Monday, March 30, 2009

பாச்சை உருண்டை

பாச்சை உருண்டையில் இரண்டு வகை இருக்கிறது. வெங்கட்நாராயணா சிக்னலில் தோளின் குறுக்கே குழந்தையை மாட்டிக்கொண்டு இவற்றை விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அம்மினிக் கொழுக்கட்டை மாதிரி சின்னதாக இருக்கும். பாச்சை உருண்டை என்று கேட்டால் நகரக் கடைக்கார்களுக்குத் தெரியாது. ’நாப்தலின் பால்ஸ்’ என்றால் எடுத்துக்கொடுப்பார்கள். நாப்தலின் என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால் இந்தப் பெயர். பூ, பழ வாசனையுடன் நம் வீட்டு பாத்ரூமிலும், பீரோவிலும் இருப்பது இன்னொரு வகை. வாசனைக்குக் காரணம் Paradichlorobenzene என்ற பொருள். முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும், ரொம்ப முகர்ந்தால் தலைவலி வரும்.  நாப்தலின் பீரோவில் வைத்தால் கொஞ்ச நாளில் கற்பூரம் போலக் கரைந்து போகும் . திடப் பொருளாக இருக்கும் நாப்தலின் வாயுவாக மாறுகிறது என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். இதிலிருந்து வெளிவரும் விஷ வாயு அல்லது வாசனை கலந்த விஷ வாயுதான் சின்னச் சின்ன ஜீவன்களை சத்தம் போடாமல் சாகடிக்கிறது.நாம் உட்கொண்டால் வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போல இருக்கும். வாந்தி வராதவர்களுக்கு பேதி, மூத்திரத்தில் ரத்தம் வரும். போன வாரம் டிவியில் 'ஹலோ டாக்டர்' நிகழ்ச்சியில் ”குழந்தையைப் போர்த்தும் துணியில் நாப்தலின் வாசனை இருந்தாலே குழந்தைகளுக்கு ரத்த சோகை வர வாய்ப்பிருக்கிறது. ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் அளவை குறைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுத்தி சிறுநீரகம், கல்லீரல்...” சரி, இதெல்லாம் எதற்கு , என் பெண் எட்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது இதை சாப்பிட்டுவிட்டாள். அதைப் பற்றி சொல்லுகிறேன்.


வாசல் கதவில் தொங்கவிட்டிருக்கும் பாக்கெட் பால் ஒழுகி முடிந்திருந்த சாதாரண காலை. ஒழுகாத இன்னொரு பாக்கெட்டை எடுத்த போது எதிர் வீட்டுக் கடிகாரத்தில் ஏழே கால். 'சே இனிமே ராத்திரி டிவியில் படம் பார்க்க கூடாது' என்று கீழே குனிந்து பார்த்தபோது,  “Resolution of Kashmir only way to amity: Musharraf” என்றது ஹிந்து. முஷாரப்பை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குப் போனேன்.


பால் குக்கர் விசிலுக்குப் போட்டியாக, “சீக்கிரம் வெளிய வாங்க, ஏதோ மீட்டிங் இருக்குன்னீங்களே” காஷ்மீர் பிரச்சினையை அவசரமாக மூடி வைத்துவிட்டு பாத்ரூம் கதவைத் திறந்தபோது விசில் சத்தம் அதிகமாகக் கேட்கத் தொடங்கியது. நின்ற போது மணி ஏழே முக்கால். வேறு சத்தம் ஆரம்பம்; பெண் எழுந்துவிட்டாள்.


