Wednesday, July 19, 2017

மன்னிக்கும் ஆவி


பட்டப்பகலில் ரகு ரம்யாவை கொலை செய்ததை யாரும் பார்க்கவில்லை. ரம்யா ரகுவின் மனைவி. ரகு விபத்து என்று சொன்னதை எல்லோரும் நம்பினார்கள்.

பிச்சாவரத்துக்கு சுற்றுலா சென்ற ரகுவும் ரம்யாவும் தனியாக படகு சவாரி... மன்னிக்கவும், கூட மோமோ என்ற நாயுடன் சென்ற போது அந்த சம்பவம் நடந்தது.
மனைவி தண்ணீரில் மூழ்கிவிட்டாள் காணவில்லை என்று ரகு சத்தம் போட்ட போது தான் சற்று
தொலைவில் இருந்தவர்கள் கவனித்தார்கள். உடனே சில படகுகளில் நீச்சல் தெரிந்தவர்கள்
ரகு சொன்ன இடத்தில் குதித்தார்கள் ஆனால் ரம்யாவை கானவில்லை.

Tuesday, July 18, 2017

மலச்சிக்கல்

“எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்”
- சுஜாதா, தனது எழுபது வயது கட்டுரையில்.

மலமோ, மாநிலமோ எது பந்த் செய்தாலும் கஷ்டம்தான். சாப்பிட்டபின் என்ன ஆகிறது என்று அறிந்துகொண்டாலே மலச்சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் Gut Feeling!

ஹைவேயில் 130கிமீ வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நடுவில் சுங்கச்சாவடி வரிசை. பிரேக் போட்டு நின்றுவிடுகிறீர்கள். முன்பு இருக்கும் வண்டிக்கு ஏதோ பிரச்சினை. ஸ்டார்ட் ஆகாமல் நிற்க, பின்னாலே பெரிய வரிசை. முன் பின் நகர முடியாமல் இருக்கும் கார் போல சிக்கலில் மலம் மாட்டிக்கொண்டால்? மலச்சிக்கல்!

வாய் முதல் ஆசனவாய் சுமார் இருபத்தெட்டு அடி நீளமுள்ள ஒரு வழிப் பாதை (குழாய்). இந்த ஹைவேயில் சாப்பாட்டுடன் பயணம் மேற்கொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். பயண நேரம் பதினெட்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரம். பயணத்தின்போது ஏதாவது (மல)சிக்கல் ஏற்படாமல் இருக்க இயற்கைக் கடவுளை வேண்டிக்கொண்டு பிடித்த உணவை வாயில் போட்டுக்கொண்டு புறப்படுங்கள்.

முதலில் கண். கண்ணுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். இருக்கிறது. ஜிலேபியோ, இட்லியோ, சாப்பாட்டு ஐட்டங்களைப் பார்த்தவுடன் கண் நரம்புகளின் வழியாகப் படம் பிடித்து, இனிப்பு/காரச் செய்தியாக மூளைக்கு அனுப்புகிறது. உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாக்கில் எச்சிலும், வயிற்றில் செரிமானத்துக்குத் தேவையான திரவங்களும் சுரக்கின்றன.

அடுத்து மூக்கு. மூக்குத்திக்கு மட்டும் இல்லை வாசனைக்கும் மூக்கு மிக அவசியம். சூடாக இருந்தாலும், வாசனை இல்லாத காபி வெந்நீர்தானே?

அடுத்து வாய். தாடை, பற்கள், நாக்கு என்று வலுவான தசைகள் ஒன்றாக வேலை செய்யும் இடம். கன்னங்கள், நாக்கு அடியில் புடைத்திருக்கும் இடங்களில் உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் செரிமானத்துக்கான முதல் வேலையை ஆரம்பிக்கிறது.

வாய் ஒரு துவாரம், ஆசனவாய் ஒரு துவாரம். இதற்கு நடுவில் மூன்று துவாரங்கள் இருக்கின்றன. இவை இல்லாவிட்டால் சாப்பிட்டவுடன் குமட்டலாக வாந்தி எடுத்துவிடுவோம்.

உணவு தொண்டைக்குச் செல்கிறது. உணவுக் குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதி தொண்டை. முழுங்கும்போது மூக்கையும், குரல்வளையையும் (vocal chord) அடைத்து, சாப்பாட்டை உள்ளே அனுப்புகிறது. இப்பவே கொஞ்சம் எச்சிலை முழுங்கிப் பாருங்கள். காதில் ‘கிளிக்’ என்று சத்தம் கேட்கிறதா? தொண்டைப் பகுதி மேலே செல்கிறதா? ஆம் என்றால், உங்களுக்கு இவை எல்லாம் சரியாக வேலை செய்கிறது. மேலே பயணிக்கலாம்.

அடுத்து உணவுக்குழாயை அடைகிறது. ஐந்து முதல் பத்து நொடியில் சாப்பிட்ட உணவு இதில் பயணிக்கிறது. விரிந்துகொடுத்து உணவை உள்ளே அனுப்புகிறது. திரும்ப வாய்ப் பக்கம் ரிவர்ஸ் கியரில் வராமல் இருக்க மூடிக்கொள்கிறது. சிரஸாசனம் செய்யும்போது சாப்பிட்டாலும் வெளியே வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம். ஒரு நாளைக்கு 600 முதல் 2000 முறை முழுங்குகிறோம். முழுங்கியது எல்லாம் வயிற்றுக்குச் செல்கிறது.

