Sunday, February 4, 2018

திருநாராயணபுரத்து ஆனைச்சாத்தன்கள்

திருநாராயணபுரத்து ஆனைச்சாத்தன்கள்

Image may contain: one or more people and people standing
திருநாராயணபுரம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது - செல்லப்பிள்ளை, தமர் உகந்த மேனி தான். திருச்சி தொட்டியம் பக்கம் ஒரு திருநாராயணபுரம் இருப்பது சில வருடங்களுக்கும் முன் தான் அடியேனுக்குத் தெரியவந்தது. காரணம் பிள்ளை திருநறையூர் அரையர்.
உடனே போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், இந்த வருடம்(26.1.2018) குடியரசு தினத்துக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.
திருச்சி - தொட்டியம் திருநாராயணபுரம் என்று கூகிளில் தேடினால் இரண்டு வழிகளைக் காண்பிக்கும்.எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் கோயில் வாசலுக்குக் கொண்டு சென்று விட்டுவிடுகிறது. வழி எங்கும் தென்னை மரங்கள் மொட்டையாக காட்சி அளிக்க நடுவில் சந்தேகம் வந்து “திருநாராயணபுரம்” என்று வழி கேட்டால் “வளைவு வரும்..அதுக்குள்ளே போங்க” என்று எல்லோருக்கும் இந்தக் கோயிலுக்கு வழி சொல்லுகிறார்கள்.
சுமார் பதினோரு மணிக்குக் கோயிலில் யாரும் இல்லை. கோயிலுக்குள் செல்லும் போது, அங்கே இருந்த ஒரு அம்மா கம்பத்தடி ஆஞ்சநேயர் இவர் சேவித்துவிட்டு போங்க என்றாள்.
No automatic alt text available.
இப்பகுதியில் வசிக்கும் கிராமத்து மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை, வீட்டில், நிலத்தில் ஏதாவது திருட்டு என்றால் கூட இவரிடம் வந்து முறையிட்டால் உடனே கண்டுபிடித்து தீர்த்துவைத்து ஒரு மினி நாட்டாமையாக இருக்கிறார்.
ஆஞ்சநேயருக்கு பின் கொடிமரத்தை தாண்டிச் சென்றால் மிக அமைதியான கோயில் தென்படுகிறது. அர்ச்சகர் வெளியே வந்து ”வாங்கோ” என்று சம்பந்தியை வரவேற்பது மாதிரி வரவேற்று நிதானமாகச் சேவை செய்து வைக்கிறார்.
பெருமாள் வேதநாராயணன் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் மாதிரி புஜங்க சயன திருக்கோலம். குண்டுகட்டாக தூக்கி வீசப்படாமல், நிதானமாகச் சேவித்தோம். சிறுவயதில் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை நிதானமாகச் சேவிக்கும் அதே அனுபவம் இங்கே கிடைத்தது என்றால் மிகையாகாது. 
Image may contain: sky, tree, outdoor and nature
“நல்லா சேவித்துக்கொள்ளுங்கோ... வேதநாராயணன் புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்திருக்கிறான் ...தெரிகிறதா ?.. மேலே பாருங்கள் ஆதிஷேசன்... பொதுவாக ஐந்து தலைகளுடன் பார்க்கலாம்.... ஆனால் இங்கு பத்து தலைகளுடன்... மேலும், கீழுமாக ... கணவன் மனைவியாகச் சேவை.. காலுக்கு அடியில் சின்ன வடிவில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன்...நல்லா சேவை ஆகிறதா ?”
சேவித்துக்கொண்டே இருந்தோம்.
”இங்கே திருநறையூர் அரையர் சன்னதி எங்கே ?”.
“கோயில் வெளியே இருக்கு… நீங்க பிரதக்ஷணமாக வாங்கோ அதுக்குள்ளே அங்கே நான் வந்துவிடுகிறேன்”.
கோயிலை பிரதக்ஷணமாக வரும் போது தாயார் சன்னதியை சேவித்துவிட்டு, ஆண்டாள் சன்னதிக்கு எதிர்புரம் ஸ்தல விருட்சம் வில்வ மரம் அதன் மீது “கீச்சு கீச்சு” என்று பறவைகளின் சத்தம் “கீசுகீசென் சென்றெங்கும் ஆனைச்சாத்தனை” நினைவு படுத்த மேலே பார்த்த போது அந்த பறவைகள் நிஜமாகவே ஆனைச்சாத்தன்கள் !
