Wednesday, April 28, 2010

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்
மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும்.

பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம்.

தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும்.

அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட்டோம். பந்தை ஸ்டிராங்காக்க வெய்யிலில் காய வைத்தால் சூட்டுக்கு பிளந்துவிடும், அல்லது அணில் வந்து கடித்துவிடும். உருட்டிய பந்தைக்கொண்டு ஓர் ஓவர் கூட இதுவரை விளையாடியதில்லை.இந்த மரத்தின் தாவர பெயர் Samanea saman என்று ஹிந்தி பட டைட்டில் மாதிரி இருந்தாலும், இந்த மரத்துக்கு பெயர் 'ரெயின் டிரீ' ( Rain Tree ). மெக்ஸிகோ பிரேசிலிலிருந்து வந்தது என்று சொல்லுகிறார்கள். தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர்.

இந்த மரத்துக்கு கீழே வளரும் புல் செழிப்பாக இருப்பதையும், முழுவதும் பூத்திருக்கும் மரத்த்தில் இந்த பூக்கள் கொட்டும் போது அடுத்த முறை ரசித்து பாருங்கள்.

- * - * - *

விதூஷகன் சின்னுமுதலி என்ற சிறுகதை, கல்கி 1930 விமோசனம் இதழில் எழுதியது. விதூஷகன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஜெஸ்டர்(Jester) என்று பொருள். "Gopal the Jester" என்ற "அமர் சித்ர கதா" காமிக் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம். அரசவையில் வேலைக்கு வைத்திருக்கும் புத்திசாலியான கோமாளி என்று வைத்துக்கொள்ளலாம். தெனாலிராமன் கூட விதூஷகன் தான்.

பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் தெருக் கூத்தில் ராமாயணமோ, மஹாபாரதமோ விதூஷகன் என்று ஒரு கதாப்பாத்திரம் வரும். ஷேக்ஸ்பியர் நாடங்களில் வரும் க்ளவுன் கதாபாத்திரம், பாலச்சந்தர் படத்தில் அதிகப்பிரசங்கி கதாப்பாதிரம் இந்த வகை தான். கல்கி கதையில் வரும் விதூஷகனால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், அவன் வாழ்க்கையில் அவனும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ? என்பதே கதை.கல்கி கதையில் வரும் சின்னுமுதலி என்ற இந்த விதூஷகன் சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் இருப்பவன், எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனுடைய நடை உடை பாவனை, பட்லர் ஆங்கிலம், வாய்க்கு வந்த படி பாடலுடன், சர்க்கஸ் கோமாளி மாதிரி அவன் செய்யும் செய்கையால் அவன் ரொம்ப பிரபலம். தேங்காய் மூடி கச்சேரி செய்யும் பாகவதர் மாதிரி இவன் செய்யும் வேலைக்கு தேங்காய், வாழைப்பழம், முறுக்கு போன்றவை தான் கிடைக்கிறது. மனைவியும், பிள்ளையும் செய்யும் நெசவுத் தொழிலில் குடும்பம் பிழைக்கிறது. இவனுக்கு குடிப் பழக்கம் வேற இருப்பதால் குடும்பம் கஷ்டப்படுகிறது.

மேடை நாடகங்களில் நாம் பார்க்கும் கோமாளிகளும், சினிமாவில் காமெடி என்ற பெயரில் அடிவாங்குபவர்களும் அவர்கள் வீட்டில் அதை பார்த்தால் அவர்களின் மன நிலை எப்படி இருக்கும் சில சமயம் யோசித்ததுண்டு. முதல் முதலில் விதூஷகனின் மனைவி இவன் செய்யும் கூத்தை பார்க்கிறாள். கல்கி அதை இப்படி விவரிக்கிறார்.

"கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசிங்கமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்."

என்னை கவர்ந்தது இந்த கதையின் முடிவு தான். நான் இந்த கதையை எழுதியிருந்தால், கடைசியில் "அவன் கால் ஒற்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும்" என்ற வரியுடன் கதையை முடித்திருப்பேன். கல்கி இதற்கு அப்பறம் கூட மூன்று வரிகள் எழுதியிருக்கார். இரண்டு விதமான முடிவிலும் சுவாரஸியம் இருக்கு. அதை வாசகர்கள் அனுபவிக்கலாம்.

இந்த கதையின் அமைப்பை பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளில் பார்க்கலாம். நிச்சயம் படிக்க வேண்டிய கதை.

http://www.chennailibrary.com/kalki/mis/vidhushaganchinnumudhali.html

- * - * - * -தோசைக்கு சிறந்த இடம் பெங்களூரு. சென்னை தோசை மெல்லிசான வாயில் புடவை மாதிரி என்றால், பெங்களூரு தோசை கனமாக பட்டு புடவை மாதிரி. மசால் தோசைக்கு பூர்வீகம் மைசூர். தோசைக்கு நடுவில் உருளைக்கிழங்கை வைத்தால் நமக்கு மசால் தோசை ஆனால் பெங்களூர்/மைசூரில் தோசையில் சிகப்பு சட்னி தடவி பிறகு உருளைக்கிழங்கு வைத்தால் தான் மசால் தோசை. சிகப்பு சட்னிக்கு தான் மசாலா!.

தாவங்கரே பென்னே தோசை பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். பெங்களூரு 'புல் டெம்பிள்' ரோட்டிலும், பனசங்கரியில் ஏதோ ஒரு சந்திலும், ராஜாஜி நகர் நேஷனல் ஸ்கூல் பக்கமும் இந்த கடை இருக்கிறது.