குழந்தை எட்டு மாதத்தில் தவழ ஆரம்பிக்கும் இவ கொஞ்சம் சீக்கிரம். ஏழு மாசத்திலேயே கையையும் முட்டியையும் வைத்து தவழ முயற்சிசெய்து, ஏதாவது பொருள் கண்ணில் பட்டால் அதை எடுக்க முன்னே சென்று.., பிறர் உதவி இல்லாமல் தானாகவே இயங்கும் உற்சாகத்தில் எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்துவிட்டாள். பெரிசாக இருந்தால் உடைப்பாள்; சின்னதாக இருந்தால் பொறுக்கிச் சாப்பிடுவாள். “அந்த டிவியை அணைச்சுட்டு இவளைக் கொஞ்சம் பார்த்துக்கோங்களேன்”, ”ஏய் அதை எடுக்காதே”, போன்ற சம்பாஷனைகளும், “ஏன் எப்பப் பார்த்தாலும் உங்க வீட்டு ஃபோன் என்கேஜ்டாவே இருக்கு?” போன்ற விசாரிப்புக்களும் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததற்கு காரணம் இவ தான். பொருள்கள் எல்லாம் பிரமோஷன் கிடைத்த மாதிரி மேலே சென்றது. அப்படியும் சில சாமான்கள் உடைந்தது, விளையாட்டு பொருள்களை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்தையும் எடுக்க ஆரம்பித்தாள். பருப்பு, அரிசி என்று எது கீழே கிடந்தாலும் அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சின்னதாக ஒரு “ஹக்கு” இல்லை “ஹக்கு ஹக்கு” என்பாள். வாயில் விரலை விட்டு என்ன என்று என்று பார்த்தால் வாந்தி எடுப்பாள்.


”என்ன டிஃபன் சாப்ட்றீங்க? உப்மா பண்ணட்டுமா?”
 
“வழியில பார்த்துக்கிறேன் ரொம்ப லேட்டாயிடுத்து” என்று ஓடப்பார்த்தது மணி ஒன்பதே கால் என்பதால் மட்டும்தான்; அம்பத்தூர் போக முக்கால் மணி நேரமாவது ஆகும். மீட்டிங்கிற்கு அரை மணி லேட் ஆகப்போகிறது. வாசல் கதவை திறக்கும்போது என் பின்னாலேயே தவழ்ந்து வந்துவிட்டாள்.


“அப்பாவுக்கு டாட்டா சொல்லு,” கேட்டுக் கிளம்பும்வரை எல்லாம் சரியாகதான் இருந்தது. அந்த சம்பவம் அதற்கு பிறகு தான் நடந்தது.


ஆபீஸிலிருந்து திரும்பி வர வழக்கம் போல் எட்டு மணி ஆகிவிட்டது. ஷூவை கழட்டும் போது, “இன்னிக்கு எங்கே போனீங்க? உங்க ஆபீஸுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினேன்”


“என்ன ஆச்சு?”


“நீங்க பாட்டுக்கு ஆபீஸுக்கு போற அவசரத்தில உங்க பீரோ கதவை சரியா சாத்தாமா போயிட்டீங்க. நான் கிச்சனில் இவளுக்கு பால் கரைச்சுண்டு இருந்த சமயம் இவ பீரோ கதவை ஆட்டியிருக்கா, கதவுல மாட்டியிருந்த ஓடோனில் கீழே விழுந்து பொடியாகி, இவ அதை எடுத்து வாயில் போட்டுண்டுட்டா”


“ஐயோ என்ன ஆச்சு ?” என்று படுக்கையறைக்குப் போனேன். அழகாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.


“...என்னடா இவ சத்தத்தையே காணோமேன்னு பார்த்தா கைல எல்லாம் சின்ன சின்ன பீஸா இருக்கு. வாயில மோந்து பார்த்தா ஒரே வாசனை. எவ்வளவு சாப்பிட்டான்னு தெரியலை. பெருமாளை வேண்டிண்டு குழந்தையை தூக்கிண்டு, ஏதோ ஸ்கூல் ஆட்டோவை பிடிச்சு நேரா சைல்ட் டிரஸ்டுக்கு போனேன்.  ஆஸ்பத்ரில எமர்ஜன்சின்னு சொல்லி... டாக்டர் வந்து பார்த்துட்டு ஸ்டமக் வாஷ்பண்ணனும்னு சொல்லிட்டா...”


“ஸ்டமக் வாஷ்?”


