Friday, April 20, 2007

ராமானுஜலு

[%image(20070420-ramanujar_temple_new.jpg|331|249|udayavar sanidhi)%]

சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துவிட்டு திரும்பியதும், சித்திரை மாதம், ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருந்தேன். ராஜகோபுரத்தைச் சுற்றியுள்ள கடைகள், மாடுகள், நெட்டிலிங்க இலைமேல் வைத்துக் கொய்யா பழம் விற்கும் கிழவி, மத்தியான வேகாத வெயிலில் சமயபுரம் பஸ்ஸிலிருந்து இறங்கும் சந்தனம் தடவிய மொட்டைத் தலை 'கோவிந்தா'க் கூட்டம் என்று எதுவுமே மாறவில்லை.


'மைசூர் போண்டா ரெடி!'யைக் கடந்து சென்றால், 'ரங்கா ரங்கா' கோபுரத்திற்கு முன் 'ரின் சோப் உபயோகியுங்கள்!' பனியன் போட்டுக் கொண்டு ஒருவர் பரோட்டா மாவுடன் மல்யுத்தம் செய்து கொண்டுடிருந்தார். அவரிடம் அடிவாங்காமல் கடந்தால், ரெங்கவாசல் கடைகள் ஜொலிப்பில் நூறு வாட் என்றது.

ரங்க வாசல் கடையில் தொங்கிய குஞ்சலத்தை பார்த்த ஒரு வெள்ளைக்காரர்..

"வாட்டிஸ் திஸ்?"

"குஞ்சலம் சார், ஹெட் டெக்கரேஷன்"

"ஹொவ் மச்"

"ஃபிப்டீன் ரூப்பீஸ் சார்"

பணம் கொடுத்து, குஞ்சலத்தை வாங்கித் தலையில் வைத்துப் பார்த்துக் கொள்பவரைக் கடந்து வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. எதிர்ப் பக்கம் நீலநிறத்தில் 'ஸ்ரீ உடையவர் சன்னதி' போன மழையில் வழிந்திருக்கிறது. உடையவர் சன்னதியைத் திறந்த போது மணி நாலரையிருக்கும். உள்ளே சென்றவுடன் மங்கலான வெளிச்சத்தில், வவ்வால் புழுக்கை நெடியுடன், சுவற்றில் ஆழ்வார்கள் கோஷ்டி, ராமானுஜர் வாழ்க்கைச் சரித்திரம், தாடி வைத்துக் கொண்டு கூரத்தாழ்வார் என்று ஓவியங்களிடையே தூது செல்லும் வவ்வால்கள்.  ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது மூலையில் ஒரு அழுக்கு மூட்டையைப் பார்த்தேன். லேசாக அசைந்தது. உற்றுப் பார்த்தேன். கூனிக் குறுகி ஒருவர் உட்கார்ந்திருந்தார். கிட்டே சென்றேன். பவ்யமாக என்னை வணங்கிச் சிரித்தார் அந்தப் பெரியவர்.

"கோஷ்டி முடிஞ்சாவுட்டுத்தான் தான் தீர்த்தம். மூலவரை படம் எடுக்கப்புடாது. மத்ததை தாராளமா எடுத்துக்கொங்கோ!" என்று பின்னாலிருந்து அர்ச்சகர் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

என் தோளில் தொங்கிய எஸ்.எல்.ஆர் கேமாராவை பார்த்துக்கொண்டே..

"அமெரிக்காவா ? ஃசாப்ட்வேரா? என் தம்பி பையன் ஒருத்தன் 'சிஸ்சி'யில கோர்ஸ் முடிச்சுட்டு இருக்கான்.. "

"மாமா நான் இந்த ஊர்தான்"

"அப்படியா? இப்போ எங்கே இருக்கேள் ?"

"சென்னைல"

"அப்படியா" என்றவர் மூலையில் இருந்த கிழவரைப் பார்த்தார்.

"உன்ன நான் வெளிலதானே இருக்கச் சென்னேன் ? கோஷ்டி முடிசாவுட்டு வா, போ போ!"

கிழவர் ஒன்றும் செல்லாமல் தன் கைத்தடியுடன் வெளியே சென்றார்.

"இவாளோட ரொம்ப கஷ்டமா இருக்கு சார், எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. பேசாம அன்னதானம் போடற இடத்தில போய் இருக்க வேண்டியதுதானே.. இங்கே வந்து கழுத்தறுக்கறா.."

அதற்குள் கோஷ்டி இரண்டு வரிசையாக உட்கார்ந்து கொண்டு "பல்லாண்டு பல்லாண்டு..." என்று சேவிக்க ஆரம்பித்த போது நான் அந்தக் கிழவரைப் பார்க்க வெளியே போனேன்.

