Saturday, December 6, 2014

வணக்கம் சென்னை - 5

 திடீரென்று ஒரு நாள் பாரிஸ் கார்னரை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று புறப்பட்டேன். பாரிஸ் கார்னர், எலிஃபெண்ட் கேட், பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன் என்று பல இடங்கள் ஒரே இடத்தைக் குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். இதே மாதிரி சென்னையில் வேறு இடங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த கடைகளின் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தெரு முழுக்க செண்ட் விற்பனை, மற்றொரு தெரு முழுக்க பாத்திரக்கடை; ஜவுளி கடை, நகை என்று தெருவிற்கு தெரு வித்தியாசமாக இருக்கிறது. 

பைராகி மடம் என்று அழைக்கப்படும் பிரசன்ன வேங்கடேச பெருமாள்  கோயிலை அந்த கோயில் எதிர்த்த மாதிரி இருப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை. 400 வருடம் பழமை மிகுந்த இந்தக் கோயில் அங்கே வசிக்கும் மார்வாடி, சேட் உபயத்தில் ஸ்ரீநிவாசர் நன்றாக இருக்கிறார். அர்ச்சகர் புன்னகையுடன் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதைப் போல வரவேற்று பெருமாள் சேவை செய்து வைக்கிறார். அர்ச்சனையை ராகத்துடன் பாடி அசத்துக்கிறார். கோயிலில் இருக்கும் ஆண்டாள் கொள்ளை அழகு. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். திருப்பதிக்கே லட்டு மாதிரி திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு இங்கிருந்து தான் ஆண்டு தோறும் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருட சேவையின் போது ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது என்பது எனக்குத் அன்று தெரிந்த, தெரியாத தகவல். 

சௌகார்பேட்டை போய்விட்டு பானிபூரி, ஜிலேபி சாப்பிடவில்லை என்றால் உம்மாச்சி கோவிச்சிக்கும் என்று கொஞ்சம் டேஸ்ட் செய்துவிட்டு, இன்னொரு கடையில் மிளகாய் பொடி தூவிய மினி இட்லியைப் பதம் பார்த்துவிட்டு ஏதோ ஒரு பீடா தெருவில் நுழைந்து ஒரு பீடா போட்டுக்கொண்டு கிட்டதட்ட சேட்டாக மாறிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இது வேறு உலகம். 
போன வணக்கம் சென்னையில் கமல்ஜி பற்றி எழுதியது ஞாபகம் இருக்கலாம். இந்த 'ஜி’ இலக்கணம் ரஜினிக்குப் பொருந்தாது.  ”ரஜினிஜி” என்று சொல்லிப்பாருங்கள் சரியாக வராது; சுஜிஜி அதே ரகம், சூப்பர் சிங்கரில் மனோஜி, சுபாஜி, சித்ராஜி போல சுலபமாக இருக்காது. ஜி வராத இடத்தில் சார்/மேடம் தான் சரியாக வரும். 

அது சரி ‘சர்ஜி’ என்று வருகிறதே என்று சந்தேகம் கேட்பவர்களுக்கு, இது வேற இலக்கணம், தொல்காப்பியருக்கு ஹிந்தி கற்றுகொடுத்த பின் அவரை கேட்கலாம். 

தஞ்சை மெஸ் மாறவில்லை. காலை ஏழு மணிக்கே பளிச் என்று உபசரிக்கத்  தொடங்கிவிடுகிறார்கள். இரவு ’கடப்பா’ வை சாப்பிடவே ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. ஸ்டேஷன் ரோடில் இருக்கும் காமேஸ்வரி மெஸ் குட்டி போட்ட மாதிரி இரண்டு வந்துவிட்டது. அண்ணன், தம்பி தகராறு என்று நினைக்கிறேன் “எதிர்த்த மாதிரி இருக்கும் காமேஸ்வரி மெஸ் எங்கள் கிளை கிடையாது” என்று நோட்டிஸ் ஓட்டியிருக்கிறார்கள். பழைய கடை ஒன்லி காஃபி கடை ஆகிவிட்டது, எதிர்கடை ஒன்லி டிபன். கூட்டமாக மக்கள் உப்புமா சாப்பிட்டுவிட்டு எதிர்கடையில் காஃபி சாப்பிட போகிறார்கள். அம்பானி பிரதஸ் மாதிரி தொழில் தெரிந்தவர்கள். 

