Skip to main content

வணக்கம் சென்னை - 4

சென்னையில் பண்பலை வரிசையில் பாப்புலர், பிந்து அப்பளம் எல்லாம் நமத்துப் போகும் அளவுக்கு தீவாவளி சமயம் மழை அடித்தது.

தீவாவளி முடிந்து பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய போது செண்டரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வெளியே ”ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்ட அந்த குங்குமப் பொட்டுக்காரரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல், எனக்கு பின் வந்தவரிடம் ஆட்டோ வேணுமா? என்று கேட்கப் போய்விட்டார். அடுத்து வந்தவர் ”800 ஆகும் சார் தி.நகர் முழுக்க ஒரே தண்ணி" என்றார்

சென்னையில் இந்த சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் விக்ரம் மூஞ்சி போல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை தி.நகர் நாயர் சாலையில் சைகிள் ஓட்டிக்கொண்டு போன போது, போலீஸ் என்னை தடுத்தார்கள். பயத்தில் வேர்த்துவிட்டது என்ன விஷயம் என்று கேட்டதற்கு அங்கே 8x8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை காண்பித்தார். நல்ல வேளை யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை.

தீவாவளிக்கும் கிருஸ்துமஸுக்கும் இடைப்பட்ட காலத்தில் ”மெட்ராஸ் ஐ” வழக்கம் போல் வந்து பலர் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு அலைந்ததை ஊர் முழுக்க பார்க்க முடிந்தது.

மழைக்கு சாக்கடையும், மழைத்தண்ணீரும் கலந்த ஜிகர்தண்டாவை சகித்துக்கொள்ளும் சென்னை மக்கள்; பச்சை சிக்னல் கிடைத்ததும் பொறுமை இல்லாமல் ஹார்ன் அடித்து முன்னாடி இருப்பவரை பூச்சாண்டி காட்டி பயமுறுத்துற மாதிரி செய்கிறார்கள். பஸ், லாரி பற்றி கேட்கவே வேண்டாம். யாரும் இல்லாத ரோடுகளில் கூட ஹார்ன் அடித்து தங்கள் இருப்பை, சந்தோஷத்தைத் தெரியப்படுத்துகிறார்கள். அதிகமாக ஹாரன் அடிப்பது ஒருவிதமான மனவியாதியோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் சென்னையில் வந்து இறங்கும் விமானமும் ஹார்ன் அடித்தால் ஆச்சரியப்படமுடியாது.

தி.நகர் போதீஸ் எதிரே இருக்கும் பாலத்துக்கு அடியில் பொதுஜனக் கூட்டம் எல்லாம் ஓய்ந்தபின் அங்கே வேறு வாழ்க்கை தொடங்குகிறது. பலூன் விற்கும் ஒரு குடும்பம் கந்தல் துணிகளை கீழே விரித்து குழந்தைகளைத் தூங்க வைக்கிறார்கள். இங்கேயே வசித்து, இரண்டு லிட்டர் பெப்ஸி பாட்டில் தண்ணீர்ல் பல்தேய்த்து, எதிர்த்த கடையில் டீ குடித்துவிட்டு தங்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள். நெற்றியில் அடிப்பட்ட புண் ஆறாத அந்தக் கிழவி பாரதி புத்தக நிலையம் வாசலில் சொறி பிடித்த நாய்க்கு உண்ணிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறாள். எப்போது போனாலும் ஜி.ஆர்.டி கதவு இடுக்கு வழியாக ஏசி தப்பித்துக்கொண்டு, கடை மூலையில் இளநீர் குவியலை பார்க்கலாம். சில சமயம் அதன் பக்கம் யாராவது சிறுநீர் கழித்துக்கொண்டு இருப்பார்கள். (இளநீர் வாங்கி பிறகு தேங்கா மட்டை ஸ்பூனில் அந்த வழுவலை சாப்பிடும் போது? )

கமல் பிறந்தநாள் முழுவதும் எல்லா பண்பலை வரிசைகளிலும் விளம்பரங்களுக்கு இடையில் கமல் பாடல்களைத் திகட்டத் திகட்ட ஒலிபரப்பினார்கள். சென்னையில் உலக நாயகன், தாய்மை நாயகன் என்று பல போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. மோதியின் ’ஸ்வச் பாரத்’ திட்டத்திற்காக மாடம்பாக்கம் ஏரியை நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களுடன் சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார் என்று செய்திகள் வந்தது.

பெங்களூரைக் காட்டிலும், சென்னை மக்கள் அதிகம் குப்பை போடுகிறார்கள் என்று சொன்னால் கோபம் வரலாம்.

ஸ்வச் பாரத் திட்டம் பற்றிய விளம்பரம் எல்லா பண்பலை வரிசைகளிலும் (ஒரு வாரத்துக்கு முன்வரை) ஹிந்தியில் தான் ஒலிபரப்பிக்கொண்டு இருந்தார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு சென்னையில் பலருக்கு ஹிந்தி வார்தைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அலுவலகத்தில் பலர் பெயருக்கு பின் ‘ஜி’ போட்டு அழைக்கிறார்கள். கமல் பிறந்தநாள் அன்று எ.ஃப்எம் ரோடியோவில் கூட கமல்ஜி என்றுதான் அழைத்தார்கள். ’ஜி’ இப்போது தமிழ் வார்த்தை ஆகிவிட்டது, இன்னும் கொஞ்ச நாளில் வேறு சில வார்த்தைகள் தமிழுக்கு வர வாய்ப்பிருக்கிறது. வந்தால் சந்தோஷம் ஹை.

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விளம்பரங்களின் இறுதியில் “நிபந்தனைகளுக்கு உட்பட்டது... Insurance is the subject matter of solicitation...read the offer document carefully" என்பதை நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரரை விட்டு பேசச் சொல்லுவது ஏன் என்பது புரியாத புதிர். சமீபத்தில் ’ஃபூச்சர் குருப்’ விளம்பரம் ஒன்று எஃப்எம் ரேடியோவில் வந்து பிறகு கடைசியில் இது மாதிரி ஏதோ சொன்னார்கள். காரை ஓரம்கட்டி பலமுறை கேட்டுப்பார்த்தும் என்ன என்று புரியவில்லை. இன்று பல் தேய்த்து வாய்கொப்பளிக்கும் போது விடை தெரிந்தது - கொப்பளிக்கும் ஓசை அதே மாதிரி இருந்தது.


Comments

  1. சென்னை நகர்வலம் திரட்டி நன்றாக இருந்தது.
    சுஜாதா சாயல் மற்றும் அவருடய பாதிப்பு இதில் தெரிகிறது.

    ReplyDelete
  2. Read offer document carefully என்பதை மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரத்தில்தான் சொல்வார்கள். Insurance is a subject matter of solicitation (அல்லது காப்பீடு கோரிப்பெறும் சேவைகளில் ஒன்று) என்பதை இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம். அதாவது உங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள், அபாயங்கள் பற்றி பயமுறுத்தி யாரையும் இன்ஷ்யூர் செய்ய அழைக்கக் கூடாது (நீங்களே விரும்பித் தேர்வு செய்து கோரிப் பெறுகிறீர்கள், பயமுறுத்தலால் அல்ல) என்பதற்காக இந்த ஏற்பாடு.

    ReplyDelete

Post a Comment