வயிற்றுக்கு வந்துவிட்டது உணவு. ‘எதையும் தாங்கும்’ இதயம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். உண்மையில் எதையும் தாங்குவது நம் வயிறுதான். கொதிக்கும் காபி முதல் கரகர பக்கோடா வரை, மேல் நாக்கைப் பொரித்துவிட்டு, தொண்டையைக் கடந்த பிறகு சூடு தெரிவதில்லை. அதுமட்டும் இல்லை, நம் இரைப்பையில் ‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும்.

ஹைட்ரோ குளோரிக் அமிலமா என்று கேட்பவர்கள் பின்வரும் பகுதியைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

1822, ஜூன் 6 அலெக்ஸ் மார்டினை ஒரு துப்பாக்கி குண்டு துளைத்தது. யாரும் சுடவில்லை. விபத்து. சுடப்பட்ட இடம் வயிறு. டாக்டர் பியூமாண்ட் அவருக்குச் சிகிச்சை அளித்தார். ‘இன்னும் கொஞ்ச நாள்தான்’ என்று நினைத்தார். ஆனால் மார்டின் பிழைத்துக்கொண்டார். வயிற்றில் குண்டு அடிபட்ட ஓட்டை மட்டும் ஆறவே இல்லை. ஓட்டையாகவே இருந்தது!

மார்டின் வேலை செய்த கம்பெனி அவரை ஓட்டையுடன் வேலை செய்ய முடியாது என்று வீட்டுக்கு அனுப்பியது. டாக்டரிடமே எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்தவன் வீட்டில் இருந்தால் என்ன, வயிற்றில் இருந்தால் என்ன, ஓட்டை இருந்தாலே எட்டிப்பார்ப்பது மனித இயல்புதானே. மார்ட்டின் வயிற்றின் ஓட்டையில் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தார் டாக்டர். தூண்டிலில் சின்ன புழுவைக் கட்டி மீன் பிடிப்பது மாதிரி சின்ன பீஸ் உணவை நூலில் கட்டி அவர் வயிற்று ஒட்டையில் விட்டு ஒரு மணிக்கு ஒருமுறை அதை எடுத்து பார்த்துப் பரிசோதனையை ஆரம்பித்தார். கூடவே அதனுடன் வந்த இரைப்பை அமிலத்தையும் எடுத்துப் பரிசோதித்தார்.

சில மாதங்களில் மார்ட்டின் டாக்டரிடமிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் டாக்டர் விடவில்லை. அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் பரிசோதனையைத் தொடர்ந்தார்.

ஓட்டையிலிருந்து எடுத்த அமிலத்தை உணவின் மீது செலுத்தி அது என்ன ஆகிறது என்று பார்த்தார். முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

வயிற்றில் உணவை ஜீரணிக்க மாவு மிஷின் மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் வேதியியல் முறையில் செயல்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி!

சாப்பிட்ட உணவு பட்டாணியோ, பன்னீர் பட்டர் மசாலோவோ, எல்லாம் இரைப்பையை வந்து சேருகிறது. வாஷிங் மிஷினில் சோப்பு போட்டவுடன் அது தண்ணீருடன் கலந்து அழுக்கை எடுப்பது போல, இந்தக் கரைசல் நம் வயிற்றுச் சாப்பாட்டை ஜீரணம் செய்கிறது. வாஷிங் மிஷின் உள்ளே டிரம் இப்படியும் அப்படியும் அசைவது மாதிரி, இரைப்பையின் தசைகள் பாபா ராம் தேவ் செய்வது மாதிரி சுருங்கி விரிந்து அரைக்கிறது.

இங்கிருந்து சின்ன துவாரம் வழியாகச் சிறுகுடலுக்கு அனுப்புகிறது. அங்கேதான் ஹைட்ரோ குளோரிக் அமிலம் செயல்பட ஆரம்பிக்கிறது. அமிலத்துடன் கல்லீரல் கணையத்திலிருந்து ஜீரண நீர் கலந்து உணவில் இருக்கும் புரதச்சத்து - அமினோ அமிலமாகவும்; மாவு சத்து - சர்க்கரையாகவும்; கொழுப்பு - கொழுப்பு அமிலமாகவும் பிரிக்கும் வேலைகள் நடக்கின்றன. மீதம் இருக்கும் கழிவுகளைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. வண்டி ஸ்மூத்தாக ஓட ஆயில் தேவைப்படுவது போல, பெருங்குடலில் கோழை மாதிரி ஒரு லூப்ரிகண்ட் உற்பத்தி ஆகி, மலத்தை இளகவைத்து அடுத்த நாள் ‘மகிழ்ச்சி’ என்று சொல்ல வைக்கிறது..

எப்படி வாஷிங் மிஷின் துணியைப் பிழிந்து அழுக்குத் தண்ணீரை வெளியே தள்ளுகிறதோ, அதே மாதிரி சிறுகுடல் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பெருங்குடலுக்கு வந்து சேருபவை எலும்புத் துண்டு, பழக் கொட்டை (மாங்கொட்டை இதில் சேராது), நார்ச்சத்து போன்றவை.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் பெருங்குடல் சிணுங்கும். அப்படிச் சிணுங்கும்போது மலம் வர தயாராகும். கண்டதைச் சாப்பிட்டு அதிகமாகச் சிணுங்க வைத்தால் டாய்லெட்டுக்கு விசிட்டிங் ப்ரொஃபசராக இருந்த நீங்கள், நிரந்திர ப்ரொஃபசராக அங்கேயே இருப்பீர்கள்.

