Friday, October 29, 2004

விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா பதில்கள் !

 


 

வாசகர்கள் கேட்ட விஞ்ஞான சிறுகதை கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.


கேள்வி கேட்ட அனைவருக்கும், பதில் அளித்த திரு.சுஜாதாவிற்கும் என் மனமார்ந்த நன்றி.


கேள்வி-பதில்களை தொகுக்க உதவிய என் நண்பர் பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.


கேள்வி :
1. விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன ? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா ?
நீங்கள் எழுதிய 'முடிவு' என்ற சிறுகதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்தியது எந்த அடிப்படையில் என்பதை கொஞ்சம் சிம்பிளாக விளக்குங்களேன் ?
"epistolary literary technique"' (different style of writing) ' சார்ந்திருப்பதால் முடிவு ஒரு sci-fi கதை என்கிறீர்களா?


பதில்:
விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக எனது தொகுதியின் முன்னுரையில் எழுதியுள்ளேன். அதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள். இல்லை net-ல் தேடிப்பாருங்கள். நிறைய விளக்கம் கிடைக்கும். ' முடிவு' என்கிற கதை முழுவதும் நானே எழுதியது. அதன் வடிவமைப்பில் முன்று பேர் எழுதிய கடிதங்கள் என்பதை நம்ப வைக்க செய்த தந்திரங்கள் ஒரு விஞ்ஞானக் கதைக்குரியது. இந்தக் கதையை பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் நீங்கள் பார்ககவேண்டும். சம்பிரதாயக் கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்ட எந்தக் கதையும் விஞ்ஞானக் கதையின் நவீன அறுதியில் சேரும். கதைமாந்தரே இல்லாத ஒரு விஞ்ஞானக்கதை கூட இருக்கிறது. நடுக்கடலில் ஒரு காலியான படகில் நடைபெறுவது!
(பி.கு: சமயம் கிடைக்கும் போது, குங்குமத்தில் வந்த 'முடிவு' வி. கதையை ஸ்கேன் செய்து போடுகிறேன் - தேசிகன்)கேள்வி:
2. விஞ்ஞானச் சிறுகதையை எப்படி சொல்ல வேண்டும் ?
விஞ்ஞானச் சிறுகதையில் விஞ்ஞானம் எவ்வளவு சதவீதம், சிறுகதை எவ்வளவு சதவீதம்?
பொதுவாக ஐசாக் அசிமோவின் கதைகளில் ஒரு அறிவியல் கருத்தை முன்வைத்து அதனால் நிகழும் பாதிப்புகளை அலசுவார். சுஜாதாவும் இம்முறையை பின்பற்றி இருப்பதை அறிவோம். ஆனால் ஸை-ஷபிக்கள் பெரும்பாலும் ஒரு நூறு வருடம் கழித்து நடக்குமோ என ஆச்சரியப்படுவதை / அச்சப்படுவதை பதிவு செய்கின்றன - அல்லவா? என் கருத்துப்படி, விஞ்ஞான சிறுகதையில் கதை இல்லாவிட்டாலும் விஞ்ஞானமாவது இருக்க வேண்டும். உங்கள் கருத்து ?


பதில்:
எப்படிச்சொல்லவேண்டும் என்கிற வரையறையெல்லாம் கிடையாது. Fantasy, Gothic stories, Hard Sci Fi என்று பலமுறைகள் உண்டு எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஞ்ஞானத்தைப் பற்றி சொல்வது வி. கதையில் ஒரு வகை.


கேள்வி:
3. ஆங்கிலத்தில் மற்றும் தாங்கள் எழுதிய பல sci-fi கதைகளை படித்த வரையில், எனக்கு அவ்வகைக் கதைகள் Future Technology அல்லது எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சாத்தியம் (அபாயம்!) உள்ள விஷயத்தைச் சார்ந்து அமைய வேண்டும் என்று தோன்றுகிறது.
sci-fi என வகைப்படுத்துவதற்கு மூன்று ஆதார விதிகள் கூறுமாறு வேண்டுகிறேன்? ஓரு காலத்தில் sci-fi என்றுணரப்பட்டவை (like 'Around the World in 80 days', 'From the Earth to the Moon' and '20,000 Leagues Under the Sea'), விஞ்ஞான வளர்ச்சி காரணமாக 'sci-fi' தன்மையை பின்னாளில் இழந்து விடுமா?