உடனே அமுதனைக் கூப்பிட்டு “இது தான் ஆனைச்சாத்தன்” என்று காண்பித்து ”கீச்சு கீச்சு சென்றெங்கும் ஆனைச்சாத்தன்” பாசுரத்தைச் சேவித்து முடித்த பின் கீழே கல் இடுக்கில் துளசி செடி வளர்ந்திருப்பதை பார்த்து அதையும் சேவித்துவிட்டு வெளியே அரையார் சன்னதியை திறக்கக் காத்திருந்தோம்.
Image may contain: tree, sky, plant, outdoor and nature
அர்ச்சகர் வரும் வரையில் திருநாராயண அரையர் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர், நஞ்சீயர் காலம். தமிழ் பண்டிதர். பட்டரைவிட வயது அதிகமாக இருந்தாலும் பட்டர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார். எம்பாரிடமும், பட்டரிடமும் நிறை கேள்விகள் கேட்டிருக்கிறார். பாசுரங்களின் பொருள்நயம், இசைநயம் முதலியவை குறித்து இவர் பல சர்ச்சகைகள் செய்திருக்கிறார். உதாரணமாக
”சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்” என்று இருக்கிறதே சங்கு என்று ஒருமையில் கூறிவிட்டு சக்கரங்கள் என்று பன்மையில் ஏன் கூறப்பட்டுள்ளது ? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு திருவெழுந்தூர் அரையர் “இசையில் பாடும் போது சக்கரங்கள் என்று கொள்வது தான் பொருந்தியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
( சங்குடன் சக்கரம் சேர்ந்து பன்மையாகி அது சக்கரங்கள் ஆகியது என்றும் கூறுவர் )
இன்னொரு உதாரணம் “வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு” என்று பெரியாழ்வார் வெண்ணெய் முழுவதையும் உண்ட பிறகு கண்ணன் வெறும் பாத்திரத்தை கல்லில் போட்டு உடைத்ததாகக் கூறுகிறார் ஆனால் பொய்கையாழ்வார் கண்ணபிரான் வெண்ணெய் உண்பதற்காக வாயருகே விரலைக் கொண்டு சென்றபோதே பிடிபட்டு விட்டதாகச் சொல்லுகிறார். இதில் எது சரி ? என்று கேட்க அதற்குப் பட்டர் “கண்ணபிரான் வெண்ணெய் களவு செய்தது ஒரு நாள் மட்டுமா?” ஒருநாள் முழுவதையும் சாப்பிட்ட பிறகு பிடிபட்டான்; இன்னொரு நாள் விழுங்கத் தொடங்குவதற்கு முன்பே பிடிபட்டான்! என்று பதில் கூறினார் பட்டர்.
பல கேள்விகள் கேட்டாலும் கோயிலையும், பெருமாளையும், திருவாய்மொழியையும் அனுபவித்து ரசித்திருக்கிறார்கள். 
Image may contain: tree and outdoor
பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டரும் திருவரங்கம் திருக்கோயிலை ப்ரதக்ஷணம் செய்யும் போது மற்றவர்கள் வேகமாகக் குதிரைபோல ஓட்டமும் நடையுமாகச் செய்வார்களாம். ஆனால் அரையரும் பட்டரும் நின்று நிதானமாகக் கோயிலில் மண்டபங்களையும், கோபுரங்களையும் கண்களால் ரசித்துக்கொண்டு ஒரு பிள்ளைத்தாச்சி மாதிரி அடிமீது அடிவைத்து கோயிலை வலம்வரப் பல நாழிகைகள் எடுத்துக்கொள்வார்களாம். இவர்களைப் பின் தொடந்த நஞ்சீயர் “உண்பது, உடுப்பது முதலிய செயல்களில் மற்றவர்களைப் போல இருந்தாலும் கோயிலை சுற்றுவதில் தான் என்ன ஒரு வேறுபாடு!. மற்றவர்கள் வேகமாக ஏதோ பலன் கருதி வலம் வர இவர்கள் வலம் வருவதையே பலனாக கொண்டுள்ளார்கள். அதுவும் வலம் வரும் போது பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்கிறார்கள்” என்று வியந்துள்ளார்.
கோயிலை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதே போல் திருவாய்மொழியை எப்படி அனுபவிக்க வேண்டும் என்றும் ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது.