இன்னும் ஒரு ஹோட்டல் புதிதாக வந்துள்ளது. நடேசன் பூங்கா பக்கம் கிரீன் ஓட்டல் இங்கே முழுக்க முழுக்க சிறுதானியம் கொண்டு தயாரிக்கும் உணவை பாக்கு மட்டையில் ( அட ஸ்பூன் கூட பாக்கு மட்டை ஸ்பூன் தான் !) கொடுக்கிறார்கள். சிறுதானிய சூப் ( கஞ்சி என்று கூட சொல்லலாம் ) சூப்பர். 

பல வருடம் கழித்து சத்யம் தியேட்டர் சென்றிருந்தேன். திரையரங்கு முழுக்க பாலிஷ் செய்து பள பள என்றாக்கியிருக்கிறார்கள். ‘டாய்லெட் ரெஸ்ட் ரூமாகி  முழுக்க கண்ணாடியில் கண்ணாடி அறை சேவை மாதிரி இருக்கிறது.  டாய்லெட் போகும் அந்த இரண்டு நிமிஷம் கூட நம்மை சின்னத்திரையில் சினிமா பார்க்க வைக்கிறார்கள். இடைவேளையின் போது, நகை, ஜவுளி என்று ஏகப்பட்ட விளம்பரங்கள். “ஆஹா இல்லை என்றால் உங்கள் பணம் சுவாஹா” விளம்பரம் மட்டும் ஐந்து முறை மாறி மாறி போடுகிறார்கள். எல்லா விளம்பரமும் முடிந்த பின்னர், பக்கத்தில் இருந்தவரிடம் “சார் இப்ப பார்த்துக்கொண்டு இருந்தோமே அது என்ன படம் ?” என்று கேட்டுத் தெரிந்துக்கொண்டேன். 
( படங்கள் இணையம் ) 

Monday, December 1, 2014

திருச்சிடா - 2


2007ல் சுஜாதாவுடன் திருச்சி மலைக்கோட்டை ரயிலில் பயணம் செய்த பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் மலைக்கோட்டை ரயிலில் கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றேன்.

சென்டரல் ஸ்டேஷனை விட எக்மோர் சுத்தமாக இருக்கிறது. நிறைய பேர் ‘ரயிலில் நீர்’ வாங்காமல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். எக்மோர் ஸ்டேஷனில் எல்.ஈ.டி. அறிவிப்புத்திரை வைரம் போல ஜொலிக்கிறது.

ரயில் பெட்டிகள் சுத்தமாக, மொபைல் சார்ஜ் செய்ய வசதி எல்லாம் எனக்குப் புதுசு. மாம்பலம் வரும் முன்பே இளைஞர்களின் செல்ஃபோனில் படம் ஆரம்பித்து முதல் பாட்டு வந்துவிடுகிறது.

வழக்கம் போல், ஸ்ரீரங்கத்துக்குப் பிறகு ராக்போர்ட் எஸ்பிரஸ் தவழ்ந்து திருச்சி ஜங்ஷன் வந்து சேருகிறது. முகமூடி அணிந்துகொண்டு பணிப் பெண்கள் சுத்தமான ஸ்டேஷனை இன்னும் சுத்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி அவ்வளவாக மாறவில்லை. இன்னுமும் மெயின்கார்ட் கேட்டிலிருந்து வரும் பேருந்துகள், கோர்ட் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் பிள்ளையார் கோயிலோடு ஏமாற்றிவிட்டு போகிறது. பின்னாடி ஏதாவது பஸ் வந்தால் இரண்டு கண்டக்டர்களும் விசிலில் பேச, பஸ் அசுர வேகத்தில் பறக்கிறது. தில்லைநகர் சாலை இரண்டு இன்ச் அகலமாகத் தெரிகிறது. பெரிய ஆஸ்பத்திரி முன்பக்கம் மரங்கள் அகற்றப்பட்டு கட்டிடம் பளிச். மூலையில் இரண்டு வாட்டர் டாங்க்குகள் இன்னும் இருக்கிறது. ஐந்து ரூபாய் டிக்கெட்டில் ஊரையே சுற்றிக் காண்பிக்கிறார்கள்.

பஸ்ஸ்டாண்ட் பக்கம் இருக்கும் சங்கீதாவில் கூட்டமும், எதிர் பக்கம் மூத்திர நாத்தமும் மாறவில்லை. ஹோட்டல் முன் பக்கம் “அம்மா டாக்ஸி ஸ்டாண்ட்” புதுசு!.