காலை சூடாக காபி சாப்பிட்டால்தான் சிலருக்கு ‘அது வரும்.’ (அதனுடன் சிலருக்குச் சிகரெட்டும் பிடிக்க வேண்டும்.) சூடான காபி இரைப்பையின் நரம்புகளைத் தூண்டி, அது பெருங்குடலை சிணுங்க வைத்து... அதுதான் விஷயம்! இப்போது கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோம். மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

ஆசனவாயை ‘Anal Sphincter’ என்பார்கள். பாட்டியின் சுருக்குப்பை மாதிரி இருக்கும் இதற்கும் நம் மூளைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆசவனாய்க்கு சில சென்டிமீட்டர் முன் இன்னொரு சுருக்குப்பை இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

வெளியே இருக்கும் சுருக்குப்பைதான் நம் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீட்டிங்கின்போது ‘அவசரம்’ என்றாலும் நம்மால் அடக்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் அப்படி இல்லை. தன்னுணர்வற்ற (unconsciousness) முறையில் செயல்படுகிறது. உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா (பிரஷர் ஒகேவா?) என்று பார்த்துக்கொள்ள வேண்டியது இதனுடைய பொறுப்பு.

இது இரண்டும் எப்படி வேலை வேலை செய்கின்றன? டிவியில் டாக் ஷோவில் அதை நடத்துபவர் மைக் மூலம் சொல்லுவது மாதிரி உள்ளிருக்கும் சுருக்குப்பை ‘இந்தாப்பா கொஞ்சம் சாம்பிள்’ என்று ‘அதை’ டெஸ்டுக்கு அனுப்பும். வெளியே இருக்கும் சுருக்குப்பை மதகுகளைத் திறப்பதற்கு முன் பல சென்சார் செல்களால் அதை ஆராய்ந்து ‘இன்னிக்கு ரொம்ப கெட்டி போல’ அல்லது ‘ஐயோ இவ்வளவு தண்ணியாவா…? நேற்று என்ன சாப்பிட்டேன்’ என்று யோசிக்கத் தொடங்கும். அல்லது ‘விடுங்க... வெறும் காற்றுதான்’ என்று விட்டுவிடும். அல்லது ‘மாஸ்டர் இன்னொரு சூடான டீ’ என்று ஆர்டர் செய்யும்.

சுற்றுப்புறச் சூழலைக் கவனித்து, டாய்லெட் போக வேண்டுமா வேண்டாமா என்பதை மூளை முடிவு செய்யும். அதனால்தான் வீட்டில் கிடைக்கும் நிம்மதி, வெளியே போகும்போது கிடைப்பதில்லை. டாய்லெட் போகும்போது யாராவது நம்மைக் கூப்பிட்டால் சுருக்குப்பை உடனே மூடிக்கொள்ளும். இது எல்லாம் சென்சார் செல்களின் வேலையே.

இன்று பத்தில் மூன்று பேருக்கு ‘சரியா’ போகலை பிரச்சினை இருக்கவே செய்கிறது. மலம் பெருங்குடலில் மாட்டிக்கொண்டு வெளியே வர வேலைநிறுத்தம் செய்கிறது. பச்சை சிக்னல் வந்த பிறகும் நமக்கு முன்னே இருக்கும் வண்டி போகாமல் இருப்பது மாதிரி. நரம்புகளும், வயிற்றுத் தசைகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்காததால் வரும் பிரச்சினை.

‘அதுக்கு’ அடிக்கடிப் போக வேண்டும் என்பது பலருக்குப் பிரச்சினையாக இருப்பதில்லை ஆனால் ஸ்மூத்தாக போக முடிகிறதா என்பதுதான் பிரச்சினையே.

ஸ்கூட்டியில் போகும் பெண் போலவோ அல்லது தீவிரவாதிகள் போல முகத்தை மூடிக்கொண்டோ கீழே உள்ளதைப் படிக்கவும்.
.
மலத்தின் அளவு:

நாம் சாப்பிடும் சாப்பாடு மட்டுமே மலமாக வெளியே வருகிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நம் உடல் நாம் சாப்பிடும் உணவில் தேவையானவற்றை உறிஞ்சி உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறது. இதை தவிர பல நுண்ணங்களும், குடலிலிருந்து சேரும் பலவகைக் கழிவுகளும் சேர்ந்து மலமாக வெளிவருகிறது. அரைக்கிலோ உணவு உண்டுவிட்டு அரைக்கிலோ மலம் வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது!

மலத்தில், மூன்று பங்கு நீர்தான். மீதம் ஒரு பங்கில் ரிடையர் ஆன பாக்டீரியாக்கள், பழம், காய்கறிகளின் நார்ச்சத்து, தேவை இல்லை என்று உடல் ஒதுக்கிய மருந்து மாத்திரைகள், உணவுகளில் இருக்கும் வண்ணம், கொலஸ்டாரால் போன்றவை.

