Skip to main content

கல்கி அச்சோ ஆன்லைனோ !


கல்கி பத்திரிகை அச்சுப் பதிப்பு நின்றுவிட்டது என்று பலர் வருத்தப்படுகிறார்கள். சிலர்  சந்தோஷப்படுகிறார்கள்.

வருத்தப்படுபவர்கள் எழுத்தாளர்கள் அல்லது பத்திரிக்கை சம்பந்தப்பட்டவர்கள். சந்தோஷப்படுபவர்கள் காசு கொடுத்து வாங்கும் வாசகர்கள். 

சினிமா போலத் தான் இதுவும். டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டு வந்தவர்கள் ‘மொக்கை’ என்று கூறுவதும். ’ஹலிவுட் ரோஞ்சுக்கு’ படம் எடுக்கும் இயக்குநர்கள் கூட மொக்கையைப் பாராட்டிப் பேசும் ( அல்லது பேசாமல் இருக்கும்) தொழில் தர்மம்!  இன்றைய காலகட்டத்தில் நிதானமாக யோசித்தால் இந்த மாதிரி மாற்றம் நிகழக்கூடிய ஒன்று தான். வருத்தப்பட ஒன்றும் இல்லை. 

’அமேசான் பிரைம்’க்கு  காசு கட்டுகிறோம், இணையத்துக்குக் காசு கட்டுகிறோம். ஆனால் பிரைமில் இருக்கும் எல்லாப் படங்களையும் நாம் பார்ப்பதில்லை. imdb மதிப்பு வைத்தோ அல்லது நண்பர்களின் பரிந்துரையினாலோ நாம் பார்க்கிறோம். மற்ற படங்களை இடது கையால் விலக்கிவிடுகிறோம். காரணம் நம் நேரத்தைச் செலவு செய்யப் பணத்தைவிட யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.  நேரத்தை  ‘செலவு’ செய்ய வேண்டும் என்றால் பெஸ்ட்டாக இருக்க வேண்டும். உதாணத்துக்கு தேடும்போது  கிடைத்த 'தேடல் பரிந்துரை’ பாருங்கள் மக்கள் ’பெஸ்ட், குட்’டை எதிர்பார்க்கிறார்கள். இதே நிலைமை தான் பத்திரிக்கைக்கும். 
இன்றைய பத்திரிக்கையில் எது குட், பெஸ்ட்  என்று நீங்களே கேட்டுப் பார்க்கலாம். விடை கிடைத்தால் அதை வாங்கிக்கொள்ளுங்கள்.

இன்று இணையத்தில் கிடைக்காத ஏதாவது ஒன்று பத்திரிக்கையில் கிடைக்கிறதா ? என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். நமக்கு வரும் அசட்டு வாட்-ஸ் ஆப் ஜோக், அரசியல் விமர்சனம், ஒன் லைன் ஸ்டேட்டஸ் போன்றவை தான் பத்திரிக்கையிலும் ஆக்கிரமிக்கிறது. முன்பு கல்கி தன் சர்குலேஷனை கூட்ட அவ்வப்போது பொன்னியின் செல்வன், அல்லது சிவகாமியின் சபத்தைச் சரியாக நடுபக்கத்தில் வருவது போல ஆரம்பிப்பார்கள். வாரம் தவராமல் அதைக் கிழித்து பைண்ட் செய்ய ஒரு கூட்டம் இருக்கும். ஆழ்ந்து யோசித்தால் சரக்கு தேவைப்பட்டது ! 

கல்கி மட்டும் இல்லை இன்று வரும் எல்லாப் பத்திரிக்கைக்கும் இதே நிலைமை தான்  அடுத்து அரசியல். இந்தக் கட்சி இவர்களை வாங்கிவிட்டார்கள் என்ற செய்தி நமக்குப் புதுசு இல்லை. அதனால் பத்திரிக்கை தர்மம் என்பது ஒரு ஆக்ஸிமோரன் ஆகிப் பல வருடங்கள் ஆகிவிட்டது.  