”எவ்வளவு சாப்பிட்டான்னு தெரியலை. அதனால் ஸ்டமக் வாஷ் தான் பெட்டர்ன்னு டாக்டர் சொல்லிட்டா. என்னை வெளியிலே அனுப்பிட்டா, உள்ளே குழந்தை ஒரே அழுகை. எனக்கு இருப்புக் கொள்ளாம உள்ளே போயிட்டேன் டாக்டர், நர்ஸ்ன்னு அஞ்சாறு பேர் குழந்தையைப் பிடிச்சுண்டு மூக்கு வழியா ட்யூப் விட்டு அதில சலைன் வாட்டரை பம்ப் பண்றா. குழந்தை ரொம்ப அவஸ்தை பட்டா. உள்ளே அனுப்பின சலைனை அதே டியூப் வழியா திரும்ப எடுக்குறா. குழந்தை மூஞ்சி எல்லாம் சிவந்து போய் எனக்கு பயமா போயிடுத்து. வீட்டுக்கு வர மத்தியானம் ஆச்சு. வந்து திருப்பதிக்கு ஒத்த ரூபாய் முடிஞ்சு வெச்சேன். உங்களுக்கு போன் செஞ்சு செஞ்சு பார்த்தேன். நீங்க எடுக்கவே இல்லை”


”அடக் கடவுளே, இப்ப பயப்பட ஒண்ணுமில்லையே? நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்”


”என்ன மீட்டிங்கோ. முதல்ல ஒரு மொபைலை வாங்கித் தொலைங்க”


                                                         - 0 - 0 - 0 -


சென்ற மாதம் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சட்டையில் மொபைல் கிச்சுக்கிச்சு மூட்ட, எடுத்தேன். குழந்தை அழும் சத்தம் கேட்டது.


“ஏங்க பையன் வீட்டுக்குள்ள வந்த தேனியை எடுத்து வாயில போட்டுண்டுட்டான்”


“என்னது, தேனியையா?"


”ஆமாம்.. தேனி கொட்டிடுத்து. இருங்க...  நாக்கு அடியில் கொட்டிருக்கு...... கொடுக்கை இப்பதான் எடுத்தேன். சீக்கிரம் வாங்க..”


“கொட்டின இடத்தில சுண்ணாம்பு தடவு”


“நாக்கு அடியில எல்லாம் சுண்ணாம்பு தடவ முடியாது. நான் டாக்டர் வீட்டுக்கு போறேன் நீங்க சீக்கிரம் அங்கே வாங்க”


நான் அடுத்த சிக்னலில் யூ டர்ன் அடித்தேன்.


அது வேறு கதை.

Monday, March 9, 2009

சொர்க்கம், நரகம் - இடைவெளி 250km


பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் இருக்கிறது. பத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லியிருக்கிறது. பண்டரீபுரம் பற்றிய புராணக் கதை இப்படிப் போகிறது...


புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரை போகவேண்டும் என்ற ஆசையோடு புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு இடையில் யாத்திரை போய்க்கொண்டிருந்தவர்கள் சந்தரபாகா (பீமா நதி என்றும் அழைப்பர்) நதிக்கரைக்கு வருகிறார்கள். அங்கே காட்டில் உள்ள ஒரு மகரிஷி புண்டரீகனைப் பார்த்து, “உன் தாய் தந்தையரை இந்த வயதான காலத்தில் (யாத்திரைக்கு) கஷ்டப்படுத்துவது தர்மம் ஆகாது. தாய் தந்தையரை நல்லபடியாக வைத்து பூஜித்தாலே சர்வ தீர்த்தயாத்திரைக்குச் சமம்" என்று உபதேசம் செய்தார். புண்டரீகனும் சந்தரபாகா நதிக்கரையிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு தாய் தந்தையருக்கு பணிவிடை செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறான்.

புண்டரீகனின் பித்ருபக்தியை நாரதர் மூலமாக அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்ப்பதற்கு வருகிறார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகன் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கிறான். பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து லட்சியமும் செய்யாமல் அலட்சியமும் செய்யாமல் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு, “சற்று இரும்! நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்," என்றான். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும், ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நிற்கிறார்கள்.

புண்டரீகன் பணிவிடை செய்துவிட்டு வந்து, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரிக்க, "நான் துவாரகா நாதனான கிருஷ்ணன், இவள் என் மனைவி ருக்மணி” என்று சொல்கிறார்.

புண்டரீகன் பூரித்துப் போய், குடும்ப சகிதமாக பகவான் காலில் விழுந்து, இங்கேயே சந்தரபாகா நதிக்கரையிலேயே நித்தியவாசம் செய்யவேண்டும்" என்று கேட்கிறான்.

