Wednesday, January 18, 2017

நம் கூரத்து ’ஆழ்வான்’

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது கூரத்தாழ்வான் சன்னதியில் ‘கூரத்தாழ்வார்’ என்று இருந்ததை ‘கூரத்தாழ்வான்’  என்று மாற்றியிருந்தார்கள். ஸ்ரீராமானுஜருடைய பிரதான சீடர் கூரத்தாழ்வானை, கூரத்தாழ்வார் என்று மரியாதையாகக் கூப்பிடாமல் ஒருமையில் ’கூரத்தாழ்வான்’ என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பார்கள்.

இதற்குக் காரணம் என்ன ? என்று கேட்டால், கூரத்தாழ்வார் என்பவர் அவர் திருதகப்பனார் அதனால் வேறுபடுத்திக்காட்ட இவரைக் கூரத்தாழ்வான் என்று அழைக்கிறார்கள் என்று பலர் கூறுவர். சில காலம் முன்புவரை, நானும் அதே போல தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஒரு முறை கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்றிருந்தேன். அங்கே சன்னதியில் கூரத்தாழ்வான் வாழ்க்கை சரித்திரம் படமாக இருந்தது அதில் ஏன் ஆழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிந்துகொண்டேன்.

ஆளவந்தார் தொடக்கமாக ஸ்ரீராமானுஜர் காலம்வரை, திவ்வியப் பிரபந்தத்திற்கு வாய்
மொழியாகவே உரைகள் இருந்தது. வியாக்கியானங்கள் எல்லாம் ஸ்ரீராமானுஜருக்கு பிறகு தான் எழுதப்பட்டது. ஸ்ரீராமானுஜர் போலவே அவர் சீடர்களும் திவ்யபிரபந்தத்தை முழுமையாக சுவாசித்தார்கள். தாங்கள் சுவைத்த திவ்யபிரபந்தத்தின் உள் அர்த்தங்களைப் பலருக்கு நன்கு விளங்கு படி காலட்சேபம் செய்வதில் வல்லவர்கள்.

இதற்குச் சான்றாக ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த உரையாசிரியர்கள் தங்கள் வியாக்கியானங்களில் ஆங்காகே பூர்வாசாரியார்களான கூரத்தாழ்வான் இப்படிக் கூறுவார், பட்டர் இப்படிச் சொல்லி விளக்குவார் என்ற ஈடு போன்ற நூல்களில் குறிப்புக்களாக பார்க்கலாம். ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வான் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்குக் குறிப்பாக நம்மாழ்வார்  திருவாய்மொழிக்கு ஆழ்வான் எளிமையான விளக்கங்களைச் சொல்லி புரியவைப்பாராம்.

“சிறுமா மனிசராய் என்னை ஆண்டார்” என்ற பாசுரத்தில் “சிறு - மா” அதாவது “சிறுமை - பெருமை” என்று ஒன்றுக்கொன்று முரண் பட்ட குணமாக இருக்கும் இரண்டும் எப்படி ஒருவருக்கு அதுவும் பெருமாளுக்கு இருக்க முடியும் ? என்று ஆழ்வானுடைய திருகுமாரரான(மகன்) பட்டர் கேட்ட போது அதற்குக் கூரத்தாழ்வான் ”ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் போன்றவர்கள் வடிவில்(மேனி) சிறுத்தவர்களாக இருந்தாலும், ஞானத்தால் உயர்ந்தவர்கள் அன்றோ?” என்று விடை சொன்னார்.

பிறகு ஒரு சமயம் ராஜேந்திர சோழன் சதஸ்ஸில் ஆழ்வான் திருவாய்மொழி காலஷேபம் ஸாதித்துக்கொண்டு இருந்த போது ”வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம்” ( 5ம் பத்து 3ஆம் திருவாய்மொழி 7ஆம் பாசுரத்தில்) என்ற பகுதி வந்த போது  ’ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்ற நூறு வயது நிரம்பிய முதியவர் ஒருவர் எழுந்து பாசுரத்தில் “தலையில் வணங்கவுமாங்கொலோ தையாலார் முன்பே” என்று முடிகிறது. நாயகனை நாயகியானவள் தலையால் வணங்குவாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?” என்று கேட்க உடனே கூரத்தாழ்வான் “ஏன் இல்லை, என்று ஸ்ரீராமாயனத்தில் சுந்திரகாண்டத்தில் சீதைப்பிராட்டி அனுமானிடம் செய்தி சொல்லி அனுப்பிய போது ”எனக்காக ராமபிரானைத் தலையால் வணங்கு என்று சொல்லியிருக்கிறாளே” என்று எடுத்துக்காட்டினார்.

இப்பேர்பட்ட கூரத்தாழ்வானிடம் திருவாய்மொழி காலஷேபம் கேட்க வேண்டும் என்று நம் உடையவருக்கு மிகுந்த ஆசை. ஆனால் ஆசாரியரான ஸ்ரீராமானுஜருக்கு காலஷேபம் சொல்ல கூரத்தாழ்வான் இசையவில்லை. எனவே முதலியாண்டான் போன்றவர்கள் ஆழ்வான் காலஷேபத்தைக் கேட்டு அதை ஸ்ரீராமானுஜரிடம் விண்ணப்பிப்பது என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

கூரேசர் திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமான "உயர்வற உயர்நலம் உடையவன்” என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பேசுகிறாரே என்று ஆழ்ந்து அந்த அனுபவத்தில் அப்படியே மயங்கி மோதித்துவிட்டார். இப்படி இவர் மயங்கியதை மற்றவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் தெரிவிக்க அவரும் ஓடி வந்து இது போல தான் “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாசம் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று சொல்லி, நம் கூரத்தாழ்வானும் நம்மாழ்வார் போல் பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு “ஆழ்வான்! ஆழ்வான்! ஆழ்வான்! எழுந்திரும்!” என்றாராம்.

அதனால் தான் அவர் ’ஆழ்வான்’ என்ற பெயருடன், அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.

மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் ’நம் கூரத்தாழ்வான்’ திருநட்சத்திரமான இன்று உங்களுடன் இந்தப் பதிவை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

தை அஸ்தம்
18.1.2017
கூரத்தாவான் திருநட்சத்திரம்.

2 comments:

  1. நம் கூரத்து ’ஆழ்வான்’ பற்றி... நாங்களும் அறிந்து கொண்டோம்...


    பகிர்வுக்கு மிகவும் நன்றி...

    ReplyDelete