சினிமாவில் ஒட்டடை படிந்த வீட்டை காண்பித்து, அடுத்த ஷாட்டில் கலரடித்த அதே வீட்டை “எப்படி இருந்த வீடு” என்ற ஃபீலிங்கிற்கு காண்பிப்பார்கள். சோனா மீனா தியேட்டர் அந்த மாதிரி ஆகிவிட்டது. மாரிஸ் தியேட்டருக்குப் பழுப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள். மெயின்கார்ட்கேட் பஸ் ஸ்டாப்பில் பிரம்பு கடை, சைக்கிள் கடை இன்னும் இருக்கிறது. ஜோசப் காலெஜ் வெளிக்கதவுக்கு மட்டும் புதுசாக பெயின்ட் அடித்துள்ளார்கள். சத்திரம் பேருந்து நிறுத்ததிற்குக் குடை அமைத்திருக்கிறார்கள்.

ஊர் முழுக்க நிறைய பரோட்டாக் கடைகளும், மருந்துக் கடைகளையும் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கா என்று திருச்சிவாசிகள் ஆராயலாம். காலை 8 மணிக்கே பரோட்டா மாவு பிசைந்து பரோட்டா தட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பல வருடங்கள் கழித்து, பாலக்கரையில் இருக்கும் கிருஷ்ணா ஆயில் மில்லுக்குச் சென்ற போது நல்லெண்ணெய் மணம் சுண்டி இழுத்தது. பட்டாசு கடை போல ஒருபக்கம் பில், ஒரு பக்கம் சரக்கு என்று எண்ணெய் விற்பனை வழுக்கிக்கொண்டு போகிறது. காந்தி மார்க்கெட் அப்பாய் மளிகையில் வாடிக்கையாளர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்க கூட முடியாமல் ஆள் ஆளுக்கு மும்முரமாக எதையோ கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி பீம நகர் சட்டி பானை கடை, பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பக்கம் மர ஸ்டூல், பெஞ்ச் கடை, பிரமந்தா சர்பத் கடை எல்லாம் அப்படியே இருக்கிறது.

முசிறி, தொட்டியம் பக்கம் இருக்கும் கிரமத்துக்கு சென்று வந்தேன். ஊர் முழுக்க வாழை. பூவம், கற்பூரவல்லி, ரஸ்தாளி, ஏலக்கி சாகுபடி செய்கிறார்கள். இங்கிருந்து தான் கர்நாடகா, மஹாராஷ்டராவிற்குப் போகிறது என்பதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
துடப்பத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தியாவை கூப்பிட்டு
“துடப்பம் எதற்கு?”
“பட்டாம் பூச்சி பிடிக்க”
“எப்படி பிடிப்ப?”
“இதோ இப்படி” என்று செய்து காண்பித்தாள்
”ஸ்கூல் கிடையாதா ?”
வெட்கப்பட்டுக்கொண்டு “ஸ்கூல் இருக்கு” என்று ஓடிவிட்டாள்.

இந்த ஊரில் என்னை கவர்ந்தது அந்த ஊர் தென்னை மரங்கள். தென்னை மரங்கள் பல மொட்டையாக இருக்கிறது. ஒருவரிடம் கேட்டதற்கு “எங்க தம்பி காமராஜர் காலத்துல போட்ட வாய்க்கா இப்ப தண்ணீரே இல்லை இப்ப இருப்பவர்கள் பேசுகிறார்கள் ஆனால் ஒண்ணும் செய்வதில்லை” என்று அலுத்துக்கொண்டவரின் மகன் ஏதோ ஒரு ஐ.டி கம்பெனியில் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார்.

திருச்சியில் குளிர் என்று சொல்ல முடியாது, ’பிளசண்ட்’ க்ளைமேட் என்று சொல்லலாம். அதுக்கே எல்லோரும் camouflage டிசைனில் காதுக்குக் கவசம் அணிந்துக்கொண்டு ஊர் முழுக்க அலைகிறார்கள்.

ஞாயிறு காலை ஸ்ரீரங்கம் சென்ற போது, எல்லா கடைகளிலும் “ஏன் காங்கிரஸ் ? குஷ்பு ‘ஃபீலிங்’, ஐயப்பா கருப்பு, காவி வேட்டிக்குப் போட்டியாக எல்லாக் கடைகளிலும் தொங்கியது. ராஜகோபுரம் தாண்டியவுடன் எல்லா ஜவுளி கடைகளிலும் புடவை, வேட்டிகளுக்கு மலையாள வாசனை அடித்தது.

இந்த முறை ஸ்ரீரங்கம் கோயில் முழுக்க வித்தியாசமாக இருந்தது. எல்லா கோபுரங்களுக்கும் பச்சை முக்காடு போடப்பட்டு, ஒரு பெரும் படையே புனரமைப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. கோபுரங்களுக்கெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘வாட்டர் கலர்’ அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள். உபயம் தமிழ்நாடு அரசும், டிவிஎஸ் கம்பெனியுமாம்.

