Skip to main content

திருச்சி பாப்பு

’திருச்சி பாப்பு’ என்று செல்லமாக அழைக்கப்படும் என் அம்மா ஆசார்யன் திருவடி அடைந்து இரண்டு வாரம் ஆகிறது.

டிசம்பர் மாதம், பெனடிரிலுக்கு இருமல் அடங்காமல் மருத்துவரிடம் சென்ற போது

“எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துவிடலாம்” என்றார்.

எக்ஸ்ரேயைப் பார்த்த போது டாக்டருக்கும் எங்களுக்கும் அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அதில் ஒரு நுரையீரல் தெரியவில்லை.

”அம்மாவிற்கு வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய் லாஸ்ட் ஸ்டேஜ்” என்று டாக்டர் சொன்ன போது, தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ”கேன்சர் ஒரு சாபம் அல்ல குணப்படுத்த முடியும்” என்று எழுதியிருக்கும் அந்த பிங்க் நிற பலகை ஞாபகத்துக்கு வந்தது.



அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லவில்லை, ’உள்ளே ஒரு சின்னக் கட்டி மருந்தில் கரைத்துவிடலாம்’ என்று பொய் சொல்லிச் சமாளித்தோம்.

எழுபதாவது வயதிலும் திருச்சி பாப்பு படு சுறுசுறுப்பு. தனியாக எல்லாவற்றையும் செய்துவிடுவார். பிடிவாதம் ஜாஸ்தி. திருச்சி கண்டோன்மெண்டில் சாலையை கிராஸ் செய்யக் கஷ்டப்பட்டபோது பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் சிக்னல் போட மனு கொடுத்தார். தாமதம் ஆன போது தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி பலரை சுறுசுறுப்பாக்கினார்.

வீட்டுக்கு யார் எப்ப வந்தாலும் வயிறு நிறைய சாப்பாடு, காபி என்று சளைக்கமாட்டார். வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண்ணுக்கு தினமும் குக்கரில் சூடாக சாதம் வைத்துக் கொடுத்து அவளுடைய பெண் கல்யாணத்துக்கு தன் பட்டுப்புடவையை பரிசாக கொடுத்தார்.

தன் அப்பாவை (என் தாத்தாவை) 95 வயது வரை முகம் சுளிக்காமல் பார்த்துக்கொண்டார். என் தகப்பனார் ஆசார்யன் திருவடியை அடைந்த பின் சற்றும் சளைக்காமல் என் மூன்று தம்பிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். பேரன் பேத்திகள், வீட்டு வரி, கேஸ் கனக்‌ஷன், ஆதார் அட்டை, மருமகளுக்கு டிபன் பாக்ஸ் கட்டுவது, காய்ந்த துணியை மடித்து வைப்பது,  நான் வாங்கிங் சென்றால் கூட வாசல் வரை வந்து கை அசைத்து டாட்டா காண்பிப்பது என்று காலில் பம்பரம் கட்டியது போல சுழன்று கொண்டு இருந்தார். மூச்சு நிற்கும் வரை எங்களிடம் ஒரு வேலையும் கொடுத்ததில்லை.

என் ஏழு வயதில், சாணி மொழுகி அவரது கை, என் நாற்பதாவது வயதில், ’வாட்ஸ் ஆப்’ உபயோகித்துக்கொண்டு இருந்தது. பத்திரிக்கையில் வந்த ஏதோ குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்துக்கொண்டு மொபைல் ஃபோன் பரிசு வாங்கினார். அது காணாமல் போனபோது யார் எடுத்திருப்பர்கள் என்று கண்டுபிடித்து அதை எடுத்தவரே வீட்டில் வந்து தரும்படி தந்திரம் செய்தார். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்று ஒரு டீம் செய்வதை மொபைல் போனை வைத்து முடித்துவிடுவார். மறதி என்ற ஒன்று என் அம்மாவிற்கு கிடையாது. ஏதாவது ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அம்மாவிடம் சொல்லிவைத்தால் சரியாக ஞாபகப்படுத்திவிடுவார். எல்லோருடைய தொலைப்பேசி மனப்பாடமாக தெரியும். மார்ச் மாதம் கடைசியாக கொடியாலம் சென்ற போது அர்ச்சனைக்கு குடும்பத்தினர் எல்லோரது பெயர்களையும், நட்சத்திரங்களையும் வாய்ப்பாடு மாதிரி சொல்லி பெருமாளையே திக்குமுக்கு ஆட வைத்தார்.

அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் சென்ற போது எங்களுக்கு வேறு ஒரு உலகம் தெரிந்தது. வாயில், மூக்கில், இடுப்பில் டியூப் வைத்துக்கொண்டு அதில் அவர்களுடைய சொந்தங்கள் ஜூஸ், தண்ணி ஊற்றிக்கொண்டு... அம்மா இது மாதிரி கஷ்டப்பட கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.