மலத்தின் துர்நாற்றம்:

பெரிய குடலில் மலம் தங்கிச் செல்லும் காலத்தில் இண்டால், ஸ்கேட்டால் என்ற வேதி வஸ்துக்களால் துர்நாற்றம் ஏற்படுகிறது. மாமிச உணவு, குடலில் நோய், குறைவான பித்தம் போன்றவை அதிக துர்நாற்றம் ஏற்படுத்தும்.

மலத்தின் நிறம், தன்மை:

மலம் பொதுவாகப் பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால் சில சமயம் நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு என்று காட்சி தரும். மலத்தின் நிறம் ஏன் பழுப்பாக (அல்லது மஞ்சளாக) இருக்கிறது?

தினமும் நம் உடல் உற்பத்தி செய்யும் முக்கியமான வஸ்துதான் காரணம் - ரத்தம்! நம் உடல் ஒரு நாளைக்கு 24 லட்சம் ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதே சமயம் அதே அளவுக்குப் பழசை வெளியேற்றவும் செய்கிறது. அப்படி உடைத்து வெளியேற்றம் செய்யும்போது சிகப்பு பச்சையாக, பிறகு மஞ்சளாக மாறுகிறது. இது எல்லாம் கல்லீரல் மற்றும் வயிற்றுக்குச் செல்லும்போது, அங்கே இருக்கும் பாக்டீரியா அதன் நிறத்தைப் பழுப்பு (brown) நிறமாக மாற்றுகிறது. மலத்தை ஆராய்ந்தால் நம் உடலில் என்ன நடக்கிறது என்று பெரும்பாலும் கண்டுபிடித்துவிடலாம்.

இளம் பழுப்பு - மஞ்சள் நிறத்தில் இருந்தால் – ரத்தத்தைப் பிரிக்கும் என்சைம் 30% தான் வேலை செய்கிறது என்று அர்த்தம். (இதற்கு Gilbert’s syndrome என்று பெயர்). பயப்பட வேண்டாம். சிலருக்கு வயிற்றில் பாக்டீரியா இன்பெக்‌ஷன் இருக்க வாய்ப்பு இருக்கும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்டாலும் மலம் மஞ்சளாக இருக்க வாய்ப்பு உண்டு.

இளம் பழுப்பு - சாம்பல் நிறம்: கல்லீரல், வயிறு இணைப்பில் எங்கோ அடைப்பு. தினமும் சாம்பல் நிறம் அதிகம் பார்த்தால் நீங்களே டாக்டரை அணுகலாம்.

கருப்பு - சிகப்பு: உறைந்த ரத்தம் கருப்பாக இருக்கும்; புதிய ரத்தம் சிகப்பாக இருக்கும். எப்போதாவது கொஞ்சம் சிகப்பு ரத்தம் வெளியே வந்தால் பிரச்சினை இல்லை. (ஆவக்கா சாப்பிட்டிருக்கலாம்.) அடிக்கடி கருப்பாக இருந்தால் உறைந்த ரத்தமாக இருக்கலாம்.

மலம் என்ன பதத்தில் இருக்க வேண்டும் என்று 1997 வருடம் ‘பிரிஸ்டல் ஸ்டூல்’ விளக்கப்படம் வெளியிடப்பட்டது. அதில் மலத்தை ஏழு விதமாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். நீங்களே பார்த்து ஒப்பிட்டுக்கொள்வது நலம்.


முதல் வகை: ஆட்டுப் புழுக்கை மாதிரி கெட்டியாக இருந்தால் நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகி வெளியே வர கிட்டதட்ட நூறு மணி நேரம் ஆகிறது என்று அறிந்துகொள்ளலாம். இது மலச்சிக்கல்.

ஏழாம் வகையில் பத்து மணிநேரத்தில் வெளியே வருகிறது. இது பேதி அல்லது வயிற்றுப்போக்கு.

நான்காம் வகை தான் ‘மகிழ்ச்சி’ என்று சொல்லலாம்.

மூன்றாம் வகை, விரிசல் இருக்கும். பரவாயில்லை, நாட் பேட்.

நீங்கள் மூன்று, நான்கு குரூப்பை சேர்ந்தவர்களா? இதோ இன்னொரு டெஸ்ட் உங்களுக்கு - டாய்லட் போகும்போது மலம் தண்ணீரில் எவ்வளவு சீக்கிரம் கீழே போகிறது என்று பாருங்கள். முழுவதும் தண்ணீரில் முழுகிவிட்டால், மலத்தில் ஊட்டச்சத்துக்கள் இன்னும் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். மெதுவாக ஸ்லோ மோஷனில் நடிகை நீச்சல் குளத்தில் இறங்குவது போல இறங்கினால் அதில் வாய்வுக் குமிழ்கள் இருக்கிறது என்று அர்த்தம். பயப்படத் தேவையில்லை.

இரண்டாம் வகை: கட்டியாக, அதே சமயம் குவியலாக இருக்கும். இதுவும் மலச்சிக்கல்தான். ஒன்றாம் வகை மாதிரி அவ்வளவு மோசம் இல்லை.

ஐந்தாம் வகை - உங்கள் உணவில் நார்ச்சத்து கம்மியாக இருக்கிறது.