பதில்:
எதிர்காலத்தில் நல்லதே நிகழும் என்று எழுதினால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. விதிகளை மாற்றிப் போட்டு அவைகளுக்கிடையே உள்ள புதிய முரண்பாடுகளைச் சொன்னால் தான் படிக்கச் சுவையாக இருக்கும். சொர்க்கத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொன்னால் அது கதையல்ல. போர் அடித்துவிடும். அந்த சொர்க்கத்திலும் முதுகுவலி டயாபடீஸ் பொறாமை போன்றவை இருந்தால் தான் படிக்கத் தோன்றும். நம் புராணக் கதைகளையே பாருங்கள். அவைகளிலும் போட்டி, ஆட்சிக் கவிழ்ப்பு, சாபங்கள், சபலங்கள் எல்லாம் இருக்கின்றன. நிகழ்காலச் சாயலை நாம் மீறவே முடியாது.

கேள்வி:
4 விஞ்ஞான சிறுகதைக்கு எதாவது பொது அம்சங்கள் இருக்கிறதா ?
விஞ்ஞானக் கதைகளின் மையக்கரு விஞ்ஞானம் சம்பந்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று எஙகயோ படித்த ஞாபகம் (I think I read it in "How to write science fiction & fantasy?"). John W Campbellன் "Who goes there?" ஆரம்பித்து இப்போதைய Neuromancer வரை இதை பின்பற்றின மாதிரிதான் தெரிகிறது?


பதில்:
உண்மையான விஞ்ஞானமாக இல்லாமல் இன்றைய விஞ்ஞானத்தின் விபரீதமான நீட்டல் தான் பொது அம்சமாக இருக்கும். மையக் கரு விஞ்ஞானம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும என்பது ஒரு வகை விஞ்ஞானக் கதைக்குத் தான் தேவை. எமதர்மராஜன் மாருதி காரில் வரும் தருமு மாமாவாக, ஒரு கதை எழுதியுள்ளேன். இதுவும் விஞ்ஞானக்கதையில் சேரும். புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' விஞ்ஞானக் கதை தான். இதன் அளவிலாத சாத்தியங்கள் தான் என்னை இதன்பால் ஈர்த்தது.

கேள்வி:
5. Are there certain predefined types of plots/themes that sci-fi is based on (For e.g. Time travel)? Are these any different from a short story or novel?


பதில்:
NO that is the attraction of Sci Fi. 'Cognitive estrangement' is a good guide. Describe an estranged society but have something identifiable for present day world in that.


கேள்வி:
6. How much science is needed in a sci-fi work? Should it give the central premise or should it just be used to describe the locale and social environs?


பதில்:
90 percent to 1 percent. 100 percent is not Sci Fi but, having 0 percent Sci fact is a conventional story.


கேள்வி:
7. Science Fiction பற்றி Google-ல் தேடிப்பார்த்ததில் நான் குழம்பிவிட்டேன். விஞ்ஞானக் கதையை வகைப்படுத்த இயலுமா? ஒரு கதையை எப்படி விஞ்ஞானச் சிறுகதை என்று கண்டுபிடிப்பது ?


பதில்:
சில தேர்ந்த வி.கதை எழுத்தாளர்களைப் படிப்பதன் முலம். நான் Ray Bradbury படித்தபின் தான் இதில் முனைப்பாக இறங்கினேன்.


கேள்வி:
8. ராமாயணமும், மகாபாரதமும் விஞ்ஞானக் கதைகளா ?


பதில்:
ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இன்றைய சூழ்நிலைக்குக் கொண்டு வரமுடிந்தால் விஞ்ஞானக்கதை என்று சொல்லாம். என்னுடைய 'நச்சுப் பொய்கை' படித்துப் பாருங்கள். ஒரு மகாபாரதக் கதையை அப்படியே ராஜாஜி சொன்னதுபோல் எழுதிவிட்டு ஒரே ஒரு வரி மட்டும் மாற்றினேன்!கேள்வி:
9. உங்கள் விளக்கங்களின் அடிப்படையில் Akira Kurosawa-vin ROSHOMON ஒரு விஞ்ஞானச் சிறுகதையா ?


பதில்:
இல்லை. அது ஒரு Mutiple Point of View கதை அவ்வளவே. சுந்தர ராமசாமியின் 'திரைகள்ஆயிரம்' படித்துப்பாருங்கள்.


கேள்வி:
10. எல்லா அமானுஷ்ய கதைகளும் sci-fi வகையை சார்ந்தவை என்று கொள்ளலாமா?