கஷ்டங்கள் எவ்வளவு வந்தாலும் அதை சமாளித்தவர். எனக்கு அடுத்த பிறந்த தம்பி இறந்த போது அவனுக்கு இளநீர் கிடைக்காமல் போனதால் கடைசிவரை இளநீர் குடிக்கவில்லை. தன்னை அவமானப்படுத்தியவர்களிடம் கூட இன்முகத்துடன் பேசியவர். இது எப்படி முடிகிறது என்று சில சமயம் அம்மா மீது ஆச்சரியமாகவும், சில சமயம் கோபமாகவும் இருக்கும்.

அடையார் கேன்சர் மருத்துவமனையில், “உனக்கு வந்திருப்பது கேன்சர்” என்று டாக்டர் போட்டு உடைத்தார், எங்களுக்குக் கலக்கமாக இருந்தது ஆனால் அம்மா பெரிதாக அசரவில்லை.

மருத்துவர் எங்களை தனியாகக் கூப்பிட்டு ”உங்கள் அம்மா உடல் இடை, வயது காரணமாக எந்தச் சிகிச்சையும் கொடுக்க முடியாது, Just Keep Her Cheerful" என்று ஒற்றை வரியில் பிரிஸ்கிரிப்ஷனை எளிதாக முடித்துக்கொண்டார்.

அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் பற்றி தனியாக எழுத வேண்டும். அங்கே இருக்கும் ஊழியர்கள், மருத்துவர்கள் எல்லோரும் ஜெம். இது ஒரு சேவை என்று புரிந்துக்கொண்டு செய்பவர்கள். யாருக்கும் இந்த நோய் வரக் கூடாது, ஆனால் நோய் இருக்கும் அறிகுறி இருந்தால் நிச்சயம் பளபளக்கும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் அங்கே செல்வது பரம உத்தமம். சில உதாரணங்கள்

”நீங்க எல்லோரும் ஐடியில் இருக்கிறீங்க, உங்க அம்மாவிற்கு இன்ஷூரன்ஸ் இருக்கும், உங்களிடம் பணம் வாங்குவது மிக சுலபம், ஆனால் அது எங்கள் நோக்கம் இல்லை” என்றார்கள்.

இரண்டு வாரம் முன் அம்மா மூச்சு விடக் கஷ்டப்பட்டபோது, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்த போது, ”சார் இன்ஷூரன்ஸ் எவ்வளவு கிடைக்கிறது என்று பாருங்கள், கிடைக்காத தொகையை எங்களிடம் சொல்லுங்க முடிந்தால் ரீஃபண்ட் செய்கிறோம்” என்றார்கள்.

ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பையாப்ஸி பரிசோதனைக்கு ஆன தொகை 10 ஆயிரம்; அடையார்  மருத்துவமனையில் வெறும் 600 ரூபாய்க்கு அதைச்செய்தார்கள்.

சில மாதங்களுக்கு முன் திருச்சி சென்ற போது
“உனக்குப் பிடிக்குமே என்று பெசரட்டு செய்திருக்கிறேன்”
”நல்ல மொறுமொறு என்று இருக்கிறதே எப்படி ?”
“உனக்காக கல் உரலில் அரைத்தேன்” என்றார்.

என் வாழ்நாளில் அந்த மாதிரி ஒரு பெசரட்டு சாப்பிட்டதில்லை. கூடவே எனக்குப்பிடிக்கும் என்று சக்கிரவர்த்தி கீரை, சுண்டைக்காய் மோர்க்குழம்பு என்று அடுக்கியிருந்தார். “ஜோல்னாப் பை இப்ப கிடைக்கிறது இல்லை” என்று எப்போதோ சொல்லியிருந்தேன். எங்கோ அலைந்து திரிந்து அதை வாங்கி வைத்திருந்தாள்.

கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது ”இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி எங்கள் எல்லோர் மனதிலும் ஓடத் தொடங்கியது.

“அருகே இருக்கும் திருமழிசைக்கு சென்றதில்லை என்று எப்போதோ அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு போனேன். ”இருமல் நிக்கட்டும், அஹோபிலமும் போய்விட்டு வந்துவிடலாம்” என்றார்.

ஜிலேபி, வைகுண்ட ஏகாதசி, அமுதன் (என் மகன்) உபநயனம், எங்கள் ஊர் கொடியாலம் பெருமாள் தரிசனம் என்ற சின்னச்சின்ன ஆசைகளைத் கடந்த மூன்று மாசங்களில் நிறைவேற்றினோம். திருவல்லிக்கேணி ரத்னா கபே இட்லி சாம்பார் தான் முடியாமல் போய்விட்டது.

“மாவடு எப்படிப் போடுவே ?” என்று கேட்டு தெரிந்துக்கொண்டு அதே மாதிரி முயற்சி செய்தேன்
”அடுத்த வாரம் எடுத்துக்கொண்டு வரேன் சாப்பிட்டு பாரு”
”நாலு நாள் ஆகும் நீர் விட, அதுவரை தினமும் ஒரு முறை குலுக்கிவிடு”

”கார்த்திகை மாசம் மாகாளிக் கிழங்கு வரும் போட்டுத் தருகிறேன்” என்றாள்

இரண்டு வாரம் முன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்த்தபோது கூட இருந்தவர்
“அம்மாவா ?”
”ஆமாம்”
”கவலைப்படாதீங்க சரியாகிவிடும்.... இப்ப தான் வடிவேலுவுடன் நடித்துவிட்டு வருகிறேன் மேக்கப் கூட அப்படியே இருக்கு பாருங்க... படம் வந்தாப் பாருங்க”

சில மணி நேரத்தில்,

”சார் ஏதாவது பிரேயர் சொல்லுவது என்றால் சொல்லுங்க மூச்சு எப்ப வேணா நிற்கலாம்”
என்ன சொல்லுவது என்று யோசிக்கும் முன் ”பீப்” என்று அந்த இயந்திரம் அலர ”வெரி சாரி” என்றார் டாக்டர்.