ஆறாம் வகை - கூழாகப் பஞ்சு போல இருக்கும். உங்கள் வயிற்றில் எங்கோ வீக்கம், அல்லது கட்டியாகக் கூட இருக்கலாம். குடலில் தடை ஏற்பட்டால் கழியும் மலம் பட்டையாக இருக்கும். மலம் பிளந்து காணப்பட்டால் (அடிக்கடி) பெருங்குடலின் கடைசிப் பகுதியில் கட்டி இருக்கலாம்.


மலச்சிக்கல் - அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்


1. முக்கிய காரணங்கள்?
பயணம், உணவு பழக்கம், உடல்நலக்குறைவு, மன அழுத்தம்.
2. மன அழுத்தமா?
ஆமாம். டாய்லெட் ரிலாக்ஸ் செய்யும் இடம் அங்கே இலக்கியம் படிக்காதீர்கள். மனத்துடன் மற்றவையும் இறுகிவிடும்.
3. இறுகிவிட்டால் என்ன செய்யலாம்?
வில்வப் பழம், பேரிச்சம் பழம் மலத்தை இளகச்செய்யும்.
4. பயணத்தின்போது ஏன் பிரச்சினை வருகிறது?
நம் வயிறு தினமும் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம், இரவா பகலா, எந்த நேரத்துக்கு எவ்வளவு முறை போகிறோம் என்று குறித்து வைத்துக்கொள்கிறது. பயணத்தின்போது இது எல்லாம் மாறுகிறது. கூடவே ஜெட்லாக் சமாசாரம் எல்லாம் சேர்ந்துகொண்டால் நம் வயிற்றின் நரம்பு மண்டலம் குழம்பிபோய் பிரேக் போட்டு நின்று விடுகிறது. பயணத்தின்போது நம் வயிறும் பயணிக்கிறது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
5.. என்ன செய்ய வேண்டும்?
நிறைய நார்ச்சத்து உள்ள உணவை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். (பழம் காய்கறிகள்.) பயணத்தின் முதல்நாள் நார்ச்சத்து உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அதை சிறுகுடல் அப்படியே பெருங்குடலுக்கு அனுப்பிவிடும். நார்ச்சத்து கதவைத் தட்டினால் நாம் திறக்காமல் இருக்கமுடியாது.
6. தண்ணீர்?
நிச்சயம் நிறைய அருந்த வேண்டும். மூக்கு உலர்ந்து போன மாதிரி இருந்தால் உங்கள் உடலில் இருக்கும் நீரச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம்.
7. எங்க வீட்டு டாய்லெடில்தான் எனக்கு...?
‘நம்ம டாய்லெட் மாதிரி இல்லையே’ என மனக்கலக்கமே மலசிக்கலுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். அதனால்தான் பப்ளிக் டாய்லெட் ‘ரொம்ப அர்ஜெண்ட்’ என்றால் மட்டுமே விசிட் செய்கிறோம். புது இடமாக இருந்தாலும் ‘எல்லாம் நார்மல்’ என்று நினைத்துக்கொண்டு உட்காருங்கள்.
8. தினமும் எவ்வளவு தடவை?
ஒரு தடவை அல்லது இடண்டு தடவை எதேஷ்டம். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்வது அதைவிட முக்கியம்.
9. குறிப்பிட்ட நேரமா?
ஆமாம். தினமும் காலை ஏழு மணிக்கு டாய்லெட் என்று வைத்துக்கொள்வது நல்ல பழக்கம்தான். இரண்டு நிமிஷம் லேட் என்று பதறினால் டாய்லெட் சரியாக வராது! காலைக்கடனைக் கடனே என்று போகாதீர்கள். சீரியல் பார்க்க வேண்டும் என்று அடக்கிக்கொள்ளக்கூடாது.
10. உடற்பயிற்சி?
உடற்பயிற்சி மலம் கழிக்க உதவுகிறது என்பது நிஜம். தினமும் நடைப்பயிற்சி செய்துவிட்டு நிறுத்தினால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
11. எப்படி உட்கார வேண்டும்?
மலம் கழிக்க உட்காரும்போது எந்த நிலை உங்களுக்குச் சரியாக இருக்கிறது என்று பாருங்கள். உடம்பைக் கொஞ்சம் முன்பக்கம் வளைத்து அல்லது குனிந்து பாருங்கள். வயிற்றைப் பிடித்து மசாஜ் செய்து பார்க்கலாம்.
13. பாட்டி வைத்தியம் ஏதாவது?
(Potty) பாட்டி வைத்தியம் விளக்கெண்ணெய், கடுக்காய்தான்.
14. அறிகுறிகள்?
அரோசிகம் (பசியின்மை, உணவின் மேல் வெறுப்பு), நாக்கு தடிப்பு, தலைவலி, சுறுசுறுப்பின்மை, உப்புசம், தலைவலி, வயிற்று சங்கடம், வயிற்று வலி.

உணவைக் கையில் எடுத்து வாயில் போட்டால் சாப்பிட்டாச்சு என்று அடுத்த முறை சொல்லுவதற்கு முன் வயிற்றைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். டாய்லெட்டில் சிம்ஃபொனி நிகழ்த்திய ஆனந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

-  சுஜாதா தேசிகன்
வலம் ஜூலை இதழிலில் பிரசுரம் ஆனது. 