பெண்கள் முகத்துக்கு கிரீம் பூசிக்கொள்ளும் போது பார்த்திருக்கலாம்- நெற்றியில் கொஞ்சம், இரண்டு கன்னத்திலும் கொஞ்சம், மோவாக்கட்டையில் கொஞ்சம் கடைசியாக மூக்கில் கொஞ்சம் தடவிய பின் முகம் முழுக்க பூசிக்கொள்ளுவார்கள். தாவங்கரே தோசையில் கிரீமுக்கு பதில் வெண்ணை மற்றபடி எல்லாம் அதே மாதிரிதான்.எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் புள்ளையார் கோயில் பக்கம் திடீர் என்று இரண்டு வாரத்துக்கு முன்பு தள்ளுவண்டியில் தோசைக் கடை ஒன்று முளைத்தது. ஹோண்டா சிட்டியும், ஆட்டோக்களும் க்யூவில் நிற்க பின்னாடி நான் போய் செர்ந்துக்கொண்டேன்.
ஒரு கரண்டி மாவில் தோசை. நாற்பது வகைகள் செய்கிறார்கள்.

ஒரு தள்ளுவண்டி, இரண்டு கரி அடுப்பு, அதற்கு மேல் தோசைக் கல். கல் என்றால் நிஜ கல் இரும்பு கிடையாது. பன்னீர் ஊத்தப்பம் ஆர்டர் செய்தேன். ஊத்தப்பத்தை ஏதோ பிட்சா மாதிரி வெட்டி தந்தார்கள். எப்படி தோசைக்கு நடுவில் பன்னீர் ஸ்டஃப் செய்தார்கள் என்று அடுத்த முறை கவனிக்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் இந்த கடையை நடத்துபவர் சதீஷ். மாலை நாலு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் இவர் 60-70 தோசைகளை விற்கிறார். இப்போது எல்லாம் இரவு வாக்கிங் போய்விட்டு வருகிறேன் என்றால் வீட்டில் எனக்கு பர்மிஷன் கொடுப்பதில்லை.

Saturday, April 17, 2010

மேல்கோட்டையில் ஒரு நாள்

மேல்கோட்டைக்குப் பல முறை சென்றிருந்தாலும், கடந்த மாதம் 25ஆம் தேதி அங்கு பிரசித்திபெற்ற ‘வைரமுடி’ உத்ஸவத்தைக் கண்டுகளித்தது மறக்க முடியாத அனுபவம்.

“எக்கசக்கமா கூட்டம் இருக்கும், காரை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திவிடுவார்கள்” போன்ற எச்சரிக்கைகளைக் கேட்டுவிட்டு பெங்களூர் மைசூர் ரோட்டில், ராம் நகரத்தில் இருக்கும் ‘காமத் லோகருச்சி’ ஹோட்டலை அடைந்தபோது காலை எட்டரை மணி. தென்னை ஓலை இட்லியை சாப்பிட்டுவிட்டு மேல்கோட்டை சென்றபோது மதியம் பன்னிரண்டு மணி.

மேல்கோட்டை மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் இருக்கிறது. பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில் மாண்டயாவிலிரிந்து சுமார் 25 கிமீ தூரத்தில், 150 மீட்டர் உயரத்தில் உள்ள தட்டையான பகுதிதான் மேல்கோட்டை என்ற ஊர். 1991ஆம் கணக்கின் படி இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை 2685. தற்போது இதைவிட 100 பேர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம். உடல்நலத்துக்கு உகந்த இடமாகவும், வேளாண்மை நிலங்கள், நீர் நிலைகள் சூழ்ந்த, ஃபேண்டஸி கதைகளில் வருவது போன்றது இந்த ஊர்.

மேல்கோட்டை என்ற பெயர் 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் வருகிறது. யாதவகிரி என்ற பெயர் 12ஆம் நூற்றாண்டு ஒய்சாள கல்வெட்டில் கிடைக்கிறது. ஆக பழமையான பெயர் யாதவகிரி, ஒய்சாள அரசர்களின் வம்சமான யதுவம்சம் கூட காரணமாக இருக்கலாம். இந்த ஊரைச் சுற்றி இருக்கும் ஒன்பது பத்து உடைந்த தூண்கள் முன்பு இங்கே ஒரு பெரிய கோட்டை இருந்ததற்கான வரலாற்றுச் சுவடுகள். இந்த இடம் ஒரு காலத்தில் இராணுவத்தளமாகக் கூட இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

melkote_narashimar_3

கோயிலுக்குத் தெற்குப் பக்கம் பழைய கோட்டையின் வாயில் கதவு என்று எண்ணத் தோன்றும் ராயகோபுரம் இருக்கிறது. கோபால ராய கோபுரம் என்றும் இதற்கு பெயர். தமிழ் சினிமா இந்த நான்கு தூண்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. பல படபிடிப்புக்கள் இங்கே நடந்திருக்கிறது. இந்தத் தூண்களில் இருக்கும் சிற்பங்களில் இருக்கும் நங்கைகளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம் இவை ஒய்சாள மன்னர்களின் கைவண்ணம் என்று. இதே போலச் சிற்பங்களை ஸ்ரீரங்கம் வேணுகோபாலன் சன்னதியில் பார்க்கலாம்.

மேல்கோட்டையிலிருந்து பிரியும் பள்ளத்தாக்கிலிருந்து போகும் கற்சாலை தெற்கே ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கும் கிழக்கே தொண்டனூருக்கும், வடக்கே நாகமங்கலாவுக்கும் செல்வதைப் பார்க்கலாம். இந்த மூன்று இடங்களும் இடைப்பட்ட கால கட்டத்தில் முக்கியமான இடங்களாகக் கருதப்படுகிறது.

மாண்டைவிலிருந்து மேல்கோட்டை செல்லும் போது இரண்டு பக்கமும் பசுமைக் காட்சிகள் நன்றாக இருக்கிறதே என்று நினைத்த போது ரயில்வே கேட் போட, அந்த சமயத்தில் அந்தப் பசுமைகளை நின்று ரசிக்க முடிந்தது. நிற்க வைத்த ரயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு மேல்கோட்டைக்குச் சென்ற போது மத்தியானம் 12 மணி.

melkote_nature

கோயிலுக்குப் பின்புறம் ஒரு மண்டபத்தில் பெரிய தொன்னையில் எல்லோருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம், சக்கரைப் பொங்கல் என்று கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். கூட்ட நெருக்கடி, அடிதடி, குலம் என்கிற வித்தியாசம் எதுவும் இல்லாமல் எல்லோரும் வரிசையில் தொன்னையில் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். தொன்னை என்றால் நீங்கள் நினைக்கும் தொன்னை இல்லை, இந்த தொன்னையில் சின்ன கைக்குழந்தையைக் கூட உட்கார வைக்கலாம்!

