Skip to main content

படம் சொல்லும் கதை



படத்தில் இருக்கும் சிதிலமடைந்த வீடு யாருடையது ? இந்த திருமாளிகையில் அப்படி என்ன விஷேசம் ? என்று அறிந்துக்கொள்ள முதலில் ததியாராதனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் பிறகு கிபி 1122க்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் !

ததீயாராதனம் என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் ‘சாப்பாடு’ என்ற சொல்லாக தற்போது பயன்படுகிறது. ஆனால் ததீயாராதனம் என்றால் ‘ததீயர்களை’ ஆராதித்தல் என்று பொருள். ததீயர்கள் என்றால் அடியார்கள். ஆராதித்தல் என்றால் உபசரித்தல் பணிவிடை, உபசாரம் என்ற பல விதமாகச் சொல்லலாம். அதாவது பாகவதர்களை மகிழும்படி செய்தல் ததீயாராதனம்.

பெரியாழ்வார் திருமொழியில்

நா அகாரியம் சொல் இலாதவர்
நாள்தொறும் விருந்து ஓம்புவார்
தேவ காரியம் செய்து வேதம்
பயின்று வாழ் திருக்கோட்டியூர் ( 360 )

என்று பாடியுள்ளார்.

பேசக்கூடாதவற்றைத் தம் நாவால் பேசமாட்டார்கள். தினமும் வேதம் ஓதி பகவானை வழிபட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆராதனம் செய்துகொண்டு விருந்தோம்புவார்கள் வாழுமிடமான திருக்கோட்டியூர் என்று பாடியுள்ளார்.

அவர் மேலும்
காசின் வாய்க் கரம் விற்கிலும்
கரவாது மாற்று இலி சோறு இட்டுத்
தேசவார்த்தை படைக்கும் வண்
கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் ( 369 )
என்கிறார் அதாவது திருக்கோட்டியூர் வாசிகள், ஒரு பொற்காசுக்கு ஒரு பிடி நெல்விற்கும் பஞ்ச காலத்திலும் தம் பொருள்களை மறைத்து வைக்காமல் பிரதி பயனையும் எதிர்பாராமல் விருந்தினர்க்கு உணவு அளித்து உபசரிப்பார்கள் என்கிறார்.



இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் பற்றிச் சொல்லுகிறேன். ஒரு சமயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளாக திருவனந்தபுரம் யாத்திரையின் போது வழியில் திருக்கோட்டியூரில் உள்ள செல்வ நம்பி திருமாளிகைக்குச் சென்றார்கள். அப்போது செல்வ நம்பி வெளியூர் சென்றிருந்தார். அவர் மனைவி “தாம் செய்த பாக்கியம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வீடு தேடி வந்திருக்கிறார்கள்” என்று மகிழ்ந்து தம் திருமாளிகையில் இருந்த நூறு கோட்டை(ஒரு கோட்டை என்பது இரண்டு மூட்டை அளவு) நெல்லைக் குத்தி அவர்கள் மகிழும்படி அமுது செய்தருளப் பண்ணினார். மறுநாள் செல்வ நம்பி வந்த போது தம் திருமாளிகையில் நெல்லில்லாததைக் கண்டு ”நெல்லை என்ன செய்தாய்?” என்று கேட்க அவர் மனைவி “பரமபதத்திலே விளைவதாக வித்தினேன்” என்றார். இதைக் கேட்ட செல்வநம்பி மிகவும் ஆனந்தமடைந்தார்.

மேலும் செல்வ நம்பியைப் போல குலசேகர ஆழ்வார், கூரத்தாழ்வான், திருக்கச்சி நம்பி, திருமங்கை மன்னன் போன்றவர்களுடைய வாழ்கையில் நடந்த சரித்திரங்களில் விருந்தோம்பல் பற்றி பல எடுத்துக்காட்டு கிடைக்கிறது. உபநிஷத், திருக்குறளிலும் விருந்தோம்பல் சிறப்பு பற்றிக் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

திருக்கோட்டியூருக்கு ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார் என்ற சரித்திரம் பிரசித்தம் ஆனால்  ஸ்ரீராமானுஜருக்கு பிறகும் அங்கே நடந்த சில சரித்திர நிகழ்வுகள் பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். வாருங்கள் கிபி 1122க்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

