Skip to main content

திருவாலி திருநகரி - மீண்டும் பயணம்

கல்லணை வழியாகத் திருவாலி திருநகரிக்கு திருமங்கை ஆழ்வாரைத் தரிசிக்க புறப்பட்ட போது குழந்தை வாயில் ஜொள் ஒழுகுவது போல மெதுவாக ஆங்காங்கே காவிரியில் தண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. (இங்கேயும்) மணல் லாரிகளின் வரிசையைக் கடந்து கல்லணை பாலத்தில் மயிரிழையில் எதிரே வரும் வண்டியை உரசாமல் திருவையாறு வரை வந்த போது தனியாவர்த்தனம் செய்த உணர்வு கிடைத்தது.
தனியாவர்த்தனம் முடித்த பின் துக்கடாவாக சாலை போட வழியை அடைத்து எங்களைத் திருப்பிவிட மாற்று வழிப் பாதையில் எரிச்சலுடன் வண்டியை ஓட்டிய போது அது நேராக
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருவிண்ணகரம் என்னும் ஒப்பிலியப்பன் சன்னதி வாசலில் கொண்டு வந்து விட்டது. அர்ச்சகர் பெருமாள் கையில் இருந்த மாலையை அடியேனுக்குக் கொடுத்து ’நல்லா சேவிச்சிக்கோங்க’ என்று என்னை திருநகரிக்கு வழி அனுப்பிவைத்தார்.
வழி நெடுகிலும் வயல்களில் வரும் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு திருநகரிக்கு சென்றோம். ஓர் உடைந்த பாலம் பக்கத்திலேயே ஒரு புதிய பாலம் இருந்தது அதில் போக
முடியாதபடி முள், டிரம் போட்டு அடைத்திருந்தார்கள். விசாரித்த போது அரசியல் தலைவர் வந்து திறந்துவைக்க காத்துக்கொண்டு இருக்கிறது !
சீர்காழி பக்கம் இருக்கும் திருவாலி திருநகரி திவ்யதேசம் பற்றி சீர்காழி, மயிலாடுதுறை சுற்றி இருக்கும் மக்கள் பலருக்கு தெரியாதது வியப்பே. ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சு கொடுத்தால் அவர்களுக்கும் தெரிவதில்லை. போன முறை சென்ற போது ஒரு ஆட்டோ டிரைவர் ”சார் நான் இந்த ஊர் தான் ஆனால் இந்தக் கோயில் இருப்பது நீங்கச் சொல்லி தான் தெரியும்!” என்றார்.
மற்ற ஆழ்வார்கள் பற்றி தெரியாது ஆனால் இங்கே திருமங்கை ஆழ்வார் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பதாக நம்புகிறேன். அர்ச்சா வடிவத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புலப்படும். தனியாக கொஞ்ச நேரம் ஆழ்வாருடன் இருந்தால் ”என்னப்பா சௌக்கியமா ?” என்று பேசிவிடுவார்.
ஆகஸ்ட் 15, திருக்கார்த்திகை திருமங்கை ஆழ்வார் மாத திருநட்சத்திரம் அன்று திருமஞ்சனம் கண்டருளும் ஆழ்வாரைச் சேவிக்க வேண்டும் என்று ஆவல். அடியேன் எழுதும் பதிவுகளை படித்துவிட்டு “you are blessed” என்று கமெண்ட் போடுவார்கள். ஆனால் இந்த முறை அது நிஜமாகவே நடந்துவிட்டது.
நான் திருநகரிக்கு வருகிறேன் என்று Embar Ramanujan ஸ்ரீ எம்பார் ராமானுஜன் ஸ்வாமி அவர்கள் ( இன்னும் சில நாளில் அறுவை சிகிச்சை வேறு நடக்க இருக்கிறது ) என்னை திருநகரியில் நன்றாக’கவனித்துக்’கொள்ள வேண்டும் என்பதற்காக 80 வயதில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருநகரிக்கு வந்துவிட்டார்.