மேல்கோட்டையில் மலை உச்சியில் இருக்கும் நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தம்.

வைரமுடி உற்சவம் ஆரம்பிக்க மாலை 6 ஆகும் என்பதால், மலை உச்சியில் இருக்கும் நரசிம்மர் கோயிலுக்குக் கிளம்பினேன். நரசிம்மர் கோயில் மலை அடிவாரத்தில் கல்யாணி தீர்த்தம் (குளம்) அழகான ஓர் இடம். குளக்கரையில் இருக்கும் சின்னச் சின்ன கோயில்களும், மண்டபங்களும் மிகுந்த கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். மிகுந்த புனிதத் தன்மையுடன் விளங்கும் இந்தக் குளத்தில் ஸ்ரீராமானுஜர் குளித்தார் என்றும் சொல்லுவார்கள். குளக்கரையில் இருக்கும் சில மண்டபங்களில் மக்கள் கிறுக்கித் தள்ளியுள்ளார்கள். ஒரு அம்மா வாட்டர் பாட்டில் கொண்டு தன் குழந்தைக்கு அலம்பி விட்டுக் கொண்டு இருந்தார். அரசங்கம் இந்த புராதன சின்னங்களை பாதுகாக்க முதலில் ஒழுங்கான கழிப்பறைகளைக் கட்ட வேண்டும்.

நரசிம்மர் கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் மண்டபங்களை பழைய காலத்துப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்று அரசு அறிவித்திப்பதை பார்க்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒழுங்காகப் பாதுகாக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழி நெடிகிலும் கள்ளி மந்தாரை பூத்திருக்கிறது. மொத்தம் 400 படிக்கட்டுக்கள் இருக்கின்றன, கிட்டத்தட்ட பத்து படிக்கு ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு சின்னப் பையன், ஆர்மோனியப்பெட்டியை ஒரு கையில் இயக்கிக்கொண்டு மறுகையில் மழலை மாறாமல் ஸ்ரீநிவாசர் பாட்டைப் பாடிக்கொண்டு பாட்டுக்கு நடுவே பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தது மனதை என்னவோ செய்தது. மேலே சுமாரான பராமரிப்பால் நரசிம்மர் கோயில் கோபுரத்தில் உள்ள சட்டம் எல்லாம் வெளியே தெரிந்துக்கொண்டு இருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் நரசிம்மர் மூர்த்தி/விக்ரஹம் பிரஹலாதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லுவார்கள். இன்னொரு கதையும் இருக்கிறது. திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி பெரும் சேனையுடன் திருநாராயணபுரத்தை நோக்கி வந்துக்கொண்டு இருந்த போது, படை யானைகள் உடல்நலம் குன்றி நோய்வாய்ப்பட்டன. அங்கிருந்த ஒருவர் கூறிய யோசனையால் நரசிம்மரை வேண்ட அவை குணமடைந்தன. அதனால் ஹைதர் அலி மகிழ்ந்து நரசிம்மருக்கு ஓர் பெரிய பறையைச் சமர்ப்பித்தான் என்று சொல்கிறார்கள். இன்றும் பூஜை வேளையில் ஒலிக்கப்படும் இந்தப் பறையின் ஒலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கேட்கலாம் என்கிறார்கள்.

நரசிம்மர் கோயில் சொல்லும்போது ஒரு தூணில் புத்தர் உருவம் செதுக்கப்பட்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த நரசிம்மர் கோயிலின் காலம் ஒய்சாளர்களில் கடைசிகாலமாகவோ அல்லது விஜயநகர ஆரம்ப காலமாகவோ இருக்கலாம். நரசிம்மர் கோயில் மேலேயிருந்து சுற்றியுள்ள கிராமங்களைப் பார்க்கலாம். பக்கத்தில் எந்த ஐ.டி கம்பெனியும் வராமல் இருப்பதால் சுற்றியுள்ள கிராமங்கள் இன்னும் கற்புடன் இருக்கின்றன.

நரசிம்மர் கோயில் அடிவாரத்தில் சின்னதாகப் பாறையில் குகை போல இருக்கும் இடங்களில் பாண்டவர்கள் முன்பு ஒரு காலத்தில் ஒளிந்துக்கொண்டதாகச் சொல்லுகிறார்கள். அவற்றின் கோபுரம் சோழ, பாண்டிய சாயலில் வியக்க வைக்கிறது.

melkote_thiruviza_street

கீழே இறங்கி வந்த போது ராஜவீதி என்னும் கடைத்தெருவில் திருவிழாக் கூட்டம். முதலில் என் கண்களில் பட்டது இனிப்புக்கடைதான். செங்கலை விடக் கொஞ்சம் பெரிசாக மைசூர் பாக் இருப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவரிடம் ஒரு மைசூர் பாக் என்ன கிலோ இருக்கும் என்று கேட்க நினைத்துக் கிட்ட போக உடனே அவர் நான் ஏதோ வாங்க வந்திருக்கும் கஸ்டமர் என்று நினைத்து, நம்ப மாட்டீர்கள், ஒரு பாதி மைசூர் பாக்கை என்னிடம் சாம்பிளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பயந்து கொண்டு ஓடிவிட்டேன். பத்து கடைக்கு ஒரு கடை இந்த மாதிரி இனிப்புக்கடைதான். கூடவே பெரிய பையில் பொரி விற்கிறார்கள். சொல்லி வைத்தாற் போல் எல்லா ஸ்வீட் கடைக்கு மேலேயும் சில குரங்குகள் இருக்கின்றன.

