Skip to main content

நான் செய்த பாவம் என்னோடு போகும்...

இளையராஜா பிறந்த நாள் பதிவு ஒன்றில் இந்த வீடியோ துண்டு கிடைத்தது.


எல்லோருக்கும் தெரிந்த பாடல் “பூவே செம்பூவே…” நடுவில் வயலின் மழை நிற்கும் முன்பே ஜேசுதாஸ் சரணத்தை எடுத்துவிடுகிறார். கடைசியில் அவர் தான் தப்பாகப் பாடியதை நினைத்து “நான் செய்த பாவம் என்னோடு போகும்” என்று பாடும் இடமும் பாடலும் இனிமை. சந்தேகம் இல்லை.
இது பாவம் என்பதற்குப் பெரிய அகராதியே இருக்கிறது. சென்ற வருடம் திருப்புல்லாணி திவ்யதேசம் சென்று சேது சமுத்திரத்தில் குளித்த போது அங்கே மிதக்கும் அழுக்கு துணிகளை பார்த்த போது, இவ்வளவு பாவமா ? என்று மலைத்துப் போனேன்.
நம்மாழ்வார் ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலை சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. ஓர் யாத்திரையில் திருவனந்தபுரம் சென்ற போது அங்கே “நானும் ஒரு தொழிலாளி” என்பது போல கோயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்களிடமிருந்து தற்காலிகமாகத் துடைப்பத்தை வாங்கி சுத்தமாக இருந்த தரையை சுத்தம் செய்தோம். பாவம் போகும் என்ற நம்பிக்கையில்.
ஆழ்வார்களுடைய பாசுரம், குறிப்பாகத் திருவாய்மொழியை கோனார் நோட்ஸ் உரையை வைத்துப் படித்தால் சொல்லாட்சி நயம் என்று வியக்கலாம். உட்பொருளை அனுபவிக்க முடியாது.
ஒரு முறை சுஜாதாவிடம் ஏன் நீங்கள் கவிதை எழுதவில்லை என்று கேட்டேன்
“ஒருவன் ஆழ்வார் பாசுரங்களை படித்தால், கவிதை எழுதும் ஆசையே போய்விடும்” என்றார் பதிலாக. சுஜாதாவின் தகப்பனார் ”எவ்வளவு படித்தாலும், வயதான பிறகு பிரபந்தம் தான் நமக்குத் துணை” என்று சொன்னதை நினைவு கூர்ந்தார். அப்போது அடியேனின் தகப்பனாரும் இதையே தான் சொன்னார் என்று அவரிடம் சொன்ன போது ஆச்சரியப்பட்டார்.
சுஜாதாவின் கடைசி காலத்தில் அவர் கையில் பிரபந்தம் இருந்தது. அவர் அண்ணா ஆசாரியன் திருவடியை அடைந்த போது பாக்கெட் சைஸ் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அவர் தகப்பனார் பிரபந்தத்தில் ‘அண்டர்லைன்’ செய்த பெருமாள் பெயர்கள் சுமார் ஆயிரத்தைப் பாசுர எண்களுடன் பிரசுரித்து ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அடியேனுக்கும் ஒன்றை மறக்காமல் கொடுத்தது என் பாக்கியம்.
திருவாய்மொழிக்கு முழு காலட்சேபம் கேட்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ”யாராவது சீ.டி போட்டிருக்கிறார்களா ?” என்று ஒரு முறை என்னிடம் விசாரித்தார். ஆனால் அவருக்கு அது சாத்தியமாகவில்லை. அவர் தம்பிக்கு அந்த ஆசை ஓர் அளவு பூர்த்தி ஆனது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமியின் இல்லத்தில் நடக்கும் திருவாய்மொழி என்னும் பகவத்விஷய காலட்சேபத்துக்கு தாராமல் சென்றார். ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் விடாமல் ஆழ்வார், பாசுரங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். ”அடுத்து எப்ப தேசிகன் ?” என்றார் கிளம்பும் போது.
சரி நம்மாழ்வார் பாசுரத்துக்கு வருவோம். நஞ்சீயர் ஈட்டில் இதற்கு மிக அருமையான ஒரு real life உதாரணம் ஒன்றைத் தருகிறார் (இதை ஐதிஹ்யம் என்பார்கள் ). அந்த உதாரணத்துக்குச் செல்லும் முன் திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி ஓர் சிறிய அறிமுகம்:
திருக்கண்ணமங்கையாண்டான் ஒரு வியாபாரி. ஒரு சமயம் தெருவில் ஒருவனுடைய நாயை மற்றொருவன் அடித்துவிட்டான். இதனால் இருவருக்கும் சண்டை வந்து ஒருவருக்கு ஒருவர் குத்திக்கொண்டு இறந்து போனார்கள். இதைக் கண்ட திருகண்ணமங்கையாண்டான் சாதாரண மனிதன் தன் அபிமான நாய்க்கே இப்படி சண்டை போட்டுக்கொண்டால், பெருமாள் நம் மீது எவ்வளவு அபிமானம் வைத்துப் பாதுகாப்பார் என்று எண்ணினார் ( அந்த நாயைப் போல நம்மை இங்கே நினைத்துக்கொள்ள வேண்டும் ) அதனால் வியாபாரத்தை விட்டுவிட்டு ( அதாவது தம்மை தாம் காப்பாற்றிக்கொள்ளும் செயல்களை ) திருக்கண்ணமங்கை பெருமாளிடம் சரணடைந்தார் என்று பிரசித்தம்.
இவர் திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேசத்தில் ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளை பெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார். கூடப் படித்த நாத்திக நண்பர் இவர் குப்பைகளை பெருக்கித்தள்ளிக்கொண்டு இருப்பதைப் பார்த்து ஏளனமாக “பகவான் உபாயம் என்று வேறு பயன் கருதாத நீர் ஏன் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும் ? இதனால் என்ன பயன் ?” என்று கேட்க அதற்கு ஆண்டான் சுத்தம் செய்த இடத்தையும், செய்யாத இடத்தையும் காட்டி ”இந்த இரண்டு இடத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதல்லவா அது தான் அதனுடைய பயன்” என்றாராம்.
ஆண்டான் செய்தது கைங்கரியம். கைங்கரியம் பயனற்றது என்று கருத முடியாது. சில பயன் கண்ணுக்குத் தெரியும் - சுத்தம் செய்த இடம் போல. சுத்தம் செய்த இடம் பார்ப்பதற்கு இனிதாக இருப்பது தான் பயன். அது போல தான் கைங்கரியமும். கோயில் அலகிடுதல் ( சுத்தம் செய்வது ), கோலம் போடுவது, ஏன் விளக்கு ஏற்றுவது எல்லாம் கைங்கரியம் தான். ஒரு சின்ன ரூல் எதையும் கைங்கரியம் செய்துவிட்டு எதையும் எதிர்ப்பாக்கக் கூடாது. எதையும் எதிர்ப்பாத்து கைங்கரியத்தைச் சாதனமாக செய்யாமல், ஒன்றும் எதிர்ப்பாக்காமல் செய்தால் அதுவே கைங்கரியம் !. ஆண்டான் செய்தது Pure கைங்கரியம்.
”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்ற உடையவரின் வாழித் திருநாமத்தில் செல்வம் என்ற சொல் ஏதோ தங்கம் வெள்ளியைக் குறிப்பதில்லை. நித்திய கைங்கரியத்தை குறிப்பது.
ஸ்ரீராமானுஜர் பெரிய மடாதிபதி. அவர் தினமும் பெரிய கோஷ்டியுடன் காலட்சேபம் செய்துகொண்டு இருந்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ஆவர் காலட்சேபத்துடன் திருவரங்கம் செல்வத்தை எப்படித் திருத்தினார் தெரியுமா ? ”திருஅலகிடுவது” ( கோயிலைச் சுத்தம் செய்வது ) தினமும் திருமடைப்பள்ளிக்குச் சென்று தம் திருக்கரங்களாலே செத்தை, குப்பையெல்லாம் சேகரித்து, சுத்தம் செய்து, அடுத்து நாளைக்கு வந்திருக்கும் மண் பாண்டங்கள் சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து மறுநாளைக்கு என்ன வேண்டும் என்று கட்டளையிடுவாராம். Lead by example ! இவையே திருக்கோயில் நிர்வாக சீர்திருத்தங்களாகும்.இதுவே “ராமானுஜார்ய திவ்யாக்ஞா ”
"ராமானுஜார்ய திவ்யாக்ஞா – வர்ததாம் அபிவர்ததாம்" என்று சொல்லிவிட்டு பிரதாசம் வாங்கிக்கொண்டு அதன் பிசுக்கை தூண்களில் தடவி விட்டு வருகிறோம்.
ஸ்ரீ உடையவர் ஏதாவது பயன் கருதி இதை எல்லாம் செய்தாரா ? இல்லை. நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் கைங்கர்யம் என்பது சேவகனுடைய இயற்கையான குணமாகும். ஆழ்வார்கள், ஆசாரியர்களின் ப்ரபாவங்களை பார்த்தால் பல உதாரணங்கள் கிடைக்கிறது பெரியாழ்வார் பொற்கிழி கிடைத்த பிறகு அதைக் கொண்டு வீடு கட்டிக்கொள்ளவில்லை, கோயில் கைங்கரியம் தான் செய்தார், திருமங்கையாழ்வார் பற்றி சொல்லவே வேண்டாம்.
மீண்டும் நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