( சமீபத்தில் திருக்கோட்டியூர் பற்றி மதுரை பேராசியர் இரா.அரங்கராஜன் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்கக் கிடைத்தது. அதிலிருந்து சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் )

கூரத்தாழ்வான் திருகுமாரரான பட்டர் காலம் கிபி 1122 முதல் கிபி 1174. இந்தக் காலத்தில் விக்கிரம சோழன் ஆட்சி புரிந்தான் ( முதலாம் குலோத்துங்கனின் புதல்வன்).
(விக்கிரம சோழனுக்கு அகளங்கன் என்ற பெயரும் உண்டு)
விக்கிரம சோழன் அமைச்சரவையில் அகளங்க ப்ரம்மராயர் என்பவர் அமைச்சராக இருந்தார். அறிவாற்றலில் உயர்ந்த அந்தணர்.

சோழ அரசனின் விருப்பத்தின் படி திருவரங்கம் பெரிய கோயிலுக்கு ஒரு பெரிய மதிளைக் கட்ட தொடங்கினார். அடைய வளைந்தான் என்று இன்றும் வழங்கப் படுகிறது. அந்த மதிளைக் கட்டிவரும் போது வழியில் இளையாழ்வான் என்பவருடைய திருமாளிகை ( வீடு ) குறுக்கிட்டது. அதை இடித்துத் தள்ளி விட்டு மதிளைக் கட்ட முற்பட்ட ப்ரம்மராயரிடம் பட்டர் “இந்த மதிள் தான் பெருமாளைக் காக்கின்றது என்று நினைக்காதே. இங்கே கோயிலை சுற்றி வாழும் இளையாழ்வான் போன்ற ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் தான் பெருமாளை ‌ரக்ஷிக்கிறார்கள்” மேலும் “திருமங்கை மன்னன், தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாளிகையை ஒதுக்கித் திருமதில் கட்டவில்லையா ? நீரும் அவ்வாறே செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்தார். ஆனால் ப்ரம்மராயர் ஆழ்வான் புத்திரன் பட்டர் சொல்லை மதியாது இளையாழ்வான் திருமாளிகையை தரைமட்டமாக்கி திருமதில் கட்ட தொடங்கினார். மேலும் பட்டருடன் விரோதித்து உபத்திரம் தர தொடங்கினான்.

பட்டர் சோழ தேசத்தை விட்டு பாண்டிய நாட்டில் இருந்த திருக்கோட்டியூரைக் நோக்கி புறப்பட்டர். நடுப்பகலில் ஓர் இடத்தில் பசி மிகுந்து களைப்புற்று அயர்வடைந்தார். அப்போது பட்டர் புறப்பட்டுச் சென்றதை அறிந்த நஞ்சீயர் கட்டுச்சோறும், தண்ணீரும் எடுத்துக்கொண்டு ஓடிவந்து பட்டரைச் சந்தித்து இளைப்பாற்றி வைத்தார். இதற்கு நன்றியாகப் பட்டரும் அவருக்கு விசேஷ உபதேசங்களைச் செய்வித்தார்.

பட்டரும், நஞ்சீயரும் பல தினங்கள் நடைப்பயணமாக ஸ்ரீராமானுஜர் சென்ற வழியிலேயே திருக்கோட்டியூர் வந்தடைந்தனர். பெரியாழ்வார் புகழ்ந்த திருகோட்டியூர் மக்கள் பட்டரும், நஞ்சீயரையும் விருந்தோம்பல் செய்தனர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எந்த வேறுபாடின்றி அவர்கள் செய்யும் விருந்தோபல் பண்பைக் கண்டு பட்டரும், நஞ்சீயரும் வியந்தனர். அங்கே வசிக்கும் திருகோட்டியூர் நம்பிகள் திருக்குமாரர் தெற்காழ்வானையும் குமாரத்தி தேவகிப் பிராட்டியையும், சிஷ்யையான திருக்கோனேரி தாஸ்யையும் சேவித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், பிரம்மராயன் பட்டரை சமாதானம் செய்ய ‘இருகை மதவாரணம்’ என்பவரைத் திருக்கோட்டியூருக்கு அனுப்பி வைத்தான். அவனும் பட்டரை சமாதானம் படுத்தி மீண்டும் ஸ்ரீரங்கம் சென்றார்கள்.

