Friday, May 3, 2013

அப்பாவின் ரேடியோ விமர்சனம் .எஸ்.ராஜகுமாரன்


பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்த்த தொடக்க காலங்களில். [எழுபதுகளின் பிற்பகுதி] அதற்கு முன்னால் இதுபோல இன்னும் ஒரு காமெடியான யூகம் உண்டு. சிறு வயதில் ரேடியோ கேட்கும்போது ஜோடியாக செவிகளை வருடிய, ட்டி.எம்.எஸ்.- சுசீலாவை புருஷன் பொண்டாட்டி என்று ரொம்ப நாள் வரை கற்பனை செய்து கொண்டிருந்தேன்.

இதை ‘முதல் ரேடியோ பாடிய வீடு’ என்னும் எனது சிறுகதையில் [விகடனில் பிரசுரம்] பதிவு செய்திருப்பேன். அக்கதை என் அம்மாவின் வாழ்க்கைச் சுருக்கம் என்று சொல்லலாம். நான் பிறந்து வளர்ந்த அம்மாவின் வீடுதான் எங்கள் ஊருக்குள் முதல் ரேடியோ பாடிய வீடு.

நான் அந்தக் கதையில், அம்மாவின் வீட்டில் விவரித்திருந்த  பழைய மர்ஃபி வால்வ் ரேடியோ பற்றிதான் அப்பாவின் ரேடியோவில் தேசிகனும் வர்ணித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லாத சிலதை அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதே போல் நான் சொன்னவை சில அவர் சொன்னதில் விடுபட்டிருந்தது.


இருவரின் மர்ஃபி ரேடியோ காலமும் கொஞ்சம் முன் பின் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு கதைகளையும் வாசித்தால் அந்த பழைய மர்ஃபி ரேடியோ பற்றிய ஒரு ஒட்டுமொத்த பிம்பம் கிடைக்கும். அதுதான் எழுத்தாளன் என நாம் காலர் தூக்கிவிட்டுக் கொள்ளக் கூடிய பெறும்பேறு போலும்!
நிற்க. -

அக்காலக் கடிதங்களில் தப்பாமல் இடம்பெறும் இந்த வார்த்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  ஒரு வகையில் இது சுய பிரேக் போல. ஆம்! கடிதம் எழுதத் தொடங்கிய உடன் சம்பிரதாய நல விசாரிப்புகள் முடித்து, மெயின் மேட்டருக்கு வருவதற்கான இணைப்புச் சொல். அதனால் -  நிற்க...
இம் மாதிரி ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக நமக்கெல்லாம் எழுதக் கற்றுத் தந்த வாத்தியார் சுஜாதாதான். அதனால் சுஜாதா தேசிகன் என்ற பெயரே முதலில் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அப்புறம் அவரது கதைகள்.

இயக்குநர் பாலுமகேந்திராவை ஒரு முறை சந்திக்கச் சென்றேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பான மழைவாசனையின் மேலட்டை ஒளிப்படம் வாங்குவதற்காக. அப்போது அவர் கூறியது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது: “ தேசிய விருதுகளைக் கூட நான் சரியாக பாதுகாத்து வைத்துக் கொள்ளவில்லை. இப்போது அவை எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை!”

சுஜாதாவின் படைப்புகளுக்கெல்லாம் ஆவணக் காப்பகமாக இருப்பற்கு நாம் முதலில் தேசிகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரின் எழுத்துகளை எல்லாம்

சேகரித்துப் பாதுகாத்துவரும் பெரும்பணி.போற்றுதலுக்குரியது.  சுஜாதாவே குறிப்பிட்டுள்ளது போல் ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு பொறுப்பான வாசகர் கிடைப்பது அவன் பெறும் பெரும்பேறுதான்.

சுஜாதாவை நேசிக்கும் தேசிகனுக்கு அவர் எழுத்துகளின் பல நற்கூறுகள் கைகூடி வந்திருக்கின்றன. குறிப்பாக இவரின் எளிய கதை மொழி. ஒரு சூரியோதயப் பொழுதில் டி ஷர்ட்-பெர்மூடா அணிந்த ஒரு அழகான இளம்பெண் காதில் கேட்கும் miley cyrus ஸின் 7 things ஆல்பத்தின் வரிகளுக்கேற்ப நடனத் துள்ளலுடன்  நடக்கும் நடை அது.

சிறுகதைளின் உள்ளடக்கமும் சிம்பிளாகவே இருக்கின்றன.
கஷ்டப்பட்டு கதை தேடி அலையாமல் அல்லது வலிய ஒரு விஷயத்தைக் கதை என்று சொல்லி வாசகனைக் கஷ்டப்படுத்தாமல், பெரும்பாலானவை மிக இயல்பான கதைக்களங்களைக் கொண்டுள்ளன.