பல யாத்திரைகள், திருச்சி, பெங்களூர், சென்னை என்று எல்லா ஊர்களுக்கும் தனியாகப் பறந்தவர், இறுதியில் ஜெனரல் வார்ட், ஐசியூ என்று தன் பயணத்தை முடித்துக்கொண்டார்.

இறப்பதற்கு சில மணி நேரம் முன் கூட “டாக்டர் எனக்கு சுகர், பிபி எதுவும் இல்லை, என்னை சரிப்படுத்திவிடுங்கள்” என்று மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

“பாருங்க சார் இது தான் அம்மா விட்ட கடைசி மூச்சு என்று இசிஜி ரிப்போர்ட் மாதிரி ஒன்றைக் காண்பித்தார். அதில் மேலும் கீழுமாக அலைந்த அந்த அந்த கோடு, நேர்கோடாகியிருந்தது.

மாவடுவை சாப்பிட்டுப் பார்த்த மாமியார் ”திருச்சி பாப்பு அதில் தெரிகிறார்” என்றார்.

படம்:  20 நாள் முன் எடுத்த படம் 

Comments

  1. ஆழ்ந்து படித்தேன். மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.
    அம்மா ஆன்மா சாந்தியடைய மனசார பிரார்த்திக்கிறேன்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  2. செல்வராஜ்April 9, 2015 at 4:37 PM

    எனது அம்மாவும் இதே போன்று புற்று நோயால் இறந்து போனார். அந்த நினவலைகள் என்னுள் வந்து போகின்றது. என்னுடய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  3. உங்கள் தாயார் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இதைப் படித்ததும் என் தாயார் நினைவு வந்து தொண்டை அடைத்தது.

    ReplyDelete
  4. Very sorry to know about this. Moving description I am sure that the Acharyan would have guided her to the place she deserves - near Perumal.

    ReplyDelete
  5. We all love u thichy papu. Ranju.

    ReplyDelete
  6. Rest in peace. My deep condolences.

    ReplyDelete
  7. Sorry to hear.....may Almighty give u the strength to bear the Loss....may her soul rest in peace......

    ReplyDelete
  8. Desikan, Pls accept my condolences.

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். தங்கள் அம்மா ஆசார்யன் திருவடி நிழலில் இளைப்பாற, இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  10. My deepest condolences.

    ReplyDelete
  11. நீங்கள் புண்ணியம் செய்தவர் என்றுதான் சொல்லவேண்டும். அம்மா, ஆச்சார்யன் திருவடி நிழலிலும் சேவை செய்தபடிதான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. heartfelt condolences. write more about the institute.

    ReplyDelete
  13. Just came to your site for time pass. மனதை கனக்கச் செய்து விட்டீர்கள். தொண்டை அடைகிறது. அம்மா ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  14. I sincerely pray for your mother's soul to rest and do Kaingaryam in Vaikundam. my condolences to you...

    ReplyDelete
  15. அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete
  16. ஆழ்ந்த இரங்கல்கள்.

    வாசன்
    நியு மெக்ஸிக்கோ யூ எஸ்

    ReplyDelete
  17. please accept my condolences.
    She will be in heaven for sure.
    #rip

    ReplyDelete
  18. Deep Condolences Sir.
    May her Sour RIP.

    ReplyDelete
  19. கூகிளில் ஒரு தேடலின் போது ‘திருச்சி’ என்றதும் இங்கு வந்தேன். வந்தால் சமீபத்தில் இறந்து போன எனது அம்மாவின் நினைவுகளை கண்ணீர் மல்க நினைவுபடுத்தியது உங்கள் பதிவு. உங்கள் அம்மா போல்தான் எனது அம்மாவும் கடைசிவரை சுறுசுறுப்பாக இருந்தார். உங்கள் பதிவைப் படிக்கப் படிக்க அம்மாவின் தியாகம் புரிந்தது.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும். (உங்கள் பதிவினில் அம்மா மறைந்த நாளை குறிப்பிட்டு இருக்கலாம்)

    (நானும் எனது அம்மாவின் மறைவைத் தாங்க முடியாமல் ஒரு பதிவினை எழுதியுள்ளேன். (எனது அம்மா – என்று காண்பேன் இனி? )

    ReplyDelete
  20. I have seen your mother along with my grand mother before 30 years .
    My grand mother is very distant relative to your father still she made sure we given very good hospitality.
    not able forgotat all

    ReplyDelete

Post a Comment