பதில்:
அவையெல்லாம் Fantasy வகையில் சேரும். அந்த அமானுஷ்ய உலகின் விதிகள் நம் உலகின் விதிகளுக்கு மாற்று விதிகளாக அமைந்தால் அவைகளை Sci Fi யில் ஒரு பிரிவாகச் சொல்லலாம்.


கேள்வி:
11. Can "குடைக்குள் மழை" be called sci-fi? Split Personality வரும் கதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்த முடியுமா ?


பதில்:
NO. It is just a confused psychological thriller.கேள்வி:
12. நீங்கள் படித்த விஞ்ஞானச் சிறுகதைகளில் உங்களை கவர்ந்த கதைகள் சிலவற்றைக் கூற முடியுமா ? தமிழில் நல்ல விஞ்ஞானச் சிறுகதைகள் இருக்கின்றனவா ? இல்லையெனில், தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகள் ஏன் அவ்வளவாக எழுதப்படவில்லை ?


பதில்:
என் பட்டியல் மிகப்பெரியது. நீங்களே கொஞ்சம் முனைந்து படித்துப்பாருங்கள். Douglas Adams is a good starting point. தமிழில் அத்தனை வி.சிறுகதைகள் இல்லாததற்கு காரணம் இதை தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். இத்தனை கேள்விகள் எழுவதிலேயே காரணம் உள்ளது!கேள்வி:
13. விஞ்ஞானச் சிறுகதை புரியவேண்டும். ஆனால் அதில் விஞ்ஞானம் அதிகம் கலப்பதனால் புரியாமல் போகும் அபாயம் இருக்கிறதே. அதற்கு உங்கள் உபாயம் ?


பதில்:
வி.கதையில் உள்ள விஞ்ஞானம் புரியவில்லையென்றால் அந்தக் கதை செத்துவிட்டது என்று அர்த்தம் !?


கேள்வி:
14. இரண்டு வரியில் ஒரு விஞ்ஞானக் கதையை எழுத முடியுமா ?


பதில்:
முடியும். என்னுயை சி சி கதைகள் புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.


கேள்வி:
15. விஞ்ஞானக் கதை சரி, விஞ்ஞானக் கவிதை/ஹைக்கூ இருக்கிறதா ?


பதில்:
இருக்கிறது! Sci-Ku என்று பெயர்! Old Comments from my previous blog.


யாராவது ஒரு SCI-KU கூறுங்களேன், பார்க்கலாம்!


ஓரு காலத்தில் sci-fi என்றுணரப்பட்டவை (like 'Around the World in 80 days', 'From the Earth to the Moon' and '20,000 Leagues Under the Sea'), விஞ்ஞான வளர்ச்சி காரணமாக 'sci-fi' தன்மையை பின்னாளில் இழந்து விடுமா?


இதற்கான நேரடியான பதில் திரு.சுஜாதாவிடமிருந்து கிடைக்காதலால், உங்களில் யாராவது இதை தெளிவு செய்யுமாறு வேண்டுகிறேன். Just out of curiosity!


என்றென்றும் அன்புடன்
பாலா


By Anonymous, at Fri Oct 29, 05:36:31 PM IST  

Friday, October 22, 2004

Sujatha Answers SciFi Questions.

விஞ்ஞானக் சிறுகதை கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சுஜாதா
நேற்று என் வலைப்பதிவில் திரு.சுஜாதாவின் 'முடிவு' என்ற விஞ்ஞானச் சிறுகதை ஒன்றை வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு, பலர் இது எப்படி விஞ்ஞானச் சிறுகதையாகும் என்று கேட்டு எனக்கு ஈ-மெயில் அனுப்பியுள்ளார்கள். சற்று முன் சுஜாதா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதை பற்றிக் கூறினேன். வாசகர்கள் எழுப்பும் விஞ்ஞானச் சிறுகதை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் தர சம்மதித்துள்ளார். ஆகவே உங்கள் கேள்விகளை சுருக்கமாக என்னுடைய 'Comments' பகுதியில் உள்ளிட்டால், திரு.சுஜாதாவிடமிருந்து பதில் கிடைக்கும். பதில்கள் அடுத்த வாரம் என் வலைப்பதிவில் இடம் பெறும்.


கேள்விகளை ஈ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி desikann@gmail.com


- தேசிகன்

Wednesday, October 20, 2004

விஞ்ஞான சிறுகதை – முடிவு

 

திண்ணையும் மரத்தடியும் சேர்ந்து நடத்தும் விஞ்ஞானச் சிறுகதை போட்டி பற்றி அறிந்திருப்பீர்கள்.
அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும். போன வாரம் சுஜாதாவிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். என் பங்கிற்கு அவருடைய 'முடிவு' என்கிற சிறுகதையை இங்கு தந்திருக்கிறேன். சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதை தொகுப்பில்  விடுப்பட்ட கதை இது!