அப்பாவின் ரேடியோவில் - அப்பா முதல் சம்பளத்தில் வாங்கிய மர்ஃபி ரேடியோ, டேப் ரெகார்டரின் வருகைக்குப் பின் ஏற்படும் கால மாற்றத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறது என்பதை இயல்பாகவும் அழுத்தமாகவும் சொல்லிச் செல்கிறார். கடிதம் என்பது அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும், எவ்வளவு மதிப்புமிகு ரகசிய வாழ்வாவணமாக விளங்கியது என்பதையும் அழகாக கதைமுடிவில் பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் ஏனோ என் நினைவில் அந்த மர்ஃபி ரேடியோ ஒரு முதியவரின்

Thursday, April 25, 2013

அப்பாவின் ரேடியோ நூல் வெளியீடு


வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு வாகை கூட்டத்தில் எனது சிறுகதை தொகுப்பு வெளியீடு. இடம் கப்பன் பூங்கா ( ப்ரஸ் க்ளப் எதிரில் )

வெளியிட  நேசமிகு ராஜகுமாரன் சென்னையிலிருந்து வருகிறார்.  இவரிடம் நான்  மூன்று முறை பேசியிருப்பேன், பார்த்ததில்லை.

பெற்றுக் கொள்ள  இரா.வினோத் வருகிறார். இவரை பார்த்ததில்லை, பேசியதில்லை.

இந்த மாதிரி கூட்டங்களில் நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள். நீங்களும் கலந்துக்கொண்டால் சந்தோஷப்படுவேன்.

- சுஜாதா தேசிகன்


Wednesday, March 13, 2013

அப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்


ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தன்னுடைய படைப்பு சிறுபத்திரிகையில் தொடங்கி, வெகுஜன பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கதான் செய்கிறது. பிறகு அந்த ஆசை தனி புத்தகமாகவும் பிறகு சினிமா என்று அது தொடர்கிறது.

"என்னுடைய கதை விகடனில் வந்திருக்கு படித்தீர்களா ?" என்று நண்பர்கள் குதூகலத்துடன் தொலைபேசியில் சொல்லும்போது அவர்களுடைய சந்தோஷத்தை உணரமுடிகிறது. இணையம், ஈ-மெயில், டிவிட்டர் என்று பல வந்தாலும் புத்தகத்தில் நம் எழுத்தைப் பார்க்கும் ஆனந்தமே அலாதி தான்.

போன மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண்.
"சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?"
"ஆமாம்"
"உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?"
"இல்லை.. திருச்சி"
"ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது"
"கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?"
"ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்லை"
"ஓ.. அப்ப எப்படி படிச்சீங்க... நெட்டிலா?"
"அது எல்லாம் தெரியாதுங்க... எங்க அக்கா படிச்சுட்டு எனக்கு அனுப்பினாங்க"
"உங்க அக்கா எங்கே இருக்காங்க"
"அவங்க பெங்களூரில் டாக்டர்.. அவங்க ஃபிரண்டு படித்துவிட்டு அவங்களை படிக்க சொல்லியிருக்காங்க... அப்பறம் அதை எனக்கு கூரியரில் அனுப்பினாங்க"
"என் போன் நம்பர் எப்படி கிடைத்தது"
"மூன்று நாளா பத்திரிக்கை ஆபீஸுக்கு ஃபோன் செய்து இப்ப தான் கிடைத்தது... "உங்களிடம் போன் செய்து கதை நல்லா இருக்கு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது"
"நன்றி" என்று சொல்வதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.

சில வருடங்கள் முன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள், என்னுடைய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு
"மொத்தமா ஒரு புத்தகமா போடுங்ளேன்" என்றார்
"சார் நீங்க முன்னுரை எழுதித்  தந்தால் போடுகிறேன்" என்றேன்
"அதற்கு என்ன நிச்சயம் எழுதித் தருகிறேன்"

அவர் முன்னுரையுடன் புத்தகம் போட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் புத்தகம் போடும் முன் அவர் ஆசாரியன் திருவடி அடைந்தார். அவர் இருக்கும் போதே புத்தகத்தை கொண்டுவந்திருக்கலாம் ஆனால் முடியாததற்கு பல காரணங்கள்.

சில வருடங்களுக்கு முன் திரும்ப மீண்டும் இந்த புத்தகம் போடும் விளையாட்டு ஆரம்பித்து "இதோ பிள்ளையார் சதுர்த்திக்கு கொண்டு வந்துடலாம்.." "புக் ஃபேர் எல்லோரும் பிஸி" என்று பல காரணங்கள் வந்து போனது. போன வருடம்  பிள்ளையார் "எனக்கும் வயசாகிறது இல்லையா ?" என்றார்.