இன்றும் பண்டரீபுரத்தில் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு செங்கல் மேல் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் சேவை சாதிக்கிறார். ஞானேஷ்வர், நாமதேவ், ஏதநாதர், ஜனாபாய், ஞானதேவர், கபீர்தாஸர், துக்காராம், ஏகநாத் புரந்தரதாஸர், விஜயதாசர், மோகனதாஸர், போன்ற பல கன்னட, மஹாராஷ்டிர பக்தர்கள் பாண்டுரங்கனைப் பற்றி ஏராளமான கன்னடக் கீர்த்தனைகளையும், மராட்டிய அபங்கங்களையும் பாடியுள்ளார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டே நாளில், மூன்று கல்யாணத்திற்காக பூனாவிற்குச் சென்றிருந்தேன். பண்டரீபுரம் பூனாவிலிருந்து 250km தூரத்தில் இருக்கிறது. மூன்று கல்யாணதிற்கு நடுவில் பண்டரீபுர விட்டல் ரகுமாயியை சேவித்துவிட்டு வருவது என்று முடிவு செய்து டாக்ஸியில் பழைய ஹிந்தி பாடல்களுடன் பயணித்தேன்.

ஆட்டு மந்தை போகும் வரை காத்திருக்கும் ஹோண்டா சிட்டி மட்டும் தான் சிட்டி மற்றது எல்லாம் கிராமம் தான். ஆண்கள் எல்லோரும் காந்தி குல்லா போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சூரியகாந்திப் பூ, வெங்காயம், மாதுளை, கரும்பு என்று விதவிதமாக விவசாயம் செய்கிறார்கள். தாய்மார்கள் வயலில் வேலை செய்ய அவர்கள் குழந்தைகள் மரத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 


வழியில் கரும்புச் சாறு ஒரு கிளாஸ் கலப்படம் இல்லாமல் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கிறது. போகும் போது ஒரு பஸ் கூட என் கண்ணில் தென்படவில்லை ஆனால் பில்லு பார்பர் பட போஸ்டர்கள் கண்ணில் பட்டது. பஸ் வசதி இல்லாததால் ஒரு ஜீப்பில் எவ்வளவு பேர் பயணம் செய்யலாம் என்று தெரிந்துகொண்டேன். ஜீப் வாய் இருந்தால் அழும். வழி நெடிகிலும் தாபாக்கள் நிறைய இருக்கிறது. (இஞ்சியை டம்ளர் அடியில் நசுக்கி இவர்கள் போடும் சாய் பிரமாதம்.)

போகும் போது சில இடங்களில் "வீ" என்று சொன்னால் போதும் மற்றவர் காதில் அது "விட்டல், விட்டல்" என்று விழும். ரோட்டில் அவ்வளவு மேடு பள்ளம்.

பண்டரீபுரம் சென்ற போது மாலை மணி 4 ஆகிவிட்டது. காரை சந்தரபாகா நதியில் தண்ணீர் இல்லாததால் அங்கேயே பார்க் செய்ய முடிந்தது. சந்தரபாகா நதி பற்றி மஹாபாரதத்தில் குறிப்பு வருகிறது. "சார் நான் உங்களுக்கு கைடாக வருகிறேன், பண்டரி நாதனை பக்கத்தில் தரிசனம் செய்துவைக்கிறேன். எல்லாம் முடித்துவிட்டு வரும் போது எனக்கு 51ரூ. தந்தால் போறும்," என்றார் ஒருவர். நேரம் அதிகம் இல்லாததால் சரி என்று இந்த குறுக்கு வழிக்கு ஒப்புக்கொண்டேன்.


உடனே  சந்தரபாகா நதிக்கரையிலிருந்து குறுக்கு வழியில் எங்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அங்கே 20 அடி தூரத்தில் பெருமாள் தெரிகிறார், தரிசனம் செய்துகொள்ளுங்கள் என்றார். எனக்குப் பெரிய ஏமாற்றம். ஏன் என்றால் பண்டரீபுர விட்டலை நாம் தொட்டு சேவிக்கலாம் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன். எனக்கு இது சம்மதம் இல்லை என்று மீண்டும் வெளியில் தர்ம தரிசன கியூவில் போய் நின்றோம். பண்டரிபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. (நாங்கள் போன சமயம்) திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டு இருக்கிறது. நாலரை மணிக்கு பெருமாளுக்கு வஸ்திரம் மாற்ற நடை சாத்திவிட்டு மீண்டும் ஐந்து மணிக்குத் தான் திறப்பார்கள் என்றார்கள். திண்ணை மாதிரி கட்டிவைத்திருப்பதில் அமர்ந்தோம். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