முடிவு
 


 


எம்.நடராஜன்,                                             2-7-1982
187, பஜார் தெரு,
மோகனூர் 637015
சேலம் ஜில்லா


அன்புள்ள குங்குமம் ஆசிரியர் அவர்களூக்கு,
உடன் இணைக்கப்பட்டிருக்கும் 'முடிவு' என்கிற விஞ்ஞானச் சிறுகதையை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். படித்து அது குங்குமம் இதழில் பிரசுரத்துக்கு எற்றது எனில் அதை வெளியிட வேண்டுகிறேன். தகுதி இல்லையெனில் திருப்பி அனுப்புவதற்கு போதிய தபால் தலைகளை இணைத்திருக்கிறேன்.


இங்ஙனம்
எம்.நடராஜன்
மாடலன் (புனைப்பெயர்)
 


குங்குமம் வார இதழ்                                         8-7-1982
93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34


 


அன்புள்ள திரு.நடராஜன் அவர்களுக்கு,
உங்கள் ஜூலை 7 தேதியிட்ட கடிதமும் 'முடிவு' என்கிற விஞ்ஞானக் கதையும் கிடைக்கப் பெற்றோம். கதையை பற்றி அபிப்பிராயம் சொல்லுவதற்கு, கதையை நீங்கள் முடிக்கவில்லை. பாதியில் நிற்கிறது.
எனவே, நீங்கள் முடிவுக்கு உரிய பக்கங்களை அனுப்பிவைத்தால் கதையை பற்றி மெற்கொண்டு நாங்கள் முடிவெடுக்க எளிதாக இருக்கும்.


உண்மையுடன்,
பராசக்தி
(ஆசிரியர்)
 


எம்.நடராஜன்,                                             12-7-1982
187, பஜார் தெரு,
மோகனூர் 637015
சேலம் ஜில்லா


 


அன்புள்ள பராசக்தி அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்து மகிழ்ந்தேன்...
கதையின் முடிவுப் பக்கங்களை என்னை அனுப்பச் சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் முடியவில்லை. கதையை கொண்டு செல்ல முடிந்த எனக்கு அதை முடிக்க தெரியவில்லை. எனவே இந்த கதையை விஞ்ஞானக் கதைகளில் வல்லவர் என்று சொல்லிக்கொள்ளூம் திரு.சுஜாதா அவர்களூக்கு அனுப்பிவைத்து அவரால் இதை முடிக்க முடியுமா என்பதை அறிய முயற்ச்சிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
மாடலன்.


பி.கு.1 கதைக்குரிய சன்மானத்தில் எனக்கு பாதி கொடுத்தால் போதுமானது.
பி.கு.2 ஜூலை 30 வரைதான் இந்த முகவரியில் இருப்பேன். அதற்குள் உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.


 
 


குங்குமம் வார இதழ்                                         16-7-1982
93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34


 


திரு. சுஜாதா அவர்களுக்கு,
உடன் இணைக்கப்பட்டிருக்கும் கடிதங்களும், கதையும் உங்களுக்கு வியப்பைத் தரலாம். திரு.நடராஜன் என்பவர் ஒரு விஞ்ஞானக் கதையை முடிக்க முடியாமல் உங்களை முடிக்க சொல்லி எழுதியிருக்கிறார். நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
வீட்டில் யாவரும் நலமா ?


பராசக்தி
(ஆசிரியர்)
 


சுஜாதா,                                                 21-7-1982
S.Rangarajan
D-9, BEL colony,
Bangalore - 560013


 


அன்புள்ள பராசக்தி,
உங்கள் கடிதமும் திரு. நடராஜன் என்பவர் பாதி எழுதிவிட்டிருக்கும் கதையும் கிடைக்கப்பெற்றேன். கொஞ்சம் வினோதமான விஷயம்தான்!. சொந்தமாக எழுதும் கதைகளையே முடிக்க தெரியாமல் திணறும்போது இது ஒரு புதிய திணறல்தான்!. கதையை படித்து. எப்படி முடிக்கலாம் என்று யோசித்து அனுப்புகிறேன்.
அன்புடன்
சுஜாதா


 
 


 


குங்குமம் வார இதழ்                                         23-7-1982
93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34


