Skip to main content

திருப்பாவை - 24 ( என்று என்று )


திருப்பாவை - 24 ( என்று என்று )
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.
”என்று என்று” என்ற வார்த்தையை என்ன என்று சொல்லுவது. “அன்று, சென்று, குன்று, வென்று, என்று, இன்று” என்ற எதுகைக்காக ஆண்டாள் உபயோகித்திருக்கிறாள் என்று நினைப்போம். அப்படி இல்லை.
ஆண்டாள் ”தமிழை ஆண்டாள்” என்று சொல்லலாம். Word power என்பதை தமிழில் சொல்வளம் என்று கூறலாம். சொல்வளம் எதில் இருக்கிறது என்றால் நாடோடித்தனான எளிமையான பாடல்களில் அதில் வாசனை இருக்க வேண்டும். ஆண்டாள் தமிழில் வாசனை இருக்கிறது.
பாடல்களில் வாசனையா ? பகுத்தறிவாக இல்லையே என்று யோசிக்கலாம்.
இந்த கட்டுரையில் பல வாசனைகளை அனுபவிக்க உங்களை அழைக்கிறேன்.
முதலில் ‘வங்கிபுரத்து நம்பி’ பற்றிச் சொல்கிறேன்.
’வங்கிபுரத்து நம்பி’ என்ற ஆசாரியரைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அவர் திருநட்சத்திரம் பற்றிய குறிப்பு கூட நம்மிடம் இல்லை, அதனால் என்ன ? இவர் எம்பெருமானார் சிஷ்யர், இவர் திருதகப்பனார் ’வங்கிபுரத்து ஆச்சி’ ஸ்ரீமணக்கால் நம்பியின் சிஷ்யர். இந்தச் சம்பந்தம் போதும்.
ஸ்ரீரங்கத்தில் ‘ஸ்ரீஜெயந்தி’ உற்சவம். நம்பெருமாள் மண்டபத்தில் எழுதருளியிருக்கிறார். நல்ல கூட்டம். ஒருபக்கம் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டி பஞ்சகச்சம், திருமண் தரித்துக்கொண்டு இன்னொரு பக்கம் பக்கத்துக் கிராமத்து இடைச்சிகளின் பட்டிக்காட்டு கூட்டம். முதலியாண்டான் தான் கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார்.
அன்று வங்கிபுரத்து நம்பி கொஞ்சம் தாமதமாக வந்தார். ஒரு பக்கம் வேதம், பிரபந்தம் சேவிக்கும் ஸ்ரீவஷ்ணவ கூட்டம் இன்னொரு பக்கம் பட்டிக்காட்டு ஆய்ச்சிகளின் கூட்டம் எந்த கோஷ்டியில் சேர்ந்துக்கொள்ளலாம் என்று யோசித்து நம்பெருமாள் திருமுகத்தை பார்த்தார். நேராக ஆச்சிகளின் கூட்டத்தில் போய் நின்று கொண்டார். இதை முதலியாண்டான் கவனித்துவிட்டார்.
பெருமாள் சேவை முடிந்த பின் முதலியாண்டான் “ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் சேராமல், பட்டிக்காட்டு ஆய்ச்சிகள் பக்கம் சென்றது ஏன் ?” என்று கேட்க அதற்கு நம்பி
”நம்பெருமாளைப் பார்த்தேன். அவர் கடைக்கண் ஆசியர்களின் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டு இருக்க அங்கே சென்று சேர்ந்துகொண்டேன்” என்றார்.
நம்பெருமாள் பார்வை ஏன் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியின் பக்கம் செல்லவில்லை ?
அங்கே மேடாக இருந்ததாம் என்ன மாதிரியான மேடு ? ஜாதியினால் ஒரு மேடு, கல்வியினால் ஒரு மேடு, செல்வத்தினால் ஒரு மேடு என்று “வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும்” இவ்வளவு மேடுகள் என்ற அகங்காரம் இருந்ததால் நம்பெருமாள் அந்தப் பக்கம் திரும்பவே இல்லையாம்.
முதலியாண்டான் விடவில்லை “சரி ஆய்ச்சிமார்கள் நம்பெருமாளை என்ன சொல்லி சேவித்தார்கள் ?”
“நல்ல பட்டு வஸ்திரம் அணிவீர்”
“பொன்னாலே பூணூலிடுவீர்”
“நல்ல மாணிக்கம் பொதிந்த நகை அணிவீர்”
“பால், பழம் உண்பீர்”
“நம்பெருமாள் நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்வீர்.. வாழ்வீர்”
என்று சாதாரண கிராமிய பாடல்களை சொல்லிச் சேவித்தார்கள் என்றார்
“நீர் என்ன சொல்லி சேவித்தீர்?
“அடியேன் விஜய்ஸ்வ விஜயீபவ…” என்று சொல்லி சேவித்தேன் என்றார் நம்பி
.
அதற்கு முதலியாண்டான் “அந்தக் கூட்டத்துக்கு சென்றும் உமது முரட்டு சமஸ்கிருதத்தை விடவில்லையே” என்றாராம்.
அதாவது அந்த கூட்டத்துக்கு சென்றும் இடைச்சிகளின் மனோபாவம் அவர்கள் வாசனையை உணரவில்லையே என்று அர்த்தம்.
இன்றைய ஆண்டாள் பாசுரத்தில் என்ன வாசனை இருக்கு ? பெரியாழ்வார் வாசனை. இலக்கிய நோக்கில் பார்த்தால் இந்த பாடலை பார்த்தால் “போற்றிப் போற்றி” என்று ஆண்டாள் பெருமாளை போற்றுகிறார் என்று தோன்றும்.
’பட்டர்பிரான் கோதை’ சாராதணமாக எழுதுவாளா ?
ஆங்கில அறிஞர்கள் கொண்டு ஆண்டாளை அனுபவிக்க முடியாது. அது ஒரு விதத்தில் முட்டாள் தனம் கூட. கோயிலுக்கு எதற்குச் செல்கிறோம் என்று ஒரு ஆங்கில அறிஞரைக் கேட்டால் “Prayer” என்பார். ஆழ்வார்கள் பெருமாளை மங்களாசாசனம் செய்தார்கள் என்பதை “Azhavar’s prayed to Lord Vishnu” என்று குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் சொல்லித்தருகிறோம்.
Prayer வேறு Blessing வேறு. பெரியாழ்வார் செய்தது மங்களாசாசனம் - blessing!
இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். யானை மீது பெரியாழ்வார். பெரியாழ்வார் தலைக்கு மேலே பெருமாள் கருடாழ்வார் மீது அமர்ந்து கொண்டு காட்சி தருகிறான்.
ஏரோபிளேன் மேலே போகும் போது நான் அதைக் கீழே இருந்த பார்த்திருப்போம். என்ன தெரியும், இரக்கை, பிறகு அதன் அடிப்பாகம். பெரியாழ்வாருக்கு என்ன தெரிந்திருக்கும் ? பெருமாளின் திருக்கமலப் பாதம்.
உடனே
“மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! - உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று பல்லாண்டை ஆரம்பிக்கிறார்.
அடுத்த முறை பல்லாண்டு சேவிக்கும் போது இதை நினைத்துக்கொண்டு சேவித்துப்பாருங்கள் வேறு அனுபவமாக இருக்கும்.
அம்மாவிடம் “உனக்கு என்ன வேண்டும் “ என்று கேட்டுப்பாருங்கள். “நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும்”என்பாள்.
பெரியாழ்வாரும் பல்லாண்டில் அம்மா மாதிரி “ஒன்றும் வேண்டாம் நீ நல்லா இருப்பா அது போதும்” என்கிறார். This is not prayer!
பெரியாழ்வார் வாசனை ஆண்டாளிடமும் இல்லாமலா போகும். மீண்டும் உங்களைக் கற்பனை உலகிற்கு அழைக்கிறேன்.
போன பாசுரத்தில் ஆண்டாள் ”இங்ஙனே போந்தருளி” என்று பெருமாளின் நடை அழகைக் காண ஆசைப்பட்டாள். பெருமாளும் நாலு அடி நப்பின்னை பிராட்டியுடன் நடந்து வருகிறார். அங்கே சிம்மாசனத்தில் நப்பினையுடன் உட்காந்து ஒரு காலை மடக்கிக்கொண்டு இன்னொரு காலை தொங்கப் போடுகிறார்.
அப்போது ஒரு பெண் அவர் திருப்பாதத்தை வைக்க ஒரு சின்ன பீடம் போடுகிறாள். இன்னொரு பெண் வெறும் பாதமாக இருக்கிறதே என்று “ஸ்ரீசடகோபத்தை” கோத்தருளிகிறார்.
ஆண்டாளும், அவளது கோஷ்டியினரும் ஒவ்வொருவராக வந்து பெருமாள் பாதங்களைத் தொட்டு சேவிக்கிறார்கள். அப்போது அவர் பாதம் கன்னிப் போயிருப்பதை பார்க்கிறார்கள். ஏன் கன்னிப் போயிருக்கிறது ? நாலு அடி ஆண்டாளுக்காக நடந்து வந்ததால் சிவந்து போய் இருக்கிறது.
குழந்தையின் கால்கள் சிவந்திருந்தால் உடனே அம்மாவிற்கு ஏற்படும் அதே பரிவு ஆண்டாளுக்கு ஏற்பட “நடந்த கால்கள் நொந்தவோ” என்று ஆண்டாளுக்கு திருவிக்கிரம அவதாரம் நினைவுக்கு வருகிறது உடனே
“அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!” என்று பெரியாழ்வார் போல மங்களாசாசனம் செய்ய ஆரம்பித்து வரிசையாக ”அன்று” நடந்த எல்லா அவதாரங்களும் சொல்லி “இன்று” வந்தோம் என்று முடிக்கிறாள் ஆண்டாள்.
அடிபோற்றி = செவ்வடி செவ்வி திருக்காப்பு. இது தான் பெரியாழ்வார் வாசனை.
முன்பு பார்த்த ஸ்ரீஜெயந்தி நம்பெருமாள் உற்சவ பட்டிக்காட்டு இடைச்சிகள் கோஷ்டி மாதிரி ஆண்டாள் போற்றி போற்றி என்று மங்களாசாசனம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். கோஷ்டி வாசனை !
இந்த வாசனை ஸ்ரீவைஷ்ணவத்தில் எங்கும் பரவியிருக்கிறது.
ஒரு முறை ஸ்ரீராமானுஜர் தன் குரு யாதவ பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாகத் தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியை போலச் சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதைக் கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் ஆஸம்- மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்றார்.
பெருமாள் மீது ஸ்ரீராமானுஜருக்கு இருந்த பிரேமை. இது.
எங்கள் ஆழ்வான் என்ற ஆசாரியரை ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைக்கிறார்கள். நடாதூர் அம்மாளின் ஆசாரியர் அதனால் ”அம்மாள் ஆசாரியன்” என்று அழைப்பர்கள்.
சிஷ்யனின் பெயரை வைத்து ஒரு ஆசாரியனா ? ஏன் என்று யோசித்திருக்கீறீர்களா ? காரணம் இருக்கு.
ஒரு தாய் தன் குழந்தைக்குப் எப்படிப் பரிவுடன் சரியான பதத்தில் பாலை ஊட்டுவாளோ அதே போல தேவப் பெருமாளுக்கும் பக்குவமாக இளம் சூடான பாலமுது சம்பர்ப்பிக்கும் சேவை செய்தார். “எனக்குத் தாய் தந்தை கிடையாது ஆனால் நீர் என் தாய் போல் என்ன கவனித்துக்கொள்கிறீர்” என்று சொன்னாராம். அதனால் தான் அவருக்கு நடாதூர் ”அம்மாள்” என்று திருநாமம் கிடைத்தது.
இப்பேர்பட்ட சிஷ்யனினாக இருக்கிறானே என்று எங்கள் ஆழ்வான் “அம்மாள் ஆசாரியன்” வைத்துக்கொண்டார். பொங்கும் பரிவு!.
பட்டருக்கு யார் ஆசாரியர் ? எம்பார். ஏன் எம்பார் என்று தெரியுமா ? கூரத்தாழ்வானுக்கு பட்டர் பிறந்த சமயம். எம்பார் குழந்தையை எடுத்துக்கொண்டு எம்பெருமானாரிடம் கொடுக்க “என்ன துவயம் வாசனை வீசுகிறதே” என்றாராம். இல்லை வீதியில் வரும் போது குழந்தைக்கு காப்பாக இருக்கட்டுமே என்று “காதில் துவயம் மஹாமந்திரத்தை சொல்லிக்கொண்டு வந்தேன்” என்றாராம். நீரே ஆசாரியராக இருக்க வேண்டும் என்று வித்தித்தார். உது துவத்துடைய வாசனை !
ஆண்டாள் பாடல்களை படிக்கும் போது நமக்கும் அந்த மனோபாவம் வர வேண்டும். திருப்பாவையைப் பாமாலை என்பார்கள், பூர்வர்கள் சாதாரணமாகச் சொன்ன வார்த்தை இல்லை. இவ்வொரு பாடலையும் ஒரு மலர் என்றால் அதை ஆண்டாள் ஒன்றாகச் சேர்த்து ஒரு மாலையாக நமக்குச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
அந்த மனோபாவத்துக்குள் சென்றால் தான் ஆண்டாளை ரசிக்க முடியும். அப்படி ஆண்டாளை அனுபவித்தால் தான் பெருமாளை அனுபவிக்க முடியும்.
திருக்கோயில்களில் இருக்கும் நிலை அர்ச்சை. ஆழ்வார்கள் பக்தியுடன் சேவித்ததால் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாசுரம் பாட முடிந்தது. நாம் பார்க்கும் போது அது ‘சிலை’ என்று நினைப்பதால் பூர்ணமாக பக்தி செய்ய முடிவதில்லை.
சுஜாதா 90களில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தர வேண்டும் என்று நினைக்கிறேன்.
--(0)--
பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்தகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.
அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி.
"கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மைத் தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப பட்டுள்ளது”
லண்டனில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனைத் தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்குச் சரியான சாட்சி.
லேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.
"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்குப் புரிந்ததே இல்லை.
--(0)--
பிள்ளை உரங்காவில்லி தாஸர் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும் போது ஒரு கத்தியை பிடித்துக்கொண்டு சேவித்து வருவாராம். பெருமாள் திருமேனிக்கு ஏதேனும் அசைவு ஏற்பட்டால், அந்தக் கத்தியால் தம்மைக் குத்திக்கொண்டு உயிரை விட்டு விடுவதற்காகவே அப்படிச் செய்வாராம்.
ஸ்ரீராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சண்டை போட தன் படையைத் தயார் செய்தார் குலசேகர ஆழ்வார். குலசேகர ஆழ்வாரிடம் ஸ்ரீராமருடைய வாசனை வரும்.
கோயிலில் வாசனை என்று ஒன்று உண்டு. திருநறையூர் அரையர் பற்றி ஒரு சம்பவம் சொல்கிறேன். தொட்டியம் ( ஸ்ரீரங்கம் அருகே இருக்கும் ஊர்) திருநாராயணபுரத்திலே இருக்கும் சந்நிதியில் அர்ச்சாவதார பெருமாளுக்கு சில பகவத் விரோதிகள் நெருப்பை வைத்தனர் ( அந்த காலத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ! ). இதைப் பார்த்த அரையர் உடனே எம்பெருமான் திருமேனிக்குண்டான ஆபத்தைக் கண்டு தாமும், மனைவியும், பிள்ளைகளுடன் குடும்பத்துடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் அணைத்துக் கொள்ள நெருப்பும், புகையும் சூழ குழந்தைகள் மூச்சுவிட முடியாமல் திணறி
”பொறுக்கமுடியவில்லையே!” என்று கூற அதற்கு அரையர் “இன்னும் கொஞ்சம் நேரம் தான், துன்பம் பிறகு பெருமாள் திருவடிகளில் சுகமாக இருக்கலாம். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றாராம்.
திருவாய்மொழியை தொட்டுப்பார்த்தால் ஈரமாக இருக்குமாம். ஈரமாக இருந்தால் அதில் வாசனை இல்லாமல் இருக்குமா ? அதிலும் ஒரு வாசனை இருக்கிறது. பிள்ளை திருநறையூர் அரையரிடம் மூன்று திருவாய்மொழிகளுக்கு பொருள் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று நினைவில்லை, ஆனால் அவர் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு பொருள் கூறத்தொடங்கி அப்பாசுரங்களில் மிகவும் ஈடுபட்டுக் கண்ணீர் விட்டார் என்பது மட்டும் நினைவிருக்கு என்றாராம் நஞ்சீயர்.