அப்படியே நடந்து வந்தபோது ஊர் திருவிழாக் கோலமாக மாறியிருந்தது. மூங்கீல் கூடை, ஜூஸ் கடை, புளி, சீயக்காய், கோலம் அச்சு என்று பல கடைகளில் வியாபாரம் சூடாக நடந்து கொண்டிருந்தது.

நடந்து வரும் போது, ஒருவர் ஸ்ரீவைஷ்ணவரா இல்லை காங்கிரஸ்காரரா என்று அடையாளம் தெரியாமல் இருந்தார். நெற்றியில் பெரிய திருமண் அணிந்துக்கொண்டு , கழுத்து நிறைய மாலை. மாலையில் ரூபாய் நோட்டுக்கள், ரங்கநாதர் படம் கூடவே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி படங்கள் என்று நான் குழம்பிப் போனேன். எல்லோர் பார்வையும் இவர் மேல் தான் இருந்தது. அவர் யாரையும் சட்டை செய்யாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். இவ்வளவு கவர்ச்சியாக இருப்பவரைப் படம் எடுத்த போது திடீர் என்று அவர் முகத்தில் அதைப் பார்த்தேன் - வெட்கம்.

முதலமைச்சர் வருகிறார் என்ற செய்தி பரவியபோது அமைதியாக இருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் வந்தது. வைரமுடி உற்சவம் ஆரம்பிக்க கொஞ்சம் நேரம் இருப்பதால் திருநாராயண கோயிலைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

எல்லா கோயில்களுக்கும் ஸ்தல புராணம் இருப்பது போல மேல்கோட்டைக்கும் இருக்கிறது. யாதவகிரி மாஹாத்மியம் என்பதில் விரிவாக இருக்கிறது. வரலாற்றில் ஆர்வம் இருப்பவர்களுக்கு நம் நாட்டில் இருக்கும் கோயில்கள் வரப்பிரசாதம்தான். இங்கே இருக்கும் கல்வெட்டுக்கள், கோயிலின் அமைப்பு என்று பல விஷயங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உபயோகமாக இருக்கின்றன. அவை இல்லாமல் இருந்தால் நம் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டிருக்கவே முடியாது. மேல்கோட்டைக்கு மற்றொரு பெயர் யதுசைலம். இந்தப் பெயர் ராமானுஜர் காலத்துக்குப் பிறகு வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இன்று இருக்கும் பல ஸ்தல புராணங்களில் இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக இந்த ஸ்தல புராணங்கள் ராமானுஜர் காலத்துக்குப் பிறகு வந்ததாகத் தெரிகிறது. கோயில் பற்றிய பல குறிப்புகள் குருபரம்பரையில், குறிப்பாக ரராமானுஜரைப் பற்றிய பகுதியில் கிடைக்கிறது. சில கன்னட நாட்டுப்பாடல்கள் மற்றும் சில சமஸ்கிருத நூல்களிலும் மேல்கோட்டை பற்றி சில குறிப்புக்கள் வருகின்றன. இந்த நூல்கள் எல்லாம் 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தவிர வேதாந்த தேசிகன் (1268-1379), பிள்ளை லோகாச்சாரியார் (1264-1327) நூல்களில் உள்ள குறிப்புகள் மேல்கோட்டை பற்றிய குறிப்பில் மிக பழமையானவை.

இன்று மேல்கோட்டை மிகப் பிரபலமானதற்குக் காரணம் ராமானுஜர் இங்கே 12 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதால்தான். ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் மேல்கோட்டையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு ராஜமுடி உற்சவத்துக்குச் செல்லலாம்.

கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் ராமானுஜர் தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த பிட்டிதேவன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான்.

மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். (ராமானுஜருக்குத் திருமண் கிடைத்த விவரம் பற்றி ஒரு 13ஆம் நூற்றண்டுக் கல்வெட்டு இருக்கிறது) ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். (ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது, பால் பச்சை கற்பூரம் கொண்டு தயாரிப்பதாகக் கடைக்காரர் சொன்னார்).

கோயில் உற்சவத்துக்கு உற்சவ மூர்த்தி தேவை என்று ராமானுஜர் விரும்ப, மீண்டும் அவர் கனவில் பெருமாள் தோன்றி டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் ராமப்ரியராக இருக்கிறேன் என்று கூற, ராமானுஜர் டெல்லிக்கு புறப்பட்டார்.

melkote_pillars

ராமானுஜர் டெல்லி பாதுஷாவின் அரண்மனைக்குச் சென்று முறையிட்டபோது பாதுஷாவும் தன் கருவூலத்தில் இருந்தால் எடுத்துக்கொள்ளும்படி சொல்ல, ராமானுஜர் அதை தேடிப் பார்த்தபோது காணவில்லை. அந்த உற்சவ மூர்த்தி பாதுஷாவின் மகளின் அந்தபுரத்தில் விளையாட்டுப் பொருளாக இருந்ததை யூகித்து கைத்தட்டி “யதிராஜ சம்பத் குமாரா, என் செல்வப்பிள்ளையே ஓடிவா” என்று அழைக்க அதைக் கேட்ட பெருமாள் தனது கால்சலங்கை ஒலிக்க ஓடி வந்து ராமானுஜர் மடிமீது அமர்ந்தார் என்கிறது குருபரம்பரைக் கதை. [ராமானுஜர் சன்னதியை நிர்வகிப்பவரின் வீட்டில் தங்கியிருந்த போது அவர்கள் வீட்டுக் கோவில் ஆழ்வார் சன்னதியில் (வீட்டின் பூஜை அறை) ராமானுஜர் மடி மீது அமர்ந்த செல்வப்பிள்ளை விக்ரஹத்தைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் வீட்டில் ராமானுஜர் தன் கைப்பட எழுதிக் கொடுத்த ஓலைச்சுவடியில் 'ராமானுஜர்' என்ற கையெழுத்துடன் இருக்கிறது என்கிறார்கள். அடுத்த முறை அந்த பற்றி மேலும் விசாரித்து எழுதுகிறேன்].