திருவரங்கத்துக்கு செல்வதற்கு முன் பட்டரும், நஞ்சீயரும் திருக்கோட்டியூரிலே தங்கியிருந்த இரண்டு வருடங்களில் நடந்த சில நிகழ்வுகள் மிக சுவாரசியமானவை. சில செய்திகள் அருளிச் செயல் பேருரைகளில் குறிப்பாக இருப்பவை. நிச்சயம் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் இதை அறிந்துகொள்ள வேண்டும்.

பட்டரும், நஞ்சீயரும் திருக்கோட்டியூரில் இந்தச் சமயம் ’வளவன் பல்லவதரையன்’ என்ற அரசியல் அதிகாரி மற்றும் ராமானுஜ தாசர் என்பவரும் பட்டரைக் கண்டு வணங்கினார்கள். ( திருகோட்டியூர் நம்பிகளிடம் ஆஸ்ரயித்து அவரிடம் நல்ல உபதேசங்களைப் பெற்றிருந்தவன் வளவன் பல்லவதரையன். முழுப் பெயர் கருணாகரன் சுந்தர தோளுடையான் இந்தப் பெயர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது ).

திருவிருத்தத்திற்குப் பொருள் விளக்கம் அருளிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது பட்டர் “நம்பெருமாளைப் பிரிந்திருக்கின்ற வருத்தத்தால் என்னால் எதுவும் முடியாது, நஞ்சீயரே நீர் பொருள் கூறும்” என்று நியமித்தார்.

நஞ்சீயரும்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே (திருவிருத்தம் 95 )

என்ற பாசுரத்தின் மூலத்தை சேவித்தபோது வளவன் கண்ணீருடன் புல்லரித்தவராய் இருப்பதைக் கண்டு நஞ்சீயர் “பாசுரத்தின் பொருளை இனிமேல் தான் சொல்லப் போகிறேன்! அதற்குள் நீர் இவ்வளவு ஈடுபாடு கொள்ளக் காரணம் என்ன ?” என்று கேட்க

அதற்கு வளவன் “திருகோட்டியூர் நம்பி எனக்கு உபதேசம் செய்த போது ’எம்பெருமான் திருமுன்பே தினந்தோறும் இப்பாசுரத்தை விண்ணப்பம் செய்’ என்று நியமித்தார். அது இப்போது நினைவுக்கு வந்தது” என்றார். உடனே நஞ்சீயர் “திருக்கோட்டியூர் நம்பி விஷேச அர்த்தம் சொன்னது ஏதாவது நினைவில் இருக்கிறதா ?” என்று கேட்க
“இல்லை, நம்பியின் விருப்பத்தின்படி தினமும் இப்பாட்டை மட்டும் நினைப்பேன்” என்றார்.
திருக்கோட்டியூர் நம்பிக்கு விருப்பமான பாசுரம் என்று நஞ்சீயர் ஐந்து நாழிகைப் பொழுது இந்தப் பாசுரத்தை கொண்டாடினார் என்ற குறிப்பு இருக்கிறது

இன்னொரு சம்பவம் - அனந்தாழ்வான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை மங்களாசாசனம் செய்த போது, நஞ்சீயரும், பட்டரும் திருக்கோட்டியூரில் இருப்பதை கேள்விப்பட்டுத் திருக்கோட்டியூர் வந்து அங்கே பட்டரைக் கண்டு மிகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக்கொண்டு தம் மடி மீது வைத்துக்கொண்டார். கூரத்தாழ்வான் தேவியரான ஆண்டாளுக்கு முதலில் ஒரு பிள்ளை பிறந்து இறந்துவிட்டது. பிறகு பட்டர் பிறந்தார். பிறந்ததும் இவர் நெடுநாள் வாழ வேண்டும் என்பதற்காக எம்பெருமானார் பெரிய பிராட்டியாருக்கு நீராட்டிய மஞ்சள் நீர் குடித்து பிள்ளையாக ( தத்துப்பிள்ளையாக ) தாரை வார்த்துக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தவிட்டார். அதனால் பட்டரை அனந்தாழ்வான் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு மகன் என்றேன் கூறுவாராம். அதனால் தான் வணங்கும் தாயாருடைய மகன் என்றே கருதி அனந்தாழ்வான் பட்டரைத் தம் மடி மீது வைத்துக் கொண்டாராம்.

