Wednesday, August 22, 2007

சீனி கம்

'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற  பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா ? செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்றால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன்.கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, பக்கத்தில் உள்ள பழக்கடையில் கால் கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி சப்பிட்ட பின் ஸ்பினாச் சாப்பிட்ட பாப்பாய் போல் ஆனேன்.


டாக்டரிடம் கேட்டதற்கு கடுகு சைஸ் மாத்திரையை பாதியாக எடுத்துக் கொள்ளச் சொன்னார். திரும்பவும் சில பரிசோதனைகளில் சர்க்கரை அளவு சென்சக்ஸ் போல ஏறும், இறங்கும்; ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாக்டர் தொடர்ந்து மாத்திரையை எடுத்துக் கொள்ளச் சொன்னார். சில சமயம் அந்த வெடவெடப்பு இருக்கும்; சாக்லேட் சாப்பிட்டால் சரியாகிவிடும். மாத்திரை செய்யும் ஜாலம் என்று உள் மனம் சொன்னது. !
 டாக்டரிடம் இந்த மாத்திரையில் ஏதோ பிரச்சனை என்று சொன்னதற்கு, அவர் தொடர்ந்து அதே மாத்திரையையே சாப்பிடச் சொன்னார்.


போன மாதம், மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் ஒரு டெஸ்ட் கொடுத்தேன். அதில் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தது. பிறகு ஒரு வாரம் கழித்து மாத்திரை எடுத்துக்கொண்டு டெஸ்ட் எடுத்தேன், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. இந்த முறை டாக்டரை மாற்றிவிட்டேன்.


இரண்டு வகை மாத்திரைகள் உண்டு. டால்பிடமைடு, பிகுவனைடு, டயநில், க்ளைநேஸ் போன்றவை முதல் வகையும் ஃபென்ஃபர்மின் மெட்ஃபார்மின் போன்றவை இரண்டாவது வகையும் ஆகும். முதல் வகை, பாதிக்கப்பட்ட இன்சுலின் சுரப்புக்குப் புத்துயிர் கொடுக்கும். இன்சுலின் வாங்கிகளை அதிகரிக்கும். இரண்டாவது வகை, உடலில் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்கும். இருக்கிற சர்க்கரையை அதிகம் பயன்படுத்த உதவும்.  பசியைக் குறைக்கும். இப்போது,  இரண்டாவது வகை மாத்திரையினால் எல்லாம் நார்மலாக இருக்கிறது. நார்மலாக இருந்தாலும், வீட்டுக்கு வருபவர்கள் டிப்ஸ் கொடுப்பதை மட்டும் நிறுத்துவதில்லை.


மருந்துகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்வது நலம். நண்பர் சொன்னர் இந்த மருந்து நல்லது என்று எடுத்துக்கொண்டால் ரொம்ப ரிஸ்க்.


"வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய் எல்லாம் கலந்து எம்டி ஸ்டமக்கில் ஒரு கப் ஜூஸ் குடிங்க.


"பூசணிக்காய் சாப்பிட்டால் நல்லது என்று சில மாதம் முன் பேப்பரில் படித்தேன்" ( வெள்ளை பூசணிக்காயா ? அல்லது ஹாலோவின் பூசணியா ?)


"அருகம் புல் ஜூஸ் குடிங்க, பிள்ளையார் கூட அது தான் சாப்பிடுகிறார்".


"அரிசிக்குப் பதிலா சப்பாத்தி ட்ரை பண்ணுங்க".


"வெந்தயம் சாப்பிடுங்க சார், நல்ல எஃபெக்ட் இருக்கும்"


வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர், வெந்தயத்தில் உள்ள 'டரைகோ நெலின்' என்னும் வேதிப்பொருளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி ஓரளவு உண்டு. வெந்தயத்திலுள்ள நார்ச் சத்து உணவிலுள்ள சர்க்கரை இரத்தத்தில் கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கான மாத்திரை ஒன்று சப்பிட்டால், இரத்தச் சக்கரை எந்த அளவு குறையும!
  அதே அளவுக்கு குறைய வேண்டுமானால் 4, 5 கிலோ வெந்தயம் சாப்பிட வேண்டும். வெந்தயம் வாங்கி ஏழையாய்ப் போக விருப்பமில்லை.  ஆனால் காலையில் கொஞ்சம் சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது.
 
காபி, டீக்கு சர்க்கரை சேர்க்காமல், இனிப்பு வகைகளை சாப்பிடாமல் இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் உடம்பில் சர்க்கரை சேர்ந்துவிடுகிறது. அப்படியா என்று கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்..


நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது ரத்தத்தில் கலக்கும் போது, குளூக்கோஸாக மாற்றப் படுகிறது. இந்த குளூக்கோஸ் நம் உடம்புக்குப் பயன்படக் கூடிய சக்தியாக மாற வேண்டுமெனில் அதற்கு இன்சுலின் வேண்டும். இரத்தத்தில் வருகிற குளூக்கோஸின் அளவும் அதை சக்தியாக மாற்றிப் பயன்படுத்தத் தேவையான இந்த இன்சுலின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை டிவியில் படம் பார்த்துக் கொண்டு, சினிமா கிசுகிசுக்களை படித்துக்கொண்டு இருக்கலாம். இல்லை என்றால், அதிக குளுக்கோஸ் உள்ளே வரும்போதோ உடம்பில் இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலோ சக்தியாக மாற்றப்பட்டாத குளூக்கோஸ் சிறுநீரகத்துக்குச் செல்கிறது, பிரச்சனை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது!.


அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பாக் -


'ஜே ஜில் க்ரைஸ்ட்' என்பவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? முதன் முதலில் சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவர். ஒருமுறை 'உச்சா' போய்க் கொண்டிருந்தவர், அப்போது அங்கே போய்கொண்டிருந்த எறும்புகள் எல்லாம் அபவுட் டர்ன் செய்து இவரின் சிறுநீரை மொய்க்க தொடங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அதே நினைவாக இருந்தவர், தூக்கத்திலிருந்து எழுந்து திரும்பவும் சிறுநீர் கழித்தார், இந்த முறை டம்பளரில் பிடித்துக் குடித்துப் பார்த்தார். நன்னாரி சர்பத் போல் இருந்தது. சிறுநீர் வழியாக குளூக்கோஸ் வெளியேறுகிறதென்று கண்டுபிடித்தார். இது கண்டுபிடிக்கபட்டது 1800களில்.
 
ஆக,  குளூக்கோஸ் சிறுநீரகத்துக்கு செல்லும் போது, சிறுநீரகம் குளூக்கோஸை வடிகட்டும் எக்ஸ்ட்ரா வேலை செய்யத் தொடங்குகிறது. நாளடைவில் சிறுநீரகம் 'அட போப்பா'  எனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா என்று வேலை எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் வெளியேற்றுகிறது. இதில் நம் உடலுக்குத் தேவையான தண்ணீர், தாதுக்கள் எல்லாம் வெளியேறுகிறது. டயாபடிஸ் என்பதற்கு அதிகம் சிறுநீர் வெளியேறுதல் என்று அர்த்தம். இதனால் தான் இதை நீரழிவு என்றும் சொல்கிறார்கள். ஆக சிறுநீர் நன்றாக போய்க்கொண்டே இருந்தாலும் அது சிறுநீரகப் பாதிப்பு தான். ஆனால் மழைகாலங்களில், ஏஸி அரையில், பரிட்சை நேரத்தில், மனைவி டோஸ் விடும் போது உச்சா போவது எல்லாம் ஹார்மோனைத் தூண்டி சிறுநீரைச் சுரக்க செய்வன.


அரிசிச் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் தான் சப்பாத்தியிலும் இருக்கிறது. ஆனால் சப்பாத்தியில் நார்ச் சத்து இருக்கிறது. எதைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை விட எவ்வளவு, எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். கேழ்வரகு, கம்பு கஞ்சியாகக் குடிக்காமல், அதை தோசை போல சாப்பிட வேண்டும். அதாவது உடனே இவை ஜீரணம் ஆக கூடாது, மெதுவாக நமக்கு எனர்ஜியைக் கொடுக்க வேண்டும்.!


 சர்க்கரை வியாதி உள்ளர்கள் சிறுநீர்ப் பரிசோதனையின் போது குளுக்கோஸ் இல்லை என்றால் சந்தோஷப்படாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டு வேலைகள், படியில் ஏறி இறங்குவது போன்ற சின்னச் சின்ன வேலைகள் செய்து, அளவாகச் சாப்பிட்டால் நல்லது. அப்பா, கடைசியா மெசேஜ் சொல்லிவிட்டேன்!


( கட்டுரையின் சில பகுதிகள்(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்) உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ற புத்தகத்தில் இருக்கிறது )

Wednesday, August 15, 2007

PAN

நிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன்.[%image(20070815-pancard_s.jpg|216|144|PAN CARD)%]

நான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில்
PAN NO: _____________
என்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே!' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன்.


வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, "ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது?" என்றேன்.


"உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார்.


காண்பித்தேன்.


பார்த்துவிட்டு, "அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க" என்றார்.


சென்றேன்.


ஆனால் யாரும் இல்லை. ஃபேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ஃபேன் ஓடுவதால் நிச்சயம் யாராவது வருவார்கள் என்று கொஞ்சம் நேரம் காத்துக் கிடந்தேன். யாரும் வரவில்லை. அடுத்த சில அறைகள் தள்ளி ஒருவர் இருந்தார், அவரிடம் "ஒரு வருடம் ஆகியும்... " டைலாக் சொன்னேன். நேராகப் போனால், வரவேற்பாளர் இருப்பார், அவரிடம் கேளுங்கள் என்றார். பரமபதத்தில் பாம்பின் தலைவழியாக ஆரம்பித்த இடத்திற்கே வருவது போல் திரும்பவும் வந்தேன்.


"சார், அங்க யாரும் இல்லை"


"அங்கேயே வெயிட் பண்ணுங்க, வருவாங்க!"


"இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்..."


"வருமான வரி தாக்கல் செய்ற இடத்தில போய் கேட்டுப் பாருங்க" என்றார்.


அங்கே சென்ற போது, ஆடித் தள்ளுபடி கூட்டம் போல் அலைமோதியது, 'சரல்', 'பார்ம் 2 F' போன்ற குரல்களுக்கு இடையில் "சார், நான் பான் கார்ட் அப்ளை செஞ்சு ஒரு வருடம்... " என்றவுடன் "சார், இங்கே வந்து அதை கேட்காதீங்க, பாருங்க அடுத்த பில்டிங்ல இருப்பாங்க, போய் அங்கே கேளுங்க" என்றார்.


"நான் அங்கிருந்து தான் சார் வரேன், அங்கே யாரும் இல்லை..."


என்ன தோன்றியதோ, யாரோ ஒரு பியூனைக் கூப்பிட்டு என் விணப்பத்தை பார்க்கச் சொன்னார்.


அரை மணி கழித்து, அந்த பியூன் என் பிரசித்தி பெற்ற நிரந்திர கணக்கு எண்ணை(PAN number) எழுதி தந்தார். "இன்னும் ஒரு மாசத்தில வந்துடும் சார், எல்லா அப்பளிக்கேஷனையும் கிளியர் செய்துகிட்டு இருக்கோம்," என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அந்த வருடத்திய தனி நபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து முடித்தேன்.


திரும்பவும் ஆபிஸ் பிரஷர் காரணமாக அப்படியே விட்டுவிட்டேன்.  அடுத்த வருடம் 'பார்ம்-16' படிவத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது, அட இரண்டு வருஷம் ஆகியும் இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை என்று. பான் எண் தான் தெரியுமே என்று அந்த வருடமும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். அடுத்தவருடம் திரும்பவும் வருமானவரி அலுவலகத்திற்கு சென்று 'பான் கார்ட்' வரவில்லை என்று எழுதிக் கொடுத்தேன்.


பிறந்த நாள் போல், வருடத்திற்கு ஒரு முறை ஜூலை மாதம் இது நினைவிற்கு வரும். இப்படியே வருடங்கள் ஓடின.


2006ல் டிமேட்(DMAT) கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் நிரந்திர கணக்கு எண்(PAN Card) அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு புது விதியை கொண்டுவந்திருந்தார்கள். அதனால் என் டிமேட் கணக்கு முடக்கபட்டது. இந்த முறை வருவானவரி அலுவலகத்திற்குச் சென்ற போது, பான் அட்டையைக் கொடுக்கும் பொறுப்பை  UTISL, NSDL, Karvy போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டோம், அவர்களிடம் போய் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.


அடுத்து UTI யிடம் சென்று ஒரு புது விண்ணப்பம் கொடுத்தேன். கொடுத்து சில மாதங்கள் ஆன பின் என்ன ஆச்சு என்று விசாரித்த போது, "வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டோம்!" என்றார்கள். ஆன்லைனில் உங்கள் விண்ணப்பதின் நிலவரம் தெரியும் என்றார்கள். என் விண்ணப்ப எண்ணை கொடுத்து பார்த்ததில் "Your PAN application is with the Income Tax Department. We shall intimate you once the Income Tax Department processes your application"  என்று பகலிலும், இரவிலும் வந்தது.