முதலாழ்வர்கள் சன்னதி பின்புறம் புதிதாக நூறு கால் மண்டபம் முளைத்துள்ளது. ரங்கா ரங்கா என்று எதிரொலிக்கும் சுவர் பக்கம் இருக்கும் தோதண்டராமர் சன்னதியில் விளக்கு எரிந்துக்கொண்டு இருக்க அங்கே இருக்கும் தூண்களில் ‘ஆசிட் சோடா’ அடித்து பழைய பெயிண்ட் கறைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அட அங்கே ஒரு கிணறு கூட இருக்கிறது!.

எப்போதும் பூட்டியே இருக்கும் பிள்ளைலோகாச்சாரியார் சன்னதி திறந்து இருக்கிறது. தீர்த்தம், சடாரி எல்லாம் கிடைக்கிறது. திருகச்சி நம்பிகள் சன்னதியில் எனக்குப் பிரசாதம் கூடக் கிடைத்தது!.

ரங்கவிலாஸ் மண்டபத்தில் இடுக்கில் இருக்கும் சன்னதிகளில் அதிவேக அழுத்தத்தில் தண்ணீர் அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல சன்னதிகளில் சிமெண்ட் சுவர்கள் இடிக்கப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் கோயில் எப்படி இருந்ததோ அப்படி கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. இப்படிச் செய்யும் போது பல பழைய கல்வெட்டுகள் அழிந்து போகாமல் இருக்க அவர்கள் முயற்சிகள் எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இன்னும் ஆறு மாதத்தில் ஸ்ரீரங்கம் வேறு விதமாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

பெரிய பெருமாளைச் சுற்றி ஆதிஷேன் போல கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. 250ரூபாய் டிக்கெட்டிற்கே வாசல் வரை கியூ நிற்கிறது.

மேலும் சில புதுவரவுகள் - அம்மா மண்டபம் பக்கம் கும்பகோணம் காபி கடையும், சைக்கிளில் 100 ரூபாய்க்கு உள்பாக்கெட் வைத்த பல வண்ணக் கதர் சட்டை விற்பனையும், முரளி காபி கடையில் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமா இருப்பவர் செடி கொடிகள் போட்ட அவாயி(Hawaii) ஹாலிடே சொக்கா, பர்முடாவுடன் பார்த்தது புதுசு. இவரைப் பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கெட்டப் மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது!. தன்வந்தரி சன்னதி பக்கம் எப்போதும் ஒடிக்கொண்டு இருக்கும் அந்த பூனை பழசு!.

ஞாயிறு மாலை ஸ்ரீவட்சன் வீட்டுப்பக்கம் சென்றேன்.
ஸ்ரீவட்சன் என் வகுப்புத் தோழன். ஒரே பையன். வேன்பு சன்ஸ் என்று கடை வைத்திருந்தார்கள். காத்ரேஜ் பீரோ, லாக்கர் எல்லாம் திருச்சியில் வாங்க வேண்டும் என்றால் இவர்களின் கடைக்குதான் வருவார்கள். ”தேக்சா” என்று அவனை கிண்டல் செய்வோம். ( ’தேக்சா’ என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது ) ஏழாவது படிக்கும் போது அவனை நானும் என் நண்பர்கள் சிலரும் கிண்டல் சண்டை வந்து பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

+2ல் அவன் காம்ர்ஸ் நான் சயின்ஸ் வெவ்வேறு வகுப்பு, பேசுவதற்கு அவ்வளவாக சந்தர்ப்பம் கிடையாது. கல்லூரிக்கு சென்ற பிறகு சந்திக்கும் சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விட்டது. மளிகை கடைக்கு வந்தால் பார்த்துக்கொள்வோம் ஆனால் பேச மாட்டோம். ஈகோ!.

சென்னையில் வேலைக்கு சென்ற பிறகு வாரயிறுதிக்கு ஒரு முறை திருச்சிக்கு வந்த போது அம்மா “ஸ்ரீவட்சன், ஆக்ஸிடண்டில் போய்ட்டாண்டா” என்றாள். சில வருடங்களில், அவனுடைய தந்தை இறந்துவிட அவனுடைய வீட்டைப் பார்த்தாலே ஏதோ செய்யும். இந்த முறை திருச்சிக்குச் சென்ற போது மாலை அவன் வீட்டுப்பக்கம் சென்று எட்டிப்பார்த்தேன். வீடு முழுக்க இருட்டாக, கார்த்திகைக்கு வெளியே ஒரு விளக்கு மட்டும் அசங்காமல் எரிந்துக்கொண்டு இருந்தது. திரும்ப வந்துவிட்டேன்.