அன்புள்ள திரு.சுஜாதா அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. சந்தோஷம். சுதந்திரதினச் சிறப்பிதழில் தங்கள் கதை எழுதப் போவதாக அறிவிப்பு வைத்துவிட்டேன். வெள்ளிக்கிழமைக்குள் சிறுகதையை அவசியம் அனுப்பி வையுங்கள். இந்தக் கதையை முடிப்பதாக இருந்தாலும் புதுமையாக இருக்கும். ப்ளீஸ்!.
பராசக்தி
(ஆசிரியர்)
 


S.RANGARAJAN D9 BEL COLONY BANGALORE
X 170 5 AP 1639 MADRAS 26 21


 


PLEASE SEND SHORT STORY URGENTLY STOP ANNOUNCEMENT ALREADY MADE IN THE CURRENT ISSUE - KUNGUMAM -


LM 191 AP 1637 7 9 13
 


சுஜாதா,                                                 28-7-1982
S.Rangarajan
D-9, BEL colony,
Bangalore - 560013


 


அன்புள்ள பராசக்தி,
உங்கள் கடிதமும் தந்தியும் கிடைத்தன.
திரு.நடராஜன் 'முடிவு' என்கிற கதை அவர் எழுதியிருக்கும் வரை படித்து பார்த்தும் கொஞ்சம் ஏமாற்றம்தான்!
அந்த கதையை அவர் விஞ்ஞான கதை என்று சொல்லியிராவிட்டால் ஒருவேளை அதை நாம் கொஞ்சம் திருத்தி , செப்பனிட்டு சாதாரணக் கதையாக வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. திரு.நடராஜனுக்கு விஞ்ஞானக் கதை என்றால் என்ன என்பதைப்பற்றி கொஞ்சம் குழப்பம் இருப்பது தெரிகிறது.
விஞ்ஞானக் கதையில் விஞ்ஞானம், ராக்கேட், எதிர்காலம் எல்லாம் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதாகப் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விஞ்ஞானக் கதையில் இருக்கலாம். ஆனால் இவை இருந்தால் மட்டும் அது விஞ்ஞானக் கதையாகிவிட்டாது. அதேபோல் இவை எதுவும் இல்லாமலும் விஞ்ஞானக் கதை எழுத முடியும். அவ்வளவு தூரத்திற்கு இந்த கதை வடிவை மேல்நாட்டில் வளர்த்திருக்கிறார்கள்.
விஞ்ஞானக் கதைக்கு, நான் புரிந்துகொண்டவரை, முக்கியமான தேவை வாசகர்களை சம்பிரதாய கதை அமைப்பிலிருந்து விலகிப் போய் சிந்திக்க வைக்கவேண்டியது. கதையில்தான் விஞ்ஞானம் என்றில்லை! கதை எழுதும் விஞ்ஞானமும் இதில் அடங்குகிறது. இந்த முறையில் பற்பல உதாரணங்க்கதைகளை நாம் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் போது உங்களுக்கு சொல்லமுடியும்.
எனவே திரு.நடராஜன் அவர்களின் கதையை முடிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். இத்துடன் கதையின் பகுதியை திருப்பி அனுப்பியுள்ளேன்.
அன்புடன்
சுஜாதா


பின்குறிப்பு:
யோசித்துப் பார்த்தால், திரு.நடராஜனின் 'முடிவு' என்கிற கதையைப் பற்றிய நம் இந்த கடிதப் போக்குவரத்தையே முழுவதும் உங்கள் குங்குமத்தில் பதிப்பித்துவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.
அப்படிப் பதிப்பிட்தால் உங்கள் வாசகர்களுக்கு இந்த சந்தேகம் எழும். கடிதங்கள் அத்தனையும் எழுதியது ஒருவரா, மூன்று பேரா ?
இது முழுவதும் கதையா? கதையை பற்றிய கதையா? இல்லை, கதையை பற்றிய உண்மையா ? இதுபோன்று வினாக்கள் எழும்போது இந்தக் கடித தொகுப்புக்கூட ஒரு விஞ்ஞானக் கதையாகிறது. Old Comments from my previous blog.


One things for sure... there is NO END to science and its wonders.... but somehow for people who are Sujatha fans (and now urs too!)... the flow of the story and its end seems very predictive.... good narration though.... :)... Latha...


