Monday, April 25, 2016

பஞ்சகவ்ய சிந்தனைகள்

நண்பர் அருண் வடபழனியில் துவக்கியிருக்கும் ப்யூர் சினிமா (Pure Cinema) புத்தகக் கடை சார்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேலுடன் கலந்துரையாடலுக்கு சனிக்கிழமை சென்றிருந்தேன்.  சில வருஷங்கள் முன் ஒரு காலை நடைபயிற்சியின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் என்னை அழைத்து என் சிறுகதை புத்தகத்தை பாராட்டி பேசினார். அதற்கு பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை பேசியிருப்பேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அறிமுக செய்துக்கொண்ட போது என்னை நினைவில் வைத்திருந்தது வியப்பாக இருந்தது.

அன்றைய கூட்டத்தில் பலரும் இளைஞர்கள். எல்லோருக்கும் சினிமாவில் ஏதாவது ஒன்றை சாதித்துவிட வேண்டும் என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. எது நல்ல இலக்கியம் என்று தமிழ் எழுத்தாளர்கள் குழப்புவது போல எது நல்ல சினிமா என்று குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கூடவே உலக சினிமா, இராணிய சினிமா, எதார்த்த சினிமா என்று அவர்கள் குழப்பம் விரிவடைகிறது. துணை இயக்குனராக சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும், தலித் இலக்கியம் மாதிரி தலித் சினிமா என்று எல்லா கேள்விகளுக்கும் பாலாஜி சக்திவேல் பூசி மொழுகாமல் நேரடியாக பதில் அளித்தார். காதல் கோட்டை போன்ற பார்க்காமலே காதல் கதை இன்றைய வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் காலத்தில் சாத்தியம் இல்லை என்றார். சில சமயம் பாத்ரூமில் கூட காட்சி எப்படி அமைக்க வேண்டும் என்று ஐடியா கிடைக்கும் என்றார்.

நல்ல படங்களுக்கு நல்ல கண்டெண்ட் வேண்டும் என்ற சின்ன உண்மை தான் ஒரு நல்ல திரைப்படம் உருவாக மூலகாரணம். நல்ல கேமராவுக்கு நல்ல காட்சி; நல்ல பியானோவிற்கு நல்ல இசையமைப்பாளார் என்பது போல நல்ல சினிமாவுக்கு நல்ல கதை வேண்டும். அதை தேர்ந்த காட்சிகள் மூலம், சுமாராக நடிக்க தெரிந்தவர்கள் இருந்தாலே போது. பிரபலங்கள் தேவை இல்லை.

பல சினிமா சம்பந்தபட்ட புத்தகங்கள் அங்கே இருந்தது. சுஜாதா எழுதிய ’திரைக்கதை எழுதுவது எப்படி?’ மற்றும் ’திரைக்கதை பயிற்சி புத்தகம்’ இரண்டும் மிஸ்ஸிங்!

மேலும் சில மிஸ்ஸிங் பட்டியல் - பேருந்துகளில் இலை படத்தையும், அம்மா வாட்டர் பாட்டிலில் அம்மா’ படங்களும் மிஸ்ஸிங். வெயிலுக்கு சாலைகல் கறுப்பாகி, குண்டும் குழியும் மிஸ்ஸிங், ஓசியில் ஏஸி கிடைக்கிறது என்று ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகாமாக என்கிறார்கள்.

- 0 - 0 - 0 -

இயற்கை விவசாயம், பசுமைப் புரட்சி செய்த நம்மாழ்வார் அவர்களால் உருவாக்கப்பட்ட வானகம் பயிற்சிப் பட்டறையில் நேற்று கலந்துக்கொண்டேன்.  காலை பத்து மணி முதல் மத்தியம் மூன்று மணி வரை ஓவர் டோஸ் விட்டமின்-Dயுடன்,  செடிகளை பூச்சி தாக்குவதை தடுக்க என்ன செய்ய வேண்டும், பூச்சிகளை அழிக்காமல் அவற்றுடன் எப்படி பழக வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படு வந்த பஞ்சகவ்யம் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது.  நம்முன்னோர்கள்  பஞ்சகவ்யம் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை எப்படி தயாரிப்பது என்று சொல்லிதந்தார்கள் ( பசு சாணம், சிறுநீர், பால், தயிர், கடலை புண்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம், இளநீர், கரும்புசாறு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி செடிகளுக்கு தெளிக்கும் பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும் ) பஞ்சகவ்யம் செய்யும் போது எல்லோர் முகமும் அஷ்டகோணல் ஆனது. பசு சாணம் நம் மலம் போல வாசனை அடித்தது. ஏன் என்று கேட்டேன்
“ஊரில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவு, சினிமா போஸ்டர் போன்ற ஜங்க் ஐய்ட்டங்களை சப்பிட்டால் அப்படி தான் மணம் வீசும்” என்றார்.

இன்று நம் முன்னோர்கள் சொன்ன உணவு முறையை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறொம். ஏகாதசி அன்று சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று நம்ப ஆரம்பித்திருக்கிறோம். வெகு விரைவில் பஞ்சகவ்யம் சாப்பிட்டால் நல்லது என்று ஃபேஸ்புக்கில் பேச ஆரம்பித்துவிடுவோம். இந்த இயற்கை விவசாய கல்விமுறை பற்றிய சிந்தனையை நம் குழந்தைகளின் கல்வித்திட்டத்தில் விதைக்க வேண்டும்.

Friday, April 22, 2016

சாஸ்திரி பவன்

கடைசியில் சொத்தையாக ஒன்று அகப்பட்டு நமக்கு திருப்பம் கொடுக்கும் வேர்கடலை பொட்டலம் மாதிரி தான் நான் சொல்லப்போகும் இந்த கதையும்.

பெல்கிஜியம் நாட்டில் என் பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதைப் பற்றி சொல்லியிருக்கிறேனா ? ஐயோ தொலைஞ்சு போச்சா? என்று நீங்கள் கேட்கும் முன்... தொலைஞ்சுப் போகலை திருடுபோனது. எப்படி என்று சொல்லுவதற்கு முன் என்னைப் பற்றியும் என் குடுமியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

என் பெயர் ஸ்ரீநிவாஸராகவன். ஸ்ரீரங்கம். தாயார் சன்னதிக்குள் சட்டென்று உள்ளே நுழையக்கூடிய வடக்கு உத்திர வீதியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடத்துக்கு நான்கு வீடு தள்ளி எங்க வீடு. மஞ்சள் திருமண் குடுமியுடன் ஸ்ரீரங்கம் தெருவில் கிரிக்கெட் விளையாடி ஈ.ஆர்.ஐ.ஸ்கூலில் படிக்கும் வரை என்னை யாரும் கேலி செய்யல, ஆனா காலேஜ் படிக்கும் போது பின்னாடியிலிருந்து கேலி பேசுவா.

முன் நெற்றியில் மழித்துக்கொண்டு இருப்பதால் “கரைய மண்டை” என்பார்கள். விளையாட்டு மைதானம் பக்கம் போனா பின் பக்கம் சுருட்டி வைத்த என் குடுமியை பார்த்து “தலையில பந்து” என்று யாராவது சத்தம் போடுவார்கள்.