அன்றிலிருந்து யதிராஜ சம்பத் குமாரன் என்று அழைக்கப் பெற்றார் உற்சவர். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான மாசி கேட்டை “டில்லி உத்சவம்” என்று இன்றும் கொண்டாடப்படுகிறது. டெல்லி பாதுஷாவின் மகள் தன் ஆசைப் பெருமாளை பிரிய மனமில்லாமல் மேல்கோட்டை வந்து பெருமாளுடன் ஐக்கியமானாள் என்று குருபரம்பரைக் கதை முடிகிறது. இவர் தான் ‘பீபி நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறாள். கன்னட நாட்டுப்புற இலக்கியத்தில் இவருக்குத் தனி இடம் உண்டு.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. டில்லியிலிருந்து செல்வப்பிள்ளையை கொண்டு வந்தபோது அவருக்கு ஜாதி பேதம் பார்க்காமல் ஹரிஜன மக்களும், மலைவாழ் மக்களும் உதவினர். அவர்களுக்கு ‘திருக்குலத்தவர்’ என்ற பெயரிட்டு அவர்களுக்கு ஆலயப் பிரவேச அனுமதி கொடுத்து கௌரவித்தார் ராமானுஜர்.

அவர்களுக்கு வைரமுடி போன்ற பல உற்சவங்களுக்கு விசேஷ தரிசனம் செய்து கொடுத்தார். பெருமாள் புறப்பாட்டின்போது, வாத்தியம் வாசிக்கும் உரிமை ஹரிஜன இனத்தைச் சேர்ந்தவருக்கே இன்றும் உள்ளது.

இங்கே இருக்கும் பெருமாளின் பெயர் யதிராஜன் - இளவரசன் என்று பொருள். (ராமானுஜருக்கும் யதிராஜர் என்று பெயர்). ராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது இன்றும் ‘தமர் உகந்த திருமேனி’ என்று போற்றப்படுகிறது. ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் உங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப் ‘பேசும் ராமானுஜர்’ என்று அழைக்கிறார்கள்.

கோயிலுக்குள் இருக்கும் தூண்களில் வேலைப்பாடுகள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. எல்லாத் தூண்களும் பல கதைகள் சொல்லுகின்றன. கல்லைக் குடைந்து எப்படி இவ்வாறு செய்ய முடிந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் எழுத்துக்களால் அதை விவரிப்பது முடியாத ஒன்று. கோயிலுக்கு வெளியில் இருக்கும் துவஜஸ்தம்பம் கம்பீரமாக ஒரே கல்லில் 45 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஒரு பக்கம் ஹனுமார், மறுபக்கம் கருடன் என்று அதற்கு முன் விளக்கு ஏற்றி அதைச் சின்னக் கோயிலாகவே ஆக்கிவிட்டார்கள். நான் பார்த்த சமயம் அந்த கோயில் நிர்வாகி போல இருப்பவர் குச்சி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

இப்போது வைர முடி உத்சவத்தைப் பார்க்கலாம். சரியாக மாலை 6:30 மணிக்கு “சார் எங்கே இருந்தால் பெருமாளை நல்லா தரிசிக்க முடியும்?” என்று ஒருவரிடம் கேட்க அவர் நீங்களே பார்க்கக் கூடாது என்று நினைத்து ஒதுங்கினாலும் அவர் உங்களைத் தேடி வந்து தரிசனம் தருவார் என்றார்! சரி பார்க்கலாம் என்று கோயில் மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டேன். கோயிலைச் சுற்றி கூட்டம்; 2500 பேர் இருக்கும் ஊரில் 70,000 பேர் வந்தால்? முதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வந்தார். பிறகு வைரமுடி என்று அழைக்கப்படும் கிரீடம் பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வந்தது.

இந்த வைரமுடி என்ற வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மாண்டய கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். இந்தக் கிரீடம் யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் வருடத்துக்கு ஒரு முறை இந்த விலை உயர்ந்த கிரீடம் சில மணி நேரம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

melkote_rajamudi

சுமார் 7:30 மணிக்கு பெருமாள் இதை அணிந்துக்கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார். எல்லாத் திசைகளிலும் பெருமாளை அழைத்து செல்லுகிறார்கள். யாராவது நான் பெருமாளைச் சேவிக்கவில்லை என்று சொன்னால் அவர் நிச்சயம் பொய் சொல்கிறார் என்று சொல்லிவிடலாம். பிறகு விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு பெட்டியில் சீல் செய்கிறார்கள். பிறகு ராஜ முடி அணிந்துக்கொள்கிறார்.

மைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ உடையார் வைரமுடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்று புத்தகங்கள் சொன்னாலும், கூட்டம் ராஜ முடி என்று அழைக்கிறது. ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே அவர் இளவரசன் போல நடந்து செல்கிறார். நம்மாழ்வார் சொன்ன “கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்” வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. ராஜமுடியை அணிந்துக்கொண்டு பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்கியபின் பெருமாள் ரெஸ்ட் எடுக்க உள்ளே செல்கிறார்.

நான் பார்த்து ரசித்த காட்சிகள் சிலவற்றை இங்கே வாசகர்களுக்குத் தந்துள்ளேன்.(இக்கட்டுரையிலுள்ள புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்தவர் கட்டுரையாசிரியர் தேசிகன். புகைப்படங்கள் மீது க்ளிக் செய்தால் பெரிதாக்கிப் பார்க்கலாம். இன்னும் சில புகைப்படங்களை பார்க்க இங்கே செல்லவும்).

Tuesday, April 13, 2010

கூடு விட்டு கூடு

 கூடு விட்டு கூடு என்ற தலைப்பில் கூடு இணையதளத்துக்கு எழுத ஆரம்பித்திருக்கிறேன். இந்த பகுதியில் நான் பார்த்து, ரசித்த காட்சிகள், படித்து ரசித்த சிறுகதை, கட்டுரை, புத்தகங்கள். தினசரி சந்திக்கும் மக்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கேன். இந்த தொடர் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்..