பிள்ளை திருநறையூர் அரையரிடம் மூன்று திருவாய்மொழிகளுக்கு பொருள் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று நினைவில்லை, ஆனால் அவர் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு பொருள் கூறத்தொடங்கி அப்பாசுரங்களில் மிகவும் ஈடுபட்டுக் கண்ணீர் விட்டார் என்பது மட்டும் நினைவிருக்கு” என்றாராம் நஞ்சீயர்.
அர்ச்சகர் வந்து பெரிய கதவைத் திறந்த போது விசாலமான பெரிய சன்னதியாக இருந்தது. நம்மாழ்வார், உடையவர், மணவாள மாமுனிகள் கூடவே அரையரும் குருப் போட்டோ போலக் காட்சி தர அர்ச்சகர் ”அரையரின் அபிமான ஸ்தலம் இந்தக் கோயில்” என்றார். 
Image may contain: tree, plant, sky, outdoor and nature
அதற்குக் காரணம் இந்தச் சம்பவம் -
திருநாராயணபுரத்திலே இருக்கும் சந்நிதியில் பெருமாளுக்கு சில பகவத விரோதிகள் நெருப்பை வைத்தனர் ( அந்த காலத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ! ). இதைப் பார்த்த அரையர் உடனே எம்பெருமான் திருமேனிக்குண்டான ஆபத்தைக் கண்டு தாமும், மனைவியும், பிள்ளைகளுடன் குடும்பத்துடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் அணைத்துக் கொள்ள நெருப்பும், புகையும் சூழ குழந்தைகள் மூச்சுவிட முடியாமல் திணறி ”பொறுக்கமுடியவில்லையே!” என்று கூற அதற்கு அரையர் “இன்னும் கொஞ்சம் நேரம் தான், துன்பம் பிறகு பெருமாள் திருவடிகளில் சுகமாக இருக்கலாம். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று
குடும்பத்துடன் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
Image may contain: 1 person, indoor
அர்ச்சகர் அரையருக்கு ஆர்த்தி எடுக்க அவரைக் கண்குளிர சேவித்துக்கொண்டேன்.
பெரிய திருவந்தாதி பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்
அருகும் சுவடும் தெரிவு உணரோம்* அன்பே
பெருகும் மிக; இது என்? பேசீர்* பருகலாம்
பண்புடையீர்! பார் அளந்தீர்! பாவியெம்கண் காண்புஅரிய*
நுண்பு உடையீர்! நும்மை, நுமக்கு.
சுலபமான பொருள் ”பெருமாளே உன்னை அணுகுவதற்கும், அதற்கான வழியை அறியவில்லை. ஆயினும் உம்மிடத்தில் ஆசை பெருகுகின்றது இதற்குக் காரணம் என்ன ?” என்பது இதன் பொருள்.
கடைசியில் ”நும்மை, நுமக்கு” என்று வருகிறது அதற்கு அர்த்தம் ? என்று நஞ்சீயர் கேட்க
“நும்மை ’அருகும் சுவடும் தெரிவு உணரோம்’ நமக்கு அன்பே
பெருகும் மிக’ என்று படிக்க வேண்டும் என்று இதைச் சொன்னவர் வேறு யாரும் இல்லை பிள்ளை திருநறையூர் அரையர் தான்.
பிள்ளை திருநறையூர் அரையர் திருவடிகளே சரணம்
- சுஜாதா தேசிகன்
4.2.2018
படங்கள்: சுஜாதா தேசிகன், மூலவர் படம் - இணையம்
Image may contain: plant, outdoor and nature

No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: outdoor
Image may contain: sky
No automatic alt text available.


2 comments:

  1. திருநறையூர் அரையர் கதையை முன்பே எழுதியிருக்கிறீர்களோ? மூலவர் படம் பார்த்து நீங்கள் எடுத்ததோ என நினைத்தேன். ஆனைச்சாத்தனையும் பார்த்துக்கொண்டேன்.

    ReplyDelete
  2. ஆனைச்சாத்தன் என்றால் கருச்சான் குருவி (drongo) அல்லவா? இங்கே படத்தில் இருப்பது தவிட்டுக்குருவி போல் இருக்கின்றது.
    https://m.facebook.com/story.php?story_fbid=181291965663796&id=100013489818854

    ReplyDelete