Monday, July 17, 2017

திருக்கண்ணமங்கை ஆண்டான்


திருக்கண்ணமங்கை ஆண்டான்
திருக்கண்ணமங்கை ஆண்டான் - திருக்கண்ணமங்கை

ஒரு பக்தரின் கதையுடன் ஆரம்பிக்கிறேன்.
அவர் ஒரு பக்தர். சாதாரணமாக கோயிலுக்கு சென்று சேவித்து வேண்டிக்கொள்ளும் பக்தர் இல்லை.  தனக்காக என்று முயல்வதை எல்லாம் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் கால்களாக்கிக் கொண்டு விலங்கு போலே நாலுகால்களாலே சஞ்சரிப்பவர்.
தினமும் காலை ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் பசுவை போல நீராடிவிட்டு  வஸ்திரம் எதுவும் இல்லாமல், பிராணியைப் போல நடப்பவராய் (அல்லது ஊர்ந்து ) கோயிலுக்கு வந்து, பெருமாளை சேவித்துவிட்டு ஒர் மகிழ மரத்தடியில் கோயிலில் பெருமாளின் பிரசாதங்கள் கிடைத்தால் சாப்பிட்டுவிட்டு, மரத்தடியில் அசையாது மௌனமாக வாழ்ந்து வந்தார்.
இவர் எப்போதும் இப்படி இல்லை. திடீர் என்று தான் இப்படி ஆகிவிட்டது. ஏன் என்று பிறகு சொல்கிறேன். நன்றாக வாழ்ந்தவர் திடீர் என்று இப்படி ஆகிவிட்டார் என்றால் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா ? பலவாறு பேசத் தொடங்கினார்கள்.
“இவர் செய்த பாவ கர்மத்தாலே இப்படி இருக்கிறார்”  
”பாவ கர்மத்தை யாராலும் கடக்க முடியாது.. ஈஸ்வரனாலும் ஒன்றும் செய்ய முடியாது”  
“நல்ல பக்திமான்.. இப்படி மனக்கோளாறு ஏற்பட்டுவிட்டதே” .
“இவர் ஒரு மஹாபுருஷர்”
இவரைப் பற்றிய செய்தி பரவ பல ஊர்களிலிருந்தும் மக்கள் இவரை காண வந்தார்கள். வியப்புற்றார்கள். சிலர் பேச்சுக்கொடுத்தார்கள் ஆனால் மௌனமே பதிலாக கிடைத்தது. .
ஒரு நாள் பெருமாள் பக்தரிடம்  ”நாளைய தினம் உனக்கு மேல்வீடு ( மோக்ஷம் ) தர போகிறேன்” என்கிறார்.
மோக்ஷமளிப்பதற்கு முந்திய இரவு அந்த ஊரில் இருந்தவர்களின் கனவில் பெருமாள் தோன்றி நாளை என்னுடைய மஹா பக்தனுக்கு மோக்ஷம் தர போகிறேன், நான் மோக்ஷம் அளிப்பதை நீங்கள் காணலாம், இது உறுதி” என்கிறார்.
மறுநாள் காலை மக்கள் எல்லோரும் வியப்புற்று கோயிலில் குழுமி இருக்க… அந்த பக்தர் காலை வழக்கமாக ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் நீராடிவிட்டு விலங்கை போல நாலு கால்களால் கூட்டத்தின் நடுவே நடந்து வந்து கோயிலை  ப்ரதக்‌ஷணம் செய்து, கோயிலுக்கு உள்ளே சென்று த்வார பாலகர்களை தண்டம்சமர்பித்து பெருமாள் திருவடிகளையும் தன் ஆசாரியனை தியானித்து மூர்ச்சிக்கிறார்.
பக்தர்கள் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்க பக்தவத்சலன் எம்பெருமாளின் திருவடிகளில் சின்ன மின்னல் உண்டாக  அவர் மறைந்து போனார்.  
இது கதை அல்ல. நிஜமாக நடந்த சம்பவம். இந்த பக்தர் வேறு யாரும் இல்லை நம்  ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ தான். திருமேனியுடன் மோக்ஷம் சென்றவர்!.
கடந்த சில நாள்களுக்கு முன் நண்பர் ஒருவர்  “இன்று ஆனி திருவோணம் திருக்கண்ணமங்கை ஆண்டான்” திருநட்சத்திரம் என்றார். வெய்யில் படாத இடங்கள் எப்படி தனியாக தெரியுமோ அதே போல் ஓராண் வழியில் இல்லாத சில ஆசார்யர்களை சிலரை நாம் ’கேள்வி’ மட்டுமே பட்டிருக்கிறோம்.  அப்படிப்பட்ட ஓர் ஆசாரியர் தான்  திருக்கண்ணமங்கை ஆண்டான்.
இவர் 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர் என்று நினைப்போம் அது கிடையாது. இவர் ஸ்ரீமந் நாதமுனிகளின் நேரடி சிஷ்யர்.
ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு 11 சிஷ்யர்கள்.
 1. உய்யக்கொண்டார்
 2. குருகைக் காவலப்பன்
 3. பிள்ளை கருணாகர தாஸர்,
 4. நம்பி கருணாகரதாஸர்,
 5. ஏறுதிருவுடையார்,
 6. திருக்கண்ணமங்கை ஆண்டான்,
 7. வானமாமலை தெய்வநாயக ஆண்டான்,
 8. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை,
 9. சோகத்தூராழ்வான்,
 10. கீழை அகத்தாழ்வான்,
 11. மேலை அகத்தாழ்வான்.
திருக்கண்ணமங்கையில் வாழ்க்கைப்பட்டிருந்த ஸ்ரீமத் நாதமுனிகளுடைய உடன்பிறந்தாளுக்குப் புத்திரராக, பிறந்தவர் இவர். இவருடைய பெயர் ஸ்ரீக்ருஷ்ணலக்மிநாதன் செல்வத்தில் குறைவில்லாமல், திருக்கண்ணமங்கை என்ற கிராமத்தை ஆண்டு வந்த காரணத்தால் ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ என்ற திருநாமத்தை பெற்றார்.
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் திருவடிகளே என்று இருந்த மாதிரி இவர் தன்னுடைய மாமாவான ஸ்ரீமத் நாதமுனிகளுடைய திருவடிகளை பற்றிக்கொண்டு பஞ்ச ஸ்மஸ்காரம் பெற்று “அடியேன் இங்கேயே இருக்கட்டுமா ?” அல்லது திருக்கண்ண மங்கை பெருமாளான பக்தவத்ஸலனுக்கு நந்தவன கைங்கரியம் செய்யட்டுமா ? என்று கேட்க நாதமுனிகள் ”பக்தவத்ஸலனுக்குத் துளசி புஷ்ப கைங்கரியம் செய்” என்று நியமிக்க அதன்படி அவருடைய ஊர் பெருமாளான பக்தவத்சலனுக்கு கைங்கரியம் செய்துக்கொண்டு இருந்த காலத்தில் அந்த சம்பவம் நடந்தது.
ஒரு நாள் இரண்டு பேர் திருக்கண்ணமங்கை  கோயிலுக்கு வருகிறார்கள்.  வந்தவர்கள் தங்கள் காலனிகளை கோயிலுக்கு வெளியே வைத்துவிட்டு அவர்களுடன் வந்த நாயை அதற்கு காவலுக்கு வைத்துவிட்டு சன்னதிக்குள் போய் சேவித்துவிட்டு வரும் போது நாய்களில் ஒன்று மற்றொன்றின் எஜமானனுடைய  காலனிகளைக்  கடிக்க நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்துக்கொண்டு சண்டை போட அந்த சண்டையில் ஒரு நாய் சாக. செத்த நாயின் சொந்தகாரன் மற்றொரு நாயை அடிக்க அதுவும் சாக, இப்போது எஜமானர்கள் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் சண்டை போட்டு,  வெட்டிக்கொண்டு மாய்ந்துபோகிறார்கள். சாதாரண சண்டை என்றாலே கூட்டம் கூடும். இது நாய், பிறகு மனிதர்களின் சண்டை. நல்ல கூட்டம்.
அவ்வழியே பல்லக்கில் வந்துக்கொண்டிருந்த திருக்கண்ணமங்கையாண்டான், என்ன கூட்டம் என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்துக்கொள்கிறார்.  நடந்த விஷயத்தை  தீர்க்கமாக யோசிக்கிறார். அவர் யோசித்தது தான் இன்று ஸ்ரீவைஷ்ணவத்துக்கு அடிப்படி கொள்கை.
அப்படி என்ன யோசித்தார் ? “சாதாரண மனிதனே தன்னுடையது என்ற ஒரே காரணத்துக்காக,  நாய்க்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு பொறுக்காமல் அதை அடித்தவனை கொன்று தானும் உயிர்விட்டான் என்றால் அனைத்தையும் விட்டு அவனுடைய நிழலில் ஒதுங்குபவர்களை பரமாத்மா காப்பாத்த எப்படி பாடுபடுவான் ?” யோசித்ததின் விளைவு ?
தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், பரமாத்மாவான எம்பெருமானின் நிழலில் ஒதுங்கிய ஒரு நாய் போலத் தன்னை எண்ணிக்கொண்டு, அப்போதே திருக்கண்ணமங்கை சன்னதியில் அடைக்கலம் புகுந்து அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் கோயிலை சுத்தம் செய்யும் கைங்கரியத்தில் கழித்தார். அது தான் தொடக்கத்தில் நாம் பார்த்த அந்த கதை!.