என்கிற பாசுரத்தின் அர்த்தம் இப்போது சுலபமாக புரிய வேண்டும் என்றால் ‘அடிமை செய்ய’ என்ற வார்த்தையை கைங்கரியமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
”எங்கள் குலத்துக்கே(தந்தை தந்தைக்கே) திருவேங்கடமலையில் வாசம் செய்யும் பெருமாளுக்கு, ஓய்வில்லாது காலம் முழுவதும் கூடவேயிருந்து, என்ன துன்பம் வந்தாலும் அவரை விட்டுப் பிரியாது நின்று கைங்கரியங்களை செய்ய வேண்டும். ” என்று ஆசைப்படுகிறார்.
இந்தப் பாடலுடன் இன்னொருவர் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அனந்தாண் பிள்ளை ! நினைவுக்கு வந்தால் நீங்களே உங்கள் முதுகில் தட்டிக்கொண்டு தொடர்ந்து படியுங்கள்.
எம்பெருமானார் காலட்சேப கோஷ்டியில் நூற்றுக்கணக்காக எழுந்தருளியிருந்த சிஷ்யர்களை நோக்கி “ஆழ்வார் விருப்பப்படி குறைதீரத் திருமலையில் நித்தியகைங்கரியம் செய்ய விருப்பமுடையார் ஆரேனுமுண்டோ ?” என்று கேட்க குளிரருவி வேங்கடத்தின் குளிருக்கு அஞ்சி யாரும் விடை சொல்லாமல் இருக்க அனந்தாழ்வான் எழுந்து “அடியேனுக்கு நியமித்தருளவேண்டும்” என்றார். அதைக் கேட்ட எம்பெருமானார் “நீர் ஒருவரே ஆண்பிள்ளை” என்று கொண்டாடித் தழுவியருளி விடைகொடுத்தருளினார். அது முதலாக ‘அனந்தாண்பிள்ளை’ என்று புகழ் பெற்றார்.
கடைசியாக நமக்கு நன்கு பரிச்சயமான திருகச்சி நம்பி - திருவாலவட்ட கைங்கரியம் ( விசிறி வீசுதல் ).
இவ்வுலகைவிட்டு பரமபதம் சென்று பிறகு நாம் செய்ய ஆசைப்படுகின்ற கைங்கரியத்தை இப்பிறப்பிலேயே எல்லா திவ்யதேசங்களிலும் வீற்றிருக்கும் பெருமாளுக்கு செய்யும் பேறு கிட்டினால் ? (என்னைப் போல) முட்டாள்கள் தான் வேண்டாம் என்பார்கள்.
அடுத்த முறை கைங்கரியமே புருஷார்த்தம் என்று யாராவது சொன்னால் பயப்பட வேண்டாம். நம்மாழ்வார் சொல்லும் நுண்பொருள் - எம்பெருமானுக்கு இனிதாக செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம். அஷ்டே.
”எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்” என்று சிம்பிளாக இரண்டே வரியில் ஆண்டாள் முடித்துவிட்டாள்.
பிகு: “இளையராஜா இசை அமைத்து ஜேசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத” பாடலைக் கேட்டேன். பட்டர் நினைவுக்கு வந்தார் அது அடுத்த வாரம் :-)
ஸ்ரீரங்கத்தில் கைங்கரியம் செய்யும் அடியேனுடைய நண்பர்கள் Veeraraghavan Sampath Srivatsan Chakravarthy இருவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்

- சுஜாதா தேசிகன்

Comments