Monday, July 17, 2017

திருக்கண்ணமங்கை ஆண்டான்


திருக்கண்ணமங்கை ஆண்டான்
திருக்கண்ணமங்கை ஆண்டான் - திருக்கண்ணமங்கை

ஒரு பக்தரின் கதையுடன் ஆரம்பிக்கிறேன்.
அவர் ஒரு பக்தர். சாதாரணமாக கோயிலுக்கு சென்று சேவித்து வேண்டிக்கொள்ளும் பக்தர் இல்லை.  தனக்காக என்று முயல்வதை எல்லாம் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் கால்களாக்கிக் கொண்டு விலங்கு போலே நாலுகால்களாலே சஞ்சரிப்பவர்.
தினமும் காலை ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் பசுவை போல நீராடிவிட்டு  வஸ்திரம் எதுவும் இல்லாமல், பிராணியைப் போல நடப்பவராய் (அல்லது ஊர்ந்து ) கோயிலுக்கு வந்து, பெருமாளை சேவித்துவிட்டு ஒர் மகிழ மரத்தடியில் கோயிலில் பெருமாளின் பிரசாதங்கள் கிடைத்தால் சாப்பிட்டுவிட்டு, மரத்தடியில் அசையாது மௌனமாக வாழ்ந்து வந்தார்.
இவர் எப்போதும் இப்படி இல்லை. திடீர் என்று தான் இப்படி ஆகிவிட்டது. ஏன் என்று பிறகு சொல்கிறேன். நன்றாக வாழ்ந்தவர் திடீர் என்று இப்படி ஆகிவிட்டார் என்றால் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா ? பலவாறு பேசத் தொடங்கினார்கள்.
“இவர் செய்த பாவ கர்மத்தாலே இப்படி இருக்கிறார்”  
”பாவ கர்மத்தை யாராலும் கடக்க முடியாது.. ஈஸ்வரனாலும் ஒன்றும் செய்ய முடியாது”  
“நல்ல பக்திமான்.. இப்படி மனக்கோளாறு ஏற்பட்டுவிட்டதே” .
“இவர் ஒரு மஹாபுருஷர்”
இவரைப் பற்றிய செய்தி பரவ பல ஊர்களிலிருந்தும் மக்கள் இவரை காண வந்தார்கள். வியப்புற்றார்கள். சிலர் பேச்சுக்கொடுத்தார்கள் ஆனால் மௌனமே பதிலாக கிடைத்தது. .
ஒரு நாள் பெருமாள் பக்தரிடம்  ”நாளைய தினம் உனக்கு மேல்வீடு ( மோக்ஷம் ) தர போகிறேன்” என்கிறார்.
மோக்ஷமளிப்பதற்கு முந்திய இரவு அந்த ஊரில் இருந்தவர்களின் கனவில் பெருமாள் தோன்றி நாளை என்னுடைய மஹா பக்தனுக்கு மோக்ஷம் தர போகிறேன், நான் மோக்ஷம் அளிப்பதை நீங்கள் காணலாம், இது உறுதி” என்கிறார்.
மறுநாள் காலை மக்கள் எல்லோரும் வியப்புற்று கோயிலில் குழுமி இருக்க… அந்த பக்தர் காலை வழக்கமாக ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் நீராடிவிட்டு விலங்கை போல நாலு கால்களால் கூட்டத்தின் நடுவே நடந்து வந்து கோயிலை  ப்ரதக்‌ஷணம் செய்து, கோயிலுக்கு உள்ளே சென்று த்வார பாலகர்களை தண்டம்சமர்பித்து பெருமாள் திருவடிகளையும் தன் ஆசாரியனை தியானித்து மூர்ச்சிக்கிறார்.
பக்தர்கள் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்க பக்தவத்சலன் எம்பெருமாளின் திருவடிகளில் சின்ன மின்னல் உண்டாக  அவர் மறைந்து போனார்.  
இது கதை அல்ல. நிஜமாக நடந்த சம்பவம். இந்த பக்தர் வேறு யாரும் இல்லை நம்  ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ தான். திருமேனியுடன் மோக்ஷம் சென்றவர்!.
கடந்த சில நாள்களுக்கு முன் நண்பர் ஒருவர்  “இன்று ஆனி திருவோணம் திருக்கண்ணமங்கை ஆண்டான்” திருநட்சத்திரம் என்றார். வெய்யில் படாத இடங்கள் எப்படி தனியாக தெரியுமோ அதே போல் ஓராண் வழியில் இல்லாத சில ஆசார்யர்களை சிலரை நாம் ’கேள்வி’ மட்டுமே பட்டிருக்கிறோம்.  அப்படிப்பட்ட ஓர் ஆசாரியர் தான்  திருக்கண்ணமங்கை ஆண்டான்.
இவர் 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர் என்று நினைப்போம் அது கிடையாது. இவர் ஸ்ரீமந் நாதமுனிகளின் நேரடி சிஷ்யர்.
ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு 11 சிஷ்யர்கள்.
 1. உய்யக்கொண்டார்
 2. குருகைக் காவலப்பன்
 3. பிள்ளை கருணாகர தாஸர்,
 4. நம்பி கருணாகரதாஸர்,
 5. ஏறுதிருவுடையார்,
 6. திருக்கண்ணமங்கை ஆண்டான்,
 7. வானமாமலை தெய்வநாயக ஆண்டான்,
 8. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை,
 9. சோகத்தூராழ்வான்,
 10. கீழை அகத்தாழ்வான்,
 11. மேலை அகத்தாழ்வான்.
திருக்கண்ணமங்கையில் வாழ்க்கைப்பட்டிருந்த ஸ்ரீமத் நாதமுனிகளுடைய உடன்பிறந்தாளுக்குப் புத்திரராக, பிறந்தவர் இவர். இவருடைய பெயர் ஸ்ரீக்ருஷ்ணலக்மிநாதன் செல்வத்தில் குறைவில்லாமல், திருக்கண்ணமங்கை என்ற கிராமத்தை ஆண்டு வந்த காரணத்தால் ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ என்ற திருநாமத்தை பெற்றார்.
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் திருவடிகளே என்று இருந்த மாதிரி இவர் தன்னுடைய மாமாவான ஸ்ரீமத் நாதமுனிகளுடைய திருவடிகளை பற்றிக்கொண்டு பஞ்ச ஸ்மஸ்காரம் பெற்று “அடியேன் இங்கேயே இருக்கட்டுமா ?” அல்லது திருக்கண்ண மங்கை பெருமாளான பக்தவத்ஸலனுக்கு நந்தவன கைங்கரியம் செய்யட்டுமா ? என்று கேட்க நாதமுனிகள் ”பக்தவத்ஸலனுக்குத் துளசி புஷ்ப கைங்கரியம் செய்” என்று நியமிக்க அதன்படி அவருடைய ஊர் பெருமாளான பக்தவத்சலனுக்கு கைங்கரியம் செய்துக்கொண்டு இருந்த காலத்தில் அந்த சம்பவம் நடந்தது.