புத்தகக் கண்காட்சி போது நடைபாதை கடைகளில் எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஒரு முழம் பூவின் விலையை விட கம்மியாக கிடைப்பதை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் ஆசை யாரை விட்டது ?

இன்றைய தொழில்நுட்ப உலகில் நம்மை நாமே போட்டோ எடுத்து பிரிண்ட் போட்டுக்கொள்ளலாம் , புத்தகத்தை அச்சடிக்கலாம். அதே போலத் தான் இந்த புத்தகமும்.

இந்த புத்தகத்தில் இடம்பெற்ற கதைகள், விகடன், டைம்ஸ் இலக்கிய மலர், சொல்வனம் ஆகிய இதழ்களில் தப்பி தவறி வந்தவை.

இந்த புத்தகத்துக்கு திரு.எஸ்.ராஜகோபாலன்(சுஜாதாவின் தம்பி) முன்னுரை எழுதியுள்ளார். சுஜாதா போலவே என்னுடைய நலம் விரும்பி; இருவருக்கும் இந்த புத்தகம் வரக் காரணமாக இருந்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
அட்டைப்பட ஓவியம் என் மகள் ஆண்டாள். அவளுக்கு என் ஸ்பெஷல் நன்றி!.


அப்பாவின் ரேடியோ 
சிறுகதைகள் 
பத்து பைசா பதிப்பகம் 
பக்கம் 169
விலை ரூ 110/=
https://www.nhm.in/shop/home.php?cat=1207

Monday, March 4, 2013

மலையாள திவ்யதேசப் பயணம் - 2

மலைநாட்டு திவ்ய தேசங்கள்

பஞ்ச வாத்தியம்
அடுத்தடுத்து பல திவ்யதேசங்களைப் பார்க்கும்முன் கேரளா திவ்யதேசங்களைப் பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்துவிடலாம்.

கேரளா கோயில்கள் எல்லாம் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை. பெரும்பாலும் சதுர வடிவம். அதே போல் மூலவர் நின்ற திருக்கோலம். கைகளில் சங்கம், சக்ரம், கதை, பத்மம் (குருவாயூர் மாதிரி தோற்றம்). பல கோயில்களைத் தரிசித்த பிறகு நமக்கு நிச்சயம் குழப்பம் வரும்.

Saturday, March 2, 2013

மலையாள திவ்யதேசப் பயணம் - 1

குலசேகர ஆழ்வார் வைபவம்

போய் வந்த பாதை
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களுடன் மலையாள திவ்யதேசங்கள் சென்று வந்தது ஒரு மாறுபட்ட அனுபவம்.

பொதுவாக 108 திவ்யதேசம் செல்லும் அன்பர்கள் ஒரு கோயிலை முடித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு ஓட்டமாக ஓடுவார்கள். ஒரு நாளில் இவ்வளவு பார்த்தேன் என்று ஏதோ பரிட்சை சிலபஸ் முடிப்பது போல முடிப்பார்கள். சிலர் சின்ன புத்தகத்தில் தங்களுடைய லிஸ்டை 'டிக்' செய்து இன்னும் எனக்கு 22 பாக்கி என்பார்கள். இந்த மாதிரி அவசரத்தில் சேவிப்பதால் இரண்டு நாள் முன் செய்தித்தாளில் என்ன வந்தது என்பது போல நினைவில் இருப்பதில்லை.

அப்படி இல்லாமல், திவ்யதேசங்களைப் பார்த்துவிட்டு, அந்தந்தக் கோயிலிலேயே கிட்டதட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்து, அந்தக் கோயிலைப் பற்றிய சிறப்பு, ஸ்தல புராணம், ஆழ்வார் பாடிய பாசுரங்களின் உட்கருத்து என்று வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.

ஸ்ரீவைஷ்ணவ திய்வதேசங்கள் 108. இவை ஆழ்வார்களால் பாடபெற்ற திருத்தலங்கள். சோழநாட்டு திவ்யதேசங்கள் 40; பாண்டிய நாட்டில் 18; தொண்டை நாட்டில் 22; நடுநாடு - 2, சேர நாடு அல்லது மலையாள திவ்யதேசங்கள் 13; வட நாட்டுத் திருத்தலங்கள் 12; வைகுண்டம் - 1.

Wednesday, February 27, 2013

அந்த படம் - ஒரு மறக்கமுடியாத தருணம்

நண்பர் நாணா எனக்கு அனுப்பிய கடிதம். 

 அன்பு நண்பருக்கு....

 திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது.

அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...( அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை)

பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து..அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்..
மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம்.

அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த நட்பு....

மிகச் சமீபத்தில் வெளியான 'வாரம் ஒரு பாசுரம்' அட்டைப்படம் வரை தொடர்ந்து...