ஆதிஷேசன் தன் மடி மீது எம்பெருமானை அணைத்துக் கொண்ட மனோபாவத்தில் அவ்வாறு செய்தார் அனந்தாழ்வான் என்று பெரியவாச்சான் பிள்ளை உரையில் குறிப்பு இருக்கிறது.

பட்டரும், நஞ்சீயரும் அனந்தாழ்வானும் கூடியிருந்த குளிர்காலத்தில் ஆண்டாள் விஷயமாக ஆழ்வார்கள் விஷயமாகப் பட்டர் இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்தார்.
“நீளாதுங்க ஸ்தனகிரி தடீ” என்ற ஸ்லோகத்தையும் ஆழ்வார்கள் பதின்மர் விஷயமாக “புதம் ஸ்ரச்ச மஹதாஹவய” என்ற ஸ்லோகத்தையும் பட்டர் அங்கு அருளிச் செய்தார். இச்செய்தியைப் பிள்ளை லோகஞ்ஜீயர் இந்த தனியன்கள் வியாக்யானத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த முக்கியமாக இரண்டு தனியங்களுடன் கோஷ்டீஸ்தவம், ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம் ஆகியவை மலர்ந்த இடம் திருக்கோட்டியூர். இதைத் தவிர இந்த மூவரின் சங்கமத்தில் திருக்கோட்டியூரில் பல விஷயங்கள் நடந்திருக்கிறது.

மேலே பார்த்த அந்த திருமாளிகை தான் பட்டர், நஞ்சீயர், அனந்தாழ்வானும் சேர்ந்து வாழ்ந்த திருமாளிகை திருக்கோட்டியூரில் மேலரத வீதியில் இன்றும் இருக்கிறது. ஆனால் மிகவும் சிதிலமடைந்து திருமங்கை ஆழ்வார் கதறுவது போல ”ஆவாரார் துணை” (காப்பாத்த ஒருவரும் இல்லையே! ) என்று நிற்கிறது. அதற்குத் திருப்பணிகளை உடனடியாக செய்ய வேண்டும்.

இந்தத் திருமாளிகை தெப்போத்ஸவ ததீயாராதன கைங்கர்ய சபைக்குச் சொந்தமானதும், மேல ரத வீதியில் ஜீயர் ஸ்மாமிகள், ஆசார்ய புருஷர்கள், பாகவததோத்தமர்கள் எழுந்தருளியிருந்து ததீயாராதனத்துக்கு பல்லாண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்து பெருமையுடையது. ஆனால் தற்போது இந்தத் திருமாளிகை சிதிலமாகி, முன்பகுதி சிதைந்து சரிந்துவிட்டது.



இந்த இடம் ’Heritage’. அதன் பாரம்பரியத்தை நாம் தான் காக்க வேண்டும். முதல் கட்டமாக மிகவும் சிதிலமாகியிருப்பதை சீரமைத்து, ஆழ்துளைக் கிணறு, குளியல், கழிப்பறை அறை, திருமடைப்பள்ளி கட்டுவதற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு உதவுவதே பெரிய ததீயாராதனம். திருமங்கை மன்னன் போல் இன்று திருப்பணி செய்ய யாரும் இல்லை.  இந்த இடத்தைச் சீரமைத்து, காக்க முன்வந்து நன்கொடை வழங்க விண்ணப்பிக்கிறேன்.

உதவி விரும்புவர்கள் என்னை desikann@gmail.com +91-9845866770 அல்லது Dr.R.Rengarajan MA.PhD +91-9791457614 தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
சுஜாதா தேசிகன்










Comments