By Anonymous, at Wed Oct 20, 05:35:08 PM IST  


எப்படி இது அறிவியல் புனைகதை ஆகிறது என்று புரியவில்லை. சமூகக்கதை மாதிரிதான் தோன்றுகிறது. சிந்திக்க வைத்தால் கதை... அறிவியல் பின்புலத்தில் தாக்கங்கள் கொடுத்தால்தான் அறிவியல் புனைகதை என்றெண்ணியிருந்தேன்.


இந்தக் கதை எவ்வாறு சயின்ஸ்-பிக்ஷன் என்று சொல்லுகிறார்?


(முன்கூட்டிய நன்றிகள் :-D


By Boston Bala, at Wed Oct 20, 06:52:17 PM IST  


At last what is a Science Fiction story? If the conclusion of the is left to the reader will it become a Science fiction story?


:-) Just joking..


anandham@linuxmail.org


By Anandham, at Wed Apr 06, 01:56:55 PM IST  


 

Thursday, October 14, 2004

பெண்களூர்-0 2

பெங்களூர் பற்றி எழுதியதும் எனக்கு பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். சிலர் போன் செய்து புளியோதரை சாப்பிட எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்றார்கள். கூப்பிட்டவர்கள் இதுவரை அவர்கள் வீட்டு முகவரியைத் தரவில்லை. என் நீண்ட நாள் நண்பர் கிச்சா என்ற கிருஷ்ணன், அவர் வீட்டு விலாசம் குடுத்து "ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்" என்று ஈ-மெயில் அனுப்பியிருந்தார். அட்ரஸை பார்த்தால் நிஜமாகவே அடுத்த வீட்டுக்காரர். எங்கள் வீட்டு மதில் சுவற்றில் ஒரு எட்டு ஏறி குதித்தால் போதும்!


பலர் "என்ன சார் டிராஃபிக் ஜாம் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே" என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். அவர்கள் இட்ட சாபம் என்று நினைக்கிறேன், போனவாரம் எனக்கு ராத்திரி 9:30 மணிக்கு சென்னை ரயில். ஆட்டோ வில் ஏறும் போது மணி 8:00. நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது மணி 9:20. நடந்து சென்றிருந்தால் 9:00 மணிக்கே போய் சேர்ந்திருக்கலாம்!


அல்சூர், கோரமங்களா போன்ற இடங்களில் நல்ல தமிழ் நாட்டு உணவு கிடைக்கிறது என்று எனக்கு தெரிவித்தவர்களுக்கு என் நன்றிகள். நாம் நலம் விசாரிக்கும் போது "என்ன சார் செளக்கியமா?" என்று கேட்போம். ஆனால் இங்குள்ளவர்கள் காலை என்றால் "திண்டி ஆயித்தா" என்றும், மத்தியானம் என்றால் "ஊட்டா ஆயித்தா".


எம்.ஜி.ரோடில் உள்ள 'ஃபுட் வோர்ல்ட்" வாசலில் "நான் வளர்கிறேன் மம்மி" என்று காம்பிளான் விளம்பரத்தில் வரும் குழந்தை போல் ஒரு சின்ன பெண்(ஆறு அல்லது ஏழு வயசு தான் இருக்கும்) தினமும் சாயந்திரம் ஒரு ரோஜா பூங்கொத்தை வைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஐந்து ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுங்கள் என்ற ஓயாமல் கெஞ்சி கொண்டு இருப்பாள். பார்ப்பதற்கு பாவமாக இருக்கும்.


குமார் என்பவர் மல்லேஸ்வரம், பனஷங்கரி, ஜே.பி. நகர் போன்ற இடங்களில் பெருமாள் கோயில்கள் இருப்பதாகக் கூறினார். எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் காலையில் 'மன்மத ராசா', சாயங்காலம் "சிரிச்சு சிரிச்சு வந்தா, சீனா தானா டோ ய்" போன்ற பாடல்கள் பக்தி பரவசமூட்டுகின்றன.


பெங்களூரில் நாம் அதிகமாக காண்பது சோம்பேறித்தனம் தான்.'Busyபேலாபாத்தை' தவிர!


வீட்டில் டீவி இல்லை, எப்படி தனியாக பொழுது போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். வேற என்ன? புத்தகங்கள்தான். அப்புறம் சொல்ல மறந்துவிட்டேனே, சோப் தேய்த்து குளிக்கும் போது நிறைய நுரை வருகிறது!Old Comments from my previous blog.


"பெங்களூரில் நாம் அதிகமாக காண்பது சோம்பேரித்தனம் தான்.'Busyபேலாபாத்தை' தவிர!" -- arumai, desikan!