இன்று எழுத்தாளர்கள், பத்திரிக்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள் ’அடடா’ ஸ்டேட்டஸ் போட்டுக் கண்ணீர் வடிக்கலாம்.ஆன்லைனில் வருவதற்கு அட்வான்ஸ் வாழ்த்து தெரிவிக்கலாம். ஆன்லைனில் கிடைத்தாலும் முன்பு பார்த்த அதே பிரைம் படம் தேர்வு உதாரணம்போலத் தான் பத்திரிக்கையும் தேர்வு செய்யப் போகிறார்கள். ஆன்லைனில் இலவசமாகக் கொடுத்தாலும் திருவிழாவில் வினியோகிக்கும் நோட்டிஸ் மாதிரி சும்மா பார்த்துவிட்டு இது குப்பை என்று கீழே போட்டுவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். 

நான் கோவிட் வந்த போது நிறுத்திய நியூஸ் பேப்பரை கோவிட் போன பிறகும் மீண்டும் தொடரும் எண்ணம் எனக்கு இல்லை. உங்களுக்கும் அதே எண்ணம் இருக்கலாம். நியூஸ் பேப்பர் இல்லாமல் பழகிவிட்டது. மாவு சலிக்கத் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கிறது ஸ்கூல் புத்தகம் அட்டை போடப் பயன் படும் பிரவுன் கலர் பேப்பர் சுருள் 

கோவிட் சமயத்தில் மாஸ்க் போட்டால் நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது. அதுபோலப் பத்திரிக்கை அட்டைப்படத்தைக் கழட்டிவிட்டால் அடையாளம் தெரியாது. அச்சோ ஆன்லைனோ பத்திரிக்கைகள் அவர்களின் அடையாளத்தைத் தேட வேண்டும். அதற்குப் பிறகு கல்கியின் அடையாளமான கணபதி எங்கே என்று தேட ஆரம்பிக்கலாம். படத்தைப் பார்த்தால் கணபதி முன்பே ‘பை பை’ சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன். 

- சுஜாதா தேசிகன் 
19-07-2020  


Comments

 1. மிக அருமை . அமேசான் உதாரணம் மிகப் பொருத்தம். இதில் சந்தோசம் என்னவெனில் , இப் பத்திரிகை தன் அடிப்படை தர்மத்திலிருந்து விலகி நாளாகி விட்ட்து . ஆக , இதன் நிறுத்தம் வருத்தமில்லை.

  ReplyDelete
 2. மிகச் சரியான விமர்சனம். விரைவில் தமிழ் இதழ்கள் எல்லாம் இப்படியாக வேண்டும்.

  ReplyDelete
 3. உப்பிலிஸ்ரீனிவாசன்
  விகடன், குமுதம், கல்கி போன்ற பத்திரிக்கைகள் சமயத்தை இழந்து சோரம் போய்விட்டது. தரம் தாழ்ந்த பத்திரிக்கைகள் மூடப்படுகின்றன மகிழ்ச்சி கொள்ளவில்லை நானும் ஒருவன். You have got the on its head.

  ReplyDelete
 4. ஆமாம். எவ்லோ உண்மை. Sad times

  ReplyDelete
 5. Great post.. thank you...Change is the only permenet thing... Loosing ground for established successes & arrival of new ones are part of the evolution... my take is if one can deliver quality in whatever they do, then adaptation will be easy... Hope Kalkis, Kumudhams etc relaise this sooner to get back their quality.. after all most of us grew up with these.. otherwise i must add..
  Punrabhi Jananam.. Punarahi Maranam!!!

  ReplyDelete
 6. அருமையான கருத்து

  ReplyDelete
 7. ananda vikatan, kalki and kumudam are not much sought after thesedays.
  corona has made them not necessary. The Hindu is also losing ground .
  dinamani is ok.

  ReplyDelete

Post a Comment