Friday, April 2, 2010

பில்லா

Be aware of God
Beware of Dog

சித்தார்த் ஜான்சன் வீட்டு வாசல் கேட்டில் இப்படி எழுதியிருக்கும்.

நாய்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. காலை தூக்கிக்கொண்டு கம்பத்தின் மீது ‘உச்சா’ போவதைப் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தான். நைட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது பின்தொடர்ந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் நடப்பது போல பாவனை செய்வேன். ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்பார்கள். கடிக்கும் போது நாயால் எப்படிக் குரைக்க முடியும்?  அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்கள். கடிக்கும் என்ற வார்த்தையை “கடி+ க்க் + உம்” என்றும் எழுதலாம். ஆங்கில இலக்கணத்தில் இதை ஸ்டிராங் வெர்ப்(Strong verb) என்கிறார்கள். தமிழில் வல்வினையாம். சொற்களுக்கு நடுவில் “க்க்” வந்து வார்த்தையை வல்வினையாக்குகிறதாம். இப்பொழுது நீங்களே ‘அக்’கென்று கடித்துப் பாருங்கள்; ‘க்க்’ சத்தம் வரும். (உடனே ‘அக் அக்’னு கடிச்சுப் பார்க்காதீங்க.) கடைசியில் ‘உம்’ விகுதியில் முடிவதால் எதிர்காலமாகிறது. ‘உம்’ விகுதி பற்றி நாய்க்குத் தெரியாத காரணத்தால் பில்லா வந்த அன்றே என்னைக் கடித்தது. வால்வினையால் வந்த வல்வினை.

என்ன பில்லாவா? என்று கேட்கநினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; சொல்கிறேன். அதற்குமுன் சித்தார்த் ஜான்சனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும்.

சித்தார்த் ஜான்சன் என் கிளாஸ்மேட். ஒரே செக்ஷன். ஸ்கூலில் அட்டண்டஸ் எடுக்கும்போது டீச்சர், ‘சித்தார்த் ஜான்சன்’ என்று கூப்பிடுவதைத் தவிர, அவன் வெறும் ஜான்சன்தான். அவனுடைய அப்பா பெயர் சண்முகம். செட்டியார் என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சர்ச் போக ஆரம்பித்தார். ஒரே காம்பவுண்டுக்குள், எங்கள் வீடு, அவன் வீடு என்று மொத்தம் ஒன்பது வீடுகள் இருந்தன. அந்த காம்பவுண்டே செட்டியாருக்குச் சொந்தம். எங்கள் வீட்டிலிருந்து ஜான்சனுடையது ஐந்தாவது வீடு. பெரிதாக இருக்கும். வீட்டுக்குமுன் வேலி போட்டு தோட்டத்தின் நடுவில் பெரிய துளசி மாடம் இருக்கும். துவாதசியன்று பாட்டி, “செட்டியார் வீட்டிலிருந்து கொஞ்சம் துளசி எடுத்துண்டுவாடா” என்பாள். செட்டியார் வீட்டு வாசலில் இடது பக்கம் ஒரு நார்த்தங்காய் மரம், முதல்மாடி வரை வளர்ந்து நிற்கும். ”நார்த்தங்கா மரம் இல்லை, இது சாத்துக்குடி மரம்” என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். அது காய் காய்த்து யாரும் பார்த்ததில்லை; அதனால் அது என்ன மரம் என்று யாருக்கும் தெரியாது. சரி, எதற்கு சாத்துக்குடி மரம் பற்றி இப்பொழுது சொல்கிறேன் என்றால், நான் ஸ்கூல் விட்டு வந்தபோது சாத்துக்குடி மரத்தின் கீழேதான் ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது.

என்ன கூட்டம் என்று பார்க்க அங்கே போனபோது பில்லாவைப் rjpபார்த்தேன். கன்றுக்குட்டி சைஸுக்கு இருந்தது. எழுந்து நின்ற போது ஜான்சன் அப்பாவின் இடுப்பு லுங்கிவரை இருந்தது. “எங்க வீட்டுக்கு நாய் வரப் போகுது” என்று ஜான்சன் முந்திய வாரம் சொல்லியிருந்தான். “பேர் பில்லா” என்று அதற்கு அட்வான்ஸாக நாமகரணம் பண்ணியிருந்தான். சின்ன பாமரேனியன் நாய்க் குட்டி வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கன்றுக்குட்டி சைஸுக்கு இருந்ததைப் பார்த்த்தும் கொஞ்சம் உதறலாக இருந்தது. “ஒஸ்தி ஜாதி. ராஜபாளையம்!” என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டார்கள்.

பில்லா முக்கால்வாசி பிரவுன் கலராக இருந்தது. கருகின அப்பம் மாதிரி மூக்கு. நாக்கை நீட்டிக்கொண்டு ‘ஹ ஹ′ என்று பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டு, எச்சில் எலாஸ்டிக் மாதிரி ஒழுகிக்கொண்டு இருந்தது. கழுத்துப் பட்டையிலே கொக்கி போட்டு சங்கிலியால் சாத்துக்குடி மரத்தில் கட்டி இருந்ததால் மரத்தைச் சுற்றி பிரதட்சணம் செய்துகொண்டிருந்தது. முதுகுப் பகுதியில் எலும்புகள் தெரிந்தன. அலுமினியத் தட்டில் இருந்த பால் சாதத்தை தான் உண்ணாமல் ஈக்களுக்கு மொய்க்கக் கொடுத்துவிட்டு, எங்கள் எல்லோரையும் பார்த்து குலைத்தது. காலை நீட்டி இரண்டு பக்கமும் உடம்பை வளைத்து சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபோது ஒருவித சூடான வாசனை வந்துகொண்டு இருந்தது. ஜான்சன் அதைத் தடவியபடியே பெருமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நாய் எப்படிடா இருக்கு?” என்று கேட்டான் ஜான்சன்.

“ஹும். பொம்பளை நாய்க்கு எப்படிடா பில்லானு பேர் வைப்ப?”