பெரியாவாச்சான் பிள்ளை திருக்குமாரரான நாயனாராச்சான்பிள்ளை அருளிய ’+சரமோபாய நிர்ணயம்’  என்ற நூலில் திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி குறிப்பு வருகிறது.  அதில்  ஸ்ரீமந் நாதமுனிகள் த்வய மஹா மந்திரத்தின் விஷேச அர்த்தங்களை திருவாய்மொழி மூலம் திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு விளக்கமாக கூறினார் என்றும் அப்படி கூறும் போது “பொலிக பொலிக” என்ற பாசுரம் வந்த போது, ஆழ்வார் நாதமுனிகளுக்கு காட்டியருளிய திருவாய்மொழி விளக்கத்தையும், பவிஷ்யதாசாரியரை சேவித்த விஷயத்தையும் அவருக்கு சொல்ல “இப்பேர்பட்ட உம்முடன் அடியேனுக்கு ஸ்ம்பந்தம் இருக்கிறது என்பதே அடியேனுக்கு கிடைத்த பெரும் பாக்யம்” என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் நெகிழ்ந்தார்.
திருக்கண்ணமங்கை ஆண்டான் வைபவத்தை ஸ்ரீபட்டர் ஸ்ரீநஞ்ஜீயருக்கு சொன்னார் என்று ப்ரபன்னாம்ருததில் குறிப்பு இருக்கிறது.  பிரபந்தங்களுக்கு குறிப்பாக நம்பிள்ளையின் ஈட்டில் சில பாசுரங்களுக்கு விஷேசமான அர்த்தம் சொல்லும் போது சில இடங்களில் பூர்வாசாரியர்களின் வாழ்கையில் நடந்த சில சுவையான சம்பவங்களை மேற்கோள் காட்டுவார்கள். திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றியும் சில இடங்களில் மேற்கோள்கள் இருக்கிறது. ஒர் உதாரணம் பார்க்கலாம்
நம்மாழ்வார் திருவாய்மொழி ( 9.2.1 )  ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலை சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது.
ஆண்டானோ தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல்  அவர் எம்பெருமானுக்கு கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார். ஆனால் நம்மாழ்வார் பாவம் தொலைய கைங்கரியம் செய் என்கிறாரே என்று நமக்கு சந்தேகமும் வரும். நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் இந்த பாசுரத்துக்கு  திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி மேலும் ஒரு சுவையான சம்பவ குறிப்பை தருகிறார்.
ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளை பெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஆண்டான். கூடப் படித்த நாத்திக நண்பர் இவர் குப்பைகளை பெருக்கித்தள்ளிக்கொண்டு இருப்பதைப் பார்த்து ஏளனமாக “பகவான் உபாயம் என்று வேறு பயன் கருதாத நீர் ஏன் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும் ? இதனால் என்ன பயன் ?” என்று கேட்க அதற்கு ஆண்டான் சுத்தம் செய்த இடத்தையும், செய்யாத இடத்தையும் காட்டி ”இந்த இரண்டு இடத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதல்லவா அது தான் அதனுடைய பயன்” என்றாராம்.
ஆண்டான் செய்தது கைங்கரியம். கைங்கரியம் பயனற்றது என்று கருத முடியாது. சில பயன் கண்ணுக்குத் தெரியும் - சுத்தம் செய்த இடம் போல. சுத்தம் செய்த இடம் பார்ப்பதற்கு இனிதாக இருப்பது தான் பயன். அது போல தான் கைங்கரியமும். கோயில் அலகிடுதல் ( சுத்தம் செய்வது ), கோலம் போடுவது, ஏன் விளக்கு ஏற்றுவது எல்லாம் கைங்கரியம் தான். ஒரு சின்ன விதி கைங்கரியம் செய்துவிட்டு எதையும் எதிர்ப்பாக்கக் கூடாது. எதையும் எதிர்ப்பார்த்து கைங்கரியத்தைச் சாதனமாக செய்யாமல், ஒன்றும் எதிர்ப்பார்க்காமல் செய்தால் அதுவே கைங்கரியம் !. ஆண்டான் செய்தது Pure கைங்கரியம் + Pure சரணாகதி!