வந்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு ஊர்காரர்கள், ஏழை, பணக்காரர்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். கியூவை மீற வாய்ப்பு இருந்தும் மீறவில்லை. எல்லோரும் "பாண்டு ரங்க ஹரி போலோ" என்று கைத்தட்டி பஜனை செய்ய ஆரம்பித்தார்கள். ஞானதேவர், புரந்தரதாசர் பஜன்களை எல்லோரும் வாய்விட்டு பாடினார்கள். யாரும் ஊர்க் கதை பேசவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் அந்த பஜனில் ஆழ்ந்தது ஒரு நிறைவான அனுபவம். இது போன்ற பக்தி தமிழ்நாட்டுக் கோவில்களில் பார்த்ததில்லை. சரியாக ஐந்து மணிக்கு கதவு திறக்கப்பட  பாண்டுரங்கன் பக்கத்தில் போய் அவரைத் தொட்டு சேவித்துவிட்டு, நெற்றியை அவர் கால்மேல் வைத்து பாத சேவை கிடைத்த பின் வெளியே வந்தோம்.

கோயிலைச் சுற்றி நிறைய கடைகள் இருக்கின்றன. கோபி சந்தனம், ஜால்ரா, டோல், சின்ன சின்ன விக்கிரகங்கள், பஜனை புத்தகம், பாண்டுரங்கன் படங்கள், குங்குமம், மஞ்சள், சக்கரை மிட்டாய், துளசி மாலை என்று கிடைக்கிறது. சினிமா பாடல்கள் MP3, நியூஸ் பேப்பர் கிடைப்பதில்லை. யாரும் ஏமாற்றுவார்கள் என்று தோன்றவில்லை.

தீர்த்தயாத்திரை முடித்துவிட்டு திரும்பி வர இரவு பதினொன்று ஆகிவிட்டது. கல்யாண மண்டபத்தில் தீர்த்தத்தால் பலர் யாத்த்திரைக்குச் சென்றிருந்தார்கள். சொர்க்கமும் நரகமும் 250கிமீ தூர இடைவெளியில் இருக்கிறது!


Monday, March 2, 2009

தொட்டமளூர்

[%image(20090302-brindavanaKrish.jpg|107|143|Brindavana Kannan)%]

ஹைவேஸின் அதிவேகப் பயணத்தில் உங்களுக்குப் பின்னால் வரும் காரின் பிரேக் பெடலுக்கு அடியில் வாட்டர் பாட்டில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்?போன வருட இறுதியில் வந்த ஒரு சாதாரண சனிக்கிழமை காலை.  டிவியில் ஏதோ அசட்டு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, போரடிப்பதை உணர்ந்து திடீர் என்று ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வரலாம் என்று முடிவுசெய்து, தயிர்சாதம், தண்ணீர், குழந்தைகள் என்று எல்லாவற்றையும் அள்ளிகொண்டு கிளம்பும் போதே மணி பதினொன்று.


[%image(20090302-DoddamallurGopuram.jpg|133|200|Doddamallur Gopuram)%]

ஸ்கூல் எக்ஸ்கர்ஷனில் ஸ்ரீரங்கப்பட்டினத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள்; அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. சொல்லப்போவது தொட்டமளூர் பற்றி. பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் சென்னப்பட்டினத்தைத் தாண்டி சில மைல் தொலைவில் இருக்கிறது தொட்டமளூர். ராஜேந்திர சிம்ம சோழ மன்னன் இக்கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. ராமானுஜர் காலம் அல்லது அதற்கு முன்பே இந்தக் கோயில் இருந்திருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். கோயிலைப் பார்த்த மாத்திரத்தில், ’பார்த்த மாதிரி இருக்கிறதே’ என்று தோன்றும். தவழும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணன்(நவநீதகிருஷ்ணன்) இங்கே பிரசித்தம். கன்னட பக்தர்கள் பலர்( விஜயதாசர்,
புரந்தரதாசர், ராகவேந்திரர்) இந்தக் கோயிலுக்கு வருகை தந்துள்ளார்கள் என்று தெரிகிறது. 