"ஆனால் இங்குள்ளவர்கள் காலை என்றால் "திண்டி ஆயித்தா" என்றும், மத்தியானம் என்றால் "ஊட்டா ஆயித்தா"." -- ithuvum SUPER! சாப்பிடுவது தான் அவர்களுக்குப் பிரதானம்!!! மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்!!!


என்றென்றும் அன்புடன்
பாலா


By Anonymous, at Thu Oct 14, 06:15:06 PM IST  


Desikan
How can u not mention about those beautiful trees covered with flourascent coloured flowers without a single leaf….


I guess u still haven’t got to know about the innumerable “circles” abound at every intersection all over bangalore : )


That multipurpose cost effective Two Wheeler - The Hero Cycles are a rare see in Bangalore


Laidback lifestyle of localities sounds better than “Somberithanam”… : )… thamizhle translate pannikka vendiyadhu unga poruppu….


Dhavani is a Fancy Dress Costume for Bangalore Girls....


..... Latha.. : )


By Anonymous, at Thu Oct 14, 07:45:52 PM IST  


Hey, Soap Theicha neriya norai varudhu is a good teaser.... cudnt help but giggle at that statement... being a thorough bangalorean, its feels good to read about bangalore thro a non-bangalorean's view point.... ur tamil is superb... keep writing.... :).... Latha...


By Anonymous, at Thu Oct 14, 07:46:11 PM IST  


பெங்களூர் என்பது கர்நாடகா என்ற "சுதந்திர நாட்டின் தலைநகரம்" என்பது மிக முக்கியமான செய்தி. :-(


By மீனாக்ஸ், at Fri Oct 15, 09:56:07 AM IST  


//இங்குள்ளவர்கள் காலை என்றால் "திண்டி ஆயித்தா" என்றும், மத்தியானம் என்றால் "ஊட்டா ஆயித்தா".//
இதை நானும் கவனித்திருக்கிறேன். கன்னடர்கள் மட்டுமில்லாமல், தமிழர்கள் கூட "என்ன ஸார் சாப்பாடு ஆச்சா?" என்றுதான் கேட்டு பார்த்திருக்கிறேன்.


By ROSAVASANTH, at Tue Jan 18, 10:58:28 AM IST  


 

Thursday, October 7, 2004

பெண்களூர் *


நான் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் இருந்த எனக்கு பெங்களூர் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.


1. பூஜை போட்ட கையோடு சுவற்றில் fluorescent கலரில் சினிமா விளம்பரங்களை பார்க்க
முடிவதில்லை.


2. இட்லி தோசைக்கு வெல்லம் கலந்த சாம்பார் தருகிறார்கள்(எம்.ஜி.ரோடில் உள்ள பிருந்தாவன்
ஹோட்டல் தவிர).


3. சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் லாப்டாப் வைத்திருக்கிறார்கள்.


4. ஆட்டோக்கள் மீட்டர்க்கு மேல் பெரும்பாலும் காசு கேட்பதில்லை.


5. பைரேட்டட் புத்தகங்கள் எங்கும் கிடைக்கிறது. The Da Vinci Code, Mein Kampf by Adolf
Hitler, My Life - Clinton தற்போது விற்பனையில்.


6. பெங்களூருக்கு போனால் கன்னடம் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தான் பேசுகிறார்கள். தமிழில் பேசினால் புரிந்து கொண்டு
பதில் சொல்கிறார்கள் - கொஞ்சம் வேடிக்கையாக.(உதாரணம்- "நாங்களுக்கு எரடு ரூபாய் கொடுத்தாரு" என்றால் "எங்களுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார்")


7. பெங்களூர் பஸ் போக்குவரத்து மோசம் என்று கூறுவது சரியில்லை. மிகவும் மோசம் என்று
கூறுவதுதான் சரி.


8. பெங்களூரில் மழை எப்போது பெய்யும் என்று சொல்லமுடிவதில்லை.


9. நீங்கள் பெங்களூர் வாசி என்றால் கட்டாயம் ஒரு jacket அணிந்திருக்க வேண்டும்.


10. பெங்களூரில் எல்லாமே இரட்டை இரட்டையாகத்தான் இருக்கிறது. சிட்டி ஸ்டேஷன்-கண்டோன்மெண்ட் ஸ்டேஷன். லால் பாக் - கப்பன் பார்க். சிட்டி மார்கெட்- கண்டோன்மெண்ட் மார்க்கெட்.


பெங்களூர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள். எம்.ஜி.ரோட்டுக்கு ஒருமுறை போய் வந்தால் இதை பெங்களூர் என்பதைவிட பெண்களூர் என்று
கூறுவது சரியாக இருக்கும் !


