Thursday, February 26, 2009

லிப்டுக்கு இரண்டு கதவு

"White Noise 2 - The Light" என்ற ஆங்கிலப் படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தேன். முதல் காட்சியில், இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு  'சி.சி.யூ'வில் இருதயத் துடிப்பு நின்று போகும். உடனே மருத்துவர்கள் நெஞ்சை அழுத்தி, பிசைந்து இருதயத் துடிப்பை மீட்டுகொண்டு வருவார்கள்.2008, பிப் 27ஆம் தேதி, சுஜாதாவிற்கு இந்த மாதிரியான ஒரு சிகிச்சையை நான் நேரில் பார்க்க நேர்ந்தது.


சி.சி.யூ வேறு உலகம். கால்களுக்கு பாலிதீன் உறை அணிந்துகொண்டு, டெட்டால் போன்ற கிருமிநாசினி திரவத்தினால் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும். 'நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?' போன்ற பார்வைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு எல்லாம் சீராக இருக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருக்க, இரண்டு மூன்று பேர் பக்கத்திலேயே எப்போதும் இருக்கிறார்கள்.


எல்லா அறைகளுக்கு வெளியிலும் ஒரு மஞ்சள் விளக்கு எரிகிறது. எமர்ஜன்ஸி என்றால் இந்த விளக்கு ஆம்புலன்ஸ் சத்தத்துடன் கண் சிமிட்டுகிறது. உடனே அக்கம்பக்கத்து டாக்டர், நர்சுகளும் உதவிக்கு ஓடி வருகிறார்கள்.


எதுவுமே தெரியாமல் சுஜாதா படுத்துக்கொண்டிருந்தார். இருதய துடிப்பு சீராக இல்லாமல் இருந்ததை மானிட்டரில் பார்க்க முடிந்தது. இரத்த அழுத்தமும் அதே போல். சீர் செய்வதற்கு மருந்துகளை உடைத்து உடைத்து சலைன் பாட்டிலில் செலுத்துகிறார்கள். மருத்துவர்கள், நர்சுகள் எல்லோரும் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டு தங்கள் வேலையை செய்துக்கொண்டிருக்க, உறவினர்கள், நண்பர்கள் வந்துவிட்டு சோகமாகத் திரும்பிச் செல்கிறார்கள்.


பக்கத்தில் இருக்கும் நர்சிடம், "ஏதாவது பேசினா அவருக்குக் கேட்குமா?"


"கேள்கான் பாட்டுனில்லா" என்று மலையாலம் கலந்த தமிழில் பதில்.


"மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்" -- பத்து வருஷம் முன்பு சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.


பழைய நினைவுகளுடன் எழுந்து மருத்துவமனை காரிடரில் நடந்து போகிறேன். அனுமார் படம், முகம் பார்க்கும் கண்ணாடி, பிள்ளையார் படம் இருக்கிறது. நடுவில் முகம்பார்க்கும் கண்ணாடி எதற்கு என்று யோசிக்கிறேன்.


ஏதோ ஒரு அறையில் மஞ்சள் விளக்கு கண்சிமிட்டுகிறது. அபாயச் சத்தம் கேட்கிறது. எந்த அறை என்று பார்க்கிறேன். சுஜாதாவின் எதிர் அறை. யாரோ ஒருவர் அழுதுகொண்டே வெளியே வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல சிலர் பின்னாடியே போகிறார்கள். அப்பாவாக இருக்கலாம்.


இருப்புக் கொள்ளாமல் திரும்பவும் சுஜாதா இருக்கும் இடத்துக்கே செல்கிறேன். எந்தச் சலனமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார். மருந்துகள் உடைக்கப்படுகிறது, கலக்கப்படுகிறது.


நர்சிடம், "சி.சி.யூவில் இந்த மாதிரி எவ்ளோ பேர் இருக்காங்க?"


"நிறைய"


"இந்த மாதிரி இருக்கறவங்க யாராவது பிழைச்சிருக்காங்களா?"


"ரொம்ப ரார்... இல்லை," என்று தலையை ஆட்டுகிறார்.  


"சார் இப்ப எல்லாம் சிறுகதை எழுதினா கொஞ்சம் பெரிசா எழுதிடறீங்க. விகடன் கூட 'சற்றே பெரிய சிறுகதை' ன்னு போடறாங்க. முன்னாடி இருந்த அந்த 'நறுக் சுறுக்' இப்ப கம்மியாடுச்சே?"


"ஆமாம்பா. ஏனோ தெரியலை இப்ப எல்லாம் நிறைய வர்ணிச்சு எழுதணும் போல இருக்கு"


"நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுசுக்கும் நீங்க எளிய உரை எழுதணும் சார்"


"அவ்வளவு முடியுமா தெரியலையே"


"கல்கில இந்த வாரம் பெரியாழ்வார் பாசுரம் ரொம்ப நல்லா இருந்தது, எப்படி சார் பாசுரங்களைத் தேர்ந்தெடுக்கறீங்க?"


"ரொம்ப சிம்பிள், பிரபந்தம் புஸ்தகத்துல ஏதோ ஒரு பக்கத்தைத் திறக்கவேண்டியது. எந்தப் பாசுரம் வருதோ அதை எடுத்து எழுதறேன். இந்தப் பெரியாழ்வார் பாசுரம் உடம்பு சரியில்லைன்னா படிப்பாங்க. மரண படுக்கையில் படிக்க கூட பாட்டு இருக்கு தெரியுமோ?"


அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பிரபந்தம் படிக்கிறேன்.


எனக்கு நடந்த சில விநோத அனுபவங்களை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதற்கு, "Your experiences are indeed interesting; Too much of a coincidence is termed a miracle" என்று ஒரு வரி பதில்


திடீர் என்று 'பீப்' சத்தம் வருகிறது... ஏதேதோ செய்கிறார்கள். அறைக்கு வெளியே மஞ்சள் விளக்கு சத்தம் போடுகிறது. டாக்டர்கள் வந்து நெஞ்சை அழுத்தி இருதயத் துடிப்பை மீட்க முயற்சிக்கிறார்கள்.


"எங்க புரோடோகால் பிரகாரம் இந்த மாதிரி 30 நிமிஷம் மசாஜ் கொடுத்துப் பார்க்கணும்... அப்பறமாதான் நாங்க டிக்ளேர் செய்வோம்"


"இப்ப எல்லாம் எதையும் படிக்கறதில்லை; அலுத்துப் போச்சு, ஏதாவது நல்லதா படிச்சயா தேசிகன்?"
 
"இல்லை சார்"


"பாரதி மணி உயிர்மைல 'தில்லியில் நிகம்போத் காட்(சுடுகாடு)'ன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். படிச்சுப் பார். எப்பவாவதுதான் இது போல நல்ல கட்டுரை கிடைக்கும்."


30 நிமிடங்கள் முடிந்து, மருத்துவர்கள் கை கிளவுஸைக் கழட்டுகிறார்கள். மசாஜ் கொடுத்தவர்களுக்கு ஏஸியிலும் வியர்த்திருக்கிறது. மருந்து, மாத்திரைகள், எதுவும் பயன் இல்லாமல் சுற்றிலும் கிடக்கிறது.


யார் யாரோ வந்து பார்க்கிறார்கள், போகிறார்கள். எல்லோர் முகத்திலும் சோகம்.


கையில் ஒரு பையும், கைப்பேசியுடனும் ஒருவர் வாசலிலேயே நிற்கிறார். என்னைப் பார்த்துவிட்டு அருகில் வருகிறார்.


"சார் நான் டைரக்டர் ______ சாரோட அஸிஸ்டண்ட். சார் எப்படி இருக்கார்?"


"பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் போனார்"


"ஓ!" என்று கைப்பேசியில் தன் டைரக்டரை அழைக்கிறார். அவர் கால்களில் அந்த பாலித்தீன் உறை இல்லை. அவசரமாக வந்திருப்பார்.


நான் அவரிடம், "சார் கால்களுக்கு உறை அணிஞ்சுக்குங்க. இங்க உள்ள பலர் ரொம்ப கிரிடிகலாக இருக்காங்க"


தலையை இரண்டு முறை ஆட்டிவிட்டு இரண்டு அடி நகர்ந்துகொண்டார். பத்து நிமிடம் கழித்து அங்கு இருக்கும் ஒரு செக்யூரிடி வந்து நான் சொன்னதையே மீண்டும் அவரிடம் சொல்கிறார். அசிஸ்டண்ட் டைரக்டர் அலட்சியமான பார்வையில், 'எனக்கு எல்லாம் தெரியும் நீ யார் என்னை கேட்பதற்கு?' என்கிற மாதிரி பார்க்கிறார். டைரக்டர் சொல்கேட்டே பழக்கப்பட்டவர், நாம் சொன்னால் கேட்கமாட்டார் என்று எண்ணுகிறேன்.


மீண்டும் தொலைப்பேசி அழைப்பு. மீண்டும் விசாரிப்பு, மீண்டும் அதே பதில்கள்...


"நாய் செத்துபோயிடுத்துன்னு கேள்விப்பட்டேன்"


"ஆமாம்பா 8 வருஷமா எங்க கூடயே இருந்தது. நான் என்ன பேசினாலும் அதுக்குப் புரியும்"


"அடுத்து இன்னொரு நாய் வாங்கிடுங்க"


"ஐயோ, No More dogs and fish ன்னு சொல்லிட்டேன், பிரிவை இந்த வயசில என்னால தாங்க முடியலை


தாங்க முடியாமல் வெளியே வருகிறேன். இவருக்கும் எனக்கும் இடையில் உள்ளது என்ன? ஆண்டாள் திருப்பாவையில் சொன்ன 'ஒழிக்க ஒழியாது' என்பதான உறவா?


கேள்வி: உலகத்தில் நிலையானது எது சார் ?
பதில்: மரணம்

லிஃப்டில் இறங்கும்போது, லிஃப்ட் இயக்குபவர், "சார் எந்த பக்கமா போறீங்க?"


"வெளியே போகணும்ப்பா.."


"இல்ல... இந்த லிப்டுக்கு இரண்டு கதவு இருக்கு, இந்தப் பக்கம் திறந்தா வெளிக் கதவு, அந்தப் பக்கம் திறந்தா மார்ச்சுவரிக் கதவு"


[2008ல் "உயிர்மை" சுஜாதா சிறப்பு மலரில் பிரசுரிக்க எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டதற்காக எழுதியது. பிரசுரமாகவில்லை.]