நிறத்தில் கூட வாசனை இருக்கு. கார்மேனி செங்கண் என்பது கருப்பு, சிகப்பு இரண்டும் கலந்து முரண் அழகு என்பார்கள் தமிழ் இலக்கணத்தில்.
கருப்பு சிகப்பு என்ற வண்ணத்தில் எந்தக் குறையும் இல்லை. ஆண்டாளுக்கு கருப்பு, சிகப்பு கண்ணனாகத் தெரிந்தது. நமக்குத் திருப்பாவை வந்தது.
பக்தி வாசனை இல்லாத கருப்பு சிகப்பு சம்பந்தத்தால் நாத்திகமும் உளறல்கள் மட்டுமே வரும். கருப்பு சிகப்பு வண்ணம் போல தான் தமிழும்.
பக்தி வாசனை இருந்தால் திருப்பாவை வரும். வாசனை இல்லை என்றால் கவிஞர்களுக்கு எல்லாம் அரசனாக இருந்தாலும் அதில் வெறும் வார்த்தைகள் தான் வரும்.
பெரியவாச்சான் பிள்ளை, நாயனார் போன்றவர்கள் அனுபவித்த திருப்பாவையை நாமும் அதே போல அனுபவிக்க வேண்டும். இதை எல்லாம் ஆண்டாள் சொல்லவில்லையே என்பது இளநீர் உள்ளே எப்படி தண்ணீர் போனது என்று யோசிப்பது போன்றது.
நம்மாழ்வார் பாசுரம் ஒன்றை பார்க்கலாம்.
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே
நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக் கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன். இங்கேயும் நம்மாழ்வார் பெருமாளின் பாதத்தை மெல்லடி என்று கூறுவதை கவனிக்கலாம்.
பெருமாள் கோயிலுக்கு போகும் போது செருப்பைக் கழட்டி வைத்துவிட்டுத் தான் செல்வோம். அதே போல நாம் கோயிலுக்கு செல்லும் போதும் நம்மிடம் இருக்கும் so called பகுத்தறிவுகளைக் கழட்டி வைத்துவிட்டுச் சென்றால் உள்ளே என்ற பெருமாளின் பாதுகைகள் நமக்குக் கிட்டும்.
பாதுகைகளுக்கு Brand Name ஸ்ரீசடகோபன்.
“என்று என்று” என்று இருக்கிறதே பாடலில் …?
பெருமாளை பற்றி எல்லாவற்றையும் செல்ல வேண்டும் ஆண்டாளுக்கு ஆனால் திருப்பாவையை எட்டு வரியில் முடிக்க வேண்டும் என்ன செய்வது ?
ஆங்கிலத்தில் etc., etc., என்று நாம் இன்று எழுதுவதை ஆண்டாள் அன்றே “என்று என்று” என்று எழுதிவிட்டாள் !
பிகு: பெருமாள், ஆழ்வார்கள், ஆசாரியர்களுக்கு நாம் வாழி திருநாமங்களை சொல்லுகிறோம்.

Comments

  1. எவ்வளவு ரசமாக எழுதியிருக்கிறீர்கள். கடைசியில் பண்டை நாளாலே பாசுரத்தையும் தொட்டு எழுதியிருக்கிறீர்களே... மிக மிக ரசித்தேன்.

    கர்ப்பக்ரஹத்தின் முன்பு எல்லோரும்தான் நிற்கிறோம். எல்லோருடைய எண்ணங்களும் ஒன்றுபோலவா இருக்கிறது? வெகுசிலரே அவனைக் காணமுடிகிறது, சிலருக்கே அவனது எழில் புலப்படுகிறது. மற்றவர்களுக்கு வெளிப்பகட்டும், கர்ப்பக்ரஹத்துக்கே உண்டான வாசனையுமே புலனாகிறது.

    உங்கள் எழுத்தில் நிறைய அறிந்துகொள்ளமுடிகிறது.

    ReplyDelete

Post a Comment