இப்போது நான் 'இந்தியா டுடே' பத்திரிகையின் - தமிழ், தெலுங்கு, மலையாளப் பதிப்புகளின் - Chief Visualiser.

நாணா - சுஜாதா
என்னுடைய வீடு கிரஹப்பிரவேசத்திற்கு அவர் குடும்ப சகிதம் வந்து வாழ்த்தியது..எனக்கும், என் உறவினர்களுக்கும் - வீடு வாங்கியதை விட பெரிய இன்ப அதிர்ச்சி.

சில ஆண்டுகள் முன் ஒரு டிசம்பர் மாதத்தில் நானும் அவரும் திருச்சி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ( கடைசி நேரத்தில் திருமதி சுஜாதா அவர்களால் வர இயலவில்லை) அந்த இரண்டு நாட்களில் அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசித் தீர்த்தோம். அப்போது இறந்துபோன யாரோ ஒரு நடிகையின் தற்கொலை மேட்டரில் ஆரம்பித்து உயிர், மறுபிறப்பு, இறப்பு பற்றி பேசும் போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

'இறப்பு என்பது யாருக்குமே திடீர்ன்னுதான் வரும்..அந்த நேரத்தில் யாரும் போட்டோ எடுத்துக்கொண்டு சாவதில்லை. அதனால இன்னும் பல வீடுகள்ல பத்தாம் நாளுக்கே படத்தைத் தேடுவாங்க...

ஆனா...'காதலா காதலா' படத்தில் வர்ற கமல் இறந்தவரின் படத்தை உடனடியாக வரைஞ்சு..பாடி எடுக்கறதுக்கு முன்னால அதை அந்த வீட்டில் சேர்ப்பதைக் காமெடியாக செய்திருப்பார்.. ....என்றார்.

என் சோகம்...நானே அவரது படத்தை அவர் மறைந்த இரவே ரெடி செய்து....( இதை உண்மையாக கண்ணீருடன்தான் டைப் செய்து கொண்டிருக்கிறேன்) அவர் இறந்தும் அவர் உடல் வீடு வந்துசேராத நிலையில் அவரது படத்தை பெற்றுக்கொண்டு திருமதி சுஜாதாவும் அவருடைய மகனும்.. அழுது கலங்கியது.. என்னையும் சுற்றியிருந்தோரையும் அழவைத்தது.. மிக மிக நெகிழ்வான ஒரு மறக்கமுடியாத தருணம்..

மறுநாள் அவரது வீட்டிற்கு அவரது உடல் வரும் வரை அவருக்காகப் பூத்த மலர் மாலைகளுடன் சிரித்த முகத்துடன் நானே எடுத்த அந்தப் புகைப்படம் வீற்றிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு மட்டும் உள்ளுக்குள் அதிகமாக வலித்தது மனசு.

கலக்கத்துடன்
நாணா

அந்த படம் 

Thursday, February 14, 2013

புத்தகமாக லைட்ஸ் ஆன்


ரா.கி.ரங்கராஜனை ஒரு மழை நாளில் சந்தித்த போது குமுதத்தில் தான் எழுதிய 'லைட்ஸ் ஆன்' தொகுப்பு புத்தகமாக வர வேண்டும் என்று விருப்பட்டார். "உங்களுக்கு தெரிந்த பதிப்பகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்" என்றார்

கிட்டதட்ட ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அதற்கு பிறகு அவருடன் நடந்த சம்பாஷனை என்னை மேலும் சங்கடப்படுத்தியது.

"நானே போடுகிறேன்" என்று ஒரு வீராப்பில் அவர் வைத்திருந்த 'லைட்ஸ்-ஆன்' பத்திரிக்கை தொகுப்பை பெங்களூருக்கு எடுத்து வந்தேன். 6 மாதம் கழித்து முடியாமல் திருப்பி அனுப்பினேன்.

போன வருஷம் எழுத்தாளர் 'சுபா' போடுவதாக தகவல் தெரிந்து சந்தோஷப்பட்டேன். ஆனால் புத்தகம் வரும் போது திரு.ரா.கி.ர நம்முடன் இல்லை.

போன வாரம் எழுத்தாளர் சுபா அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார். லேசான புத்தகம், உள்ளே லைட்டான விஷயம்...  ஆனால் குற்ற உணர்ச்சியால் மனசு கனத்தது.

லைட்ஸ் ஆன்' வினோத் ( ரா.கி.ரங்கராஜன் )
தங்கத் தாமரைப் பதிப்பகம்,
37 கால்வாய்க் கரை சாலை,
கஸ்தூரிபா நகர், அடையாறு,
சென்னை 600020
போன்:24414441.
பக்கம்: 160 விலை:ரூ 70.

மற்ற பதிவுகள்:
சென்னையில் அட(டை) மழை!