“உனக்கு எப்படி வைச்சாங்களோ அதே மாதிரி தான்… போடாங்ங்..” என்று முறைத்தான்.

பில்லாவை அன்றே மீண்டும் தனியாகச் சந்திப்பேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஜான்சன் முறைத்தவுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். கிரிக்கெட் எல்லாம் விளையாடிக் களைத்து வீட்டிற்கு வந்து ராத்திரி சாப்பிடுவதற்கு முன்தான் என் ஜியாகரபி புஸ்தகத்தை காப்பி செய்துவிட்டு தருகிறேன் என்று முன்தினம் வாங்கிய ஜான்சன் திரும்பத் தரவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.. அவன் வீட்டிற்கு நான் சென்றபோது, சாத்துக்குடி மரத்தின் கீழே பில்லா படுத்துக்கொண்டிருந்தது. நடுக்கமாக இருந்தாலும், கட்டித்தானே இருக்கிறது என்று தேற்றிக்கொண்டு, ஓசைப்படாமல் மெதுவாக படிமேல் கால்வைத்தபோது  கடித்துவிட்டது.

என்ன நடந்தது என்று விவரிப்பது கஷ்டம்; இருந்தாலும் சொல்கிறேன்.

மெதுவாகத்தான் படியில் ஏறினேன். ஏறும் போது காலுக்கடியில் என்னவோ இருக்கிறதே என்று  நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வாலை மிதித்திருக்கிறேன். பில்லா அப்படியே ‘குபீர்’ என்று என் மீது பாய்ந்தபோது நான் “ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடப் பார்த்தேன்.  பயத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். பில்லா கடித்துவிட்டது. நான் போட்ட அலறலைக் கேட்டு எல்லோரும் வீடுகளிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். லைட் பக்கம் போய்ப் பார்த்தபோது முழங்காலில் சின்னதாக இரண்டு இடத்தில் நாயின் பல் பட்டு ரத்தம் வெளியே வரலாமா யோசிப்பதாக இருந்தது. எனக்கு உடம்பு உதறல் எடுத்தது. யாரோ தண்ணிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பில்லா என்னைப் பார்த்து  “உர் உர்” உருமிக்கொண்டிருந்தது.

“நம்ம பில்லா கடிக்காதே, நீ என்னப்பா செஞ்சே?” என்று அதனுடன் பலபத்து வருடங்கள் பழகியவர்போல் கேட்டார் செட்டியார்.

“வாலை மெதுச்சுட்டேன்னு நினைக்கிறேன்…”

என்னை நாய் கடித்த விஷயம் காம்பவுண்ட் முழுக்க தெரிந்து வீட்டுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் வெளியே வந்துவிட்டார்கள்.

“அடடா பல்லு பட்டிருக்கே”

“இரண்டு இடத்துல பட்டிருக்கு பாருங்க”

“உடனே சைல்ட் ஜீசஸ் ஆஸ்பத்திரி கூட்டிகிட்டு போங்க. யாராவது டாக்டர் இருப்பாங்க”

பில்லா குலைத்துக்கொண்டிருந்தது.

“முதல்ல சோப்பும் டெட்டாலும் போட்டு அலம்புங்க”

“சோப்பு, மஞ்சள் போடுங்க சரியா போய்டும்”

“மாமி அது கட்டிக்குப் போடறது. தொப்புளைச் சுத்தி ஊசி தான் இதுக்கு ஒரே டிரீட்மெண்ட்”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாய்க்கு தடுப்பு ஊசி எல்லாம் போட்டிருக்கு, ஒண்ணும் பயப்படாதீங்க” என்றார் செட்டியார்.

“இருந்தாலும் பெரிய நாய், டாக்டர் கிட்ட போய் ஒப்பீனியன் கேட்டுடறது நல்லது பாருங்கோ.”

பாட்டி அதற்குள் வந்து “ஏண்டா பொஸ்தகம் வாங்கிண்டு வந்தப்பறம் சாப்பிடறேன்னு சொல்லிட்டு போனே, என்னடா ஆச்சு?” என்றாள்.

“நாய் கடிச்சுடுத்து பாட்டீஈ..” என்று அழ ஆரம்பித்தேன்.

“கட்டால போக, எந்த நாய் கடிச்சுது?” என்றாள்.

“பில்லா”

“கட்டால போக” என்று திரும்பவும் திட்டிவிட்டு “எங்கே காமி” என்று என் காயத்தைப் பார்த்த போது அது கன்னிப் போயிருந்தது.

அதற்குள் செட்டியார் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு வந்து, “பாட்டி ஒண்ணும் ஆகாது, இவனை நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போய்ட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, என்னைப் பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு போனார்.

டாக்டர், காலை பார்த்துவிட்டு கடிபட்ட இடத்தை ஸ்பிரிட் மாதிரி மஞ்சள் கலர் திரவத்தில் தோய்த்த பஞ்சால் துடைத்தார்.

கடித்த இடம் சின்னதாக வீங்கியிருந்தது. பார்க்க மாவிளக்கில் எண்ணை மாதிரி இருந்தது.

கடித்த இடத்தைச் சுற்றி அழுத்திக்கொண்டே, “இஸ் இட் பெயினிங்?” என்று கேட்டார்.

கேட்பது அவர் அழுத்தியதையா, அல்லது நாய் கடித்ததையா?  என்று புரியாமல் தலையாட்டி வைத்தேன்.

“எந்த நாய்?”

“எங்க வீட்டு நாய்தான்” என்றார் செட்டியார்.

“கிராஸ் பிரீடா?

“நோ நோ. பியூர் ராஜபாளையம், இன்னிக்குத் தான் வீட்டுக்கு வத்துச்சு. போன மாசம் தான் நாய்க்கு தடுப்பு ஊசி எல்லாம் போட்டது”

அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டே டாக்டர், “நத்திங் டு வொர்ரி. இருந்தாலும் ப்ரிகாஷனரியா நாலு நாளைக்கு ஊசி போட்டுக்கோ, என்ன?” என்று என்னைப் பார்த்துச் சிரித்தபடியே சொல்லிவிட்டு குப்பறப் படுக்க வைத்தார்.