* பெண்களூர் பெயர் உதவி 'சாவி'Old Comments from my previous blog.


உங்களுடைய இந்தப் பதிவை படித்துக்கொண்டிருக்கும்போதே, தேசிகன் மறைந்து சுஜாதா எட்டிப்பார்க்கிறார். குறிப்பாக இதில்:


பெங்களூர் பஸ் போக்குவரத்து மோசம் என்று கூறுவது சரியில்லை. மிகவும் மோசம் என்று கூறுவதுதான் சரி.


வாழ்த்துக்கள்.


By அன்பு, at Thu Oct 07, 10:08:14 AM IST  


அந்த டிராஃபிக் ஜாம்களைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. அவை தான் பெங்களூரில் மிக மிக மோசம். :-((


By மீனாக்ஸ், at Thu Oct 07, 10:36:11 AM IST  


>2. இட்லி தோசைக்கு வெல்லம் கலந்த சாம்பார்
>தருகிறார்கள்(எம்.ஜி.ரோடில் உள்ள பிருந்தாவன்
>ஹோட்டல் தவிர).


அல்சூர், கோரமங்களா பக்கம் சில ஹோட்டல்களில் நல்ல சாம்பார் கிடைக்கும் (இது போன்ற டிப்ஸ் கிடைக்க பெண்களூரில் ஒன்றிரண்டு பேச்சிலர்களைத் தெரிந்துகொள்வது அவசியம்) :-).


உங்கள் லிஸ்டில் பெண்களூரின் தனித்தன்மைகள் சில மிஸ்ஸிங் (டிராஃபிக் ஜாம், குழியோர ரோடுகள், வேகத்தடைகள், தெரு நாய்கள் ....) :-(


By Kannan, at Thu Oct 07, 12:06:20 PM IST  


நான் "பெண் galore" என்று சொல்வது வழக்கம்!


By S.K, at Thu Oct 07, 12:41:17 PM IST  


//பெங்களூரில் எல்லாமே இரட்டை இரட்டையாகத்தான் இருக்கிறது//


அப்டியா? அப்போ ஒருக்கா பெண்களூரு போயி வரணும் ;-)


By KVR, at Thu Oct 07, 03:17:44 PM IST  


மற்ற நேரங்களில் ஃப்ரீயாக இருக்கும் கடவுள்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் முண்டியடிக்கும் கோவில் கூட்டம்; ரெக்ஸ், லிடோ, ப்ளாஸா ஆங்கிலப் படங்களுக்கு காத்திருப்போர்; ஆறு மணிக்கு மக்களை விரட்டும் கப்பன் பாக் போலீஸ்; என்று இன்னொரு லிஸ்ட் போடுங்க சார்....


By Boston Bala, at Fri Oct 08, 02:55:48 AM IST  


தேசிகன்,


வாசம் எங்கே ? ஆபீஸ் எங்கே ?


மறந்தும் போய் சுக்.சாகர், சாந்தி சாகர் போன்ற உணவகங்களில் சாப்பாடு சாப்பிட செல்லாதீர்கள்.. அவை டிபன் சாப்ப்பிடவும், காபி (அருமையாக இருக்கும் எல்லா கையேந்தி பவன்களிலும்) அருந்தவும் மட்டுமே. எம்.டி.ஆர் சாப்பாடு எல்லாம் இப்போ மவுஸ் இழந்துவிட்டது. க்வாலிடி ஆப் சர்வீஸும் சரியில்லை.


மல்லேஸ்வரத்தில் இருந்தால் - சம்பிகே தியேட்டர் எதிர்புறம் உள்ள மாமா மெஸ்ஸில் சாப்பாடு ட்ரை பண்ணவும். நமது தமிழக சாப்பாடு போல் கிடைக்கும்.


குடையோ ஜெர்கினோ இல்லாமல் எங்கும் வெளியே கிளம்பவேண்டாம். தினமும் மாலையில் மழை பெய்யும்.. அதிகாலை எட்டு மணி வரை குளிரும்..


பெருமாள் கோயில்களுக்குச் செல்லவேண்டுமென்றால் தனி மடல் எழுதவும். மிக அருமையான கோயில்கள் உள்ளன. மல்லேஸ்வரம், பனஷங்கரி, ஜே.பி. நகர் (இங்கு ரங்கநாதரும் உண்டு).


குமார். வி


By Anonymous, at Wed Oct 13, 01:37:25 PM IST