ஒரு நாள் இரண்டு பேர் திருக்கண்ணமங்கை  கோயிலுக்கு வருகிறார்கள்.  வந்தவர்கள் தங்கள் காலனிகளை கோயிலுக்கு வெளியே வைத்துவிட்டு அவர்களுடன் வந்த நாயை அதற்கு காவலுக்கு வைத்துவிட்டு சன்னதிக்குள் போய் சேவித்துவிட்டு வரும் போது நாய்களில் ஒன்று மற்றொன்றின் எஜமானனுடைய  காலனிகளைக்  கடிக்க நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்துக்கொண்டு சண்டை போட அந்த சண்டையில் ஒரு நாய் சாக. செத்த நாயின் சொந்தகாரன் மற்றொரு நாயை அடிக்க அதுவும் சாக, இப்போது எஜமானர்கள் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் சண்டை போட்டு,  வெட்டிக்கொண்டு மாய்ந்துபோகிறார்கள். சாதாரண சண்டை என்றாலே கூட்டம் கூடும். இது நாய், பிறகு மனிதர்களின் சண்டை. நல்ல கூட்டம்.
அவ்வழியே பல்லக்கில் வந்துக்கொண்டிருந்த திருக்கண்ணமங்கையாண்டான், என்ன கூட்டம் என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்துக்கொள்கிறார்.  நடந்த விஷயத்தை  தீர்க்கமாக யோசிக்கிறார். அவர் யோசித்தது தான் இன்று ஸ்ரீவைஷ்ணவத்துக்கு அடிப்படி கொள்கை.
அப்படி என்ன யோசித்தார் ? “சாதாரண மனிதனே தன்னுடையது என்ற ஒரே காரணத்துக்காக,  நாய்க்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு பொறுக்காமல் அதை அடித்தவனை கொன்று தானும் உயிர்விட்டான் என்றால் அனைத்தையும் விட்டு அவனுடைய நிழலில் ஒதுங்குபவர்களை பரமாத்மா காப்பாத்த எப்படி பாடுபடுவான் ?” யோசித்ததின் விளைவு ?
தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், பரமாத்மாவான எம்பெருமானின் நிழலில் ஒதுங்கிய ஒரு நாய் போலத் தன்னை எண்ணிக்கொண்டு, அப்போதே திருக்கண்ணமங்கை சன்னதியில் அடைக்கலம் புகுந்து அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் கோயிலை சுத்தம் செய்யும் கைங்கரியத்தில் கழித்தார். அது தான் தொடக்கத்தில் நாம் பார்த்த அந்த கதை!.
பெரியாவாச்சான் பிள்ளை திருக்குமாரரான நாயனாராச்சான்பிள்ளை அருளிய ’+சரமோபாய நிர்ணயம்’  என்ற நூலில் திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி குறிப்பு வருகிறது.  அதில்  ஸ்ரீமந் நாதமுனிகள் த்வய மஹா மந்திரத்தின் விஷேச அர்த்தங்களை திருவாய்மொழி மூலம் திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு விளக்கமாக கூறினார் என்றும் அப்படி கூறும் போது “பொலிக பொலிக” என்ற பாசுரம் வந்த போது, ஆழ்வார் நாதமுனிகளுக்கு காட்டியருளிய திருவாய்மொழி விளக்கத்தையும், பவிஷ்யதாசாரியரை சேவித்த விஷயத்தையும் அவருக்கு சொல்ல “இப்பேர்பட்ட உம்முடன் அடியேனுக்கு ஸ்ம்பந்தம் இருக்கிறது என்பதே அடியேனுக்கு கிடைத்த பெரும் பாக்யம்” என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் நெகிழ்ந்தார்.
திருக்கண்ணமங்கை ஆண்டான் வைபவத்தை ஸ்ரீபட்டர் ஸ்ரீநஞ்ஜீயருக்கு சொன்னார் என்று ப்ரபன்னாம்ருததில் குறிப்பு இருக்கிறது.  பிரபந்தங்களுக்கு குறிப்பாக நம்பிள்ளையின் ஈட்டில் சில பாசுரங்களுக்கு விஷேசமான அர்த்தம் சொல்லும் போது சில இடங்களில் பூர்வாசாரியர்களின் வாழ்கையில் நடந்த சில சுவையான சம்பவங்களை மேற்கோள் காட்டுவார்கள். திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றியும் சில இடங்களில் மேற்கோள்கள் இருக்கிறது. ஒர் உதாரணம் பார்க்கலாம்
நம்மாழ்வார் திருவாய்மொழி ( 9.2.1 )  ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலை சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது.
ஆண்டானோ தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல்  அவர் எம்பெருமானுக்கு கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார். ஆனால் நம்மாழ்வார் பாவம் தொலைய கைங்கரியம் செய் என்கிறாரே என்று நமக்கு சந்தேகமும் வரும். நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் இந்த பாசுரத்துக்கு  திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி மேலும் ஒரு சுவையான சம்பவ குறிப்பை தருகிறார்.
ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளை பெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஆண்டான். கூடப் படித்த நாத்திக நண்பர் இவர் குப்பைகளை பெருக்கித்தள்ளிக்கொண்டு இருப்பதைப் பார்த்து ஏளனமாக “பகவான் உபாயம் என்று வேறு பயன் கருதாத நீர் ஏன் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும் ? இதனால் என்ன பயன் ?” என்று கேட்க அதற்கு ஆண்டான் சுத்தம் செய்த இடத்தையும், செய்யாத இடத்தையும் காட்டி ”இந்த இரண்டு இடத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதல்லவா அது தான் அதனுடைய பயன்” என்றாராம்.
ஆண்டான் செய்தது கைங்கரியம். கைங்கரியம் பயனற்றது என்று கருத முடியாது. சில பயன் கண்ணுக்குத் தெரியும் - சுத்தம் செய்த இடம் போல. சுத்தம் செய்த இடம் பார்ப்பதற்கு இனிதாக இருப்பது தான் பயன். அது போல தான் கைங்கரியமும். கோயில் அலகிடுதல் ( சுத்தம் செய்வது ), கோலம் போடுவது, ஏன் விளக்கு ஏற்றுவது எல்லாம் கைங்கரியம் தான். ஒரு சின்ன விதி கைங்கரியம் செய்துவிட்டு எதையும் எதிர்ப்பாக்கக் கூடாது. எதையும் எதிர்ப்பார்த்து கைங்கரியத்தைச் சாதனமாக செய்யாமல், ஒன்றும் எதிர்ப்பார்க்காமல் செய்தால் அதுவே கைங்கரியம் !. ஆண்டான் செய்தது Pure கைங்கரியம் + Pure சரணாகதி!