உடையவர் சன்னதி வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். வெளிச்சத்தில் பார்க்க கருப்பாக, இரண்டு மாத தாடியுடன், குடுமி வைத்திருந்தார். நெற்றி, தோள்பட்டையில், நெஞ்சில், வடகலையா தென்கலையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி பெரிய நாமம். இவ்வளவு நாமம் போட்டுக் கொண்டிருந்தவர் பூணுல் போடாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கையில் அழுக்காக இருந்த மஞ்சள் பை 'தைலா சில்க்ஸ்' என்றது.  நான் அவர் பக்கத்தில் சென்றவுடன் என்னை மீண்டும் பவ்யமாக வணங்கிச் சிரித்த போது பற்களை எண்ணுவது சுலபமாக இருந்தது.

"கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?"

என்று கோஷ்டி திருப்பள்ளியெழுச்சி சேவித்துக் கொண்டிருந்தார்கள்.

"எந்த ஊர்?" என்றேன்.

சிரித்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டார். நான் அவர் திரும்பும் வரை காத்திருந்து மீண்டும்...

"உங்களுக்கு எந்த ஊர்?"

'என்ன?' என்பதைப் போல் பார்த்தார்.

"எந்த ஊர்?" தூரத்தில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.

"ஜீயபுரம்.."

"ஓ, எங்களுக்கு கொடியாலம்" அவர் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. ஆனால் புன்னைகைத்தார்.

"செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்..."

அப்போது பையிலிருந்த பிளாஸ்டிக் கவரிலிருந்து ஒரு போட்டோவை எடுத்துக் காட்டினார். கருப்பு வெள்ளை படத்தில் டர்பன், கோட், வாக்கிங் ஸ்டிக், பெரிய நாமத்துடன் ஒருவர் இருந்தார்.

"யார் இவர் ?"

"இவர்தான் என் தோப்பனார். சங்குகோவிந்தசாமி நாயுடு. தமிழ், சமிஸ்கிருதத்தில் நல்ல புலமை.  நான் ஃபர்ஸ்டு ஃபாரம் வரைக்கும்தான் படிச்சேன். தோப்பனர் வழியா நெறைய கத்துண்டேன். என் தோப்பனார். 'விஷ்ணு பதாதி கொஸாந்த', 'தேசிகனின் தாயாசதக'த்துக்கெல்லாம் உரை எழுதியிருக்கார்."

"நான் இதெல்லாம் கேள்விப்பட்டதில்லை. என் அப்பாவுக்குத் தான் வைஷ்ணவத்தில ரொம்ப ஈடுபாடு." 

"தோப்பானார் வரலையா ?"

"இல்ல, மூணு வருஷம் முன்னாடி.. போயிட்டார்!"

"வைஷ்ணவன் இறப்பதில்லை. முதலேது, முடிவேது" என்றார்.

"புரியலை..."

"ஸ்ரீவைஷணவன் யார்?"

எனக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. "விஷ்ணுவை வழிபடுபவர் .." என்றேன்.

புன்முறுவல் செய்து, "உண்மையான ஸ்ரீவைஷணவன் யார்?"

எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அதற்குள் கோஷ்டி முடிந்து, கூட்டம் உள்ளே ராமாநுஜரை சேவிக்கச் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் இந்த பெரியவர் பக்கம் வராமல் ஒதுங்கியே உள்ளே போனார்கள்.

"வாங்கோ உள்ளே தீர்த்தம் தரா .." என்று கிழவரையும் என்னுடன் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

".... தானான திருமேனி. எட்டு நூற்றி என்பத்தி ஏழு வருஷம் முன் வாழ்ந்தவர். எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யக்காரர்.. என்று திருநாமங்கள்  பரமபதம் அடைந்ததும் ரங்கநாதர் தன்னுடைய வசந்தமண்டபத்தையே அளித்தான். ..." என்று அர்ச்சகர் சொல்லிக்கொண்டே கிழவரைத் தவிர எல்லோருக்கும் தீர்த்தம் தந்தார். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கிழவர் ஒன்றும் சொல்லவில்லை. பெருமாளை சேவித்து விட்டு வெளியே உள்ள திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். கிட்டே போய் நானும் உட்கார்ந்து கொண்டேன்.

என்னைப் பார்த்துப் புன்னைத்தார்.

"உங்க வீடு எங்கே இருக்கு ?"

 "இந்த மண்டபம் தான் என் வீடு"

பர்ஸை திறந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டு தன் மஞ்சள் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

"சரி நான் கிளம்புறேன், தாயார் சன்னதிக்குப் போகனும்" என்று கிளம்பினேன்.

திரும்பவும் அதே புன்னைகை. ஒரு பத்து அடி நடந்த பின் கிழவரின் பெயரைக் கேட்க மறந்து விட்டேனே என்று திரும்பவும் வந்து, "உங்க பேர் என்ன ?" என்றேன்.

"ராமானுஜலு"

1 comment:

  1. Hi.....beautiful story.after I finished the story,I felt sad........I breakdown in my heart.....

    ReplyDelete