இப்படி ஒரு வருடம் ஓடியது.


அதற்குள் நான் பெங்களூர் வந்துவிட்டேன். என் அலுவலகத்தில் சக பணியாளரின் மனைவி, வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்வதால் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னேன்.
"உங்க ஃபைல் சென்னை அலுவலகத்தில் இருக்கிறது, அது பெங்களூர் வரவேண்டும், பார்க்கலாம்" என்றார்.
திரும்பவும் விண்ணபிக்க சொன்னார்.


திரும்பவும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(பழைய போட்டோவை காட்டிலும் இதில் வயசாகியிருந்தது), அட்ரஸ் ஃபுரூப் எல்லாம் கொடுத்தேன். கொடுத்து இரண்டு மாதத்திற்குப் பிறகு எனக்கு ஒரு லெட்டர் வந்தது.


அதில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மயக்கம் வந்தது.


"உங்கள் அப்பா பெயர் 'KR Narayanan' என்று போட்டிருக்கிறீர்கள், ஆனால் எங்களிடம் உள்ள டேட்டா பேஸில் வெறும் 'Narayanan' என்று தான் இருக்கிறது எது சரி ? எங்களுக்குத் தெரிவிக்கவும்" என்று கேட்டிருந்தார்கள். திரும்பவும் லெட்டர், ஃபுரூப் .. எல்லாம் அனுப்பிவிட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று வந்தேன். 15 நாளில் பிரசித்திபெற்ற அந்த பான் கார்டு வந்தது. அதில் என் போட்டோ கூட இருந்தது.


கட்டுரை முடியவில்லை. இன்னும் இரண்டு வரிகள் இருக்கின்றன.


போன மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போய்விட்டு வந்த போது வருமானவரி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில் இன்னொரு பான் கார்டு!. அதிலும் என் படம் இருந்தது.


இந்த மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போகிறேன்

Thursday, August 9, 2007

சென்னை விசிட்

இந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்கு, சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்படியே வலைப்பதிவு பட்டறைக்கும் சென்றேன்.


1993-1994ம் வருடம் கணினியில் தமிழில் தெரிந்தாலே புல்லரிக்கும். ஸ்ரீநிவாசன் 'ஆதாவின்' என்ற மென்பொருளின் தயவால்,  டாஸ் கணினியில் பாரதியார் கவிதைகள், திருக்குறள் எல்லாம் பெரிது பெரிதாகத் தெரியும்.  பிறகு விண்டோஸ் வந்த சமயம் தமிழ் நெட்டில் தங்கலீஷ் மறைந்து, முரசு அஞ்சல் வந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ் நெட்(99 என்று நினைக்கிறேன்) கருத்தரங்குக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. வேடிக்கை பார்க்கத்தான்.பெரிய ஆட்கள் எல்லாம் என்கோடிங், கீபோர்ட் லேயவுட் என்று கார சாரமாக விவாதிப்பார்கள்.  வயது வந்த பிறகு தான் அந்த அரசியல் புரிய ஆரம்பித்தது.  TAM, TAB, TSCII எல்லாம் இன்றும் இருப்பதற்கு காரணம் இதுவே.


அந்தச் சமயத்தில் நானும் ஒரு ஃபாண்ட் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என்கோடிங்) உருவாக்கியிருந்தால் இன்று 114 என்கோடிங்குடன் என்னுடைய என்கோடிங்கும் சேர்ந்து 115 வந்திருக்கும் என்று பட்டறையில் காசியிடம் நகைச்சுவையாகச் சொன்னேன்.


இன்று யூனிகோட் வந்த பிறகு  மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக கூகிளில் தேடி, ஈ-கலப்பையைக் கொண்டு வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இன்னும் சில பத்திரிகைகள் விடாப்பிடியாக பழைய ஃபாண்டையே உபயோகப்'படுத்தி'க் கொண்டிருக்கிறார்கள். பழைய அரசியல் 'லாபியிங்' பாதிப்பு தான் இதற்குக் காரணம். பத்திரிகைகளைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.


எனக்கு 13 வருடங்களுக்கு முன் தமிழ் அடித்த போது ஏற்பட்ட அதே த்ரில்லை, பட்டறையில் சில மாணவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பார்த்தேன். அட தமிழில் டைப் அடிக்க முடிகிறதே என்ற பூரிப்பு கண்களில் தெரிந்தது. உடனே என் பெயர், முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்கள். "டவுட் இருந்தால் பெங்களூருக்கு ஃபோன் செய்கிறேன் சார்!" என்றார்கள்.