நாச்சியார் திருமொழி முதலில்
“தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்”
என்கிறாள் ஆண்டாள். தரை விளக்கி என்பது தரையை தூய்மைப்படுத்துதல் என்று வருகிறது. இதனாலோ என்னவோ நாச்சியார் திருமொழியின்  தனியனான

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
என்று இயற்றியது திருக்கண்ண மங்கை ஆண்டான்.
இராமானுச நூற்றந்தாதியில்
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே
திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பெருமாளை குறித்து திவ்யபிரபந்தங்களை செய்தருளிய திருமங்கையாழ்வாரிடம் ப்ரேமம் உடையவராய் எங்கள் தலைவன் இராமானுசன்.அவரைப் பற்றியவர்கள் துயரங்கள் வந்தால் வருத்தப்பட மாட்டார்கள். அதே போல இன்பங்கள் வந்தாலும் களிப்படைய மாட்டார்கள் என்கிறார் அமுதனார்.
இராமானுஜருக்கு பிரியமான ஆழ்வார் திருமங்கையாழ்வார் (அவர் பல திவ்யதேசங்களை பாடியிருந்தாலும்) இந்த பாடலில் திருக்கண்ணமங்கை பெருமாளை பாடிய திருமங்கை ஆழ்வார் என்று குறிப்பிடும் போது ஏதோ ஸ்பெஷல் என்று புரிந்திருக்கும் ( அந்த ரகசியம் என்ன என்று தேடுங்கள் ! )
இன்றும் திருக்கண்ணமங்கையில் மகிழ மரத்தடியில் அவரை அர்ச்சா ரூபமாய் சேவிக்கலாம்.  இவரின் ஒப்பற்ற சரிதத்தை பக்தியுடன் கேட்கும் அல்லது படிப்பவர்கள்  எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
திருவாருரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்ணமங்கைக்கு  இன்று பேருந்துகள் போய்க்கொண்டிருக்கிறது

பிகு:

 • சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தம் ஸ்ரீராமானுஜருடைய பெருமளையும், ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு எம்பெருமானாரின் அவதாரம்(பவிஷ்யதாசார்யன்)  குறித்து நம்மாழ்வார் அருளியவை அதில் இடம்பெற்றிருக்கிறது.