“பெரிய ஊசியா?” என்று டாக்டரிடம் நான் கேட்பதற்குள் “ஆஆ” என்று கத்த வேண்டியிருந்தது.

நாய்க்கடியைவிட பின்பக்கம் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரும்போது செட்டியார் ‘கோல்ட் ஸ்பாட்’ வாங்கித் தந்தார்.

வீட்டுக்கு வரும்போது என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கூட்டம் என் வீட்டு முன்பு இன்னமும் இருந்தது.

“எதுக்கும் ஒருவாரம் நாயை வாட்ச் பண்ணுங்க, செத்து கித்து போச்சுனா ரொம்ப சீரியஸ்” என்று ஆரம்பித்தார்கள்.

“மாமி இரண்டு நாளைக்கு ஸ்கூல் கீல் எதுவும் வேண்டாம். பேசாம ரெஸ்ட் எடுக்கட்டும். அப்படியே இவன் மேலேயும் ஒரு கண்ணிருக்கட்டும். வெறி கிறி பிடிச்ச நாய் கடிச்சுதுனா நாமளும் நாய் மாதிரி கத்துவோமாம். என் அக்கா பையன் ஒருத்தன் இப்படித்தான்… உப்பிலியப்பன் கோயில் பக்கத்தில நாய் கடிச்சு…”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றாள் பாட்டி.

பக்கத்து வீட்டு மாமா “சோடா கிடைக்கலை, ஜிஞ்சர் தான் கிடைச்சது” என்று எனக்கு வாங்கித் தந்தார்.

“அவனுக்கு எதுக்கு ஜிஞ்சர், வயிறு நல்லாதானே இருக்கு” என்று பாட்டி சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

“தொப்புளை சுற்றி ஊசி போடலையா? அப்பறம், எங்கே போட்டா?” என்ற பேச்சு, “நாளைக்கு கவாஸ்கர் எப்படி விளையாடப் போறான்”, “இந்தியா ஃபாலோ ஆன் வாங்குமா?” என்று மாறி எல்லோரும் வீட்டுக்குப் போகும்போது “உடம்பைப் பார்த்துக்கோடா” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எதிர்வீட்டு மாமா “இப்ப உடம்புக்கு என்னடா பண்றது?”

“கொல்லப்பக்கம் போகணும்” என்று கிளம்பினேன்.

தொடர்ந்து நாலு நாள் “நேத்திக்கு எந்த சைடுல போட்டேன்” என்று கேட்டுவிட்டு டாக்டர் போட்ட ஊசியும்,  வீட்டிற்குத் திரும்பி வரும்போது செட்டியார் தயவால் கோல்ட் ஸ்பாட்டும் கிடைத்தது.

துவாதசி அன்று துளசி பறிக்கும் வேலை நின்றது. பாட்டியே சின்னதாக துளசிக் கன்று ஒன்றை வீட்டுக்குப் பின்புறம் வளர்த்தாள். எப்பவாவது செட்டியார், “என்ன தம்பி எப்படி இருக்க” என்று விசாரிப்பார். அடுத்த ஒரு வாரத்துக்கு பாட்டி தினமும் காலையில் ’பில்லா எப்படி இருக்கு’ என்று பார்த்துவிட்டு வருவாள். இரண்டு வாரத்தில் கடித்த இடம் அரித்துவிட்டு பிறகு ஆறிவிட்டது. சில சமயம் சாக்ஸ் போடும் போது தழும்பு சின்னதாகத் தெரியும்.

ஆறு மாதம் ஆகியிருக்கும். ஒரு நாள் ஸ்கூல் போகும்போது, ஆட்டோவில் பில்லாவை அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்தேன். மாலை ஸ்கூல்விட்டு வந்தபோது, செட்டியார் வீட்டு முன்பு கூட்டமாக இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தபோது பில்லா படுத்திருந்தது. மாலை போட்டிருந்தார்கள். ஈக்கள் சுற்றிக்கொண்டிருந்தன. வீட்டுக்குள் ஜான்சன் அழுவது கேட்டது.

“அல்சேஷன் வாங்கித் தரேன்” என்று செட்டியார் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

சட்டை இல்லாமல் வந்த இரண்டு பேர், “எங்க தோண்டலாம்?” என்று கேட்டு, தோண்ட ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட ஆரம்பித்தது.

சாத்துக்குடி மரத்தின் கீழே பெரிய சதுரமாகக் குழி தோண்டினார்கள்.

“எப்படி திடீர்னு ?” என்று விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

“கொஞ்சம் நாளா சரியா சாப்பிடலை..” என்று சொல்லிக்கொண்டு இருந்தா செட்டியார்.

“இந்த நாய்தானே உன்னைக் கடிச்சது?” என்று ஒருவர் அசந்தர்ப்பமாக என்னை விசாரித்தார்.

பில்லாவை சாத்துக்குடி மரத்துக்குக் கிழே புதைத்தார்கள். பூ போட்டார்கள். பால் ஊற்றினார்கள். ஒத்தை செங்கலை நிற்க வைத்தார்கள்.

“பால்காரன் தெரு முனையில வந்தா, இதுக்கு எப்படியோ தெரிஞ்சிடும், கரக்டா குலைக்க ஆரம்பிக்கும்”

“தினமும் ஆபீஸ் போகும் போது என்னைப் பார்த்து இரண்டு காலையும் மேலே தூக்கும்”

“நம்ம காம்பவுண்டுக்கே பாதுகாப்பா இருந்தது” என்று பேசிவிட்டு போனார்கள்.

கோடை விடுமுறைக்கு ஊருக்கு போய்விட்டு வந்தபோது, ஹாலில் ஒரு கூடை நிறைய சாத்துக்குடி இருந்தது. பாட்டி “செட்டியார் வீட்டில கொண்டு வந்து கொடுத்தா. வீட்டில காய்ச்சதாம்” என்றாள்.