நாச்சியார் திருமொழி முதலில்
“தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்”
என்கிறாள் ஆண்டாள். தரை விளக்கி என்பது தரையை தூய்மைப்படுத்துதல் என்று வருகிறது. இதனாலோ என்னவோ நாச்சியார் திருமொழியின்  தனியனான

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
என்று இயற்றியது திருக்கண்ண மங்கை ஆண்டான்.
இராமானுச நூற்றந்தாதியில்
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே
திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பெருமாளை குறித்து திவ்யபிரபந்தங்களை செய்தருளிய திருமங்கையாழ்வாரிடம் ப்ரேமம் உடையவராய் எங்கள் தலைவன் இராமானுசன்.அவரைப் பற்றியவர்கள் துயரங்கள் வந்தால் வருத்தப்பட மாட்டார்கள். அதே போல இன்பங்கள் வந்தாலும் களிப்படைய மாட்டார்கள் என்கிறார் அமுதனார்.
இராமானுஜருக்கு பிரியமான ஆழ்வார் திருமங்கையாழ்வார் (அவர் பல திவ்யதேசங்களை பாடியிருந்தாலும்) இந்த பாடலில் திருக்கண்ணமங்கை பெருமாளை பாடிய திருமங்கை ஆழ்வார் என்று குறிப்பிடும் போது ஏதோ ஸ்பெஷல் என்று புரிந்திருக்கும் ( அந்த ரகசியம் என்ன என்று தேடுங்கள் ! )
இன்றும் திருக்கண்ணமங்கையில் மகிழ மரத்தடியில் அவரை அர்ச்சா ரூபமாய் சேவிக்கலாம்.  இவரின் ஒப்பற்ற சரிதத்தை பக்தியுடன் கேட்கும் அல்லது படிப்பவர்கள்  எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
திருவாருரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்ணமங்கைக்கு  இன்று பேருந்துகள் போய்க்கொண்டிருக்கிறது

பிகு:

 • சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தம் ஸ்ரீராமானுஜருடைய பெருமளையும், ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு எம்பெருமானாரின் அவதாரம்(பவிஷ்யதாசார்யன்)  குறித்து நம்மாழ்வார் அருளியவை அதில் இடம்பெற்றிருக்கிறது.


4 comments:

 1. மிகவும் அருமை அடியேன். சென்ற புரட்டாசி சிரவணத்தின் போது திருக்கண்ணமங்க்கையில் வேதாந்த தேசிகனின் திருநக்க்ஷ்த்திரம் இரண்டு நாள்கள் இருந்து ஸேவித்தோம். அப்பொழுது திருகண்ணமங்க்கை ஆண்டானையும் ஸேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆண்டானது சரிதை முழுவதுமாக தெரியவில்லை . நாய்கள் சண்டை வரை தான் அறிந்தோம். முழு சரிதையும் படிக்க புல்லரித்தது. ஆளவந்தாரின் சிஷ்யர் என்பது கூடுதல் இன்பம் பயத்தது.மிக விரிவான உரை. நன்றி பல கோடி . தஸன் ஆராவமுதன் பி. கு. வேதந்த தேசிகனின் திருநக்ஷ்த்திரம் மிக விஷெசமாக திருகண்ணமங்கயில் அன்வயிக்க படுகிறது. பெருமாள் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி மங்க்களாஸாசனம் செய்யும் காட்சி கங்கொள்ளாதது. ( காஞ்சியில் கூட தேசிகன் தான் வரதன் சன்ன்னதிக்கு ஏளுவார்.) அதையும் தாங்கள் எழுத்தின் மூலம் உலகோர்க்கு உணர்த வேண்டுமாய் பிரார்திக்கிறேன்

  ReplyDelete
 2. super and good effort

  ReplyDelete
 3. அருமை..சுவாமி திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி அறிந்து கொண்டோம்...

  ReplyDelete
 4. திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றித் தெரிந்துகொண்டேன். இப்போ மனம், 'கண்ணமங்கை நின்றானைக் கலைபரவும் தனியானையை'யில் இருக்கிறது. இதற்கு விடை கண்டுபிடிக்கப்பார்க்கவேண்டும்.

  ReplyDelete