[%image(20090302-DoddamallurKannan.jpg|200|133|Doddamallur Kannan)%]

மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் - குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணை உருண்டையுடன் தவழ்த்து வருகிறான். கூப்பிட்டால் வீட்டுக்கே வந்துவிடுவான் என்று தோன்றுகிறது. ஏற்கனவே அமுதன் செய்யும் லூட்டி தாங்க முடியாமல் அந்த ஆசையைக் கைவிட்டேன்.


கோயிலுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கம்பர் மண்டம் மாதிரி ஒரு சின்ன மண்டபம் இருக்கிறது. இதற்கு புரந்தரதாசர் மண்டபம் என்று பெயர். ஒருமுறை தொட்டமளூர் கண்ணனை புரந்தரதாசர் தரிசிக்க வந்தபோது கோயில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர், "ஜகத்தோத்தாரணா' என்று துவங்கும் பாடலைப் பாட கோயில் கதவு திறந்தது; கண்ணன் உள்ளிருந்து புரந்தர தாசரை எட்டிப் பார்த்தான் என்கிறார்கள்.


நாங்கள் போன போது, மத்தியானம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது, புரந்தரதாசருக்கு ஏற்பட்ட அதே அனுபவமாய் எங்களுக்கும் கோயில் மூடப்பட்டிருந்தது. உடனே புரந்தரதாசர் மண்டபம் பக்கத்தில் சென்று நிழலைத் தேடி, உட்கார்ந்துகொண்டு, 'ததியோதாரணா' என்று வயிறு சத்தம் போட,  தயிர் சாதத்தையும், ஊறுகாயையும் சாப்பிட்டு முடித்தோம்.


[%image(20090302-PMandapam.jpg|286|214|Purandradasa Mandapam)%]

எங்கள் காரை ஒரு சின்னப் பையன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு மனநலம் சரியில்லாதவன் போல் இருந்தான். சதா வாயில் எச்சில் ஒழுக, மிட்டாயைக் கடித்துக்கொண்டு, கையில் பிசுக்காக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருக்கும் கடையில் சென்று 'Good Day' பிஸ்கெட் பாக்கெட் ஒன்று வாங்கி அவனிடம் தந்தேன், ஆனால் அதை மறுத்துவிட்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு ரூபாய் பந்துதான் தனக்கு வேண்டும் என்று சொன்னான். வாங்கித் தந்தேன். குழந்தை.


ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று, திரும்பி வரும் வழியில் மளூர் கண்ணனை தரிசித்துவிட்டு, வெளியில் வந்தபோது, மதியம் பார்த்த அதே பையன், இப்போது எங்களைப் பார்த்துச் சிரித்தான். நாங்கள் காரில் புறப்பட்ட போது எங்கள் கார் பின்னாலேயே கொஞ்சம் தூரம் ஓடிவந்தான். கண்ணனாக இருப்பானோ? 


எங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் சென்னப்பட்டினத்துக்கு கொஞ்ச தூரம் முன்பு எங்கள் காரைப் பின்தொடர்ந்து வந்த டாடா சஃபாரி எங்கள் கார் பின் பக்கம் வந்து மோதியது. கோபத்துடன் இறங்கி என்ன என்று விசாரிக்கப் போனேன்.
 
”சார், பிரேக் பெடலுக்கு அடியில் வாட்டர் பாட்டில் மாட்டிக்கொண்டுவிட்டது; என்னால் ஒன்றும் செய்ய முடியலை...,” என்றார்.


கார் பின்பக்கம் 'V' மாதிரி நசுங்கியது. - Mark of Vishnu?


பிகு: முதல் கிருஷ்ண விக்ரகம் படம்:  போன மாதம் பிருந்தாவன் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனபோது சர்ச் ஸ்டிரீடில் வாங்கியது. பிருந்தாவனக் கண்ணன்!


தொட்டமளூர்  ஆல்பம்
( சுஜாதா நினைவு தினம் அன்று இறவு எழுதியது)


என் மற்ற பயணங்கள்

நவதிருப்பதி
மதுரை திவ்வியதேசங்கள் மூன்று
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருமெய்யம்
திருநீர் மலை, திருப்பதி
கும்பகோணம்