ஸ்ரீராமானுஜர் பிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு ’என் அமுதினை கண்ட கண்களை’ காட்டி இதைவிட வேறு கண்ணழகன் உண்டா என்று கேட்டது போல ஸ்ரீ எம்பார் ராமானுஜன் ஸ்வாமி திருமங்கை ஆழ்வார் வடிவழகை காண்பித்தார் என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு முறை திருநகரிக்கு செல்லும் போதும், ஸ்ரீமணவாள மாமுனிகள் கலியனை பற்றி எழுதிய வடிவழகு தான் நினைவுக்கு வரும். திருமஞ்சனம், சாற்றுமுறை, பிரசாதம் என்று எல்லாம் முடிந்து மீண்டும் பெங்களூருக்கு வந்து சேர்ந்து மீண்டும் எப்போது போகலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
இந்தக் கோயிலில் கிணற்றுப்பக்கம் சில கல்வெட்டுக்கள் இருக்கிறது. அதைப் பற்றி நண்பர் Chithra Madhavan சித்ரா மாதவனிடம் கேட்டிருந்தேன் அவர் அளித்த தகவல் இவை 1517AD கிருஷ்ணதேவ ராயர் வெற்றி பெற்ற தகவல் மற்றும் ஆலயங்களுக்கு கொடுத்த வரி ஓர் கல்வெட்டு. இன்னொரு கல்வெட்டில் வேதம் ஓதிய பிராமணர்களுக்கு நிலம் நன்கொடையாக வழங்கியது பற்றி இருக்கிறது. வயலாலி மணவாளனுக்கு நிலம், மாடு, பாத்திரம் கொடுத்தது பற்றி ஒரு கல்வெட்டு இருக்கிறது.
பலர் சென்று அனுபவிக்க வேண்டிய திவ்ய தேசம். ஒரு குழுவாக சேர்ந்து போகலாம், அப்படி போவதாக இருந்தால் சொல்லுங்கள் அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு உங்களை அழைத்துச் செல்கிறேன். நம்மைக் கவனித்துக்கொள்ள ஆழ்வாரும் எம்பார் ராமானுஜன் ஸ்வாமியும் இருக்கவே இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் சூப்பர் மார்கெட்டில் சில வாரங்களுக்கு முன் வந்த நெருங்காதே நீரிழிவே புத்தகம் வியப்பை அளித்தது. “சார் நல்ல போகுது” என்றார் கடைக்காரர். மேலும் ஒரு ஆச்சரியம் என் பழைய நண்பனை(திருச்சி GHல் மருத்துவராக இருக்கிறான்) பல வருஷங்கள் கழித்து சந்தித்தேன் “நீ எழுதிய புத்தகம் ஈரோடு சென்ற போது போஸ்டரில் பார்த்தேன். இப்ப என்னிடம் வரும் நீரிழிவு பேஷண்டுகளுக்கு அதைப் பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன் என்றான். இவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்ற Badri Seshadri பத்ரிக்கு நன்றி.

Comments

  1. எங்கள் மாமா தனது வீட்டில் திருமங்கையாழ்வாரின் திருமுகமண்டலத்தை மட்டும் பெரிது படுத்தி (மாமாவே மிகச்சிறந்த புகைப்படக்காரர்) மாட்டி வைத்திருப்பார். மெய் சிலிர்க்கும் புகைப்படம் அது. 'புள்ளூரும் கள்வா!' என்று பெருமாளைச் செல்லமாக அழைத்துவிட்ட பேரானந்தம் அந்த திருமுகத்தில் அப்படியே உறைந்து போயிருப்பது போல எனக்குத் தோன்றும்.
    நான் உங்களுடன் வருகிறேன் திருவாலிக்கு. ஆழ்வார் முன் நின்று திருநெடுந்தாண்டகம் சேவிக்க வேண்டும் என்ற தீராத ஆவல் எனக்கு இருக்கிறது. அதுவும் 'மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ....' சேவித்து ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment