தது. ஆனால் வழக்கமாகச் சொல்லும் 'நோ டைம்' என்ற காரணத்தால் அதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன்.

கடந்த ஒரு வாரமாக 'பாம்பே' கண்ணன் அவர்களின் சிவகாமியின் செல்வன் ஒலிப் புத்தகத்தை காரில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். பள்ளிக்கூட காலத்தில் ஞாயிறு மதியம் திரைச்சித்திரம் என்று நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் சிறுகதைகளைப் படிப்பார்கள். அப்போது அகிலன் கதைகளைக் கேட்ட ஞாபகம். கதையில் வரும் உரையாடல்களை ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காண்பிப்பார்கள். எனக்கு தெரிந்து இது தான் ஒலிப் புத்தகத்துக்கு முதல் வித்து என்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட அதே ஃபார்மெட்டில் சிவகாமியின் சபதத்தையும்  தற்போது பொன்னியின் செல்வனும் வந்துள்ளது. புத்தகத்தை ஏதோ தயாரிக்க வேண்டும் என்று தயாரிக்கவில்லை. தன் ஆன்மாவை அதற்குத் தந்துள்ளார் கண்ணன்.

புத்தகம் படிக்கும் போது, அந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டவர் என்று நாம் ஒரு கற்பனை உலகில் சஞ்சரிப்போம், அந்த அனுபவம் படமாகப் பார்க்கும் போது அடிப்பட்டு விடும். ஆடியோ புத்தகத்தில் அது கிடையாது... உங்களுக்காக ஒருவர் அழகாகப் படித்துக் காண்பிக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் விதவிதமான குரல்களைக் கொண்டு, பின்னணி இசையுடன் கேட்கும் போது அந்த அனுபவம் அலாதியாக இருக்கிறது.

சி.ச புத்தகம் படிக்கையில் வஜ்ரபாஹு கதாபாத்திரம் முதலில் வரும் போது, நமக்கு அது மாறுவேடத்தில் உள்ள பல்லவச் சக்கரவர்த்தி என்று தெரியாது. பிற்பாடு அது நமக்குத் தெரியவரும்போது ஒரு வாசிப்பின்பம் கிடைக்கும். ஒலிப் புத்தகத்தில் குரலை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம் அதனால் அது மிஸ்ஸிங்!.

நிச்சயம் இந்த ஆடியோ புத்தகம் வயதானவர்களுக்கு பெரிய உபயோகமாக இருக்கும். அசட்டு சீரியலைப் பார்ப்பதற்கு பதில் இதை கொஞ்ச நேரம் கேட்கலாம். அருமையான இந்த முயற்சிக்குக் கண்ணனை வாழ்த்துகிறேன்.