எனக்கு தோன்றியது இது தான் - பதிவர்கள் சிலர் ஒரு கல்லூரி, பள்ளி என்று சென்று இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று செயல் முறை விளக்கமாக காண்பிக்கலாம். இன்னும் ரீச் நன்றாக இருக்கும். அதே மாதிரி பெரிய நிறுவனங்களுக்கும் எடுத்துச் சென்றால் விதவிதமான களங்களில், தளங்களில், மற்றும் வேறுபட்ட தொழில்சார்ந்த பதிவர்கள் நமக்குக் கிடைப்பார்கள். இது முக்கியம் என்று தோன்றியது. 


பட்டறையில் பழைய நண்பர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேட்ட கேள்விகள்..


"என்ன சார் புதுசா தாடி?"


"ரீசண்டா என்ன கோவில் போனீர்கள்?"


"ஏன் சார் இப்ப எல்லாம் முன்பு போல வேதாளம் வருவதில்லை?"


"...அப்புறம் நீங்க தான் இட்லிவடையா?"


- * - * -


ஆசிப் மீரான் பட்டறைக்கு வந்தது எனக்குத் தெரியாது, நான் அவரைப் பார்த்ததில்லை. ஆசிப் மீரானை சக வலைப்பதிவர் என்ற முறையில் தெரியும். ஆசிப் மீரான் அப்பா பிரபல கிரிக்கெட் வர்ணையாளர் அப்துல்ஜாபர் மகன். "இப்போது கவாஸ்கர் மட்டையைத் துக்கி அடிக்க, பந்து பவுண்டரி நோக்கிப் போகிறது, அங்கே மிக திறமையாகப் பந்தை நிறுத்துகிறார்..." என்ற பேச்சை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியா!. ஸ்கூல் படிக்கும் போது, சின்ன டிரான்சிஸ்டரை எடுத்துச் சென்று, ஒரு வகுப்பிற்கும் அடுத்த வகுப்பிற்கும் இடையே ஆசிரியர் வரும் இடைவேளையில் இந்த வர்ணனையைக் கேட்போம். அப்போது எல்லாம் இந்தியா ஜெயிக்கும்.


சமிபத்தில் ஆசிப் மீரான் அன்பான மனைவியை இழந்திருந்தார். ஏதோ நரம்புப் பிரச்சினை என்றும், ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சில மணி நேரத்தில் அவருக்கு தொடர்ந்து, மூன்று முறை ஸ்டிரோக் வந்து இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விபட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


ஆசிப் மீரானின் இல்லத்திற்குச் சென்றேன். முதலில் இவரை எப்படி சந்திக்கப் போகிறோம், என்ன பேசபோகிறோம் என்று மிகவும் குழம்பிப் போனேன். போகும் போதே முதலில் என்ன பேசலாம் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.


நான் அவர் இல்லம் சென்ற சமயம் என்னை அன்பாக வரவேற்று நலம் விசாரித்தார். பொதுவாக எப்படி இருக்கீங்க என்று ஆரம்பித்து... பேசிக் கொண்டிருந்தோம். நான் போன சமயம் இரண்டு குழந்தைகள் (மகன் 7வது படிக்கிறான், மகள் 5வது படிக்கிறாள்)  டிவியில் Pogo பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்னும் அந்தக் குழந்தைகளுக்கு அம்மா இல்லாத பாதிப்பு முழுவதும் தெரியவில்லை.


இவ்வளவு நடந்த போதும், தன்னம்பிக்கையை இழக்கவில்லை ஆசிப். எப்படி இவர்களை அம்மா இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் வளர்ப்பது என்று என்னிடம் அவர் திட்டங்களைப் பற்றி பேசினார்.  நான் கொஞ்சம் அசந்து போனேன். இவ்வளவு சின்ன வயசில் என்ன ஒரு முதிர்ச்சி, தன்னபிக்கை. ஆசிப் மீரான் போன்ற அப்பா கிடைப்பதற்கு எந்த குழந்தையும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


போகும் போது, வாசல் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். 2001ல் வந்த அமீரகம் ஆண்டுவிழா மலருக்கு நான் அவருக்கு ஹரன்பிரசன்னா மூலம் அனுப்பிய லைன் டிராயிங்குக்கு நன்றி கூறினார். எனக்கு நிஜமாகவே கண்களில் கண்ணீர் வந்தது.


பின்சேர்க்கை:  மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!! ஆசிப் மீரான் பதிவு.